“குருநாதரின் பெயரை மகனுக்கு வைத்தார்!”

தொ.ப வின் மறுபக்கம்
“குருநாதரின் பெயரை மகனுக்கு வைத்தார்!”
Published on

சமீபத்தில் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மகள் விஜயலெட்சுமி அவரது நினைவுகளை அந்திமழைக்காகப் பகிர்ந்தார்:

  ‘‘அப்பா நடுத்தரக் குடும்பத்தில் பத்தாவது பிள்ளையாகப் பிறந்தார் அதனால்தான் வீட்டில் அவருக்கு பரமசிவன் என்று பெயர் வைத்தனர்.  எங்க அப்பாவுக்கு ஐந்து வயது இருக்கும்போது எங்க தாத்தா தொப்பக்கோனார் இறந்து விட்டார். அவர் சொந்தமாக லாரி வைத்து தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் சரக்கு கொண்டு போகிற வேலைப் பார்த்தவர்.

  பாளையில் உள்ள அந்தோணியார் பள்ளிக்கூடத்திற்கு அப்பா ‘பேபி வகுப்பு' (பாலர்வாடி) போகும்போது  அப்பாவைப் பார்த்து பாதர் ‘மொட்டை எதற்கு போட்டுருக்க?' என்று கேட்டாராம் அழுதுகொண்டே ‘எங்க அப்பா தவறிட்டாங்க' என்று சொன்னாராம். உடனே பாதர் அவரைத் தூக்கி வைத்துக்கொண்டு  ‘வருத்தப்படாதே நீ பெரிய ஆளாக வருவாய்' என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் சிலுவை போட்டுவிட்டு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தாராம்.  சின்ன வயதில் பாதர்

சொன்ன அந்த நம்பிக்கையான வார்த்தை எனக்கு பெரிய தெம்பு கொடுத்தது என்று எங்களிடம் அப்பா அடிக்கடி சொல்லுவார்.

 பாட்டிக்குச் சொந்த ஊர் வெள்ளாளங்குளம்..

சாதி பிரச்சனைக் காரணமாகத் திருமணத்திற்கு முன்பே பாளையங்கோட்டை மேலத்தெருவில் குடியேறினார்கள்.  அப்பாவையும்  அப்பாவோடு கூட பிறந்த அண்ணன், இரண்டு அக்கா மார்களையும் பாட்டியும் அவரது அத்தையும்தான் வளர்த்தார்கள்.  அப்பாவை பாட்டிதான் படிக்கவைத்தார். 100 மீட்டரில் பள்ளிக்கூடம் இருந்தாலும், அவருடைய அக்காமார்கள் இரண்டாம் வகுப்புக்குப் பிறகு படிக்கவில்லை. அந்தக்காலத்தில் பிள்ளைத்

தூக்குவதற்காக அக்காமார்கள் படிப்பை நிறுத்தும் வழக்கம் எங்க குடும்பத்திலும் நடந்தது. எங்க பாட்டி வீடுவீடாக போய் நெல் அவித்தும், பால்பண்ணையில் பால் பாத்திரம் கழுவியும்தான் குடும்பத்தை நடத்தினார்கள். வறுமையோடுதான் படிப்பும் தொடர்ந்தது. என்ன ஒரு வாய்ப்பு என்றால் கிறிஸ்தவ மிஷனரி இலவசமாக கல்வி கொடுத்ததால்தான் அப்பாவால் படிக்க முடிந்தது.

  அப்பாவோட அண்ணன் இராணுவத்திற்கு போய்விட்டார். அக்காமார்களை சீக்கிரம் கல்யாணம் கட்டிகொடுத்தாச்சு. அப்பாவை மட்டும் பாட்டி மேல்படிப்புக்கு  படிக்க அனுப்பும்போது, சுற்றியிருந்தவர்கள் படித்தது போதும் ஏதாவது  கடைக்குப் பொட்டலம் போட வேலைக்கு அனுப்பு என்று சொன்னாங்க. ஆனா எங்க பாட்டி வைராக்கியமாக மறுத்துவிட்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை பட்டம் பெறுவதற்கு அனுப்பினார். அதனால்தான் ‘என்னுடைய அம்மா பெரியார் கண்ட பெண்' என்று அடிக்கடி அப்பா கூறுவார். அவருக்கு பெரியார் மேல் அளவுக்கடந்த மரியாதை உண்டு. ‘பெரியாரோடு

சேர்ந்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு

கிடைக்கவே இல்லை; இந்த நூற்றாண்டின் வாழும் பெரியார் நல்லகண்ணு அவரோடு புகைப்படம் எடுத்துக்கோ' என்று ஒருமுறை அய்யா நல்லகண்ணு வந்திருந்தபோது சொன்னார்.

