சிரியாவில் தொடங்கிய அரபு வசந்தம் இப்போது அங்கு இன, மதரீதியான உள்நாட்டுப் போராக மாறி சுமார் ஒரு லட்சம் பேரைப் பலிகொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த மனித அவலம், கிட்டத்தட்ட இலங்கையின் கடைசிக் கட்ட போருடன் ஒப்பிடக் கூடியது என்று பல விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் ஒப்பீடு:
அப்பா செத்துப்போனதும் அவர் வகித்த சிரியாவின் அதிபர் பதவிக்கு தன் 34-ஆம் வயதில் வந்தவர்தான் இப்போதைய சிரிய அதிபர் பஷார் அல் அசாத். அதிபர் பதவிக்கு வர குறைந்தது 40 வயது ஆகியிருக்க வேண்டும் என்கிற விதிமுறையை அரசியல் அமைப்பில் மாற்றித் தான் அவர் வர முடிந்தது. அவர் ஷியா முஸ்லிம். அவரது சகோதரர்களும் உறவினர்களும் ராணுவத்திலும் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் சன்னி பிரிவினர். இது அல்லாமல் குர்து இனமக்களும் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர். அவர்களின் விடுதலைப் போராட்டம் ஏற்கெனவே ஒடுக்கப்பட்டுவிட்டது.
இலங்கையில்: ராஜபக்சேவும் அவரது தம்பிகளும் நடத்தும் ஆட்சி. தேர்தல் நடத்தப்பட்டு அதில் ராஜபக்சே வெல்வதுதான் வித்தியாசம். பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள் அரசு சிறுபான்மையினரான தமிழர்களை ஒடுக்குகின்றனர்.
ந்த போரின் விலை மிகக் கொடூரமானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 90,000- 1,00,000 பேர் செத்துப் போய்விட்டார்கள். நாட்டை விட்டு சுற்றிலும் உள்ள ஜோர்டான், லெபனான், ஈராக் போன்ற நாடுகளுக்கு அகதிகளாக ஓடி தஞ்சம் பிழைத்திருப்பவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? ஒன்றரைக் கோடிப் பேர்!
இலங்கையில்: கடைசிக்கட்ட ஈழப்போரில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப் பட்டனர். கடந்த 25 ஆண்டுகளில் தமிழர்கள் பத்துலட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கும் உலகின் பிறநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுவிட்டனர். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.
சிரிய அரசு ஏராளமான வேதியல் ஆயுதங்களை வைத்திருக்கிறது. அவற்றைப் போராடும் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தியிருக்கிறது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள கடைசி கட்ட ஆயுதமாக அதைத் தான் பயன்படுத்தும் என்று சொல்லப் படுகிறது. ஆனால் வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. கொத்துக் குண்டுகளையும் சில இடங்களில் சிரியா பயன்படுத்தி உள்ளது.
இலங்கையில்: தமிழ் மக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டது இலங்கை. அத்துடன் வேதி ஆயுதங்களும் பயன்படுத்தப் பட்டன. ஆனால் அமெரிக்காவோ, பிற நாடுகளோ இதைக் கண்டிக்கவில்லை.
சிரியாவில் அவ்வப்போது உள்நாட்டு எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்து அடக்கப்படுவது சகஜம். சுமார் ஐம்பது ஆண்டுகளாக அங்கு எமர்ஜென்சி சட்டம் அமலிலுள்ளது. 2010-ல் அரபு உலகில் சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் எழுச்சி அலை வீசியது. பாடம் செய்யப்பட்ட சிங்கத் தலை வழியாக கை கழுவும் குழாயைப் பதிக்கும் அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த துனிசிய நாட்டு அதிபரை மக்கள் ஆட்சியிலிருந்து இறக்கிய சம்பவம் நிகழ்ந்தது. சிரியாவிலும் 2011 மார்ச் 15-ல் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. ஆனால் அசாத்தின் ராணுவம் போராட்டக்காரர்களை எதிர்கொண்டது. அமைதியான மக்கள் போராட்டம் மெல்ல ஆயுதக் குழுக்களின் போராட்டமாக மாறி, இன்று சிரியா முழுக்க உள்நாட்டுப் போர். அரசின் ராணுவத்தை எதிர்த்து முன்னாள் ராணுவ இந்நாள் புரட்சிக்காரர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்ட பொதுமக்களும் போராடுகின்றனர். பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கியை ராணுவம் தூக்கியதை எதிர்த்து ராணுவத்திலிருந்து அதிகாரிகளும் வீரர்களும் விலகிச் சென்று எதிர்முகாமில் போராடுகின்றனர். மக்களுக்கு எதிராக சுட மறுத்த ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு சுடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இலங்கையில்: ஆரம்பத்தில் காந்தியவழியில் இருந்த தமிழர் போராட்டம் மெல்ல ஆயுதப் போராட்டமாக மாறியது.
