ஷமிதாப் எப்படி ?

கேள்வி பதில்கள்
ஷமிதாப் எப்படி ?
Published on

கேள்வி: ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி தமிழ்நாட்டில் சாத்தியமாகும் காலம் வந்தே தீரவேண்டும் என்பது என் நினைப்பு. உங்கள் கருத்து?

-செந்தண்மை, சென்னை 110.

 பதில்: உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது.  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆசையும்.  ஆனால் வரும் ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஏனென்றால், ஆம் ஆத்மி போன்ற வட இந்தியக் கட்சிகளுக்குத் தமிழர்கள் ஆதரவு தருவார்கள் என்று சொல்ல முடியாது.  தமிழக வரலாற்றில் காங்கிரஸுக்கு மட்டுமே அந்த சலுகையைக் கொடுத்தார்கள் தமிழர்கள்.  அதுவும் காந்தி, காமராஜ் போன்ற மகத்தான தலைவர்களால் நிகழ்ந்தது.  (மொகலாயர்கள் கூட தென்னிந்தியா பக்கம் வரவில்லை.  வந்திருந்தால் சோழர்களிடம் தோற்றுப் போய் இந்திய வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கும்.)  முதலில் ஆம் ஆத்மி என்ற வார்த்தைகளே இங்கே புரியாது.  மேலும், அவர்களின் தொப்பி வித்தியாசமாகத் தெரிகிறது.  தமிழர் கலாச்சாரத்தில் தொப்பி கிடையாது.  இதையெல்லாம் மீறி ஆம் ஆத்மிக்குத் தமிழ்நாட்டில் காமராஜ், கக்கன் போன்ற தலைவர்கள் இருந்தால் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்கக் கூடும்.

கேள்வி: ஷமிதாப் படம் எப்படி?

கேஷவ் குமார்.

 எனக்கு பால்கியின் முதல் படமான சீனி கம் மிகவும் பிடித்தது.  ஏனென்றால், அதன் கதையோடு நம்மால் ஒன்றிக் கொள்ள முடிந்தது.  ஆனால் அவருடைய அடுத்த படமான “பா” ஒரு கேலிக் கூத்து (Gimmick).  இப்போதைய ஷமிதாப் பால்கியின்  கேலிக் கூத்தின் உச்சம்.  இதை விட மோசமாக அமிதாப் பச்சனை அவமதிக்க முடியாது.  என் வருத்தமும் ஆச்சரியமும் என்னவென்றால், இந்தப் படத்துக்குக் கிடைத்த ஆரவாரமான வரவேற்பு.  மக்களிடையே மொண்ணையான ரசனை மேலோங்கி விட்டதையே இது காட்டுகிறது.  எல்லோரும் டிவி சீரியல் பார்த்துப் பார்த்து அதையே சினிமாவிலும் எதிர்பார்க்கிறார்கள்.  பொதுமக்களின் அசட்டு சீரியல் ரசனைக்கு பால்கியும் ஷமிதாப்-இல் நல்ல தீனி போட்டிருக்கிறார்.  இவ்வளவுக்கும் நான் அமிதாபின் தீவிர விசிறி.  இந்தியாவிலேயே அவர் அளவுக்கு நடிக்க ஆளே இல்லை என்று எழுதியிருக்கிறேன்.  ஆனால் தரமான சினிமா என்ற ஒன்று இருக்கிறதே?  ஷமிதாப்- டிவி சீரியலில் அமிதாபைப் பார்ப்பது போல் இருக்கிறது. 

 தனுஷும் நானா படேகர், அதுல் குல்கர்னியைப் போன்ற ஒரு வலுவான நடிகர்.  இரண்டு பேரையுமே ஷமிதாப்-இல் கோமாளிகளைப் போல் ஆக்கி விட்டார் பால்கி.  அமிதாபின் உச்ச பட்ச நடிப்புக்கு Last Lear பார்க்க வேண்டும்.  படம் என்றால் அது படம். 

 தென்னிந்தியாவில் ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்களுக்குக் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம், பியர் அபிஷேகம் செய்வது வழக்கம்.  ஷமிதாப் அதற்கு எந்த விதத்திலும் சளைத்ததாக இல்லை.  தமிழர்களின் சினிமா ரசனைக்கு ஏற்கனவே பாலிவுட்டில் ’நல்ல’ பெயர்.  ஷமிதாப் அதை இன்னும் வலுப்படுத்துகிறது.    அமிதாப், இளையராஜா ரசிகரான பால்கி இப்படியே தமிழ் சினிமா ரசனையிலிருந்து இம்மியளவு கூட வெளியே வராமால் ரசிக மனோபாவத்திலேயே இரண்டு பேரையும் ரவுண்டு கட்டி அடித்தால் அவரிடமிருந்து நல்ல படம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. 

 தமிழ் சினிமாவிலிருந்து நடிகைகள் பாலிவுட் சென்றிருக்கிறார்கள்.  ஆனால் நடிகர்களால் முடியவில்லை.  கமல், ரஜினியாலும் கூட சாத்தியப்படவில்லை.  ஆனால் இசையிலும் இயக்கத்திலும் சாத்தியமாயிற்று.  இந்த நிலையில் தனுஷ் இந்தி சினிமாவில் நுழைவதை இந்தி மற்றும் தமிழ் சினிமா உலகமே சற்று ஆர்வத்துடன் தான் கவனித்தது.  ஆனால் அவருடைய முதல் இந்திப் படம் ராஞ்சனாவும் சரி, இப்போதைய ஷமிதாபும் சரி, அவரை இந்தியில் நிலைக்க வைப்பதற்கான படங்களாக இல்லை.   இது போல் இன்னும் இரண்டு படங்கள் பண்ணலாம்.  அவ்வளவுதான். 

