‘கிளி’னீசியன்

‘கிளி’னீசியன்
Published on

பத்தாண்டுகளுக்கு முன்பு என் கிளினிக்கில் இருக்கும்போது ஒரு அழைப்பு. ‘டாக்டர், ஒரு கான்யூருக்கு அடிபட்டிருச்சு. கொண்டுவரலாமா?' ‘வாங்களேன்' என்று சொன்னபிறகு எனக்கு சற்று திகைப்பாக இருந்தது. கான்யூரா? அப்படின்னா என்ன? என்ன மாதிரி செல்லப்பிராணி அது? ஓர் இளம் கால்நடை மருத்துவனாக எனக்குப் புரிந்திருக்கவில்லை.

வந்தவர் சின்னதாக மஞ்சள் நிறத்தில் அழகிய பறவையொன்றைக் கொண்டுவந்திருந்தார். வீட்டில் மின்விசிறியில் அடிபட்டு மோசமாகக் காயம்பட்டிருந்தது. மேசையில் கிடந்த அப்பறவை தன் கடைசி நொடிகளில் இருந்தது. என்ன சிகிச்சை அளிப்பது என நான் முடிவெடுப்பதற்குள், அதன் வாழ்க்கை முடிந்துபோய்விட்டது.

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகள் பற்றி பெரிதாக எந்தப் புரிதலும் இல்லாத காலம் அது. கல்லூரியில் படிக்கும்போது அவற்றைப் பற்றி பெரிதாக அறிந்திருக்கமாட்டோம். எனக்கு அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என ஆவல் அதிகரிக்க, பல்லாவரம் சந்தைக்கு சென்று, நான் யாரென்று தெரிவித்துக்கொள்ளாமல் அங்கே விற்கப்படும் ஒவ்வொரு பறவையும் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்வதில் சிலகாலம் செலவழித்தேன்.

அந்த சந்தை எனக்குப் புதிதில்லை. முதுகலை கால்நடை மருத்துவம் படித்தபோது வாத்து களில் வெள்ளைக் கழிச்சல் நோய் பற்றி ஆய்வு செய்தேன். வாத்துகளிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கவேண்டும். அதற்காக வாத்து வளர்ப்பவர்களிடம் சென்று வேண்டிக் கொண்டபோது, என்னை அவர்கள் கிட்டவே

சேர்க்கவில்லை. எனவே சுமார் 100 வாத்துகளை விலைக்கு வாங்கி, அவற்றிடம் மாதிரிகளை சேகரித்துவிட்டு, அந்த வாத்துக்களைக் கொண்டுபோய் சந்தையில் அமர்ந்து மறுவிற்பனை செய்த அனுபவம் எனக்கு உண்டு. விற்றதுபோக மீதியை அங்கேயே சும்மா கொடுத்து விட்டு வந்துள்ளேன்.

சரி..இந்த செல்லப்பறவைகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிடரியைப் பிடித்துத் தள்ளியதால் அதுபற்றி சில படிப்புகளைப் படித்ததுடன் அபுதாபியில் உள்ள பால்கன் என்ற மருத்துவமனையில் ஒருமாத காலம் நேரடிப் பயிற்சிக்குப் போய்விட்டு வந்த பின் தான் இப்போது சென்னையில் இந்த பறவைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடிகிறது.

 ஆப்பிரிக்க பழுப்புக் கிளி ஒன்றை சிகிச்சைக்குக் கொண்டுவந்திருந்தார்கள். அதன் பெயர் மின்மினி. ‘நல்லா சாப்புடுது. ஆனா உடம்பு ஏறவே இல்லை.. இளைத்துக்கொண்டே செல்கிறது' என்றார்கள். நன்கு பரிசோதித்ததில் என்ன பிரச்னை எனப் புரிந்தது.

பொதுவாக கிளிகள் தங்கள் சாப்பாட்டில் முக்கால்வாசியை வீணாக்கிவிடும். உரித்துக் கொட்டிவிட்டு சாப்பிடுவதுபோல் பாவ்லா காட்டும். கொஞ்சம்தான் சாப்பிடும். இந்தக் கிளியும் அப்படி சாப்பிடுவதுபோல் இருந்ததால் நன்றாக சாப்பிடுகிறதே என நினைத்துக்கொண்டார்கள். ஆனால் அதன் நாக்கின் உள்பகுதியில் கொழகொழப்பான ஒரு படலம் இருந்தது. பொதுவாக கிளியின் நாக்கு காய்ந்துபோய் இருக்கவேண்டும். அதை மாதிரி எடுத்துப் பரிசோதித்ததில் பூஞ்சை தாக்குதல் இருந்ததைக் கண்டறிந்தோம். அதற்கான சிகிச்சை அளித்ததில் சரியாகிவிட்டது.

இவற்றுக்கு உணவிடுவதிலும் வளர்ப்போர் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ளன. வெறுமனே விதைகள்,கொட்டைகளை மட்டும் உணவாகத் தருகிறவர்கள் இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே சாப்பிட்டால் கொழுப்பு கல்லீரலில் படிந்து அவை பாதிக்கப்படும். மாறாக விதைகள், கொட்டைகள் 40 & 60 சதவீதமும் 30 சதவீதம் அளவுக்கு பழங்களும், பத்து சதவீதம் அளவுக்கு இலை தழைகளுமாக இருக்கவேண்டும். இவற்றைக் கொடுத்தால் தேவையான அளவுக்கு அவை சாப்பிட்டுக்கொள்ளும்.

