தமிழ் சினிமாவில் ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் என்பது இன்று நேற்றல்ல, காலங்காலமாய் தொடர்ந்து வரும் சங்கதி தான். 1930களிலேயே ஹாலிவுட் படங்களை தழுவிய தமிழ்ப் படங்கள் வரதொடங்கிவிட்டன. இப்போது இருக்கும் இயக்குனர்கள், வெளிநாட்டு படங்களின் டிவிடியோடு தான் படப்பிடிப்புக்கே போகின்றனர். அன்றைக்கு தொழில்நுட்பம் அவ்வளவு வளராததால், ஹாலிவுட் படங்களை தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலைமை இருந்தது.
சென்னையில் மிட்லேண்ட், கேசினோ, மினர்வா, ஓடியன் என்று சில தியேட்டர்களில் மட்டுமே ஆங்கிலப் படங்கள் வெளியாகும். அன்றைக்கு பெரும்பாலான இயக்குனர்கள், நடிகர்கள் ஹாலிவுட் படங்களை தொடர்ந்து அவதானித்து வந்தனர். அதில் முக்கியமானவராக மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் அவர்களை கூறலாம். அன்றைய காலகட்டத்தில், தியேட்டர்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படம் மாற்றப்படும். அதனால் வியாழக்கிழமை இரவுக்காட்சி தான் கடைசி காட்சி. சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகே இப்போதுள்ள ஜெயப்பிரதா தியேட்டருக்கு அந்த காலத்தில் மிட்லேண்ட் என்று பெயர். அந்த தியேட்டரில் வெளியாகும் ஆங்கிலப்படங்களை பார்க்க வியாழக்கிழமை இரவு டி.ஆர்.சுந்தரம் வருவார். இரவுகாட்சி முடிந்ததும், அந்தப்படம் பிடித்திருந்தால் அதன் படச்சுருளை கையோடு எடுத்துக்கொண்டு காரில் சேலம் சென்றுவிடுவார். அங்கே அந்த படம் நகல் எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் சென்னை வந்து சேர்ந்துவிடும். எதுவும் நடக்காதது போல அந்த படச்சுருள் பம்பாய்க்கு அனுப்பப்படும். இப்படி ஏராளமான படங்களை பிரதி எடுத்து, ஹாலிவுட் பட லைப்ரரியே வைத்திருந்தார் சுந்தரம். நிறைய ஆங்கிலப்படங்களை பார்த்து அதில் வருவதைப் போன்ற செட் அமைப்பது, சண்டைக் காட்சிகள் வைப்பது என்று எல்லாவற்றிலும் ஹாலிவுட்டை பின்பற்றினார். அவர் படங்கள் மட்டுமல்ல, அவரே வெளிநாட்டவர் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தவர். எப்போதும் கோட், சூட், டையோடு தான் இருப்பார்.
சினிமா தொழிலை, தொழிற்சாலை போல ஒழுக்கத்துடன் நடத்தியவர் அவர். அவரது படப்பிடிப்பு அரங்கில் ஒரே ஒரு நாற்காலி மட்டும் தான் இருக்கும். அவரைத் தவிர வேறு யாரும் அமரக் கூடாது. எந்த பெரிய நடிகராக இருந்தாலும் சரி, அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டதும், அவர் செட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டும், இல்லாவிட்டால் இங்க எதுக்கு சுத்திக்கிட்டு இருக்க, கெட்-அவுட் என்று முகத்தில் அறைவது மாதிரி பேசுவது அவர் இயல்பு. நின்று கொண்டே படம்பிடிப்பது சிரமமாக இருக்கிறது என்று ஒரு ஒளிப்பதிவாளர் கூறியதால், அதிசயமாக ஒருமுறை அவருக்கு மட்டும், ஒரு ஸ்டூல் போடப்பட்டது. பின்னர் அதுவும் எடுக்கப் பட்டதால், கோபித்துக் கொண்டு அந்த ஒளிப்பதிவாளர் வெளியேறினார். பின்னாளில் அவர் பெரிய தயாரிப்பாளரானார் என்பது வேறு கதை. 1930ல் தொடங்கிய இந்த ஹாலிவுட் சினிமாக்களின் தாக்கம் 1950 வரை மிகத் தீவிரமாகவே இருந்தது. அதன் பிறகு தான் படிப்படியாக குறையத் தொடங்கியது.
