அகம் முகம்: போய்க் கொண்டிருங்கள்!

அகம் முகம்: போய்க் கொண்டிருங்கள்!
Published on

அபுசாலி தெரு. விசாலமான பார்க். அழகான காலை. பட்டாம்பூச்சி மனிதர்கள்.

பத்துமணியானால் ஒரு பெரியவர் விசிலடித்து எல்லோரையும் விரட்டி விடுவார். பிறகு புறாக்களுக்கு தானியம் வைப்பார். ஒரு காலடித்தடம் கூட புறாக்களை விரட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாத மூன்றாவது நண்பனைப்போல நான் அருகில் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர்கள் உதவி இயக்குநர்களைப்போல் தெரிந்தார்கள். பிரிந்துபோன மனநிலையில் புலம்பும் ஒரு கதாபாத்திரம். அதை சமாதானப்படுத்தும் இன்னொரு கதாபாத்திரம். உணர்ச்சிபூர்வமாகப்படித்துக் காண்பித்தார் சற்று குண்டாக இருந்தவர்.

‘உதிர்ந்துபோகிறவர்களை

பிரிந்துபோகிறவர்களை

மறந்துபோகிறவர்களை

தள்ளிப்போகிறவர்களை

தவிர்த்துப்போகிறவர்களை

துண்டித்துப்போகிறவர்களை

தொடராமல்போகிறவர்களை

விரும்பாமல்போகிறவர்களை

வேண்டாமல்போகிறவர்களை

விட்டுவிடுங்கள்

உங்களோடு நீங்கள் இருக்கிறீர்கள்

போய்க்கொண்டிருங்கள்...

கேட்க அழகாக இருந்தது. பெரியவர்  விசிலடித்துவிட்டார். அவர்கள் வேகமாகப் போனார்கள். நான் போய்க்கொண்டிருந்தேன். அந்த வரிகள் நினைவில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. 

டீஸ்பூன் அளவு புன்னகை 

அவர் உம்மென்றிருந்தார். வேகமாக ஓடிவந்து ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ ஓட்டுநர் புன்னகையுடன் வரவேற்றதை கவனிக்கவில்லை.

‘அவசரமா போகணுமா சார்?'

‘ஆமா சீக்கிரம் போ.'

‘ஓகே சார்...ரொம்ப சூடா  இருக்கில்ல சார்?'

‘என்ன கூலா இருன்னு சொல்றியா?'

‘அடட... அப்படியெல்லாம் இல்ல சார்.'

‘வாழ்க்க நம்மள டென்சனாக்கலாம். நாம ரிலாக்ஸா இருக்கணும் சார்.'

‘ உன் தத்துவத்த கேக்க நான் தயார இல்ல...வேகமா போ....என்ன முணுமுணுக்கறே.'

‘மயக்கமா... கலக்கமா... கண்ணதாசன் அய்யா பாட்டு சார்.'

‘ நிப்பாட்டு... நான் இறங்கிக்கறேன்.'

‘சாரி சார் யதார்த்தமா பாட்னேன்... கோச்சிக்காதீங்க... தோ வந்தாச்சு...'

‘இந்தா..மீதிய வச்சுக்க...'

‘ மீட்டருக்கு தந்தா போதும் சார்...இந்தாங்க மீதி.'

‘அம்மா ஹாஸ்பட்டில்ல இருக்காங்க... போயி பாக்கணும் சார்... மனசு அங்க போவும்போதெல்லாம நான் பேச்சுல திசை திரும்ப பாப்பேன். உங்களுக்கு என்னமோ ஏதோ... மன்னிக்கணும் சார்...'

எதுவும் பேசாமல் வேகமாக போனவர் ஆட்டோ பின்னால் எழுதி இருந்த வாசகத்தை கவனிக்கிறார்.

‘டீஸ்பூன் அளவு புன்னகை சேருங்கள். நாள் இனிப்பாகும்'

அவர் திருப்பி வந்து ‘தம்பி ஆட்டோ பின்னால எழுதி இருக்கிறது நல்லா இருக்கு,' சொல்கிறார். அதில் புன்னகை சேர்ந்திருக்கிறது.

‘ உங்கம்மாவுக்காக நான் பிரார்த்தனை பண்றேன்.'

தோளில் தட்டிவிட்டுப் போகிறார். ஓட்டுநர் புன்னகையில் இன்னொரு டீஸ்பூன் கூடி இருக்கிறது.

என்ன சொன்னீங்க?

சின்மயா நகர் சர்சை தாண்டியபோது சந்திக்க விரும்பாத ஒரு நண்பரை சந்திக்க வேண்டியதாயிற்று. சந்தித்தேன். மத நெடி வீசும் அவரிடம். குதர்க்கமாக பேசுவார். நம்மை பேசவிடமாட்டார்.

அவர் சொற்களில் அவர் பிடித்த மூன்று கால் முயலே இருக்கும். புன்னகைத்து வைத்தேன். என் உடல் மொழியை உற்று நோக்கினார்.

சர்ச்சின் நிழலிலிருந்து என்னைக் கைபிடித்து இழுத்து வெயிலுக்கு கொண்டு சென்றார். இது என்னைக் கோபப்பட வைத்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. இறுகிய முகத்தோடு அருகில் வந்து ரகசியதொனியில் கேட்டார்.

‘நீங்க இந்துதானே... ஏன் சிலுவைக்குறி போட்றீங்க!'

‘இன்ஷா அல்லா... என்ன சொன்னீங்க!'

என் பதில் சாட்டை அவருக்கு வலி தந்திருக்ககூடும். வேகமாகப் போய்விட்டார்.

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com