கருணா என்ற சமூக முன்னெடுப்பாளன்!

கருணா என்ற சமூக முன்னெடுப்பாளன்!
Published on

தி ருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் என் இரண்டாமாண்டு பி.காம் படிப்பை பேருக்குப் படித்துக் கொண்டிருந்த காலமது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வு, நாட்டுரிமைக்கானப் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த அனல், கடல் கடந்து திருவண்ணாமலை வரை சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் எங்கள் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தன்னிச்சையாக கல்லூரி நுழைவுவாயிலின் முன் நின்று, திசைகளதிர கோஷங்கள் எழுப்பி, அதனூடே எங்கள் கல்லூரி மாணவத்தலைவன் ‘கறுப்பு சூரியன்' கருணா பேசுவார் என அவரை கல்லூரி மதில் சுவற்றின் மீதேற்றிவிட்டனர்.

அதற்கு முன் பல முறை வெறும் புன்னகையோடோ, அல்லது சில சொற்கனினூடே கடந்து போயிருந்த நான், ‘கருணா' என்ற அந்தக் கறுப்பு சூரியனை என்னுள் பதித்துக் கொண்டது அவ்விநாடியில்தான் என இப்போது அறுதியிட முடிகிறது.

பாரம்பரிய திராவிட முன்னேற்றக் கழக குடும்பங்களில் ஒன்று கருணாவுடையது. விதவிதமாக கலைஞர் கருணாநிதியின் புகைப்படங்களோடு கருணா வீட்டு இராமலிங்கனார் வீட்டுச் சுவர் கர்வமுற்றிருக்கும்.

கருணாவின் தோழமை எனக்கு இன்னொரு பவாவைத் தந்தது. கருணாவின் இயக்க, கொள்கை மாறுதல் என்பது என்னால் நிகழவில்லை. அதுவாகவே நிகழ்ந்தது.

கடந்தப் பத்தாண்டுகளாகத்தான் கருணாவிற்கு வாசிப்புக் கைகூடியிருந்தது. அதற்கு முன் அவன் களம் களப்பணிகள்தான். போராடுவதும், போராடித் தூண்டுவதும் அதற்கான ஸ்திரமான கல்தூணாக களத்தின் மையத்தில் தான் நிற்பதும் எனவும் தான் கருணா வாழ்ந்த வாழ்வின் மய்யம்.

இடையிடையே அவன், என்.எஸ்.மாதவனின் ‘பிறகு'க் கதையில் வரும் முகுந்தனைப்போல பல பரிணாமங்களில் மிளிர்ந்து மறைந்தவன்.

நாடகக்காரனாக, குறும்படம் எடுப்பவனாக, நடிகனாக, ஒரு கதை எழுதியவனாக, ஒரு சினிமாப் புத்தகம் எழுதியவனாக, பள்ளியில் நிர்வாக அலுவலராக, ஒரு தினப்பத்திரிகையின் உதவியாசிரியனாக, என கருணாவின் பரிமாணங்களை அடுக்கிக்கொண்டேப் போகலாம்.

அடிப்படையில் எப்போதும் அடியாழத்தில் தணலெரியும் ஒரு கலகக்காரன்தான் அவன்.

எந்த வடிவத்திலாவது அக்கலகத்தை சமூக பரவலாக்க அவன் முயன்று கொண்டேயிருப்பான். அதுதான் மேற்ச்சொன்ன கருணாவின் முன்னெடுப்புகள்.

துவக்கத்தில், அவன் வாசிப்பையும், எழுத்தையும் இரண்டாம்தரமாக வைத்தவன்தான் அது களப்பணியாற்றமுடியாதவனின், கையாலாகாதவனின் சோம்பேறித்தனம் என்ற

கருத்தியலில் உறுதியாக இருந்தவன். ஆனால் படைப்பின் பிரவாகங்களுக்கு அவன் ஊற்றுக்கண். எப்போதுமே ஊற்றுக்கண்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனாலும் அதுவே நீரின் பிரவாகத்தின் துவக்கம். அதுதான் கருணா என்ற கண்ணுக்குத்தெரியாத ஊற்றுக்கண்ணின் இடம்.

இந்த நாற்பதாண்டு தொடர் செயல்பாடுகளில் நான் கருணாவிற்குக் கொடுத்ததைவிடவும், அவனிடமிருந்து பெற்றுதுதான் சதவீதத்தில் அதிகம்.

மிகத் தீவிரமாகயோசித்து ஒரு இடத்தை அவன் தேர்ந்தெடுப்பான். அதுவே அவனின் பட்டறை. கருணாவின் முதல் முப்பதாண்டுகளை பல்லவன் ஆர்ட்ஸ், சிந்து பிரஸ் கட்சி அலுவலகம் என வகைப்படுத்திவிட முடியும்.

சந்திப்புகள், உரையாடல்கள், வம்புகள், சண்டைகள் எல்லாவற்றுக்கும் அதுவே களம்.