எம்ஜிஆர், சிவாஜிகணேசன் படங்கள் கூட நிறைய ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டவை தான். டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் என்ற ஹாலிவுட் நடிகரை எம்ஜிஆரும், ஸ்பென்சர் ட்ரேசியை சிவாஜியும் ஆதர்சமாக கொண்டு நடித்து வந்தனர். இப்போது கூட சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் ஸ்பென்சர் ட்ரேசியுடன் சிவாஜி கைகுலுக்குவதைப் போன்ற படத்தை நாம் பார்க்க முடியும். அந்த சம்பவம் குறித்து சிவாஜி நினைவுகூர்கையில், ட்ரேசி கையத் தொட்டதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சுப்பா... என்று
ஆச்சர்யம் விலகாமல் தான் எப்போதும் பேசுவார். ட்ரேசியின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றியவர் சிவாஜி.
புதிதாக வெளியாகும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து அந்த படத்தின் கதையை தமிழில் எழுதித் தர தனியாக ஒரு குழுவையே வைத்திருந்தார் எம்ஜிஆர். எழுத்தாளர், பத்திரிகையாளர் மணியன் கூட அந்த குழுவில் இருந்தார். ஒருமுறை ஒரு ஹாலிவுட் படம் சென்னையில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் பெயர் இப்போது எனக்கு நினைவில்லை. அந்த படத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் கத்திச் சண்டை போடுவது போல ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியை எப்படி எடுத்தார்கள் என்று தெரிந்து கொள்ள எம்ஜிஆர் பெரிதும் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்தது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அமெரிக்க தூதரகத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. அவர்கள் மூலம், அந்த படத்தின் தயாரிப்பாளரின் முகவரியை வாங்கி, அவருக்கு கடிதம் எழுதினேன். அவரும் எனக்கு பதில் எழுதினார். அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து அந்த கடிதத்தில் இப்படி விளக்கியிருந்தார்:
நீங்கள் அந்த படத்தில் பார்ப்பது, உண்மையிலேயே எலும்புகூடுகள் தான். எக்ஸ்ரே எடுக்கும்போது அந்த பிலிமில் என்ன தெரிகிறது? நம் எலும்பு தானே தெரிகிறது. அதனால், எக்ஸ்ரே பிலிம்களை ரோல் கணக்கில் மொத்தமாக வாங்கி அதில் தான் அந்த காட்சியை படம்பிடித்தோம் என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தை எம்ஜியாரிடம் கொடுத்தபோது ஆச்சரியப்பட்டு போனார். எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படம், அண்டர் டூ ஃபிளாக்ஸ் ((Under two flags) மற்றும் ப்ரிசனர் ஆஃப் ஜென்டா (Prisoner of Zenta) என்ற படங்களை தழுவியது தான்.
சீ ஹாக் (sea hawk) படத்தை தழுவியது தான் ஆயிரத்தில் ஒருவன். மார்க் ஆஃப் ஸாரோ (Mark of Zorra) தான் மலைக்கள்ளன். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பெரிய பட்டியல் அது.
எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளிவந்த சந்திரலேகா படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்டவை தான். சந்திரலேகாவை முதலில் டைரக்ட் செய்தது ஆச்சார்யா என்றழைக்கப்படும் ராகவாச்சாரி தான். அவர் பாதிப்படத்தை இயக்கிய பின் வாசனுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். பிறகு படத்தை வாசன் நிறைவு செய்தார். அந்த படத்தின் படத்தொகுப்பு முழுக்க முழுக்க வாசனால் செய்யப்பட்டது. அந்த காலத்தில், புதுமையான படங்களை இயக்குவதில் தனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் எஸ்.பாலசந்தர். வீணை பாலசந்தர் என்றால் பலருக்கும் நினைவிருக்கும். அவர் இயக்கிய அத்தனை படங்களுமே, ஹாலிவுட் படங்களை தழுவியது தான். அவரோடு சேர்ந்து நானும் நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறோம். தமிழ் திரையுலகில் இப்படி தழுவி எடுக்கப்படும் படங்கள் குறித்து ஹாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு தெரியாது. அவர்கள் வரை செய்தி போவதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனால், அதிலும் ஒருமுறை சர்ச்சை ஏற்பட்டது. ஜெய்சங்கர், ஜாவர் சீதாராமன் நடித்த பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படம், பிராஸ் பாட்டில் (The Brass bottle)) என்ற ஹாலிவுட் படத்தை தழுவியது. அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒருமுறை பம்பாய் வந்திருந்தார். அப்போது யாரோ இந்த தழுவல் சங்கதியை அவரிடம் கொளுத்திப்போட, அவர் நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்டுவிட்டார். பணம் கொடுத்த பிறகே அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
தொகுப்பு: அருண் சுவாமிநாதன்
ஏப்ரல், 2013.