ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன யோசனை

சிலிக்கான் சிந்தனைகள்
ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன யோசனை
Published on

இணையம் வளர்ச்சி பெற்ற பின் எவ்வளவோ மாற்றங்கள் நாளுக்கு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கண்ணை மூடி அசந்தால் டக்கென்று நாலு மென்பொருள் தூரம் இணையம் முன்னேறிச் சென்றிருக்கும். இப்போது பரவலாக பேசப்படும் ஒரு விஷயம் ‘கிளவுட் கம்யூட்டிங்’ என்பது.

ஒரு காலத்தில் நாம் மென்பொருள், வன்பொருள் என்று அலுவலகங்களுக்கு வாங்கிக் கொண்டிருந்தோம். அது நம் வேலைநேரம்போக மற்ற நேரம் சும்மா இருக்கும். ஏன் இப்படி தெண்டமாக இருக்கவேண்டும்? எந்த அலுவலகமாக இருப்பினும் அதற்கு ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங் செய்வது என்பது ஒரு ப்ரொஜெக்டில் எண்பது சதவீதம் செலவு பிடிக்கும் விஷயமாகும். அதற்குப் பதிலாக நமக்குத் தேவையான நேரம் மட்டும் பயன்படுகிறமாதிரி இருந்தால் என்ன? நாம் வாங்காமல் மற்றவர்களுடையதை ஒரு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தினால் என்ன? என்று யோசித்ததன் விளைவே இந்த கிளவுட் கம்ப்யூட்டிங்.

சர்வர், டேட்டா பேஸ் இதெல்லாம் நீங்கள் ஆபீஸிலேயே வைத்து பாதுகாக்கச் சிரமப்பட்டு இடத்தை அடைத்து மூச்சுத் திணறிக்கொண்டிருக்கவேண்டாம். கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்கள் உங்களுக்காக அவற்றை ஏற்றுக்கொள்ளும். இணையம் மூலம் நீங்கள் தேவையான சமயம் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எவ்வளவு எளிது? கார் வாங்கி வீட்டில் நிறுத்துவதை விட ஒரு வாடகைக் காரை தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். அதே வாடகைக்காருக்குப் பதிலாக கால் டாக்சி கம்பெனி என்றால் எங்கே இருந்தாலும் உங்களுக்கு அருகே இருக்கும் கால்டாக்சி டிரைவரை நீங்கள் அழைத்துக் கொள்ள முடியும். இதுதான் கிளவுட் கம்ப்யூட்டிங். கூகுளில் நீங்கள் தேடுகையில் தகவல் எங்கிருந்து வருகிறது? உங்களுக்கு அருகே இருக்கும் சிங்கப்பூரில் அவர்கள் வைத்திருக்கும் சர்வரிலிருந்து தகவல்கள் வந்துசேரும். அதுபோல் பல இடங்களில் டேட்டா பேஸ், சர்வர் வைத்து வேலைகளை வேகமாக்குகிறார்கள். வங்கி ஏடிஎம்கள் இப்படித்தான் இயங்குகின்றன. rackspace.com, godaddy.com என்ற சில இணைய தளங்களுக்குப் போய்ப்பாருங்கள். இதைப்பற்றி இன்னும் விவரமாக அறிந்துகொள்ளலாம்.

அமேசான் இணையதளம் இருக்கிறது அல்லவா? அது ஒரு ஆன்லைன் புக் ஸ்டோர். அவர்கள் அமேசான் ஈசி2 என்று ஒரு சேவை ஆரம்பித்துள்ளார்கள். யார் வேண்டுமானாலும் அமேசான் மென்பொருள் பயன்படுத்தி ஒரு ஆன்லைன் ஸ்டோர் செட் பண்ணிக்கொள்ளலாம். தங்கள் நூல்களை அங்கே வைத்து விற்கலாம். அமேசான்  உங்கள் சர்வர் டேட்டா பேஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். இதுதான் இப்போது கிளவுட் கம்யூட்டிங் நிறுவனங்களின் அடுத்த கட்டம்.

