அழகான பூந்தோட்டம். நறுமணம் பூக்களின் பிரார்த்தனை போலிருந்தது.
உதிர்ந்துகிடந்த இதழ்கள் காற்றில் ஆடி அசைந்தன. கண்கள் களைப்பின்றிப் பார்க்கலாம். அருகே வந்து நின்ற வழிப்போக்கன் பூக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். பூவின் பனித்துளிபோல் அவன் கண்கள் துளிர்த்திருந்தன.
பார்வைகள் அங்குமிங்குமாய் அசைந்துபோய் ஒவ்வொரு பூவாய்த் தொட்டுத் திரும்பியது. அசையும் குட்டிச்சொர்க்கங்களைப்போல பூக்கள் அவனுக்குத் தோன்றின. தன்னை மறந்து கண்மூடி அந்த சூழலை அசைபோட்டான். நினைவுகளில் இளைப்பாறினான். தாடியை நீவினான்.
தோட்டக்காரன் அருகே வந்தான். ‘அய்யா...
வாங்க...' என்றான். வழிப்போக்கன் கண்கள் விரிந்தன. ‘என்ன உங்களுக்குத் தெரியுமா?'
‘பாசத்தோட பாக்கறீங்க... அத உணர முடிஞ்சுது. அது போதும் எனக்கு...'
வழிப்போக்கன் அவன் கைகளைப் பற்றிக்கொண்டான். ‘ரொம்ப உயிரோட்டமா பராமரிக்கிறீங்க...'
சொல்லிவிட்டு கவனம் குவித்து மீண்டும் பூக்களைப் பார்த்தான்.
நெருக்கமாக வந்து ‘பூவப் பறிக்கத் தோணுதா...' தோட்டக்காரன் கேட்டான். ‘இல்ல...வேர முத்தமிடத் தோணுது... ' சொல்லிவிட்டு பூமியை முத்தமிட்டான்.
பதில் தோட்டக்காரனை மலரச்செய்தது.
உதட்டில் ஒட்டி இருந்த மண்ணை உள்ளங்கையில் பத்திரமாய் சேமித்தபடியே போய்க்கொண்டிருந்தான் வழிப்போக்கன்.
கதைச்சொல்லி
தொந்தி பெருத்தது போல் இருந்தது அந்த அலுவலகம். ‘இங்க காசு இருந்தா காரியம் நடக்கும் சார்.' டீ குடித்துக்கொண்டிருந்தபோது கேட்டது குரல். ‘சத்தமா பேசாதிங்க. உள்ளபுடிச்சிப்போட்ற போறாங்க...'
சொன்னவர் சிரிக்கிறார். காட்சி கலைகிறது.
அந்த அலுவலம் ரகசியக் கிடங்குபோல் தெரிகிறது. வெளியே வருபவர்கள் முகத்தில் பெரிதாக சிரிப்பில்லை. நசுங்கிப்போனது போல் சிலர் நகர்கிறார்கள்.
‘சம்பளம் வாங்கறீங்க இல்ல. உங்க வேலைய பாக்கறதுக்கு அப்புறம் ஏய்யா லஞ்சம் கேக்கறீங்க. ' எனக்கு ஓங்கிக் கத்தவேண்டும் போல் தோன்றியது.
தொண்டைக்குள்ளேயே சொற்கள் இறங்கிவிட்டன.
இன்னொரு டீ சாப்பிடலாம். ‘சார் அடிக்கடி வரீங்க... வேல முடியலயா... உள்ள இருக்கிறதெல்லாம் வேட்ட நாய்ங்க... எலும்புத்துண்டாவது போடணும். அப்பதான் நடக்கும்.' சொன்னார் டீக்கடைக்காரர்.
யாருக்கோ சக்கரை இல்லாத டீ போட்டுக் கொடுத்தார். யாருக்கோ என்ன. இப்ப நிறைய பேரு கேக்கறது சக்கரை இல்லாத அல்லது சக்கரை குறைவான டீ. எல்லாம் இந்த சுகர் பண்ற வேல.
அங்குமிங்கும் அலைந்தேன். சிகரெட்டுகள் இறந்து விழுந்தன. புகைமூட்டமாய் ஒரு எண்ணம் தோன்றியது. பிறகு அது சித்திரமாக மாறியது. எனக்கு நானே சொல்லிப்பார்த்தேன். வலியை உணர முடிந்தது. இதை உடனே ஒரு குறும்படமாக எடுக்க வேண்டும். அவலத்தை பதிவு செய்ய வேண்டும். ஆரம்ப வரிகள் கிடைத்தன.
‘இது உண்மையானவர்களைப் பற்றிய உண்மைக் கதையல்ல.
பொய்யானவர்களை பற்றிய உண்மைக்கதை.'
முதல் காட்சி இப்படி ஆரம்பமாகிறது.
ஒரு அலுவலகம். காமிரா மெல்ல பைல்களைத் தாண்டிப்போகிறது.
ஒரு பைல் அருகே வர நின்று விடுகிறது. அது ஒரு ரகசிய பைல். அந்த ரகசிய லஞ்சப் பட்டியலின் மேல் நகர்ந்த மூட்டைப்பூச்சி உறைந்துபோய் நின்று சொன்னது:
‘இவனுங்க நம்மள விட ரத்தம் குடிப்பாங்க போலருக்கே!'
கல்யாண பந்தி
ஒரு கல்யாண பந்தி. நல்ல பசி. நண்பரும் நானும் உட்கார்ந்தோம். மெல்லிய தோற்றம்கொண்ட ஒருவர் அருகில் வந்து புன்னகைத்து,வானவில் போல் வளைந்து என்ன வேண்டும் என்று கேட்டார். உடனே தரச்சொன்னார்.
அவர் விசாரிப்பும் விஷேசமான கவனிப்பும்
ரசிக்க வைத்தன. அவருக்காக ஒருபிடி அதிகம்
சாப்பிட்டவர்கள் இருக்கவே செய்வார்கள்.
பேச முடியாத அளவிற்கு சுழன்று கொண்டிருந்தார். அவர் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. பெயரைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அவரை நினைவில்
சேமித்தபோது தோன்றியது.
பரிமாற எப்போதும் அன்பு இருக்கவே செய்கிறது.
ஜூன், 2022