அகம் முகம் | இரவு காட்டுத்தீ போல் விழித்திருக்கிறது

அகம் முகம் | இரவு காட்டுத்தீ போல் விழித்திருக்கிறது
Published on

ஏப்ரல், 16ந்தேதி நள்ளிரவு. பேருந்தி-லிருந்து இறங்கியபோது மணி 1.15. உடன் வந்த ரிட்டயர்ட் மிலிட்ரி மேன் ‘பாக்கலாம் சார்!' எனச் சொல்லிவிட்டு வேகமானார். ராணுவ பழக்க வழக்கங்கள் அவர் நடைக்கு உதவக்கூடும். தினசரி ரெகுலர் வாக்கிங் எனக்கு உதவுமென்று தோன்றியது.

தொலைதூரத்திலிருந்து அண்ணாமலையாரை கும்பிட்டுவிட்டு கிரிவலம் தொடங்கியாயிற்று. சித்ரா பௌர்ணமி. பெருங்கூட்டம்.

நடை பயணம், 16 கிலோமீட்டர் நடக்க முடியுமா என்ற கேள்வியை இறக்கிவைத்துவிட்டு எல்லோரும் நடந்தனர். தனிமையும் நானும் பயணித்தோம்.

அமைதியான நடை; பயணத்தின் தியானம். ஒரு வரி நினைவில் ஒளிர்ந்தது. ‘மூணு அண்ணாக்கயிறு பத்து ரூபா...வாங்க சார்... வாங்க... வண்டி கிளம்பப்போகுது... வந்து சீக்கிரம் வாங்குங்க...' வண்டி கிளம்பவே இல்லை. சலிப்பில்லாமல் அழைத்துக்கொண்டிருந்தது பதிவு செய்யப்பட்ட குரல்.

வழி நெடுக சாமியார்கள் விபூதி வழங்கினார்கள். மீன் பிடிப்பது போல் காவி வேட்டி விரித்து தட்சணை போடச்சொன்னார்கள். சங்கு ஊதினார் தாடி நீண்ட சாமியார். அதன் ஓசை இரவுக்குள் எங்கோ கரைந்து மறைந்தது.

கரும்புச்சாறு குடித்தேன்.இளம் கணவன் மனைவி.கரும்பை அந்த பெண் பல் சக்கரங்களுக்குள் வைக்க, அவன் கொடுத்துக்கொண்டிருந்தான். ஐஸ் போட்டு சாப்பிட்டதால் 15 ரூபாய். ‘குடிச்சிட்டு தெம்பா நடங்கண்ணே!' அந்தப் பெண் சொன்னாள். அழகான குரல் கொஞ்ச தூரம் கூடவே வந்தது.

ஒரு பாட்டி பேத்திகளின் கைகளைப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தார். அவரைப் பேத்திகள் உற்சாகப்படுத்திக்கொண்டே வந்தனர்.

இறைவனிடம் எவ்வளவு விண்ணப்பங்கள் வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளின் கோரிக்கைகள் போல எவ்வளவு குவிந்திருக்கும்.

பாட்டி நடையில் இப்போது வேகம் கொஞ்சம் கூடி இருந்தது. அவர்களை நான் கடந்தேன். என்னை பலர் கடந்தனர். சற்றே களைப்பாக சாலை விளிப்பில் அமர்ந்தேன். கண்கள் கீழே குவிய போய்க்கொண்டே இருக்கும் கால்கள். இளம் கால்கள். பெரிய கால்கள்.

குழந்தைக் கால்கள். கால்கள் பாதையை நெசவு செய்வது போலிருந்தது. ஒரு சில கடைகளில் பெரிய வியாபாரமில்லை. நாற்காலியில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. இப்படி அநேக நாற்காலி உறக்கங்களைப் பார்க்க முடிந்தது.

ஒரு திருப்பத்தில் பெரிய எல்.இ.டி திரையில் நித்யானந்தா பேசிக்கொண்டிருந்தார். கேட்க Everything is Marketing and Marketing is Everything என்ற வரி மனதில் எதிரொலித்தது.

இலவச கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததை ஒருவர் சொல்லிக்கொண்டே வந்தார். அவரை வேறொருவர் சமாதானப்படுத்தினார். மெல்ல விடிந்துகொண்டிருந்தது. அண்ணாமலையாரை நெருங்க இரண்டு கிலோ மீட்டர் இருந்தது. நடப்பது கடினமாகத் தெரிந்தது.

அப்போதுதான் விழித்திருந்த ஒரு சிறு கடையில் தேநீர் அருந்தினேன். ஒரு பெரியவர் டீ கிளாஸ்களை கழுவிவைத்துவிட்டு, அதற்காக ஒரு டீயை வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தார். ‘அவன நெனைச்சிக்கிட்டே போங்க சார்...' கைகூப்பியபடியே சொன்னார். அவர் குரல் அசரீரிபோல் கொண்டு வந்து சேர்த்தது.

நன்றாக விடிந்திருந்தது. அண்ணாமலையாரை மனது ஆராதித்தது. டோக்கன் போட்ட இடத்தை தேடிக்கண்டு பிடித்து பேக், செருப்பை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்தை அடைந்தபோது பெருங்கூட்டம்.

நிழல் அமர்ந்திருந்த ஒரு கல்மேல் அமர்ந்து கால்களைத் தடவிக்கொடுத்தேன். பயணத்தை இன்னும் கொஞ்சம் அசைபோட்டுவிட்டுப் போகலாம். அந்த அசைபோடலில் கிடைத்தது இது.

வாழ்க்கையோடு

ஓடுகிறீர்களா?

வாழ்க்கை

ஓடவைக்கிறது!

மே, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com