ஷேக்ஸ்பியர் வாழ்கிறார்

ஷேக்ஸ்பியர் வாழ்கிறார்
Published on

ஷேக்ஸ்பியரின் நினைவுதினத்தை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 23, 1616ல் தனது 52வது வயதில் ஷேக்ஸ்பியர் இறந்து போனார்.  இந்த ஆண்டு அவரது 400வது நினைவு தினம். 37 நாடகங்களையும் 154 ஈரேழ்வரிப்பா (Sonnet)களையும் ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார். இதில் சில நாடகங்களை வேறு சில நாடகாசிரியர்களுடன்  இணைந்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மேடையில் மட்டுமின்றி திரைப்படமாகவும் உலகப் புகழ்பெற்றுள்ளன, உலகிலே ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அதிகம் திரைப்படமாக்கப்பட்டுள்ளது ஷேக்ஸ்பியரது மட்டுமே.

கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட் இதுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மையமாக கொண்டு 410 முழுநீளத்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் ஐஎம்டிபி பட்டியலில் இன்றுவரை 1140 சிறிய மற்றும் முழுநீளப்படங்கள் உருவாக்கபட்டுள்ளதாக தகவல் காணப்படுகிறது.  இந்த ஆண்டு மட்டும் பதினாறு ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் வேறு வேறு மொழிகளில் தயராகிக் கொண்டிருக்கின்றன என்றும் ஒரு செய்தி கூறுகிறது.

ஷேக்ஸ்பியரின் நாடங்களில் அதிகமுறை படமாக்கபட்டது ஹாம்லெட். 1907ல் முதல் இன்றுவரை 51 முறை படமாக்கப்பட்டுள்ளது. ரோமியோ ஜுலியட் 38 முறையும் மெக்பெத் 34 முறையும் ஒத்தல்லோ 28 முறையும் கிங் லியர் 24 முறை படமாக்கபட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.  1900ல் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்ட ஹாம்லெட் படமே முதல் ஷேக்ஸ்பியர் படம் என்கிறார்கள். அதற்கு முன்பாக 1899ல் ஒரு மௌனப்படம் உருவாக்கபட்டது என்றும் தற்போது அதன் பிரதி கிடைத்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஷேக்ஸ்பியரைப் பற்றி  அனானிமஸ் (Anonymous  )  என்றொரு திரைப்படம் வெளியானது. இதனை இயக்கியவர் ரோலாண்ட் எம்மரிச்.  அதில் ஷேக்ஸ்பியர் ஒரு போலியான நபராக சித்தரிக்கப்பட்டதுடன் அவர் எழுதிய நாடகங்கள் யாவும் உண்மையில் எட்வர்ட் வெரேயால் எழுதப்பட்டதாக காட்சிகள் அமைக்கபட்டிருந்தன. இதில் ஷேக்ஸ்பியர் பெருங்குடிகாரராக வருவதுடன் கொலையும் செய்கிறார்.

இப்படத்தை ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகர்கள் கடுமையாக கண்டனம் செய்தார்கள். அதனால் பெரும் சர்ச்சை உருவாகியது. உண்மையில் ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது வாழ்வுக்குறிப்புகள் நிஜமானவையா? நாடகங்களை எழுதியது அவர் தானா என்ற கேள்விகளுக்கு இன்றைக்கும் முடிவான பதிலில்லை . சமீபத்தில் ஷேக்ஸ்பியர் என்பது ஒரு பெண். புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். அவரது உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என ஒரு வதந்தி பரவியது. இப்படி ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை குறித்த மர்மம் இன்றும் புதிராகவே உள்ளது.

ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகரான கார்ல் மார்க்ஸ்,  ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடமாக சொல்லக்கூடியவர், வாரந்தோறும் ஞாயிறு அன்று மார்க்ஸின் குடும்பத்தினர் ஒன்று கூடி ஷேக்ஸ்பியர் கவிதைகளை, நாடகங்களை மாறி மாறிச் சொல்லி விளையாடுவது வழக்கம்.

1998ல்  John Madden இயக்கிய ஷேக்ஸ்பியர் இன் லவ் (Shakespeare in Love )  திரைப்படம் வெளியானது. இப்படம் ஷேக்ஸ்பியரின்  காதலைக் கொண்டாடியது. படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் விருதுகளையும் வாரிக் குவித்தது.

அனானிமஸ், ஷேக்ஸ்பியர் இன் லவ்  ஆகிய இரண்டு திரைப்படங்களும்  கற்பனையான திரைக்கதைகளே. இரண்டிலும் உண்மை மிகக்குறைவு.   நூறு வருஷங்களுக்கும் மேலாக  ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியது  கிறிஸ்தோபர் மார்லோ, இல்லை  எட்வர்ட் வெரே, அவருமில்லை வில்லியம் ஸ்டேன்லி, மேரி சிட்னி ஹேபர்ட், ரோஜர் மேனர்ஸ் என பல எழுத்தாளர்களின் பெயர்கள் இச்சர்ச்சையில் இடம் பெற்று வருகின்றன,

ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்த ஒரே ஆவணப்பதிவு தேவாலயத்தில் உள்ள பதிவேடுகள் மட்டுமே. அந்த பதிவேட்டில் அவரது திருமண நாள் மற்றும் அவரது மகன் இறந்து போன தேதி மற்றும் அவர் இறந்து போன தேதி மட்டுமே பதிவாகி உள்ளது. அவரது நாடகங்களின் கையெழுத்துப்பிரதிகள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு ஆண்டுகள் கழித்தே அவரது நாடகங்கள் அச்சில் வெளியாகின. அதுவும் அவரது கால நாடக நடிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த வரிகளை தொகுத்து உருவாக்கப்பட்டதே.

