ஞாயிற்றுக்கிழமைகளில் டீச்சராகும் சிறுமி  

ஞாயிற்றுக்கிழமைகளில் டீச்சராகும் சிறுமி  
Published on

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்

அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்

அண்ணன் கடன்பட்டவன்போல் டிவி பார்ப்பான்

அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்

மாடத்துத் தொட்டிச் செடிகளில்

குட்டிப் பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்

ஜன்னல் திரைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்

வாசலில் நுழையும் வெயில்

அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்

கைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்

ஆத்திரப்படும்போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்

சுட்டுவிரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள் 

புரிந்துகொள்ளாத மாணவமாணவிகளிடம் பொறுமையிழப்பாள்

பொட்டு வைப்பதைவிட மெதுவாகத்தான் என்றாலும்

தன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்

கன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி

யோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்

கெட்டிக்காரக் குழந்தைகளைப் பாராட்ட

புன்னகை வயலில் பூவொன்று பறித்துக்கொண்டு

சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்

ஞாயிற்றுக்கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

திங்கட்கிழமையை தள்ளிக்கொண்டு போவாள் பள்ளிக்கு.

சமீபகாலத்தில் தமிழ்க் கவிதை உலகை உலுக்கிய முக்கிய நிகழ்வு  ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் மரணம்.  அவரை நினைவுகூரும் பொருட்டு அவரது கவிதைகளில் ஒன்றை  இங்கே  வெளியிட்டுள்ளோம். அழியா

சிறப்புவாய்ந்த கவிதைகளை சிருஷ்டித்து தந்து சென்றிருக்கும் கிருபா தன் வரிகளில் வாழ்வார்.

அக்டோபர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com