அப்பாவின் வளர்ப்பு நாய்கள்

முள்ளரும்பு மரங்கள் 11
அப்பாவின் வளர்ப்பு நாய்கள்
ரவி பேலட்
Published on

பால்யத்தில் ஒருமுறை நானும் என் தம்பியும் எங்கள் எருமைமேல் ஏறி சவாரி செய்தோம். அதற்கு முன்பும் எருமைகளின் மேலேறி சவாரி செய்ய நான் முயற்சித்திருக்கிறேன். ஒருசில எருமைகள் எதிர்ப்பு இல்லாமல் ஒத்துழைக்கும். ஆனால் பெரும்பாலான எருமைகள் அவற்றின் மீது ஏறவே அனுமதிக்காது. கஷ்டப்பட்டு ஏறினாலும் அடுத்த கணமே நம்மைக் குலுக்கி நிலைகுலைத்து கீழே விழவைக்கும். இந்த எருமை பாவம். ஒத்துழைத்தாள். அவளை மேய்ச்சலுக்காக வெளியே கொண்டுசென்றபோது அந்தப் புல்வெளியில் கொஞ்சநேரம் அவள் மீது ஏறி சுற்றி வந்தேன். அப்போதுதான் அந்த சிறந்த யோசனை என் மண்டையில் உதித்தது.எருமைமேல் ஏறி பொதுச் சாலையினூடாக வீடுவரைக்கும் போனால் எப்படி இருக்கும்?

பாவம் என் தம்பி எவ்வளவு நேரம்தான் எருமையின் பின்னால் நடந்தே வருவான்? அவனையும் ஏற்றிடலாம். அவனுக்கு அதில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஆனால் நான் கட்டாயப்படுத்தினேன். குதிரையின் நடத்தும் கயிற்றினைப்போல் எருமைக் கயிற்றை இழுத்துப் பிடித்தேன். ‘டொக்குட டொக்குட டொக்குட டொக்குட' என்று வாயால் குதிரைக் குளம்படிஒலியை எழுப்பியபடி வேகமாக ஓட எருமையை தள்ளித் தள்ளி விட்டேன். பின்னால் அமர்ந்திருந்த தம்பி என்னை இறுகப் பிடித்துக் கொண்டான்.

மேய்ச்சல் வெளியிலிருந்து பொதுச் சாலையில் இறங்கி, ஏதோ புராணக் கதையில் வரும் குதிரை வீரர்களாக எங்களை நினைத்துக்கொண்டு, எல்லாம் மறந்து நாங்கள் சவாரியைத் தொடர்ந்தோம். கோபால பிள்ளையின் பண்ணையைத் தாண்டும்போது பின்னாலிருந்து ஒரு மனித கர்ஜனை கேட்டது! ‘மட மைராண்டிகளா! அழுக்குப் பண்ணிகளா..! என்ன தைரியம் இருந்தா எருமைமேலே ஏறுவீங்கடா?' அதிர்ந்துபோன நானும் தம்பியும் எருமைமேலிருந்து நடுங்கிக் கீழே விழுந்தோம். எங்கள் முன்னால் உயரமான மரத்தைப் போல் கையில் பெரிய குச்சியுடன் அப்பா நிற்கிறார்.

அவருக்குப் பின்னால் அவரது நண்பர் பேப்பு  சேட்டன். இருவரும் நல்ல குடிபோதையில் இருந்தனர். அப்பா எங்களை குச்சியால் ஓங்கி ஓங்கி அடிக்கத் தொடங்கினார். வலுவான அடியொன்றுஇடம்மாறி எருமையின் புறமுதுகில் விழ, அது அலறிக் கொண்டு எங்கோ ஓடிப்போனது. ஆனால் நாங்கள் ஓட முடியாது! அதுதான் சட்டம். ஏதேனும் தவறுதலுக்காக அப்பா என்னைப் பிடித்தால் அசையாமல் நிற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அவர் அடிக்க அழைக்கும்போது அங்கிருந்து ஓடிப்போகவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ‘அங்கேயே நில்றா அவராதி மவனே...' என்ற இடிமுழக்கம் கேட்கும்போது உடல் உறைந்துபோகும். ‘இங்கே வாடா' என்ற அடுத்த கட்டளைக்கு நடுங்கி அவரிடம் சென்று அடி வாங்குவதே என் வேலை.

