மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். ரயிலில் செல்லும்போது மூவர் உட்காரும் இருக்கையில் குடும்பத்துடன் உட்காரும்போது வேறு யாருக்கும் இடம் தரமாட்டோம். நன்றாக அகட்டி அமர்ந்துகொள்வோம். அதே சமயம், நமக்குத் தெரிந்த நண்பர் யாராவது வந்தால் நம் விதிகளைத் தளர்த்தி அவரை அழைத்து அமர வைத்துக்கொள்வோம். இவ்விரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மனதில் செய்யவேண்டும் என்று தோன்றுவதுதான். மனம் ஒன்றி செய்தால் எல்லாவற்றிலும் ஒரு முழுமை இருக்கும்.
“உலகில் மிகவேகமாகப் பயணம் செய்யக்கூடியது எது?”
மகாபாரதத்தில் வனபர்வத்தில் நச்சுப்பொய்கையைக் காவல்காக்கும் யட்சன் கேட்கிறான். தண்ணீர் எடுத்துவரச் சென்ற தம்பியர் நால்வரும் இறந்துகிடக்க, பெரும் மன அவஸ்தையுடன் நிற்கின்றான் தருமன். கேள்விகளுக்குப் பதில் சொன்னால்தான் தண்ணீர் அருந்த முடியும். தம்பிகளை மீட்க முடியும்.
யட்சனுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் தருமன் சொல்கிறான்.
‘’உலகில் மிக வேகமாகப் பயணம் செய்யக்கூடியது மனிதனின் மனம்” .
மனிதனின் மனம் ஓரிடத்துக்கு வேகமாகப் பயணம் செய்வது மட்டுல்ல; எவ்வளவு வேகமாகப் போகிறதோ அதே வேகத்தில் திரும்பியும் வந்துவிடும்.
அது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான் நம் திறன். மனசு கண்டதையும் நினைத்துக்கொண்டிருக்கும். கண்டதையும் சொல்லும். ஆனால் அதையெல்லாம் செய்யமுடியாது. புத்தி அதைக் கட்டுப்படுத்தும்.
கடுமையாக நடந்துகொள்ளும் உங்கள் முதலாளியைப் பார்த்தால் மனசு என்ன சொல்லும்?
நாலு குத்துவிட்டால் எப்படி இருக்கும் என்று சொல்லும்.
ஆனால் புத்தி என்ன சொல்லும்?
டேய் வேணாம்டா. வேலை போயிடும் ஜாக்கிரதை.
நாம் புத்தி என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்டு நடக்கவேண்டும்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
மனம் விரும்பி ஒருவர் சமைக்கையில் உணவும் ருசிக்கும் என்பது உங்களுக்கே தெரியும். அலுவலகத்தில் மகிழ்ச்சியாக ஒன்று நடக்கிறது. வீட்டுக்குப்போகிறீர்கள். மனைவி வெறும் ரசம்தான் வைத்துள்ளார். மகிழ்வுடன் உண்பீர்கள். அலுவலகத்தில் பிரச்னை. வீட்டில் ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவே வைத்திருந்தாலும் சாப்பிடப்பிடிக்காது. மனசு அவ்வளவு முக்கியமானது. அது என்ன நிலையில் இருக்கிறதோ அதையே வெளியுலகிலும் பிரதிபலிக்கும். ஆகவே அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.
இதெல்லாம் உயிருடன் இருக்கும்போது. இறந்துவிட்டால்?
எங்கள் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அந்த இறந்துபோன நோயாளிகளின் மனம் அல்ல. அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவர்களின் உடல் உறுப்புகள் பிறருக்குத் தானமாக அளிக்கப்படும். மனைவியோ, கணவரோ, பிள்ளைகளோ ஒப்புதல் அளிக்கவேண்டும். இதற்கு பெரிய மனது தேவைப்படுகிறது; செண்டிமெண்ட் மிகமுக்கியமான பங்கு வகிக்கிறது.
ஒரே வாரத்தில் மூன்று நோயாளிகளின் உடலுறுப்புகள் தானம் வழங்கப்படுகின்றன என்பதை நான் அபூர்வமானதாகப் பார்க்கிறேன். இதன் மூலம் பதினாறு நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர்.
இந்த தானத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு நிஜமாகவே நல்ல மனது தேவைப்படுகிறது; நல்லெண்ணம் தேவைப்படுகிறது. அத்துடன் அதைச் செய்வதற்கான மனவலிமையும் வேண்டும்.
இன்னொரு விஷயமும் உண்டு. உதவி செய்யும் மனம். இன்னொருவருக்கு உதவி செய்ய காசு பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆறுதலாக நான்கு சொற்கள் கூறலாமே? அதுவும் பெரிய உதவியாக அமையும். இதனால்தான், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று பெரியவர்கள் சொன்னார்கள்.
அக்டோபர், 2016.