ஒரு கான்யூர் வகைக் கிளி கொண்டுவரப்பட்டிருந்தது. காலை கீழே வைக்காமல் ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்தது. காலும் சற்று அழுகினாற்போல் இருந்தது. ‘இப்படியே பல நாட்களாக நிற்கிறது என்ன வாச்சு என தெரியவில்லை' என்று அதன் உரிமையாளர் சொன்னார். அதைப் பிடித்து காலைப் பரிசோதித்தேன். காலில் ஏதோ சுற்றி இருந்தது. அது நீளமான பெண்களின் தலைமுடி. ஏதோ காற்றில் பறந்த முடி அதன் காலில் சுற்றி இறுக்கி இருக்கிறது. அந்த கால் விரல் ஒன்று அழுகிவிட்டதால், அறுவை சிகிச்சை மூலம் முடியை நீக்கி, ஒரு விரலையும் நீக்கி சரி செய்து அனுப்பி வைத்தேன்.

அப்புறம் காக்கட்டூ என்கிற கொண்டைக் கிளி ஒன்று வித்தியாசமான பிரச்னையுடன் என் கிளினிக்குக்கு வந்தது. என்னவெல்லாமோ செய்துபார்த்துவிட்டோம். இதன் இறக்கைகள் உடைந்துகொண்டே இருக்கின்றன, என்றார்கள். அதை சிறிய கூண்டில் அடைத்து கொண்டு வந்திருந்தனர். அதற்கான சத்து மருந்துகளைக் கொடுத்து அனுப்பி வைத்தோம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் அதன் கூண்டைப் படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன்.

அந்த படத்தைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆனது எனப் புரிந்தது. அந்த கூண்டு இந்த கிளிக்கு போதுமான அளவுக்கு பெரிய கூண்டு இல்லை. அத்துடன் அதற்குள் கிளிக்கான விளையாட்டுப் பொம்மைகளையும் நிறைய வைத்திருந்தனர். அதற்கு இடம் போதாததால் கிளியின் இறக்கைகள் கூண்டின் சுவர்களில், பொம்மைகளில் அடித்து சிறகுகள் உடைகின்றன எனப் புரிந்து, பெரிய கூண்டுக்கு மாற்றுங்கள் என ஆலோசனை கொடுத்தேன். மாற்றிய பின்னர் பிரச்னை நின்றுவிட்டது.

இந்த கிளிகள் எல்லாம் 40-60 ஆண்டுகள் வாழக்கூடியவை. எனவே மனிதர்களுடன் நெருங்கிப் பழகி, நல்ல பாசத்தைக் காட்டக்கூடியவை. வளர்ப்பதற்கு பெரிய இடமோ, தீவனசெலவோ இல்லை என்பதால் அதிகம் வளர்க்கப்படும். நெருங்கிப் பழகுவதால் இவற்றின் இழப்பு, பெரும் வருத்தத்தை உரிமையாளர்களுக்கு ஏற்படுத்தும். நானே கூட ஆறேழு ஆண்டுகளாக ஓர் ஆப்பிரிக்க பழுப்புக் கிளியை வீட்டில் வளர்த்துவந்தேன். திடீரென ஒரு நாள் அது வெளியே பறந்துபோய்விட்டது. அதன் பிரிவுத் துன்பம் பெருமளவுக்கு வாட்டி விட்டது!

பெரும்பாலும் சிறுசிறு வளர்ப்புச் சிக்கல்கள்தான் பெரிய பிரச்னையில் கொண்டுபோய் விடும். மூக்கின் மேல்பகுதி வளர்ந்து கீழ்நோக்கி சுருட்டி இருந்த நிலையில் ஒரு கிளியைக் கொண்டுவந்தார்கள். ஒருவழியாக அதன் மூக்கை தேய்த்து சரியான அளவில் வைத்தேன். அதன் பிறகே அதனால் ஒழுங்காக சாப்பிட முடிந்தது. ஆனால் ஏன் இப்படி ஆனது? கிளியின் கூண்டில் அது அமர்வதற்கும் தன் மூக்குகளைத் தீட்டிக்கொள்வதற்கும் மரக்கட்டைகள் வைத்திருப்பர். இவற்றின் மீது அமர்ந்து கிளிகளே வளர்ந்துகொண்டிருக்கும் தங்கள் மூக்குகளைத் தீட்டி தேய்த்து சரிப்படுத்திக்கொள்ளும். ஆனால் இந்த கிளியின் கூண்டில் அதுபோல் மரக்கிளைகள் எதுவும் இல்லை எனக் கண்டறிந்தேன். அப்புறம் அதன் அவசியத்தைச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

கடைசியாக ஒரு சுவாரசியமான அனுபவம். இம்மாதிரி கிளிவகைகளை வளர்த்து குஞ்சுகளை விற்பனை செய்பவர்களிடம் இரண்டு ஜோடி காக்கட்டியேல் கிளிக் குஞ்சுகளை ஒருவர் வாங்கி இருக்கிறார். ஆணும் பெண்ணும் என

சொல்லி விற்றுள்ளனர். ஆனால் வந்ததில் இருந்து இரண்டும் ஒன்றை ஒன்று கொத்திக்கொண்டும் இறகுகளை பிடுங்கிக்கொண்டும் இருந்துள்ளன. என தொலைபேசியில் பேசியவர்கள் என்ன செய்வது எனக் கேட்க, நான் நேரில் எடுத்துவாருங்கள் பார்த்துச் சொல்கிறேன் எனக் கூறினேன். மறுநாளே அவை கொண்டுவரப்பட்டன. பார்த்தவுடனே காரணம் தெரிந்துவிட்டது. அவை இரண்டுமே ஆண் பறவைகள். ரெண்டுமே ஆணா இருந்தால் சண்டைபோடாமல் என்ன செய்யும்?

(மருத்துவர் எஸ்.ஸ்டாலின் வெள்ளதுரை, சென்னையில் Petzmart செல்லப்பிராணிகள் மருத்துவமனையில் தலைமை மருத்துவர்)

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com