அப்பாவுக்கு 1975 இல் திருமணம் நடக்கிறது. அம்மாவுக்கு கீழத்தெரு; அப்பாவுக்கு மேலத்தெரு. எப்போதுமே அப்பா அம்மாவின் தெருவழியாகத்தான் பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கிறார்கள். ஆனால் ஒருமுறைகூட அம்மாவைப்  பார்த்தது கிடையாது என்று சொல்லுவார். அம்மா சிரிப்பாங்க.

 எங்க அப்பாவுக்கு பாட்டிதான் முதல் மிக பெரிய ஆளுமையாக இருந்தார். தனி ஆளாக இருந்து தன்னை படிக்கவைத்து இவ்வளவு பெரிய ஆளாக்கி வளர்த்ததால் அம்மா மீது அவருக்கு பாசம் அதிகம் உண்டு. எங்க பாட்டி கடைசி 10 வருடம் படுக்கையில்தான் இருந்தார். பாட்டியை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவேதான் அப்பா  மதுரையில் வேலை பார்க்கும் போது குடும்பத்தை மதுரைக்கு குடியேற்றாமல் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். வாரவாரம் தன் குடும்பத்தைப் பார்க்க வந்துவிடுவார்

 என்னிடம் ஒவ்வொரு விசயத்தையும் ரொம்ப உன்னிப்பாகப் பார்க்கச் சொல்லுவார். குழந்தைகளுக்கோ மாணவர்களுக்கோ பாடம் நடத்தும்போதும் ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு பல கோணத்தில் யோசிக்கச் சொல்லுவார். 'கண்' என்ற சொல்  ஒரு உறுப்பு பெயர்தான் ஆனால் அந்த சொல்லோடு வேறொரு சொல் சேரும்போது எவ்வாறு பொருள் மாறுகிறது என்பதை குழந்தைகளுக்குச் சொல்லி தரணும்.  கண்வலி- அந்த சொல் பொருள் மாறி நோய் பெயராகிறது. கண்மை & அழகு சார்ந்த பெயராகிறது கண்ணீர், கண்திருஷ்டி. கண்கட்டுவித்தை, கண்காட்சி இந்த மாதிரி நிறைய சொற்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பார்.

  அப்பா ரொம்ப மென்மையானவராக எங்களிடம் கடைசிவரை இருந்தாங்க சின்ன வயதில் இருந்து என்னையோ அண்ணணையோ அடித்ததே கிடையாது.  எந்த விசயத்திலும் கண்டிப்பு இருந்தால் அது குழந்தைகளிடம் போய் சேராது அந்த காலத்தில் மக்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதால்தான் ஒரு மதமே காணாமல் போயிருக்கிறது. மனிதன் இறந்துபோவான் ஒரு மதம் இறந்துபோகுமா? என்று என்னைப்பார்த்து கேட்டார் .

  நான் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு கல்லூரியில் அறிவியல் பாடம் எடுத்து படித்தேன். எனக்கு சங்க இலக்கியம் சொல்லி கொடுங்க என்று ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்பேன். அவர் எப்போதுமே திருக்குறள் படி ; புறநானூறு,

 சங்க இலக்கியம் வேண்டாம்; உனக்கு திருக்குறள் போதும். மற்ற சமய நூல்கள் அச்சமும் ஆசையும் ஊட்டிதான் அறம் செய்ய சொல்லுகிறது, ஆனால் திருக்குறள் மட்டும்தான் அறம் செய்தால் நல்லா இருப்பிங்க எனறு சொல்லுகிறது, என்பார்.

   அவருக்கு பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும் பயணமே வாழ்க்கையாக இருந்திருக்கிறது அதனால்தான் சிலப்பதிகாரத்தை ஒரு பயணக்காப்பியம் என்றே சொல்லுவார். சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பயணம்தான் செய்யும்.  அவருக்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது இருந்தாலும் அடுத்த ஒரு பிறவி இருந்தால் என்ன செய்வீங்க என்று வற்புறுத்தி கேட்டால். அவர் சிலப்பதிகாரத்தை திரும்பவும் படிப்பேன்” என்பார்.

 அப்பா தன் ஏழு வயதிலே பாளை நூற்றாண்டு மண்டபத்திற்கு பக்கத்தில் இருந்த சிறுவர்  நூலகத்திற்கு படிக்க போய்ட்டாங்க. இதற்கிடையில் பாட்டி கடையில் பொரிக்கடலை வாங்கிவிட்டு வா என்றால் போகிற வழியில் சுவரில் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகளைப் படித்துக்கொண்டே அரைமணி நேரம் கழித்து மெதுவாகதான் வருவாராம்.