அடித்து அடித்து முதல் குச்சி உடைந்ததும் காட்டுச் செடிக் கொம்புகளை ஒடித்தெடுத்து அடி தொடர்ந்தார். இதற்கிடையே பேப்பு சேட்டன் உள்ளே புகுந்து ‘என்னோழ இந்த எழிய சகோதழங்கழ அழிக்காதே சேடடா, அழிக்காதே' என்று அப்பாவைத் தடுக்க முயன்றார். ஆனால் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த அவர் எங்களைக் காப்பாற்றும் முயற்சியில் மேலும் அப்பாவிடம் தள்ளிவிட்டு அதிகமான அடிகளை வாங்கித்தர மட்டுமே உதவினார். நான் காரணம் அப்பாவியான என் தம்பியும் அடிவாங்கிக் குவிக்கிறானே என்ற மனவலி வேறு எனக்கு.

நாட்டு மண்சாலையின் மத்தியில் அரைமணி நேரத்துக்கு மேல் நடந்த இந்தச் சம்பவத்தை பல வழிப்போக்கர்கள் வேடிக்கைப் பார்த்தனர். வேண்டாம் என்று ஒரு வார்த்தை யாருமே அப்பாவிடம் சொல்லவில்லை. அல்லது அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கவில்லை. எங்கள் கால்களும் தொடைகளும் ரணமாகி ரத்தம் வழிந்தது. உடல் முழுவதும் ஊதா வண்ணக் கீறல்கள் தடித்துப் பொங்கின.

கொஞ்சம் வளரத் தொடங்கியதும் அப்பாவின் மனிதத்தன்மையற்ற மனோபாவத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தேன். தான் வளர்த்தும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் காட்டும் அன்பின் ஒரு துளியாவது அவர் என்னிடம் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அடிக்கடி யோசிப்பேன். ரோஸி என்று பெயரான ஒரு பெண் நாயில் தொடங்கி ஜூடி, டாமி, டைகர், கைசர், கீப்பர் என்றெல்லாம் பெயர் வைக்கப்பட்ட பல நாய்கள் ஒவ்வொரு காலத்திலும் எங்கள் வீட்டில் வளர்ந்தன.

பசுமாடுகள், ஆடுகள், எருமைகள், நாய்கள், பூனைகள், கோழிகள், வாத்துகள் என பலப்பல வளர்ப்பு மிருகங்களுடன்தாம் வளர்ந்தோம் என்றாலும் செல்லப் பிராணிகளின்மேல் பெரிய ஆர்வம் எதுவும் எனக்கு இருக்கவில்லை. மிகச்சிறிய வயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு நாய் என்னை மோசமாகக் கடித்துவிட்டதன் நினைவுதான் அதன் காரணமாக இருந்திருக்கவேண்டும்.

வீட்டில் அப்பா வளர்த்தும் நாய்களை நான் வெறுத்தேன். அவற்றின்மேல் அப்பா செலுத்திவந்த அதீத அன்பே அதன் காரணம். ஆனால் ஒரு காலத்தில் எங்கள் வீட்டிலிருந்த, பளபளக்கும் கருப்பு வெள்ளை வண்ணம் கொண்ட மணியன் என்கின்ற நாயை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு முறையும் நான் அவனிடம் செல்லும்போது மிகுந்த அன்பை வெளிக்காட்டுவான். ‘மணியனே...' என்று அழைத்தால் எங்கிருந்தாலும் ஓடி வருவான். வீட்டுத் தோட்டத்திலும் அறுவடை முடிந்து வெறுமேனே கிடக்கும் நெல்வயலிலும் அவனும் நானும் ஓடி விளையாடுவோம்.