 வட இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஏன் தென்னிந்திய ஆண்கள் பிடிக்கவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  மீசை இருப்பதால் ராவணன் வாரிசாகப் பார்க்கிறார்களோ என்னவோ! அப்படிப் பார்த்தால் அது இனவாதம்தான். 

கேள்வி: நீங்கள் அஞ்சலிக் கட்டுரை எழுத விரும்பும் நபர் யார்?- குமார் ஜி, குவைத்.

 பதில்: ராஸ லீலா, புதிய எக்ஸைல் போன்ற மகத்தான நாவல்களை எழுதியவர்.

கேள்வி: பிரபல எழுத்தாளர்களில் பலர் சினிமாவில் எழுதி வளம் அடைகிறார்கள்.  நீங்கள் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லையே, ஏன்?- கே. கார்த்திக், மதுரை.

பதில்:  இந்தக் கேள்வியைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன்.  தமிழ்நாடு எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில்லை என்று பல காலமாக புலம்பிக் கொண்டிருக்கிறேன்.  அதன் விளைவுதான் எழுத்தாளர்கள் சினிமாவில் எழுதுவது.  சமீபத்தில் நான் சென்னை புத்தக விழாவில் ஐம்பது புத்தகங்கள் வாங்கினேன்.  நண்பர்கள் வாங்கிக் கொடுத்தார்கள்.  நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை.  ஆனால் என் வீட்டில் புதிய புத்தகங்களை வைக்க ஒரு இஞ்ச் கூட இடம் இல்லை.  என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவு செய்தேன்.  என்னிடம் உள்ள பழைய புத்தகங்களை என் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு கொடுத்து விட்டேன்.

எத்தனையோ விலை மதிக்க முடியாத புத்தகங்கள்.  லூ ஷுன் என்ற மிகப் புகழ் பெற்ற சீன எழுத்தாளர்.  அவருடைய கதைத் தொகுதிகள் நான்கு.  1980-இல் 800 ரூபாய்க்கு வாங்கினேன்.  அப்போதைய என் மாத ஊதியம் 600 ரூ.  கடன் வாங்கித்தான் வாங்கினேன்.  அந்த நான்கு தொகுதிகளும் இன்று எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.

அதேபோல் சா. கந்தசாமி எழுதி க்ரியா பதிப்பித்த தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு.  1974-இல் வாங்கினேன்.  விலை எட்டு ரூபாய்.  அதை 40 ஆண்டுகளாக சுமந்து திரிகிறேன்.  இப்போது இந்த நூல் சா. கந்தசாமியிடமும் க்ரியா ராமகிருஷ்ணனிடமுமே இருக்குமா என்று தெரியவில்லை.  ஏன் ”சுமந்து” என்று சொல்கிறேன் என்றால், இது போல் ஆயிரக் கணக்கான புத்தகங்கள்.  இந்த 40 ஆண்டுகளில் 20 வீடுகளும் மூன்று ஊர்களும் (மூன்று மாநிலங்களில்) மாறி விட்டேன்.  அத்தனை இடங்களுக்கும் இந்த ஆயிரக் கணக்கான புத்தகங்களைச் சுமந்தேன்.  இப்போது நண்பர்களிடம் கொடுக்க முடிவு செய்து விட்டேன்.

ஒரு எழுத்தாளன் என்றால் அவனுடைய நூலகம் வைப்பதற்கு என்று தனியாக ஆயிரம் ரெண்டாயிரம் சதுர அடியில் தனி இடம் தேவை.  இங்கே அந்த வசதியெல்லாம் சினிமாத் துறையினருக்கு மட்டுமே கிடைக்கிறது.  எழுத்தாளன் பிச்சைக்காரன்.  இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சினிமாவில் எழுத வேண்டும்.  சினிமாவில் எழுதுவது அந்திமழையில் கேள்வி பதில் எழுதுவது போல் அல்ல.  பாலாவின் நான் கடவுளுக்கு நான் வசனம் எழுதியிருந்தால் பரதேசி படத்துக்கு நான் எழுதிய விமர்சனத்தை எழுதியிருக்க முடியுமா?  எந்திரனுக்கு வசனம் எழுதியிருந்தால் ஐ ஒரு குப்பை என்று எழுத முடியுமா?  வசனம் எழுதுவது என்பது என்னை விற்பதற்குச் சமம்.  என் சுதந்திரம் சில பல லட்சங்களுக்காக அடகு வைக்கக் கூடியதல்ல.  என் பிராணனே எழுத்து தான் என்கிற போது பணம் வெறும் தூசு.

(வாரந்தோறும் www.andhimazhai.com-ல் அறம் பொருள் இன்பம் என்ற பெயரில் சாரு நிவேதிதா எழுதும் கேள்வி பதில் தொடரில் இருந்து)

மார்ச், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com