இந்திய ரூபாய் விழுந்துகொண்டே இருக்கிறது என்றவுடன் பலர் எங்கே விழுகிறது என்று சொன்னால் அங்கே போய் பிடிச்சுக்கிறோம் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் கிண்டல் செய்கிற விஷயமில்லை. பல இந்தியத் தொழிலதிபர்கள் கண்ணீர் விடும் நிகழ்வாக இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இருக்கிறது. இக்கட்டுரை எழுதப்படும் தினத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணய மதிப்பு 65 ரூபாயாக இருக்கிறது. இன்னும் ஒரே மாதத்தில் இது 70ஐத் தொட்டுவிடும் என்று பிரபல வங்கியான டாய்ச்ச வங்கி சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
நமது ரிசர்வ் வங்கியும் ஏதேதோ நடவடிக்கைகளை, எடுத்துப் பார்க்கிறது. அதற்கு விளைவுகள் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை.
ஏன் பணமதிப்பு வீழ்ச்சி?
இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்குத் தேவை அதிகரிப்பது, இங்கிருந்து முதலீடுகள் அதிகம் வெளியே சென்று கொண்டிருப்பது, நடப்புக் கணக்கில் விழும் துண்டு அதிகரிப்பது, வெளிநாடுகளில் உள்ள மற்ற நாணயங்களின்மீது டாலரின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வது- போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாகச் சொல்கிறார்கள்.
எப்படிப் பாதிக்கும்?
இறக்குமதியாளர்களின் டவுசரை பணமதிப்பு வீழ்ச்சி கிழித்துவிடுகிறது. அதேபோல் ஏற்றுமதி செய்தவர்களுக்கு கிடைக்கும் டாலர் இங்கே மதிப்பு உயர்வதால் லாபம் கிடைக்கும் (ஆனால் அதுவும் குறைந்த காலத்துக்குத்தான். நீண்டகால நோக்கில் கையைச் சுடும் என்பதே எதார்த்தம்). வெளிநாட்டுப் பொருள்களின் விலை கூடிவிடும். ஈராண்டுக்கு முன்பு 45 ரூபாய்க்கு நீங்கள் வாங்கிய செண்ட் பாட்டிலுக்கு இப்போது 65 ரூபாய் கொடுக்கவேண்டும். இருபது ரூபாய் அதிகரித்திருக்கிறது (இதன் தொடர் வீழ்ச்சியை வரைபடத்தில் பாருங்கள்). பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி ஆவதால் அவற்றின் விலை கூடும். பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகும். நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அதன் வட்டிவிகிதம் குறையவே குறையாது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் சுமைதான். அவர்கள் அதிக ரூபாய்களை செலவு செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டுக்கு சுற்றுலா போகத் திட்டமிட்டிருந்தால் கிழிஞ்சுது போங்கள். தாய்லாந்தோ ஐரோப்பிய நாடுகளோ, செலவு எகிறிவிடும். வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களுக்கு நல்ல விஷயம். அவர்கள் சம்பாதிக்கும் டாலர்களுக்கு இங்கே நல்ல மதிப்பு.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதியின் பண மதிப்பு அதிகரிக்கும். ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்யும் அளவுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்குமான இடைவெளி அதிகம். இது இன்னும் அதிகரித்து பொருளாதாரம் சீர்குலையும்.
ஏன் பண மதிப்பு விழுந்துவிட்டது என்பதற்கு சில காரணங்களை மேலே பார்த்தோம். ஆனால் அதற்கான காரணமாக நமது வாஸ்து சாஸ்திர, ஜோதிட நிபுணர்கள் ரூபாய்க்கு உருவாக்கப்பட்ட புதிய குறியீடுதான் காரணம் என்று கண்டு(!)பிடித்துள்ளனர். அதில் குறுக்கே ஓடும் கோடு சரியில்லையாம். அத்துடன் அந்த குறியீடு அறிவிக்கப் பட்ட நாளும் நல்ல நாள் இல்லையாம். அதனால்தான் டாலருடன் மோதமுடியாமல் விழுகிறதாம்.
பேஜன் தாருவாலா என்று ஒரு பிரபல ஜோதிடர் இருக்கிறார் அல்லவா? அவர், “வரும் நவம்பர் முதல் பணமதிப்பு வீழ்ச்சி நின்றுவிடும். கிரகங்கள் சரியான நிலைக்கு வருகின்றன.” என்று சொல்லி நம்பிக்கை யூட்டுகிறார். அதே சமயம்,“நம் பிரதமரும் சனியின் ஆதிக்கத்தில் இப்போது இருக்கிறார். அவருக்கும் கிரக நிலை நவம்பர் முதல் சரியாகிவிடும்” என்று சொல்லி கிலியூட்டவும் செய்கிறார்.
ரூபாய் மதிப்பு விழுந்ததும் இங்கே மருத்துவ சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். இங்குள்ள பெருநிறுவன மருத்துவமனைகள் கடந்த ஓராண்டாக தங்களிடம் வரும் வெளிநாட்டு நோயாளிகள் எண்ணிக்கை சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல் கிறார்கள். அதுபோல் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் அதிகரிக்கவே செய்வார்கள்.
பணத்தைக் கையாளுவது மிகவும் கவனத்துடன் செய்யவேண்டிய விஷயமாகும். நாட்டின் பொருளாதார நிலை அதிகரிப்பதற்கு ஏற்ப அதிக பணத்தை ரிசர்வ் வங்கி அச்சடிக்கும். அரசுக்கு வேண்டும் என்பதற்காக அதிகம் அச்சடித்தால் போண்டியாக வேண்டியதுதான். ஜிம்பாப்வேயில் இப்படித்தான் நடந்தது. அங்கு 90களில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அரசு தன் செலவுக்காக அந்நாட்டு நாணயத்தை அச்சடித்தது. பணவீக்கம் அதிகரித்து 100 கோடி, 1000 கோடி என்று எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 2009-ல் அரசாங்கமே தங்கள் நாணயத்தை ஒதுக்கிவிட்டு அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது.
எப்படி பணவீழ்ச்சியைச் சரிசெய்யலாம்?
ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை பெரிதாக ஏதும் செய்ய இயலாது. சின்ன சின்னதாய் சில நடவடிக்கையை எடுத்து பதற்றத்தைக் குறைக்கலாம். நிதியமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகள்தான் இதை மாற்ற முடியும் என்கிறார்கள். அந்நிய முதலீட்டை அதிகப்படுத்துதல் இதில் ஒன்று என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்துடன் சில வரிச்சலுகைகள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை உயர்த்தும் செயல்பாடுகள் தேவை.
காகித விலை உயர்ந்ததால் பெரும்பாலான பத்திரிகைகள் தங்கள் விலையை உயர்த்திவிட்டன என்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்? இதுபோல் பல பொருட்களின் விலைமதிப்பு எப்படி ஏறுகின்றன என்று தெரியாமல் ஏறிவிடும். ஆனாலும் இந்த ஆண்டுக் கடைசியில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நிலைபெறும் என்று சொல்கிறார்கள். நன்றே நடப்பதாகுக.
செப்டம்பர், 2013