 அதேபோல் அவரின் குருநாதரான சி.சு. மணி மாமா வீட்டுக்கு 18வது வயதிலிருந்தே போக ஆரம்பித்தார்.. அப்பா எந்த இடத்திற்கு போனாலும் புகைப்பிடிக்கத் தயங்கியதில்லை. ஆனால் சி.சு. மணி மாமா வீட்டில் வைத்து அப்பா புகைப்பிடித்தே கிடையாது, வீட்டிற்கு வெளி வாசலில் அணைத்துவிட்டுதான் வீட்டிற்குள் செல்வார். அவ்வளவு மரியாதை உண்டு. மாமாவும் தனது சகோதரனைப்போல்தான் பிரியமுடன் இருப்பார். அதனால்தான் என் அண்ணனுக்கு  மணி என்று பெயர் வைத்தார். பெரும்பாலும் தகப்பன் பெயரைத்தான் மகனுக்கு வைப்பார்கள் ஆனால் எங்க அப்பா தன் குருநாதர் பெயரையே வைத்தார்.  எனக்கு என்னுடைய பாட்டி பெயர் லட்சுமி.

 எங்களை எப்போதும் அப்பா படிபடி என்று சொன்னதே கிடையாது.   மதிப்பெண் மீது அவருக்கு பெரியஅளவில் அக்கறை கிடையாது.. அவரே பள்ளியில் 100 மார்க்கு ஒருதடவைக்கூட தேர்வு எழுதியது இல்லை. 80 மார்க்குதான் எழுதுவார்.. அதேபோல புத்தகம் கையில் கிடைத்தவுடன் வாசிக்க ஆரம்பித்து விடுவார்  ஒருமுறை சேவியர் பள்ளியில் ஆசிரியர் பாடப்புத்தகத்தில் முதலாவது பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அப்பாவிற்கு நான்காவது பாடத்தில் சந்தேகம் வந்து எழுந்து கேட்டிருக்கிறார்.  ஆசிரியர் உடனே ‘நீ எல்லா பாடத்தையும் படிச்சிட்ட எனக்கு தெரியும் நாலாவது பாடம் வரும்போது கேளு' என்று சொல்லிவிட்டாராம்.

  எங்க அப்பாவோட முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமே அம்மாதான்.. யார் வீட்டிற்கு வந்தாலும் 65 வயது ஆனாலும் ஒருநாளும் முகம் சுளிக்காமல் அப்பா சொல்லுகிற மாதிரி நடந்து கொள்வார். அப்பாவின் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாளித்தண்ணி கூட அம்மா அப்பாவைத் தூக்கச் சொன்னது கிடையாது அப்படி கவனித்து கொண்டார்.                                                                                                    

  கல்லூரியில். பல்கலைக்கழகத்தில் விடுதியில் எங்கு பார்த்தாலும் அப்பாலைச் சுற்றி பத்து பேர் இருப்பார்கள்.   கொரோனா காலத்தில் பார்ப்பதற்கு யாரும் வராதது அவரை ரொம்ப பாதித்தது. ‘நான் பெரியார் கொள்கையில் வாழ்ந்தவன் என்பதால் நான் இறந்தபிறகு சுடுகாட்டுக்கு அம்மாவும் நீயும் வரணும்' என்று சொன்னார். ‘நான் உங்களுக்காக குடும்பத்தில் சில சமரசம் செய்திருக்கிறேன் அதனால் நீங்கள் என்னுடைய இந்த ஆசையை நிறைவேற்றணும்' என்று அவரது கடைசி ஆசையைச் சொன்னார்.  அதனால் நாங்களும் எந்த சடங்கு முறைகளும் செய்யாமல் நான் மட்டும் சுடுகாட்டுக்கு போனேன்.

  அவர் மரணத்தைக்கூட தானே தீர்மானித்து கொண்டார் என்றுதான் சொல்லுவேன். டிசம்பர் 24, காலை 8 மணிக்கு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இட்லி சாப்பிட்டு விட்டு, ‘இன்று எங்க அம்மா நினைவு நாள் பெரியார் நினைவுநாள் இன்றைக்கு போனா நல்லதுதான்; எனக்கு இருக்கிற உடம்பு நிலைமைக்கு போய்விடுவேன் பாப்பா என்னை நீ ரொம்ப நல்லா பார்த்துக்கிட்ட நீ பத்திரமா இருந்துக்கோ,' என்று எங்க அம்மாவிடம் கூறினார்.  ஆன்மா என்று ஒன்று இருந்தால் இறப்பற்கு பிறகு  எங்கே போகும் என்று அப்பாவிடம் விளையாட்டாக கேட்டேன். ஆன்மாவின் மீது அப்பாவிற்கு நம்பிக்கை கிடையாது இருந்தாலும் நான் கேட்டதால் சொன்னார். ‘எல்லா ஆன்மாவும். பெற்றத்தாயைத்தேடித்தான் போகுமே தவிர மற்ற எந்த உறவுகளையும் தேடி போகாது' என்றார்.. எங்க அப்பாவும் தன் தாய் இறந்த அதேநாளில் அதே அந்தி சாயும்நேரத்தில் அவங்க தாயைத்தேடிதான் போய்இருப்பார்,'' நம்பிக்கையுடன் கூறிவிட்டு கண்களை மூடி தந்தையை மனதிற்குள் நினைத்தார் விஜயலெட்சுமி.

பிப்ரவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com