சுட்டெரிக்கும் ஒரு கோடைப்பகலில் முதன்முதலில் சங்கீத்தினுள் நுழையும்போது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு குளிர்மை உணர்வு என்னைப் பொதிந்தது. எங்கு பார்த்தாலும் திரைப்படங்களிலிருந்து இறங்கிவந்த கதாநாயகிகளைப்போல் பேரழகிகளான பெண்கள். ஏதோ திருமண வரவேற்பிற்கோ கொண்டாட்ட விருந்திற்கோ வந்திருப்பவர்களைப்போல் அழகான ஆடைகளில் தோன்றும் மனிதர்கள். ராணுவத்திலோ ரெயில் துறையிலோ வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும்தாம். அனைவரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். பணமும் பிரதாபமும் நாகரிக நடையும்கொண்டவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். உணவு வகைகள் விற்கும் மேஜைகளுக்கருகே அவர்கள் சிரித்து மகிழ்ந்து அணிவந்தனர். வரத் தகுதியற்ற ஓர் இடத்தில் வந்தேறிய ஒருவனின் பதற்றத்துடன் நான் குழம்பி நின்றேன்.
ஆனால் அலங்கார விளக்குகளின் ஒளியில் சுத்தமும் குளிரும் நிரப்பி, அதுவரை நான் அறிந்திராத கவர்ந்திழுக்கும் நறுமணத்துடன் சங்கீத்தின் அகத்தளம் எங்களை வரவேற்றது. ‘கர்ம கர்ம கமேலியன்... யூ கம் ஆண்ட் கோ..'. துள்ளலான பாடல் சிறந்த ஒலித்தரத்தில் ஒலித்தது. இளம் சிவப்பு இருக்கைகள் வில்வளைவு வடிவத்தில் அமைந்திருந்தன. திரையின் இடத்தில் திரை இல்லை, அகம் வளைந்த ஒரு வெண்சுவர் மட்டுமே எனத்தோன்றியது. ‘மயாமி ப்ளூஸ்' எனும் ஆங்கிலத் திரைப்படத்தைத்தான் அன்றைக்கு நாங்கள் பார்த்தோம். சிறந்த ஒரு குற்றவிசாரணைத் திரைப்படம். படம் ஆரம்பமான கணத்திலேயே நான் படத்திற்குள் சென்றேன். நிகழ்வுகளை அருகில் நின்று பார்ப்பதுபோன்ற உணர்வு. அவ்வளவு தெளிவான, துலக்கமான திரைக்காட்சிகளை எந்தவொரு திரையரங்கிலுமே அதுநாள்வரை நான் பார்த்திருக்கவில்லை.
சங்கீத்தின் வெள்ளித்திரை விசேஷமானது. படம் ஓட்டும் இயந்திரத்தில் கார்பன் தண்டுகளை எரிப்பதற்கு மாறாக வலுத்த பிரகாசத்தைத் தரும் க்ஸெனாண் வளைவு விளக்கைப் பயன்படுத்துகிறார்கள். பொடிசு ஓசைகள் வரை துல்லியமாக, தெளிவுடன் கேட்க வைக்கும் அல்ட்ரா ஸ்டீரியோ ஒலியமைப்பு.
சங்கீத்தின் சினிமா வேறு எங்குமே காணக்கிடைக்காத அனுபவம். தினசரி நான்கும் ஐந்தும் காட்சிகள் அங்கே இருந்தன. ஒவ்வொரு காட்சியும் வேறுவேறு படங்கள். புதுசும் பழசுமான ஆங்கிலத் திரைப்படங்கள். தரம் குறைந்த திரைப்படங்களைக் கூடத் தரமான படங்களாகக் காட்டும் மாயவிந்தை சங்கீத்திற்கு இருந்தது.
