சட்டையை மடிச்சு தலையணைக்கு அடியில வச்சு!
செருப்பு தேஞ்சு அடிப்பக்கம் தெரிஞ்சதும் கீழே போட மனசு வராம அதை பாத்ரூம் செப்பலா மாத்துறது @Thowfic:
அயர்ன் பண்ண காசு கொடுக்கணுமேன்னு யோசிச்சு சட்டைய மடிச்சு தலையணை கீழ வச்சி தூங்குவேன் @aidselva:
பிள்ளைகள் தூங்கினதுக்கப்புறம் ஜன்னலை திறந்து ஏசி , பேன் ஆப் பண்ணுறவனும் மிடில்கிளாஸ்தான்@Packirajp:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று டிவிட்டர் பதிவுகளும் ‘மிடில் கிளாஸ் மனசு’ என்ற தலைப்பில் டிவிட்டரில் கடந்த அக்டோபர் பதினெட்டாம் தேதி அந்திமழை மாத இதழ் நடத்திய கருத்தரங்கில் பதிவு செய்யப்பட்ட மனக்குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை. மொத்தம் 2750 பதிவுகளை நூற்றுக்கணக்கான ட்விட்டர் வாசிகள் உலகின் பல நாடுகளில் இருந்து மூன்றே மணி நேரத்தில் பதிவு செய்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. இந்த ட்விட்டர் அரங்கை ஆல்தோட்ட பூபதி ஒருங்கிணைத்திருந்தார்.
மிடில் கிளாஸ் என்ற சொல் ஏன், எதற்கு எப்படி வந்தது?
பிரான்சில் 1745ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிராட்ஷா வெளியிட்ட பிரசுரத்தில் தான் முதன்முதலாக மிடில் கிளாஸ் என்ற சொற்றொடர் தென்படுகிறது.
1913ல் ஐக்கிய குடியரசின் தலைமைப் பதிவாளர் அறிக்கையில் புள்ளியியலாளர் ஸ்டீவன்சன் உயர்குடி மக்களுக்கும், பாட்டாளி மக்களுக்கும் இடைப்பட்ட மக்களை மிடில்கிளாஸ் அதாவது நடுத்தர வர்க்கம் என்று வகைப்படுத்தி புள்ளிவிபரங்களைத் தொகுத்திருக்கிறார். பிரஞ்சு புரட்சியில் நடுத்தர மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்திருக்கிறது.
நடுத்தர வர்க்க மக்களைப் பற்றி சமுகவியலாளர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள் தான் அதிக அக்கறையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளுகின்றன. இந்தியாவில் இந்த வர்க்கத்தை மூன்று விதமாக ஆண்டு வருமான அடிப்படையில் கூறு போட்டு லோயர் மிடில் கிளாஸ் (தொண்ணூறாயிரம் -இரண்டு லட்சம்), மிடில் மிடில் கிளாஸ் (இரண்டு லட்சம்- ஆறு லட்சம்), அப்பர் மிடில் கிளாஸ் (ஆறு லட்சம்- 16 லட்சம்) என்று லேபிள் ஒட்டியிருக்கிறார்கள். இந்த ‘தகுதிக்கு’ ஏற்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இந்தியாவில் வீல், ரின், சர்ப், ஆகிய துணி துவைக்கும் சோப்புகள் ஒரே நிறுவனத்தால் இந்த மூன்று விதமான பொருளாதார அடிப்படியிலான மக்கள் பிரிவுகளை குறிவைத்துத்தான் சந்தைப்படுத்தப்படுகின்றன.
எகனாமிஸ்ட் பத்திரிகை 2009ல் உலகளாவிய கருத்துக் கணிப்பு நடத்தி மிடில் கிளாஸ் மக்களை, மகிழ்ச்சியானவர்கள்,மிகவும் நேர்மறை நம்பிக்கை உடையவர்கள், ஜனநாயகத்துக்கு மிகவும் ஆதரவு தெரிவிப்பவர்கள் என்ற குணமுடையவர்களாக முன்னிறுத்தியது. உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் மிடில் கிளாஸ் மக்களால் ஆனது என்ற புள்ளிவிவரத்தையும் அளித்தது.
நடுத்தரவர்க்கத்தினர் சுதந்தர சந்தை, ஜனநாயகம் ஆகிய இரண்டையும் கொள்கைரீதியாக விரும்புவார்கள் என்பது அமெரிக்க ஆய்வாளர் டேவிட் ரீஸ்மேனின் கருத்து.
தமிழகத்தில் ஒவ்வொரு சாதிப்பிரிவுக்கும் சில பொது குணாதிசயங்களை வரையறை செய்து சொல்வார்கள். இப்படிப் பொதுமைப்படுத்திப் பிரிப்பதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். அது போல் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குள் பொதுமைப் படுத்தப்பட்ட குணாதிசயத்தை திணிக்கும் முயற்சியாகத்தான் தான் மிடில் கிளாஸ் மனநிலை என்று சொல்லப்படுவதும் அதை நாம் ஏற்றுக்கொள்வதையும் பார்க்கவேண்டும். இன்றைய சூழலில் பணம் சம்பாதித்து நிலைகளை மாற்றிக் கொள்ள நேர்மையான வழிமுறைகள் நிறைய உள்ளன.