இந்த முப்பதாண்டுகளில் அவனை வீடுகள் நிராகரித்ததில்லை. அவன்தான் தயவு தாட்சண்யமின்றி வீட்டை நிராகரித்தான். அவன் மரணத்தின் போது, அவன் துணைவி

சொல்லிக் கதறியது போல அவன் ஒரு காட்டாறு வெறும் சொற்கள் காட்டாற்றின் பெரும் பிரவாகத்தை தடுத்து நிறுத்திவிட முடியுமா என்ன?

கடந்த நாற்பதாண்டுகளில் சமூகத்திற்காக, அல்லது இந்த தேசத்தின் நலத்திற்காக முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமான எல்லா போராட்டங்களிலும் கருணாவுக்கு பங்கிருக்கிறது.

கட்சியின் நிகழ்ச்சி நிரல்களைத்தாண்டி, தானே உருவாக்கும் பல பேராட்டங்களுக்கு இந்த கண்ணுக்குத் தெரியாத ஊற்றுக்கண்ணேக் காரணமாயிருக்கும்.

நான் தொடர்ந்து இலக்கியம் வாசிப்பில் மனது மென்மையாகிவிட்டதென்றும், கருணாவின் களச்செயல்பாடுகள் அவனை இறுகிய மனம்கொண்டவனாக, தடித்த வார்த்தைகளை பிரயோகிப்பவாக மாற்றிவிட்டதென்ற தவறானக் கற்பிதம் பெரும்பாலானவர்களைப் போல எனக்குமிருந்தது. அவன் மரணத்தின் போதுதான் என் உடலிலிருந்த அந்தத் தவறானக் கற்பிதங்கள் கழுவித் துடைத்தெறியப்பட்டது.

களத்தின் செயல்பாடுகள் ஒரு போராளியை மென்மையிலிருந்து வலுகொண்டிருக்கும். அவன் மனத்திற்குள்ளாத கசிதலை மறைத்துக் கொள்வான்.

ஒரு குழந்தையின் கன்னக்குழி புன்னகையை, பூவின் மலர்தலை, கன்னுக்குட்டியின் துள்ளலை ரசிக்கிற மனமில்லாத ஒரு கம்யூனிஸ்டையும் நான் என் வாழ்வில் பார்த்ததில்லை.

ஆனால் இந்தக்குரூர வாழ்வு இங்கேயே நின்றுவிடச் சொல்லி ஒரு களப்பணியாளனை விட்டுவைப்பதில்லை.

அது ரத்தமும், சத்தமும், வலுமையும், குரூரமும் நிறைந்த சமூகத்தின் மைய இடத்திற்கு அவனை வலுகொண்டிருக்கிறது.

இலக்கியவாதிகளில் பெரும் பாலானோர்கள் சௌகரியமாக அங்கேயே நின்று கொள்கிறார்கள்.

நினைவஞ்சலிக் கூட்டத்தில் கசிந்துருகி தோழர் கனகராஜ் பேசும் போது கட்சியின் நிலைபாடுகளுக்கு எதிராக சில நேரங்களில் அவன் பதிவுகள் இருக்கும். நான் தொலைபேசியில் அழைத்துப் பேசுவேன். அப்போதுதான் இம்மனிதனுக்குளிருக்கும் மானுட அன்பை புரிந்துகொள்வேன்.

மானுடநேசம் என்பது எப்போதுமே கட்சிகளைத் தாண்டியதுதான் கருணா. சில நேரங்களில் அக்கோட்டை அநாசியமாகத்தாண்டுபவன்.

நித்தியானந்தா என்ற சாமியாரின் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றியெறிந்தத் தருணத்தில் அவர் திருவண்ணாமலைக் கோவிலுக்கு அண்ணாமலையாரைத் தரிசிக்க வந்தபோது கருணாவின் தலைமையில் நடந்த போராட்டக்குழு அவரை தடுத்து திருப்பியனுப்பியது.

ஒரு பத்திரிகை நிருபர் கேட்கிறார் அவரை ஏன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறீர்கள்?

கருணா பதில் சொல்கிறான். ‘கோவில் ஒரு புனிதமான இடம், இந்த அயோக்கியனை அதற்குள் அனுமதிக்க முடியாது.'

கோவில் புனிதமான இடமென்பது மார்க்சிஸ்ட்களின் நிலைபாடில்லை.

ஒரு பெண்ணோடு விரும்பி உறவு வைத்துக் கொள்ள நித்தியானந்தா என்ற திருமணமாகாத அந்த முப்பது வயது இளைஞனுக்கு முழு உரிமை உண்டு. அதனால் அவன் போட்ட பரிசுத்த பிரம்மச்சாரி வேஷம் கலைகிறது என்ற அதுதான் நமக்குத் தேவை.

ஆனால் மானுட அநீதி என்று தன் உள்மனது நம்பும் ஒரு விஷயத்தின் போது அதுவரை தான் நம்பிய கொள்கை, தத்துவம் எல்லாமும் இரண்டாம் பட்சமாகி, உணர்வு கொந்தளிப்பே முன்னெழுந்து நிற்கும்.