சங்கீத் திரையரங்கில் கிட்டத்தட்ட நிரந்தரமாகவே தங்கிவந்தவர் கிட்டார் கலைஞரும் மேற்கத்திய இசைஞருமான ரெஜி. அவர் கேரளத்தின் புனலூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடித்த ‘இன்டியானா ஜான்ஸ், ரைடேர்ஸ் ஆஃப் த லோஸ்ட் ஆர்க்' எனும் படத்தை பார்க்கப் போனபோதுதான் அவரை நான் முதலில் சந்தித்து அறிமுகமானேன். சினிமா வெறியும் இசை வெறியும் முற்றிப்போன இரண்டு கிராமத்தான்கள் ஒரு தொலைதூர நகரத்தின் திரையரங்கில் சந்திக்கிறார்கள். கணநேரத்தில் நண்பர்களாகிறார்கள். விரைவில் ஒரே அறையில் வசிக்கத் தொடங்குகிறார்கள். ரெஜியின் நட்பும் அவருடனான சகவாசமும்தாம் மேற்கத்திய பரப்பிசையை எனக்கு அறிமுகம் செய்தது. சங்கீத் திரையரங்கில் கேட்ட ‘கர்ம கமேலியன்' கல்ச்சர் க்ளப் எனும் இசைக்குழுவிற்காக பாய் ஜார்ஜ் எனும் பாடகர் பாடியது என்றும், சங்கீத்தில் திரைச்சீலை உயரும்போது கேட்கும் மெய்சிலிர்க்கவைக்கும் கருவியிசை யூரோப் எனும் இசைக்குழுவின் ‘ஃபைனல் கௌண்ட் டவுன்'தான் என்பதையுமெல்லாம் ரெஜியிடமிருந்துதான் அறிந்துகொண்டேன். ரெஜியுடன் இணைந்து நானும் சங்கீத் திரையரங்கில் ‘தங்க' ஆரம்பித்தேன்.
விரைவில் ரெஜியின் இசைக்குழுவான ‘செலெப்ரேஷன்ஸ்‘ இன் ஒருங்கிணைப்புப் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். செலெப்ரேஷன்ஸ் எனும் பெயரை ‘கர்ஃப்யூ' என்று மாற்றினேன். காரணமிருந்தது. அக்காலத்தில் ஐதராபாத் நகரின் மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக இருந்தது கர்ஃப்யூ எனும் ஊரடங்கு சட்டம். நகரின் பல பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் எரிந்து வெடிக்கத் தயாராகி ஹிந்து முஸ்லிம் மதக்கலவரத்தின் தீப்பொறிகள் பறந்தன. அதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆங்காங்கே அவ்வப்போது ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தினார்கள். ‘அந்தப் பகுதியில் கர்ஃப்யூ, அங்கே செல்லாதீர்கள், இந்தப் பகுதியில் கர்ஃப்யூ, இங்கே வராதீர்கள்' என்றெல்லாம் தொடர்ந்து கேட்கக் கிடைத்தன. அந்தச் சட்டத்தின்மேல் எங்களுக்கிருந்த கடுமையான எதிர்ப்பினாலும், கேட்டவுடன் கவனத்தை ஈர்க்கும் ஒரு பெயர் வேண்டும் என்கின்ற எண்ணத்தினாலும்தாம் இசைக்குழுவிற்கு கர்ஃப்யூ என்று பெயரிட்டேன். ஐதராபாத்தின் மாபெரும் தங்கும் விடுதிகளான ஹாலிடே இன் கிருஷ்ணா, தாஜ் பஞ்சாரா போன்ற பல இடங்களில் கர்ஃப்யூவின் மேற்கத்திய இசைக் கச்சேரிகள் அரங்கேறின.
ஒரு புத்தாண்டு இரவில் குடித்து கும்மாளம் போட்ட பார்வையாளர்கள் எமது முக்கியப் பாடகனான மாரியோவின் ஆங்கிலப் பாடல்களுக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினர். ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்று அவர்கள் உரத்துக் கத்தினர். ஆனால் ரெஜிக்கும் அவரது குழுவிற்கும் ஹிந்திப்பாடல்கள் என்றாலே ஒவ்வாது. பாடல் என்றால் அவர்களுக்கு மேற்கத்திய பரப்பிசைதான். வேறு வழியில்லாமல் நான் மேடையேறி ‘படி முஷ்கில் ஹே' என்ற சமகாலப் பாடலையும் ‘லாக்கோம் ஹே யஹாம் தில் வாலே' என்ற பழைய பாடலையும் பாடினேன். ஒத்திகையில்லாமல், தபேலா, டோலக் போன்ற இந்திய இசைக்கருவிகள் எதுவுமில்லாமல் வெறுமெனே கிட்டார்கள் மற்றும் டிரம்ஸை வைத்துக்கொண்டு அந்தப் பாடல்களைப் பாடும்போது கூட்டத்திலிருந்து செருப்படியைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் ஹிந்திப்பாடல்களை இதயப்பூர்வமாக நேசித்த அம்மக்கள் குறைகள் எதையும் கணக்கிடாமல் உள்ளார்ந்து எங்களை ஊக்குவித்தனர். சிலர் மேடையேறிவந்து எனது கழுத்தில் ரூபாய் நோட்டு மாலைகளை அணிவித்தனர்!
சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோர் அக்காலத் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். ஒருநாள் ஏதோ அவசர வேலைக்காக அமீர்பேட் பகுதியில் செல்லும்போது அங்கே ஒரு சினிமாப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அதுநாள்வரை ஒரு படப்பிடிப்பை நான் நேரில் பார்த்ததில்லை. அனைத்தையும் மறந்து அங்கே சென்று நின்றேன். பெரும்புகழ் நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என் டி ராமராவின் மகனான பாலகிருஷ்ணா எனும் தற்கால உச்ச நட்சத்திரம் நடிக்கும் ஏதோ படத்தின் படப்பிடிப்பு. அவர் இரண்டு கைகளிலும் நீளமான இரண்டு துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு அந்தரத்தில் பறந்துவந்து சுடுவதுபோன்ற காட்சியைப் படமாக்குகிறார்கள். சாய்ந்த ஒரு பலகையின்மேலேறி ஓடிவந்து எம்பிக் குதித்து கேமராவை நோக்கிச் சுட்டபின் அவர் கீழே விழவேண்டும்.
தரையில் பல அடுக்குகளில் பஞ்சு மெத்தைகள் விரித்திருந்தனர். அவற்றின்மேல்தான் வந்து விழுகிறார். அத்துப்பாக்கிகள் அட்டைக் காகிதத்தில் செய்து கறுப்பு வண்ணம் அடித்தவை என்பது பார்த்தாலே தெரியும். ஆனால் கைவிசை இழுக்கும்போது தீயும் புகையும் வருவதுபோல் அமைத்திருந்தனர். மீண்டும் மீண்டும் அக்காட்சியினை எதற்கு எடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இரண்டுமணி நேரமாகியும் அக்காட்சி சரியாக வராததால் படக்குழு ஆத்திரமடைந்தனர். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நின்றுகொண்டிருந்த கூட்டத்தைத் திட்டித் துரத்தத் தொடங்கினர். கதாநாயகனின் கவனத்தை பார்வையாளர்கள் கலைக்கிறார்களாம்! கடுமையான தெலுங்குக் கெட்ட வார்த்தைகளைத்தாம் பயன்படுத்துகிறார்கள். முக்கியமான வேலையை விட்டுவிட்டுப் படப்பிடிப்பைப் பார்க்க வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வாழ்க்கையில் முதன்முதலாக நான் பார்த்த சினிமாப் படப்பிடிப்பு அலங்கோலமான ஒரு நினைவாகிப் போனது.
இதை ரெஜியிடம் சொன்னபோது “சூட்டிங்கு பார்த்து திட்டு வாங்கி நேரத்த வீணடிக்காம சங்கீத் தேட்டருக்கு போயி நல்லதா ஒரு படம் பாத்திருக்கலாமேடா' என்றுதான் சொன்னார்! நாற்பது ஆண்டுகளுக்குமேல் திரையிடல் மற்றும் ஒலியின் தரத்தினால் எத்தனையோ படங்களை பல மாதங்கள் ஓட வைத்த, உலகின் புத்தம்புதிய திரையிடல் தொழில் நுட்பங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த சங்கீத். ஆங்கிலத் திரைப்படங்களின், ஆங்கில இசையின் கனவு உலகத்திற்குள் என்னை வசியம் செய்து அழைத்துக் கொண்டுபோன சங்கீத் திரையரங்கம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஐதராபாத் சங்கீத் ஙீ ரோட் என்று பேரான சாலையோரத்தில் தலைதூக்கி அவள் நின்றுகொண்டிருந்த இடம் இன்றளவும் காலியாகவே கிடக்கிறது.
(வளரும்...)
Shaajichennai@gamail.com
மே, 2022