இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திர வீராங்கனையான ஷெபாலி வர்மா இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு அரை சதங்களை விளாசி ஆட்ட நாயகி ஆகியுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த இவர் முன்னதாக 2019 செப்டம்பரில் மிக இள வயதில் உலக போட்டிகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. 16 வயது 214 நாட்கள் ஆன போது சச்சின் முதல் அரை சதத்தைப் பதிவு செய்திருந்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் யாராலும் தாண்டமுடியாத இந்த சாதனையை ஷெபாலி 15 வயது 285 நாட்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டி20 ஆட்டத்தில் 73 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார்.
இப்போதைக்கு டி20 ஆட்டங்களில் உலகின் முதல் இட வீராங்கனை. டி20யில் அதிக சிக்ஸர்களை அடித்திருப்பவர் என இந்த இளம்பெண் அசத்துகிறார். ஷெபாலியின் ஆட்டம் சச்சினையும் ஷேவாக்கையும் கலந்தது போல இருக்கிறது என்பது ரசிகர்களின் எண்ணம். ஷெபாலி நல்லா ஆடுறாப்புல... ஆனாலும் டீம் இன்னும் சொதப்புதே என்பவர்களுக்கு நாம் சொல்வது சற்றுப் பொறுங்கள்!
# ஹரியானா பெண் சிங்கம்!
மென்பொருள் அதிபரின் கதி!
கணினியில் புழங்கும் எல்லோருமே கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளான Mcafee பற்றிக்கேள்விப்பட்டிருப்போம். பயன்படுத்தி இருப்போம். இதை உருவாக்கியவர் பெயர் ஜான் மெக்காபி. அவர் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவர் சமீபத்தில் ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகர சிறையில் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.
இங்கிலாந்தில் பிறந்தவரான மெக்காபி, நாசா, ஜெராக்ஸ், போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்தவர்.பின்னர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை வணிகரீதியில் முதல்முதலாக 1987-இல் உருவாக்கினார். 2011-இல் இன்டெல் நிறுவனத்துக்கு தம் நிறுவனத்தை விற்றுவிட்டார். இப்போது அந்த கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை. பெயர் மட்டுமே இவருடையதாக உள்ளது. உலகளவில் 50 கோடிப்பேர் இந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள்.
மெக்காபிக்கு என்ன பிரச்னை? அமெரிக்காவில் தொழில் செய்தவரான இவர் வரிகட்டுவதில்லை என்ற கொள்கை உடையவர். 2012-ல் இருந்து 2019 வரை அரசுக்கு இவர் வரியே செலுத்தவில்லை! அத்துடன் இவர் மீது கிரிப்டோ கரன்ஸி மோசடி வழக்குகளும் உள்ளன.
இதைத் தொடந்து அமெரிக்க அதிகாரிகள் இவர் மீது வழக்கு தொடர்ந்தபோது ஆள் தப்பியோடிவிட்டார். கடலில் பெரிய படகு ஒன்றில் மனைவி, நாய்கள், காவலாளிகளுடன் வாழ்ந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினில் இருந்து இஸ்தான்புல்லுக்கு விமானம் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்டு அங்கே சிறையில் அடைக்கப்பட்டவரை அமெரிக்காவுக்கு அனுப்ப ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அமெரிக்கா அனுப்பவேண்டாம். இப்போதே எனக்கு 75 வயதாகிறது. அங்கே போனால் ஆயுசு முழுக்க சிறைதான் என்று வாதாடினார். நடக்கவில்லை.
சிறையிலேயே தூக்கில் தொங்கி வாழ்க்கையை முடித்துக்கொண்டார். பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவரை ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள். தன் கடைசி ட்வீட்டில்,'' எல்லாவிதமான அதிகாரங்களும் மோசமானவை. ஜனநாயக அமைப்பு எந்தவிதமான அதிகாரங்களைக் கொடுக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்!
ஜூலை, 2021