சிங்களத் தரப்பில் தமிழர்களுக்கு ஆதரவாகப்பேசிய குரல்கள் அல்லது தவறுகளைச் சுட்டிக் காட்டிய குரல்வளைகள் நெரிக்கப்பட்டன.
சிரியாவில் போராடும் ஆயுதக் குழுக்களில் ஒரு முக்கியக் குழுவைத் தேர்வு செய்து அதற்கு ஆயுதங்களைக் கொடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த சண்டையில் சிரிய அதிபர் அசாத்துக்கு துணை நிற்பது வடக்குப் பக்கம் இருக்கும் ஈரானும் லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கமுமே. ரஷ்யாவும் அவ்வப்போது அசாத்துக்கு ஆதரவாகப் பேசிவருகிறது. இந்த ஆயுதப் போராட்டக் குழுக்கள் மெல்ல இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மடியில் போய் விழ ஆரம்பித்துவிட்டன. அதுவும் மேலை நாடுகளுக்கு சிக்கல். எனினும் சி.ஐ.ஏ ஆட்கள் துருக்கி- சிரிய எல்லையில் எதிர்ப்புக் குழுக்களுக்கு பயிற்சி அளித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில்: இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கியது. ஆனால் பிரதமர் ராஜிவ் படுகொலைக்குப் பின்னர் இவை நிறுத்தப்பட்டன. இலங்கைக்கு கடைசிக்கட்ட போரின் போது இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்தன.
இந்த பிரச்னையில் ஐ.நா.சபையும் கோபி அன்னான் முன்முயற்சியில் தலையிட்டு சமாதானப் பேச்சு நடத்தியது. ஆனால் ஒத்துவரவில்லை.
இலங்கையில்: இந்தியா நடத்திய தலையீடு, நார்வே நடத்திய பேச்சுவார்த்தை. எதிலும் பலன் இல்லை.
அரபுநாடுகள் தங்கள் கூட்டமைப்பில் இருந்து அசாத்தை அவர் மக்கள் மீது மேற்கொண்ட ஒடுக்குமுறையை அடுத்து நீக்கிவிட்டன. அசாத்தின் ஆதரவாளராக ஒருகாலத்தில் இருந்த துருக்கி, இப்போது போராளிகளுக்கு தஞ்சம் கொடுத்துள்ளது. துருக்கிக்கும் சிரியாவுக்கும் இதனால் எல்லையில் மோதல் ஏற்பட்டு நேட்டோவின் பாட்ரியாட் ஏவுகணைகள் துருக்கியின் எல்லையில் நிறுத்தப் பட்டுள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடான ஜோர்டானில் சிரிய போராளிகளுக்கு அமெரிக்கா பயிற்சி தருகிறது. அத்துடன் ஜோர்டான் எல்லையை ஒட்டிய சிரியப் பகுதியை விமானம் பறக்கக் கூடாத பகுதியாக அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில்: ஐநா மனித உரிமைக் கவுனிசிலில் அமெரிக்கா கொண்டுவந்த ‘சொத்தை’ தீர்மானம், இந்தியா உட்பட பல நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப் பட்டது. ஏற்கெனவே இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவான 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்தியா வற்புறுத்துகிறது. விமானம் பறக்கக் கூடாத பகுதி என்ற அறிவிப்பு இலங்கைப் போரின் கடைசிக் கட்ட ‘நோ பையர் சோனை” ஞாபகப்படுத்துகிறது.
ஜூலை, 2013.