சேல்ஸ்போர்ஸ் டாட்காம் (salesforce.com) என்பது ஒரு பில்லியன் டாலர் கம்பெனி. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஆட்டோமேஷன் மென்பொருள் விற்கிறார்கள். எந்த ஒரு பெரிய கம்பெனிக்கும் அல்லது சின்ன கம்பெனிக்கும் தங்கள் விற்பனை ஆட்கள் வெளியே  சென்று வேலை செய்யும்போது எந்த இடத்தில் என்ன வேலை செய்கிறார்கள் என்கிற சரியான தகவல் வேண்டும். அதைக் கிடைக்கவைக்கிறது சேல்ஸ்போர்ஸ் டாட்காம். ஒரு பிஸ்கட் கம்பெனி ஆட்கள் கடைகடையாகப் போய் பிஸ்கட் போடும்போது எந்த கடையில் என்ன ஸ்டாக் இருக்கிறது எவ்வளவு பாக்கெட் போட்டிருக்கிறார்கள் என்பதை விற்பனை ஆள் அங்கங்கே தங்கள் மொபைலில் பதிவு செய்துவிட்டால் போதும். கம்பெனி நிர்வாகி இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். நாங்களும் இதுபோல  ஒரு மென்பொருளை ஓபன்சோர்ஸ் முறையில் தயாரித்து ஒரு நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளோம். அது இப்போது வியட்நாமில் குழந்தைகளுக்கான உணவூட்டப் பொருட்கள் விற்பனையில் பயன்பாட்டில் உள்ளது. இது முன்பு பார்த்த அமேசான் ஈசி2 வழங்கும் சர்வரில் ஃபன் ஆம்பால் கேட்வேயில் செயல்பட்டு வருகிறது.

இந்த சேல்ஸ் போர்ஸ் கம்பெனி தலைவர் மார்க் பெனியாஃப் என்பவருக்கும் ஆப்பிள் ஸ்டீவ்ஜாப்சுக்கு இடையே சுவாரசியமான ஒரு உறவு உண்டு. தனக்கு ஏதாவது சிக்கல், அல்லது ஆலோசனை தேவை என்றால் மார்க், ஸ்டீவை அணுகி ஆலோசனை கேட்பது வழக்கம்.

சேல்ஸ்போர்ஸ் தொடர்பாக ஸ்டீவ் சொன்ன ஆலோசனை இதுவே: சேல்ஸ்போர்ஸ் தன் ஆட்டோமேஷன் மென்பொருளை இணையத்தில் விற்பதோடு அதை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மாறுபாடுகளை அதில் செய்துகொள்ள வழிசெய்யுமாறும் அதே மாறுபாடுகள் செய்யப்பட்ட அப்ளிக்கேஷன்ஸை அவர்களே சேல்ஸ்போர்ஸ் தளத்தில் விற்பனைக்கும் வைக்குமாறும் வழிசெய்யுங்களேன் என்று சாதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லியிருக்கிறார். மார்க் அதையே வேதம்போல் பிடித்துக்கொண்டு கடகடவென செயல்பட்டு இதற்காக appstore என்ற வசதியையும்  ஆரம்பித்தார். நல்ல வரவேற்பு. இப்போது நிலை என்னவென்றால் சேல்ஸ்-போர்ஸ் மென்பொருளை டெவலப் செய்து அவர்கள் தளத்தில் விற்றாலே காசு பார்க்கமுடியும் என்றாகிவிட்டது. நம்ம ஆட்கள் ஜாவா, டாட் நெட் என்று மட்டும் நிற்காமல் சேல்ஸ்போர்ஸ் டெவலப்பர்கள் ஆனாலே பணம் பார்க்கலாம். இதுபோலவே பேஸ்புக், யூட்யூப், ட்விட்டர், அமேசான், ஐபோன் என்று ஆளுக்காள் தனி ப்ரொக்ராம்கள் வைத்துள்ளார்கள். அவற்றில் இளைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டலாம்.

 ஸ்டீவ்ஜாப்ஸ் ஆப்பிள் சார்பாக ஐ பாட், ஐபேட், ஐபோன் என  அறிமுகப்படுத்தி ஐடியூன்ஸ் என்று பட்டையைக் கிளப்பியபோது அவருக்கு appstore.com என்ற பெயர் தேவைப்பட்டது. ஆனால் அந்த பெயரை ஏற்கெனவே ஸ்டீவ்ஜாப்ஸ் ஐடியாவைக் கேட்டு செயல்படத் தொடங்கியபோதே பதிவு செய்து வைத்திருந்தார் அல்லவா மார்க்? அதை மறுபேச்சு பேசாமல் ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றியுடன் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

கடைசியாக நான் சொல்வது இதுதான் இந்தியாவில் இருக்கும் அலுவலகங்கள் தங்கள் அலுவலகத் தேவைகளான நேர அட்டவணை, மனித வளப் பிரிவு, நேரம் மற்றும் விடுமுறை கணக்கீடு, அக்கவுண்ட்டிங், இணையதளம், திட்ட மேலாண்மை- இது எல்லா-வற்றுக்குமே கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான லைசன்சிங் கால அளவைப் பொறுத்து 60 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை இருக்கிறது. இதற்கான மென்பொருட்களை basecamp.com, hrworks.com, quickbooks.com, office365.com  போன்றவை தருகின்றன.

(கட்டுரையாளர் சென்னையில் உள்ள டென்த்  பிளானெட்  டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவர்)

அக்டோபர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com