உன் பேரென்ன?
மறந்துடுச்சு.
எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்க?
அதுவும் மறந்துடுச்சு.
உனக்குஎன்ன வேணும்?
தெரியல.மறந்துடுச்சு.
உண்மையச் சொல்லு?
சொல்றது உண்மை. மறந்துடுச்சு.
விளையாட்றயா?
இல்ல. எல்லா விளையாட்டும் மறந்துடுச்சு.
நீயாரு?
மறந்துடுச்சு.
உன் ஞாபகத்துல எதுவும் இல்ல?
இல்ல. எல்லாம் மறந்துடுச்சு.
பட்டாம்பூச்சிய ஏன் பச்சக்குத்திஇருக்க?
ஏன்...தெரியல. மறந்துடுச்சு.
அம்மா...
இப்ப நான் உன்ன அடிச்சேன்.அம்மான்னுகத்தன.அதுமட்டும் எப்படி மறந்துபோவாமிருந்துது?
அது உங்க அடியால வந்த அம்மா இல்ல. விபத்துல அம்மா இறந்தப்ப உயிரகிழிச்சிட்டு ஓடிவந்தஅம்மா. பட்டாம்பூச்சிபோலஅம்மா பறந்து போயிட்டாங்க
கோமாளியும் குறுஞ்செய்தியும்
குறுஞ்செய்திஅடித்துக்கொண்டிருந்தான்கோமாளி.
சர்க்கஸ்ஷோ முடித்துவந்த களைப்பு கண்களில்
ஆரம்பித்துஉடல்முழுதும் பரவி இருந்தது.
அவனுக்குப்பின் கதைகள் பலுண்டு.சர்க்கஸ்
பார்க்கவந்து அவனை அநாதையாகவிட்டுப்போய்விட்ட பெற்றோர்.இங்கேயே எடுபிடியாகி வளர்ந்துசிரிக்கவைக்கும்சாதுர்யத்தால்கோமாளியானது.
குள்ளமாகக் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்துடன் ஓடிப்போன மனைவி. பிறகு ரிங்மாஸ்டரும் இல்லாமல் போனது.
அடிக்கடிவரும் கால்வலி.வலிமறைக்கசிரிப்பில்
சேர்க்கும் ஒலிகள்.
சர்க்கஸ்சில் வெடிப்பும் சிரிப்புமாகிருப்பவன் உள்ளேவந்தால் மௌனத்தில்முடங்கிவிடுவான்
‘நீளமான குறுஞ்செய்தியா'
‘ஆமாம்'
‘என்னெழுதுகிறாய். யாருக்கு அனுப்பப் போகிறாய்' சொன்னான்.
‘படித்து உள்வாங்கும் ஒரு ஜீவனுக்கு. யாரென்று தெரியவில்லை கடவுளின் எண்கிடைத்தால் அவருக்கு அனுப்பி வைக்கலாம்.'
சதுரங்க ஆட்டக்காரர்
பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன்.தலைகுனிந்தே இருக்கும்.ச துரங்க ஆட்டத்தில் கவனம் குவிந்திருக்கும் காய்நகர்த்தலில்கண்இருக்கும்.
ஒருநாள்அவர்அருகில்போய்மெல்லக்கேட்டேன்.
‘அய்யாதனியே தான் செஸ் ஆடுவீர்களா?'
புன்னகைத்தார். பிறகுசிரிப்புக்குமாறினார்.
“என்னோடுமுப்பத்தி இரண்டு தோழர்கள் இருக்கிறார்கள்,'என்றார்.
செக் எனச் சொல்லிவிட்டு எதிரில் இல்லாதவரைப் பார்த்தார். வெற்றியைத் தனதாக்கினார்.
‘உங்களோடு நான் ஆடலாமா!' என்றேன்
‘வாங்க முப்பத்து மூன்றாவது தோழரே!' என்றார்
நம்பிக்கையும் நல்லவீடும்
சினிமாவில் நீண்டகாலம் போராடிக் கொண்டிருக்கும் நண்பர் வீடு வாங்கி இருந்தார்.
எப்போதும் உற்சாகம் மாறாமல் இருப்பார். அடிக்கடிச் சொல்லுவார்.“ஜெயிச்சமா தோத்தமான்னு தெரியல
சார். ஓடிக்கிட்டிருக்கிறேன்.'
“பிடிக்கிற வேல. சினிமா பிடிக்கிறவரைக்கும் வச்சிருக்கட்டுமே' புன்னகைகூட்டிச்சொல்லுவார்.
வேலையை அர்ப்பணிப்போடு செய்வார. எனவே அவர் இயங்குதல் தடையின்றி இருந்தது. அதுவே அந்தவீட்டை சாத்தியமாக்கி இருந்தது.
“புள்ளைங்க தலையெடுத்துட்டா போதும் சார். அதான் பிரார்த்தனை,' என்பார்.
புதுவீடு பார்க்க அழைத்திருந்தார்.
வீடு முழுதும் அவர் நம்பிக்கை நிறைந்திருந்தது.
தனியே வந்து ஒரு தேநீர் அருந்தியபோது
கண்களில் நீர்பூக்கச் சொன்னார்.
“வாடக இருந்த வீட்டுக்கும் இந்தவீட்டுக்கும்
எட்டு கிலோமீட்டர்தான் சார். ஆனா
இங்க வந்துசேர இருபதுவருசம்
ஆயிடுச்சு,'
மார்ச், 2023