ரவிபேலட்

எனக்கு மட்டுமல்லாது என் தம்பிகளுக்கும் தங்கைக்கும் அம்மாவுக்கும் மணியனைப் பிடித்திருந்தது. தன்னை விட வீட்டிலுள்ள மற்றவர்களை மணியன் நேசிக்கிறான் என்பது அப்பாவுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு நாள் அப்பா மணியனை அடக்கி அவனுக்கு நடைபாங்கு சொல்லித்தர ஆரம்பித்தார். அதற்கு அவர் கையாண்ட கடினமான முறைகள் அவனுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அவன் அப்பாவைப் பார்த்து உறுமிக்கொண்டு பற்களை நறநறவெனக் கடிக்க ஆரம்பித்தான். அதைப்பார்த்து அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறியது. ஒரு பெரிய தடி எடுத்து மணியனை அடிக்க ஆரம்பித்தார். மணியன் குலைத்துக்கொண்டு கொதித்துப் பொங்கி அந்த தடியின் முனையைக் கடித்து முறிக்க முயன்றான். அவன் தன்னைக் கடிக்க நினைக்கிறான் என்று எண்ணி அப்பா மணியனின் வாயிலும் மூக்கிலும் தடிமுனையால் மீண்டும் மீண்டும் குத்தினார். மணியனின் வாயிலும் மூக்கிலும் இருந்து ரத்தம் வடியத் தொடங்கியது.

தாங்க முடியாத வலியிருந்தும் எங்கேயும் ஓடிப்போக முயலாமல் அங்கேயே நின்றுகொண்டு தனக்கு எதிரான அந்த வன்கொடுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தான். உள்ளே நுரைபொங்கும் மதுபோதையும் ஆணவம் உருவாக்கிய கடுங்கோபமும் அப்பாவின் கண்களைக்குருடாக்கின. எனது தம்பிகளும் தங்கையும் எங்கள் அம்மாவும் பீதியில் உறைந்துபோன கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது சத்தமாகக் கத்திக்கொண்டு அப்பா மணியனின் தலையை அடித்து நொறுக்கினார். ரத்தம் வழிந்துகொண்டிருக்கும் கண்களால் பரிதாபமாக என்னைப் பார்த்தவண்ணம் கீழே சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்துபோனான் என் மணியன்.

அவன் உடலை தோட்டப் பகுதிக்கு இழுத்துச்  சென்றார் அப்பா. மண்வெட்டி எடுத்து ஒரு குழியை வெட்டி அதில் அவனைப் புதைத்தபின் அந்த புதைகுழிமேல் ஏறி நின்று மிதித்தபடி என்னைப் பார்த்து அலறினார் ‘டேய் வெட்கங் கெட்ட நாயே, நீ என்னைப் பார்த்து குலைக்க நினைத்தால் உனது கதியும் இதுதான்டா'. எங்களது ஊர் இளவட்டங்களுக்கிடையே அக்காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு வசவுச் சொல் என் வாயிலிருந்து என்னையறியாமல் வெளியேறியது. “ஓஹோல்..'. ‘ஆமா, நீ ரொம்பப் புடுங்குவே' என்றுதான் அதன் பொருள்.

‘என்னடா சொன்னே? ஓஹோலா?' அப்பா மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு என்னைத் தாக்க விரைந்து வந்தார். தோட்டப் பகுதியினூடாகக் குதித்து வயல்காட்டை நோக்கி ஓடினேன். ‘அயோக்கிய நாயே.. நில்றா அங்கே' என்ற இடிமுழக்கம் கேட்டு எனது கால்கள் அன்றைக்கு உறைந்து நிற்கவில்லை. இனிமேல் என்ன நடந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை என்ற எண்ணம் மனதுக்குள் திளைத்துக் கொண்டிருந்தது. அப்பா கத்தும் ஒவ்வொரு வசவு சொல்லுக்கும் பதிலாக ஓஹோல்.. ஓஹோல்.. என்று திருப்பிக் கத்திக்கொண்டு வயல்வெளியின் குறுக்கே ஓடினேன். என்னை நோக்கிக் கத்திக்கொண்டு தரையைப் பார்க்காமல் ஓடிய அப்பா பளுக்கென்று வழுக்கி விழுந்து வயல் சேற்றில் புரண்டார்.  அதற்குள் நான் மறுகரையை எட்டியிருந்தேன்.

(வளரும்)

ஜூலை, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com