வணக்கம்...
அவர் யாரைப் பார்த்தாலும் வணக்கம்
சொல்லுவார். சிரிப்பார்.
போய்விடுவார். பல நாள் நான் அவரை கவனித்திருக்கிறேன். எடுத்தவுடன் வணக்கம் என்ற வார்த்தை வந்துவிடும்.
பல முறை நானும் அவர் வணக்கத்தை வாங்கி இருக்கிறேன். வணக்கமும் சிரிப்பும் வாஞ்சையாக இருக்கும். தொந்தரவு தராது. அடுத்தவர்
சொல்-கிறார்களோ இல்லையோ அவர் வணக்கம் சொல்வதை நிறுத்தியதில்லை.
சிலருக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். சிலருக்கு அது விசித்திரமாகத் தெரியலாம். அதைப்பற்றி அவர் கவலைப்பட மாட்டார். சில நேரங்களில் அமைதியாகக் கைகூப்பிக் காட்டுவார்.
அவரின் அந்தப் பண்பு எனக்குப் பிடித்திருந்தது. உம்மென்ற முகமும் சிரிப்பு குறைவாக உள்ளவர்களும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரைப்போல் வணக்கம் சொல்கிறோமோ இல்லையோ புன்னகைத்து இருக்கலாமே எனத்தோன்றும்.
அவர் பெயரைக்கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத்தோன்றியது. அன்று அது நடந்தது. நான் பெயரைக்கேட்கவும் அவர் வணக்கம் சொல்லவும் சரியாக இருந்தது. பிறகு போய்விட்டார்.போனவர் திரும்பிவந்து சொன்னார். ‘‘அன்புக்குப் பெயர் எதுக்கு?''
நான் அதை யோசித்தபடியே நின்றிருந்தேன்.
ஆமாம்... அன்புக்குப் பெயர் எதற்கு?
***
மறந்துடுச்சு...
‘‘உன் பேரென்ன?''
‘‘மறந்துடுச்சு.''
‘‘எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்க?''
‘‘அதுவும் மறந்துடுச்சு.''
‘‘உனக்கு என்ன வேணும்?''
தெரியல. மறந்துடுச்சு.''
‘‘உண்மையச் சொல்லு?''
‘‘சொல்றது உண்மை. மறந்துடுச்சு.''
‘‘விளையாட்றயா? ''
‘‘இல்ல. எல்லா விளையாட்டும் மறந்துடுச்சு.''
‘‘நீ யாரு?''
‘‘மறந்துடுச்சு.''
‘‘உன் ஞாபகத்துல எதுவும் இல்ல? ''
‘‘இல்ல. எல்லாம் மறந்துடுச்சு.''
‘‘பட்டாம்பூச்சிய ஏன் பச்சக்குத்தி இருக்க?''
‘‘ஏன். தெரியல. மறந்துடுச்சு.''
‘‘அம்மா..''
‘‘இப்ப நான் உன்ன அடிச்சேன். அம்மான்னு கத்துன. அது மட்டும் எப்படி
மறந்து போவாம இருந்துது? ''
‘‘அது உங்க அடியால வந்த அம்மா இல்ல. விபத்துல அம்மா இறந்தப்ப உயிர கிழிச்சிட்டு ஓடிவந்த அம்மா. பட்டாம்பூச்சி போல அம்மா பறந்து போயிட்டாங்க.''
***
திற...
அல்லாபிச்சை அன்பானவர். சுறுசுறுப்பானவர்.டூப்ளிகேட் சாவி செய்து தருபவர். ஒருநாள் ஸ்கூட்டி சாவி தொலைந்துவிட்டது. வண்டி நின்ற இடத்திற்கே வந்து போட்டுக்கொடுத்தார். அவர் அல்லா
சொல்லும்போது அழகாக இருக்கும்.
‘‘மனுசன்னா கொஞ்சம் சிரிக்கணும். நாலு வார்த்தை பேசணும்,'' என்பார். ‘‘உம்முன்னு மூஞ்ச வச்சிக்கிட்டிருந்தா நல்லா இருக்காது.'' என்பார். மெல்ல நட்பானார் . தேநீர் வாங்கித்தருவார். உரையாடல் சுவையாக இருக்கும். அவர் பேச நாம் கேட்டால் போதும். ஓரிரு நாள் அவர் கடை இல்லை. கடை என்றால் சாலை ஓரம் ஒரு சின்ன பழைய டேபிள். முன்னால் மாலை போட்டது போல் தொங்கும்
சாவிகள். சாவி செதுக்கும் ஒரு சின்ன மெஷின். அவ்வளவுதான்.
அவர் போன் எண் பெரிதாக டேபிள் முதுகில் எழுதி இருக்கும். நினைவில் எண் இருக்க, போன் செய்தேன். ‘‘மனைவிய ஊர்ல விட வந்திருக்கேன். நாளைக்கு வந்துடுவேன்'' என்றார். மறுநாள் பார்த்தபோது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதையும் ஊர் ஞாபகம் வந்து விட்டதால் போய்விட்டுவிட்டு வந்ததாகவும் சொன்னார். ஐம்பது வயதை கடந்தவர். வாரிசு இல்லை. அதுபற்றிய வருத்தத்தைக் காட்டிக்கொண்டதில்லை. ஒரு ரம்ஜான் நாளில் அவர் சொன்னார். ‘‘இறந்த காலத்தை நினைவுகளால் திற. நிகழ்காலத்தை செயல்களால் திற. எதிர்காலத்தை நம்பிக்கைகளால் திற.''
“உங்கள் சொற்கள் என்னைத் திறந்துவிட்டன.'' என்றேன். சத்தம் போட்டுச் சிரித்தார்.
ஏப்ரல், 2022