அதுதான் கருணா என்ற ஒரு களசெயற்பாட்டாளனின் அடி மனதின் கோபம் கட்சியும் சில நேரம் புன்னகையோடு இதை அனுமதிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை அப்படித்தான் புன்னகையுடன் அனுமதித்தது.

‘கலை இரவு', ‘முற்றம்' என தமிழ் கலை இலக்கிய முன்னெடுப்புகளை இன்றுவரை தமிழ் மக்களின் மனதிலிருந்து அகற்றமுடியாததாக மாற்றியதில், கருணாவுக்குத்தான் எப்போதும் முதலிடம்.

நான் சிந்திப்பதை, உடனே செயல் வடிவமாக்கினவன் என்பது இச்சொற்றொரின் இரண்டாம் வாக்கியமாகக் கருதினால். செயல்வடிவம் என்பது எளிதில் சாத்தியமற்றது என்பதால் அதை சாத்தியமாக்கியவனை நீங்கள் முதலிடத்திற்கு கொண்டு வந்த விடுங்கள்.

தமுஎகச-காரார்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் கலை உணர்வும், அழகியலுமற்றவர்கள் என்ற நூற்றாண்டு அழுக்குகளை சுமந்து கொண்டிருப்பவர்களே திருவண்ணாமலைக்கு வந்து எங்கள் செயல்பாடுகளில் உத்வேகமடைந்து போய்க்களப்பணியும், கலையிலக்கிய பணியுமாற்றியவர்கள் உண்டு.

தனிநபர்களின் பங்களிப்புகளின்றி ஸ்தாபனம் எப்போது முழுமையடைந்து இருக்கிறது.

படைப்பை என்னை மாதிரி முயன்று இடையில் பலிகொடுத்து, மீண்டும் உயிர்த்தெழுவது என்பது சுயநலம். கருணா என்ற சமூக அரசியல் போராளிக்கு எப்போதும் அது இருந்ததில்லை.

அவன் சமரசமற்றவன்தான். தான் ஏற்றுககொண்டக் கொள்கைகளினால் தன்னுடம்பில், சிராய்ப்பகள் அல்ல, பெருங்காயமே ஏற்பட்டப்போதும் அவன் தன் இலட்சியவாத பயணத்தின் குவி மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருந்தான்.

சிராய்ப்புகளின் வலியையே தாங்கிக்கொள்ள முடியாமல் எழுதவந்துவிட்டவன் நான் என்று என்னை நானே மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

எங்கள் கவுத்திமலையை ஜிண்டால் என்ற மிகப்பெரிய அசுரன் அபகரிக்க நினைத்தபோது, எங்கள் ஊர் கோவிலை தொல்லியல் பாதுகாப்பு என்றப் பெயரில் சிதைக்க முயன்ற போது, மலை சுற்றும் பாதையெங்கும் வியாபித்திருந்த பலநூறு அபூர்வ மரங்களை வெட்டுவதற்கு, ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதெல்லாம். கருணா என்ற சமூக செயல்பாட்டாளனே அவன் எதிர்ப்பை முன்னெடுத்தவன்.

நாங்களும் இணைந்து செயல்பட்டோம் என்ற ஒரு பெருமிதம் போதும். காலத்தின் கடந்தகால பக்கங்களில் ஊரின் பெருமிதங்களில் கருணா என்ற பெயரில்லாமல் வேறுயார் இட்டு நிரப்பியிருக்க முடியும்?

பிடிவாதமாக அரசு வேலைக்கு போகமாட்டேன், வியாபாரம் செய்யமாட்டேன், குடும்ப பொருளீட்ட உழைக்க மாட்டேன் என்பதையெல்லாம் தன் மனதிற்குள் எழுதி வைத்து செயல்பட்ட ஒரு பரிபூரண மனிதன் என கருணாவை நம் எதிரிகள் கூட கணித்துவிட முடியும்.

இந்த சமரசமற்ற, போராளிகளால்தான் இயக்கங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றன. இவர்கள் மீது ஈர்க்கப்பட்டு தான் புது மனிதர்கள் ஸ்தாபனங்களை நோக்கி வருகிறார்கள். இவர்கள் சொற்களில் உந்தப்பட்டுதான் தாங்கள் இச்சமூகத்திற்கு முன்னெடுக்க வேண்டியப்பணிகள் எதுவென அவர்களால் வரையறுற்றுக் கொள்ள முடிகிறது.

சுந்தரராமசாமி தன் ஜே.ஜே. சில குறிப்புகளில் சொல்வது போல

‘‘அதிமேதாவித்தனத்திற்கும், அற்பாயுசுக்கும் அப்படி என்னதான் சம்மந்தமோ தெரியவில்லை, எல்லோரும் தங்கள் வாழ்வின் பாதி நாட்களிலேயே போய்விடுகிறார்கள்.''

போய் வா கருணா உன் தொடர்ச்சிகள் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அது போதும் ஒரு களப்பணியாளனின் மரணத்தை மதிப்பிட... சமூகம் பெருமிதத்தால் நிறைய...

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com