ஷேக்ஸ்பியரின் உருவமும் கூட பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் வரையப்பட்டதே அன்றி அது துல்லியமானதில்லை. எல்லா சித்திரங்களிலும் ஷேக்ஸ்பியர் நடுத்தர வயதுக்காரராகவே சித்தரிக்கபடுகிறார்.

இதுவரை நான்கு விதமான ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன. ஒன்று அவரது மேடைநாடகத்தை அப்படியே திரைப்படமாக எடுப்பது. இரண்டாவது ஷேக்ஸ்பியரின் நாடகத்தை மையக்கதையாகக் கொண்டு பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து உருவாக்குவது (Shakespeare adaptations) மூன்றாவது   ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தொலைக்காட்சி வடிவங்கள். (Shakespeare TV Series ) நான்காவது ஷேக்ஸ்பியர் நாடகங்களை அனிமேஷன் திரைப்படமாக உருவாக்குவது (animated Shakespeare films). இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரும்பான்மை  ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் கால இட சூழல் மாறுபட்டிற்கு ஏற்ப ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தழுவி உருவாக்கபட்டவையே.

தொடர்ந்து இன்றுவரை ஷேக்ஸ்பியர் நாடகங்கள் படமாக்கப்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது அதன் அழுத்தமான, தனித்துவமான கதாபாத்திரங்கள். சிக்கலான கதைமுடிச்சு, எதிர்பாராத திருப்பம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள். சிறந்த வசனங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த பார்வையாகும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி திரைப்படத்தை எடுப்பது எளிதானதில்லை. ஆனால் வெற்றிகரமான ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் அதன் சிறந்த திரைக்கதையின் காரணமாகவே சிறப்பாக பேசப்பட்டன. திரைக்கு ஏற்ப ஷேக்ஸ்பியரை உருமாற்றும் போது கதாபாத்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு அவர்களின் பின்புலத்தையும் பண்பாட்டு சூழலையும், காலத்தையும் மட்டுமே முதன்மையாக மாற்றுகிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சவால் என்பதால் பிரபலமான திரைப்பட நடிகர்கள் பலரும் ஷேக்ஸ்பியர்  கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டார்கள். இதன் காரணமாகவே ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டன.

இங்கிலாந்தின் லாரன்ஸ் ஒலிவர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு மேடையிலும் திரையிலும் உயிர் கொடுத்த மகத்தான கலைஞன்.  லாரன்ஸ் ஒலிவர் நடித்து தயாரித்த ஹாம்லெட் 1948ல் வெளியானது. நாடகப்பிரதியிலிருந்து பாதியை வெட்டி எறிந்துவிட்டு தேவையான காட்சிகளை மட்டுமே திரைக்கதையாக உருவாக்கினார் ஒலிவர். இப்படம் ஆஸ்கார் விருது பெற்றதுடன் சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு. இசை இயக்கம் என இன்று வரை ஒரு காவியமாகவே விளங்குகிறது.

ரஷ்ய இயக்குனரான கிரிகோரி கோஜின்செவ் (Grigori Kozintsev) இயக்கிய  ஹாம்லெட் மற்றும் கிங் லியர் இரண்டும் மகத்தான திரைப்படங்கள். 1964ல் கிரிகோரி இயக்கிய ஹாம்லெட் வெளியானது. போரிஸ் பாஸ்டர்நாக் மொழியாக்கம் செய்த நாடகப்பிரதியை மையமாகக் கொண்டு இதனை கிரிகோரி உருவாக்கினார். கேமிராக்கோணங்களும் நீண்ட காட்சிகளும் இப்படத்தின் சிறப்பம்சம்.  நவீன நாடகப்பாணியில் உருவான நடிப்பு, அரங்க அமைப்பு மற்றும் இசை இப்படத்தை வியக்க வைக்கிறது.

அகிரா குரசேவா ஷேக்ஸ்பியரின் மெக்பெத், கிங்லியர் ஆகிய இரண்டு நாடகங்களை படமாக்கியிருக்கிறார். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தழுவலாக இருந்தபோதிலும், இந்த திரைப்படங்கள் ஜப்பானின் சரித்திர நிகழ்வுகளோடு இசைந்து சொல்லப்பட்டதாக உருவாக்கபட்டுள்ளது.

