விருது துர்நாற்றம் அடிக்கிறது!

விருது துர்நாற்றம் அடிக்கிறது!
Published on

 காலையில் எழுந்ததே தமிழறிஞர், பெரியவர் கிருஷ்ணாவின் போன் கால் சப்தத்தில்தான். எடுத்துப் பேசினேன்.

‘‘மகிழ்வான செய்தி. மூன்று நாள் இலக்கிய விழா. அதில் எனக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது கொடுத்துப் பாராட்டுகிறார்கள். வருகிற 20-ஆம் தேதி. முடிந்தால் வாருங்கள்!’’

‘‘நல்ல செய்திதான் ஐயா. விருதுடன் பண முடிப்பு ஏதும் அளிக்கிறார்களா ஐயா?’’ என்று கேட்டேன்.

ஒரு விநாடி மெளனம்.

‘‘இல்லை. நான் கூடக் கேட்டேன். என் வீட்டில் நான் சேர்த்து வைத்திருக்கும் ஏராளப் புத்தகங்களைப் பாதுகாக்க ஐந்து கிலோ அந்துருண்டை வாங்கித் தந்தாலாவது உபயோகமாக இருக்கும். விருது என்று ஒரு ஷீல்டு அல்லது கண்ணாடி பிரேமிட்ட ஒரு தாளில் அச்சிட்ட வாழ்த்தினால் என்ன பயன் என்று கேட்டேன். ‘‘மூன்று நாள் விழா. பல துறை வல்லுநர்களுக்கு விருது அளிக்கிறோம். நிறையச் செலவு ஆகுது. அதனால்தான்…’’ என்று இழுக்கிறார், விழா அமைப்பாளர்’’ என்றார் தமிழறிஞர் கிருஷ்ணா.

நான் யோசித்தேன்.

‘விழா நடத்த, விளம்பரம் செய்ய, விருது வழங்க என்று பலரிடம் நன்கொடை பெறப்படுகிறது. அல்லது முன்பாகவே நிறைய வசூல் செய்து நிலைத்த இட்டு வைப்பு என்று ஒரு தொகையைக் கொண்டு, அதில் கிடைக்கும் வட்டியை வருடந்தோறும் இலக்கிய விழா நட்த்தப் பயன்படுத்துகிறார்கள். மேடையில் வீற்றிருப்போர், உள்ளூர் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரை அழைத்து சால்வை போட்டுக் கெளரவம் செய்வது, விழா முடிந்தபின் விருந்து வைப்பது என ஏராளச் செலவு செய்வோர், விருது என்று வழங்கப்படும் அறிஞர்களுக்கு அந்த விருதுடன் கணிசமான ஒரு தொகையைப் பொற்கிழியாக வழங்குவதில் என்ன குறைந்து விடும்?’

‘சிறுகதைத் திருமூலர்’ மெளனியை ‘கணையாழி’ இதழுக்காகப் பேட்டி கண்டபோது நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘‘நீங்கள் பரிசு எதுவும் வாங்கியிருக்கிறீர்களா?’’

அதற்கு அவர் சொன்ன பதில்:

‘‘இல்லை. ஆனால் ‘ஞானபீட’ விருதோ, ‘சாகித்ய அகாதமி’ பரிசோ எனக்குக் கொடுத்தால், பணத்தைப் பெற்றுக்கொண்டு விருதைத் திருப்பிக் கொடுத்து விடுவேன். அத்துடன் அவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதுவேன்: ‘‘I accept the money. keep the honour with you. Honour stinks’’ (விருது துர்நாற்றம் அடிக்கிறது).

 ‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’

 ‘‘என் எழுத்தைப் புரிந்து பரிசு கொடுக்கும் தகுதி யாருக்கும் இல்லை!’’

logo
Andhimazhai
www.andhimazhai.com