என்ன தமிழாளி சவுக்கியமா?

என்ன தமிழாளி சவுக்கியமா?
Published on

தொலைபேசியில் அழைத்தவர் முன்னாள் சக ஊழியர். நாங்கள் பணி புரிந்த தொலைக்காட்சியிலிருந்து விலகி  இப்போது வேறொரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்பு கொண்டிருந்தார். அவர் நினைவூட்டாமல் இருந்திருந்தால் இதை எழுதிய நாள் இன்னுமொரு வழக்கமான தினமாகவே இருந்திருக்கும். நண்பருக்கு  என்னிடமிருந்து   சின்ன உதவி தேவை. என்ன?

“சார், மறந்து விட்டீர்களா, இன்று திலகன் சேட்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்”

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நண்பர் பணியாற்றும் தொலைக் காட்சியில் திலகனைப் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதில் திலகனுடன் தொடர்பு கொண்டிருந்த ஆட்களின் நினைவு கூரலையும் சேர்க்க விரும்புகிறார்கள். “திலகன் சேட்டன் நமது பழைய அலுவலகத்துக்கு நேர் காணலுக்காக வந்த போது உங்களிடம் தானே வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் நீங்கள் அதைப் பற்றிச் சொன்னால் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளலாம். தொலைபேசியில் பேசினால் போதும் அதைப் பதிவு செய்து ஒளிபரப்பி விடலாம். அதற்காகத் தான் அழைத்தேன்” என்றார்.

அவரிடம் பேசியபடியே தொலைக் காட்சியைப் போட்டு அலைவரிசைகளில் தேடிக் கொண்டிருந்தேன். மலையாள அலைவரிசைகளில் திலகனின் நிறைவான சாந்நித்தியம். ஓரிரு தொலைக்காட்சிகளில் அவர் நடித்த படங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. வேறு சிலவற்றில் அவரது நேர்காணல்கள் மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. சென்ற ஆண்டு இதே செப்டம்பர் மாதம் இருபத்து நான்காம் தேதி எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையிலிருந்து திலகனின் உடல் மருத்துவ ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதைப் பார்த்த நிமிடங்கள் மனதுக்குள் நகர்ந்தன. நிதானமாக ஊர்ந்து போன ஆம்புலன்சின் சன்னல் வழியே பார்த்த, கண்ணாடிப் பேழைக்குள் அசையாமல் கிடந்த திலகனின் தோற்றம் மீண்டும் நினைவில் படர்ந்தது. தனது அடிக்குரலில் “என்ன தமிழாளி சவுக்கியமா?” என்று முன்பு அவர் கேட்டது மீண்டும் எதிரொலிப்பதுபோல உணர்ந்ததும் செவியில் மோதியது. நிம்மதியற்ற மௌனம் மனதுக் குள் இரைச்சலிட்டது.

முன்னாள் சகாவிடம் நான் பேச விரும்பவில்லை என்று சொன்னேன். அவருடன் இரண்டு சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன் என்பது சரிதான். அதை வைத்து அவருக்குத் திவசம் கொண்டாட விருப்பமில்லை என்று கழன்று கொண்டேன். சில மணி நேரங்களுக்குப் பிறகு மலையாளப் பதிப்பாளர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவருக்கும் அன்றுதான் மறுபடியும் திலகன் நினைவு வந்திருந்தது. திலகனைப் பற்றி ஒரு அஞ்சலித் தொகுப்பு வெளியிடவிருக்கிறார். அதற்கு ஒரு கட்டுரைஎழுதிக் கொடுக்க வேண்டும் என்றார். முன்னாள் சக ஊழியரின் ஆலோசனைதான் அந்த வேண்டுகோள் என்று தெரிந்தது. அவருக்குச் சொன்னதையே இவரிடமும் சொல்லித் தப்பினேன்.

