ஆறாயிரம் குட்டிகளுக்கு அல்ட்ராசோனாகிராபி

ஆறாயிரம் குட்டிகளுக்கு அல்ட்ராசோனாகிராபி
Published on

உத்தரபிரதேசத்தில் இருக்கும் பாபுகர் நகரம். அங்கே இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் குதிரைகள் இனப்பெருக்க மையத்தில் பணிபுரிந்தபோது ஏராளமான அனுபவங்கள். இதுமட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களிலும் வேலை பார்த்து பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சமயம், பல குதிரைக்குட்டிகள், பிறந்த ஒரு மாதத்திலேயே இறப்பை சந்தித்துக்கொண்டிருந்தன. கால்நடை மருத்துவர் என்ற முறையில் அவற்றை ஆராய்ந்தபோது அவற்றுக்கு  காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இது தொடர்பான மருந்துகளைக் கொடுத்திருந்தும் பலனின்றி அவை இறந்திருந்தன. இதைத் தொடர்ந்து அவற்றின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்தோம். அப்போதுதான் அவற்றின் நுரையீரல் குழாய்களில் கொப்புளங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன் மாதிரிகளை எடுத்து வெளியே ஆய்வகங்களுக்கு அனுப்பியபோது வந்த பரிசோதனை முடிவுகள் இது ரோடோகாக்கஸ் ஈக்வை  என்ற நோய்க்கிருமியால் ஏற்பட்டிருக்கிறது என சொல்லின.

இதை எப்படித்தடுப்பது என்று யோசித்து, குட்டிகளுக்கு ஆரம்பத்திலேயே அல்ட்ரா சோனாகிராபி பரிசோதனை செய்து மூச்சுக்குழாய்களில் கொப்புளங்கள் இருந்தால் அவற்றைப் பிரித்து தனி சிகிச்சை அளிப்பது என முடிவெடுத்து ஆரம்பித்தோம். அதன் பின்னால் இந்த பிரச்னை ஓய்ந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். கடந்த இரு ஆண்டுகளில் ஆறாயிரம் குட்டிகளுக்கு அல்ட்ரா சோனாகிராபி செய்துள்ளேன்!

ராணுவ குதிரைப்பண்ணைகளில் பெண் குதிரைகள் குட்டிபோடுவதற்காக வளர்க்கப்படுகின்றன. ராணுவத்-தினருக்கு பயிற்சி அளிக்கவும் பல்வேறு பிரிவு-களுக்கு குதிரைகள் அளிக்கவும் இந்த பண்ணைகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஆண்குதிரைகளுக்குப் பெயர்-கள் உண்டு. பெண்குதிரைகளுக்கு எண்கள் வழங்கப்படும். இங்கு சுமார் 15 வயதுவரை குதிரைகளை வைத்திருப்பார்கள்.  அவற்றின் உடல்நலத்துக்கு ஏற்ப அதன் பின்னர் அவற்றுக்கு ஓய்வு அளிக்கப்படும். இவற்றுக்கு ஓய்வு அளிக்க தனியாக முதியோர் ஓய்வு இல்லம் போன்ற அமைப்புகள் ராணுவத்தின் வசம் உள்ளன. அங்கே இவை அனுப்பப்படும். அங்கே வேலை ஏதும் இராது. தீனி சாப்பிட்டுவிட்டு அவை ஓய்வாக சுற்றிக்கொண்டிருக்கும்.

ஒருமுறை என்னிடம் இப்படி ஓய்வளிக்க ஒப்புதல் கேட்டு ஒரு குதிரை அனுப்பப்பட்டது. அது மெலிந்துபோய் மிகச் சோர்வாக இருந்தது. ஆனால் அதற்கு ஓய்வளிக்கும் வயது ஆகிவிடவில்லை. அது தீவனம் எடுக்கும்போது வாயிலிருந்து அதிகமாக சிந்துவதாக அதன் காப்பாளர் கூறினார். ஏதோ பெரிய நோய் இருக்கும் என்பது அவரது எண்ணம்.

அந்த குதிரையின் பற்களை பரிசோதித்தேன். அதன்அரவைப்  பற்கள் படிக்கட்டுபோல் ஒழுங்கற்று அமைந்திருந்தன. அதனால் உணவை அரைத்து உண்ணமுடியவில்லை என உணர்ந்தேன்.

உடனே அதன் பற்களை அறுத்து சமப்படுத்தினேன். அதன் வாயைத் திறந்து நிற்கும் நிலையில் மயக்கமருந்து அளித்து மின் கருவி மூலம் செய்யவேண்டிய சிகிச்சை இது.

சிகிச்சை முடிந்தபின்னர்  திரும்பிச் சென்ற அக்குதிரை நன்றாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்து ஒரேமாதத்தில் பழைய எடையைப் பெற்றது. அதன் பின்னர் குட்டிகளையும் ஈன்றது.

யோசித்துப் பார்த்தால் இதுவரைக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பல்வரிசை சரிசெய்யும் சிகிச்சை செய்திருப்பேன் எனத் தோன்றுகிறது. பாபுகார் மையத்தில் மட்டுமே குட்டிகளைத் தவிர்த்து 1800க்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. ஜம்மு காஷ்மீர், ஹிசார் போன்ற இடங்களில் அமைந்துள்ள்ள பண்ணைகளிலும் நான் பணியமர்த்தப்பட்டுள்ளேன். சில குதிரைகளுக்கு இந்த பல் சிகிச்சையை ஒரு முறை செய்தால் போதும். சிலவற்றுக்கு பலமுறை செய்து ஒழுங்குபடுத்தவேண்டும். பொதுவாக குதிரைகளுக்கு பற்கள் மிக முக்கியம். அவை ஒழுங்காக இருந்தால்தான் அவை உணவு முறையாக எடுத்து ஆரோக்கியமாக இருக்கும்.