மெக்பெத்திற்கான திரைக்கதையமைப்பில் மைய நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு அதில் ஜப்பானிய காலச்சார ஊடு இழைகளை பின்னியிருக்கிறார் குரசோவா.. குறிப்பாக மூன்று மாயக்காரிகள் தோன்றி மெக்பெத்திற்கு எதிர்காலம் பற்றிய ஆருடம் சொல்வதை முழுமையானதொரு ஜப்பானிய ஆவியுலக சடங்கின் தோற்றத்திலே மேற்கொண்டுள்ளார். இத்தோடு நோ நாடகத்தின் உடல் மொழியை படத்திற்கான வெளிப்பாட்டு முறையாகவும் கைக்கொண்டுள்ளார்.

கிங் லியர் நாடகத்தை பீட்டர் புரூக் இயக்கி ஆர்சன் வெல்ஸ் நடித்துள்ளார். தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட இப்படம் ஷேக்ஸ்பியரின் மூலப்பிரதியை அப்படியே கையாண்டுள்ளது. ஆனால் இதே கிங் லியர் நாடகத்தை 1987ல் கோடார்ட் பிரெஞ்சில் படமாக்கினார். நாடகத்தின் வரலாற்றுபின்புலத்தை நீக்கிவிட்டு சமகாலத்தில் உலவும் நகர மனிதராக லியரை அவர் உருவாக்கியுள்ளார். லியர் பேசும் வசனங்களும் அவரது செயல்களும் இன்றைய பிரெஞ்சு பிரஜைகளில் ஒருவரைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் பீட்டர் செல்லர்ஸ்.

ஆனால் இதே கிங் லியர் படத்தை ரான் என்ற பெயரில் அகிரா குரசேவா இயக்கிய போது லியரின் மூன்று மகள்களுக்கும் பதிலாக மூன்று மகன்களாக உருமாற்றிவிட்டார், ஜப்பானிய வரலாற்று பின்புலத்தில் நடைபெறுவதாகவும் திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தார்.

அது குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது எனக்கான ஷேக்ஸ்பியரை நான் உருவாக்குகிறேன்.  ஷேக்ஸ்பியரிலிருந்து ஒரு புதிய படைப்பை உருவாக்குவதே எனது விருப்பம். ஜப்பானிய வரலாற்றுடன் ஷேக்ஸ்பியரை இணைத்து எனக்கான திரைக்கதையை உருவாக்கி கொண்டேன் என்றார் குரசேவா.

அகிரா குரசேவாவின் ரான், த்ரோன் ஆப் பிளட் இரண்டு படங்களும் ஷேக்ஸ்பியரை எப்படி உருமாற்றிக் கொள்வது என்பதற்கான சிறந்த உதாரணங்கள்.

பிபிசியின் ஷேக்ஸ்பியர் தொலைக்காட்சி வரிசை இப்போது பாக்ஸ் வடிவில் டிவிடியாக வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக இவை திரையிட்டு காட்டப்படுகின்றன.  ஹாலிவுட்டில் குழந்தைகள் ரசித்து பார்க்கும்படியாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனிமேஷன் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

1982ல் குல்சார் இயக்கி சஞ்சீவ் குமார் நடித்த Angoor, The Comedy of Errors  நாடகத்தை மையமாக கொண்டது.  விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகர், அவர் ஒத்தெல்லோவை ஓம்காரா என்ற பெயரிலும், மெக்பத்தை மெக்பூல் என்ற பெயரிலும் ஹாம்லெட்டை ஹைதர் என்ற பெயரிலும் இந்திய சூழலுக்கு ஏற்ப படமாக்கியுள்ளார்.  இதுவன்றி 10 ml Love என்ற ஹிந்திபடம் A Midsummer Night's Dream நாடகத்தை தழுவியதே. ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட்டின் தழுவல் தான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ராம்-லீலா, இது போலவே மலையாளத்தில் ஜெயராஜ் இயக்கிய களியாட்டம், வி.கே. பிரகாஷ் இயக்கிய கர்மயோகி, கன்னடத்தில் என் எஸ் சங்கர் இயக்கிய Ulta Palta   போன்றவை ஷேக்ஸ்பியர்  நாடகங்களை மையமாக கொண்டதே.

தமிழில் கன்னியின் காதலி, மனோகரா, குணசுந்தரி, சொல்லு தம்பி சொல்லு போன்றவை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி உருவாக்கப்பட்டது என தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.

சிவாஜி ரத்ததிலகம் திரைப்படத்தில் ஒத்தெல்லோவாக நடித்திருப்பதும், எம்.ஜி.ஆர் ஹாம்லெட்டை தழுவி புதுமைபித்தன் என்ற திரைப்படத்தை உருவாக்கியதையும் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருந்து உருவான படங்களாக குறிப்பிடுகிறார்.

இதுவரை வெளியான ஷேக்ஸ்பியர் திரைப்படங்களில் சிறந்த படங்களாக நான் தேர்வு செய்பவை இவையே.

1) Lawrence Olivier - Hamlet. 2) Kurosawa -Throne of blood. 3)   Grigori Kozintsev - Hamlet  4) Orson Welles- Othello5) Derek Jarman - Tempest  6) Zeffirelli- Romeo and Juliet 7) Polanski- Macbeth 8) Trevor Nunn-Twelfth Night 9) Kenneth Branagh - Hamlet 10) Grigori Kozintsev -  King Lear.

மே, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com