திலகனுடன் நிகழ்ந்த சந்திப்பு ஒரு வகையில் தற்செயலானது. இன்னொரு வகையில் எதிர்பார்த்தது. எங்கள் தொலைக் காட்சி அலுவலகத்துக்கு வரும் கலை இலக்கியப் பிரமுகர்களை படப்பிடிப்புத் தளம் ஆயத்தமாகும் வரை என்னுடைய அறைக்குக் கொண்டு வந்து உட்காரவைப்பது வழக்கம். தலைமைப் பொறுப்பிலிருந்த மூவரில் ஒருவருக்கு மலையாளம் புரியும்; பேசவராது. இரண்டாமவருக்கு மலையாளம் புரியும்; பேச வரும்; ஆனால் கலை இலக்கிய விவகாரங்கள் தெரியாது. மூன்றாமவனாகிய என்னால் பேசவும் விவாதிக்கவும் முடியுமென்பதால் பிரமுகர்களைச் சமாளிக்கும் பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்தது. அப்படி நேர்ந்த சந்திப்பில் ஒன்று திலகனுடனும் நிகழ்ந்தது.

அறைக்குள் வந்த அமர்ந்த திலகன் முதலில் சந்தேகத்துடன் “மலையாளம் அறியாமோ?” என்றார். “உங்கள் வசனத்தைத் தப்பில்லாமல் திருப்பிச் சொல்கிற அளவுக்குத் தெரியும்”என்று பதில் சொன்னேன். மலையாளத்தில்தான். பெருஞ் சிரிப்புடன் “கொள்ளாம்” என்று தலையை ஆட்டினார்.

சம்பிரதாயமான சில வாக்கியங்களுக்குப் பிறகு பேச்சு அவருடைய படங்களைப் பற்றியதாக மாறியது. தன் நடிப்புக்குத் தீனி போடுகிற மாதிரியான பாத்திரங்கள் சமீப காலமாக அமையவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார். பெரிய நட்சத்திரங்களான மம்மூட்டியும் மோகன்லாலும் தன்னைத் தவிர்க்கிறார்கள் என்பதைக் குறையாகவும் அவர்களுடன் நடிக்கும்போதுதான் தனக்கும்  சவாலாக இருக்கிறது என்பதைப் பெருமிதத்துடனும் குறிப்பிட்டார். தனக்கு எதிராக ஒரு நாயர் லாபி மலையாளத் திரையுலகில் செயல்படுகிறது. அதுதான் தனக்கு வர வேண்டிய வாய்ப்புகளை வேறு யாருக்கெல்லாமோ கொடுத்து விடுகிறது என்றார். அவர் ஈழவர். பேச்சினூடே அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டது நெடுமுடி வேணுவை. புகார் அறிக்கை நீண்டு விடும் என்று தோன்றியபோது திசை திருப்புவதற்காக நடித்து உயிரூட்டிய எனக்குப் பிடித்த திலகன் பாத்திரங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். ‘கிரீடம்’ படத்தில் மகனைப் போலீஸ் இன்ஸ்பெக்டராக்கும் ஆசையுள்ள போலீஸ்காரர், கிலுக்கம் படத்தில் பொய்க் கண்டிப்புக் காட்டும் நீதிபதி, பெருந்தச்சனின் மகனின் கலை வெற்றியில் பொறாமை கொள்ளும் பெருந்தச்சன், மூன்றாம் பக்கத்தில் வாத்சல்ய முள்ள தாத்தா, ‘ஜாதகம்’ படத்தில் தோஷ ஜாதகியான மருமகளை ரகசியமாகக் கொல்லும் மாமனார், ‘நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்’ படத்தில் வளர்ப்புப் பெண் மேல் ஆதிக்கம் செலுத்தும் இரண்டாம் தந்தை என்று தோராயமான பட்டியலைச் சொல்லிப் பேச்சு நகர்ந்தது.

ஆமோதிக்கும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எழுபதை நெருங்கிக் கொண்டிருந்த அந்த மனிதரின் முகத்தில் ஏழு வயதுச் சிறுவனின் உற்சாகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“எல்லாப் படமும் பார்த்திருக்கிறீர்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எல்லாம் வயசான வேடங்களாகவே சொல்கிறீர்களே?” என்றார். அவர் இளமையாகத் தோன்றிய படம் எதுவும் நினைவுக்கு வரவே இல்லை.

அவர் நடிக்க வந்தபோதே முதிர்ச்சியான பாத்திரங்கள்தாம் அவருக்கு வாய்த்திருந்தன. மலையாள சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற பி.ஜே. ஆன்டனியின் நாடகங்களில் நடித்தவர் திலகன். அவர் மூலமாகவே திரைக்கும் வந்தவர். அவர் கையாளக் கிடைத்ததெல்லாம் முற்றிய வேடங்கள்தாம். அதைச் சிறப்பாகவே செய்திருப்பவர்.எனினும் கொஞ்சம் இளமையான பாத்திரங்கள் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது அந்த உரையாடலில் வெளிப்பட்டது. பிரேம் நசீர், எம்.ஜி. ஆர். எல்லாம் ஐம்பது அறுபது வயதிலும் கூட இளைஞர்கள் போல வரவில்லையா? நான் வந்தால் என்ன? என்று முகத்தைச் சுருக்கினார். நான் சிரிப்பை அடக்கிக் கொண்டேன். இளமையான திலகன் மஞ்சு வாரியருடனோ ஷோபனாவுடனோ டூயட் பாடுகிற காட்சியைக் கற்பனை செய்து பார்த்தேன். சிரித்து விட்டேன்.

“ ஏன் சிரித்தீர்கள் சொல்லுங்க?” என்றார்.

நான் மழுப்பினேன். சொன்னால்தான் ஆச்சு என்று முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தத் துளைக்கும் பார்வைக்குப் பணிந்து சொன்னேன். முதலில் சுணங்கியவர் மெல்லச் சிரித்தார்.

“இவ்வளவு படம் பார்த்திருக்கிறீர்கள். அதில் நான் எவ்வளவு நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொன்னீர்கள். உங்களால்  மஞ்சு வாரியருக்கு இணையாக இளமைத் துடிப்புடன்  நடித்த படத்தை எப்படி மறக்க முடிந்தது?” என்றார். நான் விழித்துக் கொண்டிருந்தபோது அவரே ஞாபகப் படுத்தினார். “கண்ணெழுதி பொட்டும் தொட்டு பார்த்திருக்கிறீர்கள் இல்லையா?” என்றார்.

ஆமாம். அதை எப்படி மறந்தேன். மஞ்சு வாரியர் திருமணத்துக்கு முன் கடைசியாக நடித்த படம் அது. ஒரு பழிவாங்கல் கதை. தனது பெற்றோரைக் கொன்ற நடேசன் என்ற முதலாளியை பத்ரா என்ற பெண் நூதனமான முறையில் பழிவாங்குகிறாள். நடேசனையும் அவர் மகனையும் வசீகரித்து இரண்டு பேரும் தன் மேலுள்ள மோகத்தால் பரஸ்பரம் அழித்துக் கொள்வதுபோன்ற கதையமைப்பு. நடேசனாக நடித்த திலகனின் நடிப்பில் படத்தின் இளம் நாயகர்களான அப்பாஸ், பிஜு மேனனை விட இளமை ததும்பியது. நான் கையைத் தூக்கி சரணடைந்தேன்.

“அங்ஙனே வழிக்கு வா” என்று அவர் சிரித்த சிரிப்பில் அலுவலகம் ஒருமுறை கலகலத்தது.

உரையாடலின் நடுவே தொலைபேசி அழைத்தது. எடுத்தேன். சென்னை அலுவலகத்திலிருந்து வந்தது. பதில் சொல்லிக் கொண்டிருந்ததைத் திலகன் உற்றுக் கவனிப்பதைப் பார்த்தேன். தொலைபேசியை வைத்ததும் கேட்டார்.