மனிதனை தராதரம் பார்த்து எடை போட்டுதான் ஆக வேண்டுமெனில் பாரதிதாசனின் அளவுகோலை கையில் எடுங்கள். அவர்,
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்
கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம் ,
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல்.
தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் ஓன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே- என்றார்.
மிடில் கிளாஸ் பற்றிய ட்வீட்களில் ஓர் அதீத கேலி தெரிகிறது, பல நியாயமான விஷயங்களைச் சொல்லும்போதுகூட! என்று எழுத்தாளர் சொக்கன் ட்வீட்டியிருந்தார். அந்த கேலி நடுத்தர வர்க்க மனநிலையை வெறுப்பதில் இருப்பதில் இருந்து பிறந்திருக்கலாம். விரைவில் மிடில் கிளாஸ் என்கிற எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றுவோமாக.
ChittizeN: வண்டலூர் ஜூக்கு குடும்பத்தோட லெமன் ரைஸ் கட்டி எடுத்துட்டு போய் குரங்க வேடிக்கை பாத்துட்டு சாப்பிடுறது
Cutie_Selvi: பவுடர் மட்டும் தான் மேக்கப் கிட்
Krajesh4u: தொலைஞ்சு போனா மட்டும்தான் புது செருப்பு வாங்குவோம்....
DrTRM: அட்வான்ஸ் ,ஆடித்தள்ளுபடி, இலவசம்,ஈஎம்ஐ .. மிடில் க்ளாஸ் அரிச்சுவடிகள்
MEKALAPUGAZH: தன் சுற்றமும் நட்பும் தன் வளர்ச்சியைப் பார்த்து வயிறெரிகிறது என்று நினப்பவன்
Guthudaa: புதுசா ஒரு பொருள் வாங்க ரெண்டு வருசமா ப்ளான் போடுறவன்தான் மிடில்கிளாஸ்!
Kasayam: ஊரில் உள்ள பைனான்ஸ் முதலாளிகள் மொபைல் நம்பரும் மனப்பாடமா இருக்கும். கடன் வாங்க
Sricalifornia: எதையும் தூர எறிவதில் தயக்கம். என்றைக்காவது உதவும் என்று பத்திரப்படுத்தி மறக்கும்
Bullet_Ram: என்னதான் மாப்ளை மூஞ்சி கொரங்கு மாறி இருந்தாலும் அவன படிக்க வெச்சுருக்கேன்னு சொல்லி அவுங்க அப்பா நூறு பவுனு வரதட்சணை கேப்பார்
PeriyaStar: ஆத்தாவுக்கு கூழ் ஊத்த மிடிலனாலும்,தலைவர் போஸ்டருக்கு பால் ஊத்திடுவோம்.
Jananis_Mom: அக்கவுண்ட் இருக்கும் வங்கிக்கு கூட அடிக்கடி செல்வதில்லை. நகை ‘இருக்கும்’ வங்கிக்கு மட்டும் மாதா மாதம் வட்டி கட்ட ஆஜர்.
Vangaela: தலை வலிக்கு புல் பாடி செக்கப் பண்ணாம. டீ குடிச்சுட்டு குப்புற படுத்து தூங்குறது
ThowfiqS: செருப்பு தேஞ்சு அடிப்பக்கம் தெரிஞ்சதும் கீழே போட மனசு வராம அதை பாத்ரூம் செப்பலா மாத்துறது
aidselva: எந்த புது பொருள் வாங்கினாலும் அது பத்தி பத்து நாளாவது பேசணும்
mokrasu: பீர் கூலிங்கா இல்லைனாலும் சந்தோசமா குடிக்கிறவங்க தான் மிடில் கிளாஸ்
thameem06: ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டு வெளியில் வந்த பின் பத்துமுறை பர்ஸில் ஏடிஎம் கார்டை வைத்துவிட்டோமா என்று பரிசோதிப்பது.
kattathora: 2 வருஷத்துக்கு ஒரு முறை ஃப்ளைட்ல போனாலும், இந்த ஃப்ளைட் எப்பவுமே லேட்டாதான் வரும்னு அலுத்துக்குவோம்!
Tottodaing: நமக்கு முன்னாடி நாலுபேர் போனா போதும்.. அது தப்பான வழியா இருந்தாலும் விதிமீற யோசிக்கவே மாட்டோம்!
gpradeesh: தேவை இருக்கோ இல்லையோ பக்கத்து வீட்டுக்காரன் வாங்கீட்டா பகுமானத்துக்காகவே நம்மளும் Vacuum cleaner வாங்குறது..
நவம்பர், 2013