பாபுகரில் வாலண்டைன் என்ற ஆண்குதிரை இருந்தது. எங்களிடம் இருப்பதிலேயே உயரமானது. கருப்பு வண்ணத்தில் இருக்கும். அதற்குப் பிறந்த குட்டிகள் எல்லாம் மிக பிரமாதமான குதிரைகளாக உருவாகின.  அந்த குதிரை மீது சேணம் தரிக்காமலேயே சவாரி செய்த அனுபவம் எனக்கு மனதில் நிற்கிறது. ஹிசார் நகரில் பணிபுரிந்தபோது அங்கே ஒரு பெண்குதிரை இருந்தது. அதற்கு கருப்பையில் கோளாறு. அதனால் அதை குட்டிபோடப் பயன்படுத்தவில்லை. அதற்கு பயிற்சிகளும் அளிக்கப்படாமல் இருந்தது. அதற்கு பயிற்சி அளித்து அதன் மீது சவாரி செய்ய முயற்சி செய்தேன். அப்போது அதற்கு பதின்மூன்று வயது ஆகி இருந்தது. அது என்னை ஏற்றிக்கொள்ள தயாராக இல்லை. சில நிமிடங்கள் போராட்டம். அதை குளக்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்று நீருக்குள்தான் ஓட்டினேன். தள்ளிவிட்டால் தண்ணீரில்தான் விழுவேன். ஒருவழியாக சமாளித்து அதன் மீது சவாரி செய்த முதல் மனிதன் ஆனேன். மிக அற்புதமான குதிரை அது! நன்றாகப் பழகிவிட்டது!

கோவேறு கழுதைகள் பற்றிக்கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆங்கிலத்தில் Mules என்பார்கள். ஆண் கழுதைக்கும் பெண்குதிரைக்கும் பிறப்பது இது. இவற்றால் இனப்பெருக்கம் செய்ய இயலாது. ஆனால் இவை நன்றாக எடை சுமக்கும். கடினமான மலைப்பகுதிகளில் ராணுவத்தினருக்குத் தேவையான பொருட்களை ஏற்றிச் செல்ல இவை உதவுகின்றன. பாதையே இல்லாத இடங்களில் மலைமீது இவை ஏறிச்சென்று ராணுவத்தினருக்குத் தேவையான பொருட்களை வழங்கும்.

நோரிக்கர் என்ற குதிரை இனம் ஆஸ்திரியாவைச் சேர்ந்தது. இது மிகவும் வலிமையானது. கோவேறுகழுதைகளை உற்பத்தி செய்ய இந்த இனத்தையே நாம் இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள விலங்குகள் சரக்குப் போக்குவரத்து படைப்பிரிவில் பணியாற்றியபோது கோவேறுகழுதைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளேன். முன்களத்தில் இருக்கும் படையினருக்கு இவைதான் உணவு, டீசல் பெட்ரோல், ஆயுதங்கள், பொருட்களை கொண்டுசேர்ப்பதில் முக்கியபங்கு வகிப்பவை. இவை கூட்டமாக பொருட்களை எடுத்துச் செல்லும். ஒவ்வொரு விலங்குடனும் ஒரு வீரர் உடன் செல்வார்.

இப்படி பணியில் இருக்கும்போது ஒரு கோவேறு  கழுதை எல்லையில் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு முள் வேலியில் சிக்கி விழுந்துவிட்டது. கூர்மையான கம்பிகள் கிழித்து அதற்கு உடல் முழுக்க காயத்துடன் கொண்டுவந்தார்கள். உடலில் முக்கிய ரத்தகுழாய்கள் சிதைந்துவிட்டன. உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தேன். ஒரு மாதம் ஆனபின் திரும்பவும் கம்பீரமாக பணிக்குச் சென்றது.

ராணுவத்தில் நாய்களை பயிற்றுவிப்பதற்கான சிறப்பு பயிற்சியை நான் பெற்றுள்ளேன். நாய்களுக்கு மனிதனை விட 40 மடங்கு அதிக  மோப்பசக்தி உண்டு. இவை வெடிகுண்டுகளைக் கண்டறியவும் பாதுகாப்புப் பணியிலும் பயன்படுகின்றன. நம் ஊரைச் சேர்ந்த சிப்பிப்பாறை நாய்கள் கொரோனாவை கண்டுபிடிப்பதில் பயன்படுகின்றன. ராஜபாளையம், கோம்பை ஆகிய இனங்களைச் சேர்ந்த நாய்கள் இப்போது ராணுவப் பயிற்சியில் உள்ளன.

அமெரிக்க ராணுவத்தில் உள்ள கெய்ரோ என்கிற நாய்தான் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடிப்பதில் பயன்பட்டது என்பதை செய்தித்தாள்களில் படித்திருக்கலாம்! உள்நாட்டுவகை நாய்கள் மட்டுமல்ல ஜெர்மன் ஷெப்பர்டு, பெல்ஜியம் மெலனாய்ஸ் போன்ற இனங்களைச் சேர்ந்த நாய்களும் ராணுவத்தில் பணிபுரிகின்றன.

(மேஜர் எஸ்.ஸ்ரீதர், ராணுவத்தில் பணிபுரியும்கால்நடை மருத்துவர்.  நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

அக்டோபர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com