“ நீங்கள் மலையாளியா?”

“ஆமாம் ”

“தமிழ் நல்லா சம்சாரிக்கிறீர்களே, பாண்டியா?”

“அதுவும்தான்.”

“அதெப்படி?”

“சார், நான் மலையாளியுமில்லே, பாண்டியுமில்லே. தமிழாளி”

“இது கொள்ளாம். தமிழ் நல்லாப் பேசறீங்க. அப்படி ஒரு ஆளத்தான் எனக்கு வேணம். இனி தமிழ் சினிமாலே எவராவது நடிக்க அழைச்சா டயலோக் சொல்லிக் கொடுக்க உங்களைக் கூப்பிடும்” என்றார். இதை தமிழில் யோசித்துத் தமிழிலேயே சொன்னார். சிரித்தேன்.

மலையாளத்துக்கு மாறி “ஹூங். எதுக்குச் சிரிச்சீங்க?” என்று கேட்டார்.

“இப்ப பேசினதே கூட உங்க முதல் தமிழ்ப் பட வசனம் மாதிரிதான் இருந்தது. சத்ரியன் படத்துல சொல்லு வீங்க இல்லே...பன்னீர் செல்வம் எனக்கு உன்னை வேணம்னு அது மாதிரி இருந்துது” என்று தமிழில் சொன்னேன்.

அதற்குள் படப்பிடிப்புத்தளத்திலிருந்து அழைப்பு வந்தது. திலகன் எழுந்து நின்று “ தமிழாளி, மறக்கக் கூடாது. அடுத்து தமிழ்ப் படம் வந்தா உன்னைத்தான் கூப்பிடுவேன்” என்று நேர்காணலில் பங்கேற்கப் போனார். அதுவரை பன்மையில் நீங்கள், உங்கள் என்று பேசிக் கொண்டிருந்தவர் நீ என்று அழைத்தது முதலில் சுருக்கென்று பட்டது. பின்னர் ஒரு பெரும் நடிகன் அப்படிக் கூப்பிடக் கூடிய நெருக்கத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சில ஆண்டு இடை வெளிக்குப் பிறகு அதே போன்று நேர் காணலுக்கு வந்திருந்தார் திலகன். என் அறைக்குள் “என்ன தமிழாளி சவுக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார். சிறிது நாட்கள் முன்பு நோயால் தளர்ந்து படுக்கையில் விழுந்து தேறி வந்திருந்தார். இடையில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்திருந்தன. அதை தனக்கெதிரான சதி என்று நினைத்தார். அதை வெளிப்படையாகச் சொல்லி மோகன்லாலுக்கும் மம்மூட்டிக்கும் எதிராகப் பேட்டிகள் அளித்தார். அவரை நடிகர் சங்கம் விலக்கி வைத்தது. அன்று அவர் வந்ததும் கூட அது தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளத்தான். படப்பிடிப்பு முடிந்து மீண்டும் என் அறைக்கு வந்தார்.

“ஒரு தமிழ்ப் படம் வந்திருக்கு. உன்னோட சகாயம் வேணம். செய்யுமா?” என்று திலகன் தமிழில் கேட்டார்.

“யார் படம்?” சொன்னார். அவருக்கு அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலிருப்பதாக என்று நினைத்துக் கொண்டேன். நினைத்தது நடக்கவில்லை. அந்தப் படத்தில் சொத்தையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஏதோ தொலைக் காட்சியில் ஒளிபரப்பான அந்தப் படத்தைப் பார்த்தபோது ஏனோ சங்கடமாக இருந்தது. காட்டில் கம்பீரமாகத் திரிந்த சிங்கத்தை சர்க்கஸ் முக்காலியில் ஒடுக்கி உட்கார வைத்திருப்பதைப் பார்ப்பது போன்ற தர்ம சங்கடம்.

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com