என்னை பொறுத்தவரை நான் பிறக்கும்போதே ரிஸ்க் எடுத்தவனாக்கும். 07.01.1961 அன்று திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் காலை 10.15க்கு பிரசவமாகிறேன். பொதுவாக குழந்தைகள் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து சுவாசிக்கத் தொடங்குகிற முதல் ரிஸ்க்கிற்கு பயந்து வீறிட்டு அழும். என்னிடமோ பிரசவமான 15 நிமிடங்கள் வரை சப்தத்தையே காணோம்! டாக்டர் பதறி முதலுதவி செய்கிறார். பலனில்லை.
விஷயம் தெரிந்து "குழந்தை பிழைக்காதோ!"
என்ற விரக்தியால் வாசலில் காத்திருந்த தாத்தா துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப் போனார். பாட்டி தெருவில் நின்று எதிரே தெரிகிற மகாலிங்க சுவாமி கோயில் கோபுரத்தை பார்த்து கரம் கூப்பி தொழுகிறாள். "எத்தனை வழிபாடுகள், பூஜைகள் செய்திருப்பேன். கைவிட்டு விடாதே, மகாலிங்கா!"என்று கதறுகிறாள். அதே நேரம் கைராசிக்காரரென பெயரெடுத்த வடநாட்டு டாக்டர் மருத்துவம் பலனளிக்காமல் தனது குலதெய்வமான பண்டரிபுரம் பாண்டுரங்கனிடம் சரணடைகிறார். எனது கால்களை பிடித்து தூக்கி உயரே தலைகீழாக தொங்கவிட்டு, "பாண்டுரங்கா, பண்டரிநாதா!" என்று குலுக்குகிறார். அதேநேரம் வாசலில் வழிபடும் பாட்டிக்கு பலனாக கோயில் மணியோசை ஒலிக்கிறது. டாக்டர் "பாண்டுரங்கா" என்று மூன்றாவது முறை சொல்கிறார். நான் வீறிட்டு அழுகிறேன்.
அப்புறம் சினிமா அல்லது பத்திரிக்கை துறையில் சாதிக்க வேண்டுமென சென்னை வந்து தன்னந்தனியாக போராடியது ஒரு ரிஸ்க் என்றால் குடும்ப சூழலால் 40 வயதில் திருமணம் முடித்து அந்தமாதமே குடும்பத்தில் பிரச்னையாகி பிரிந்து, சென்னையில் தனிக்குடித்தனம் தொடங்கியது இன்னொரு ரிஸ்க்.
இப்போ சொல்லுங்க, வாழ்க்கையே எனக்கு ரிஸ்க் தானே.
தைரியமாக ரிஸ்க்கை சந்தியுங்கள். அதன்மூலம் சந்தோஷமாக வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை