வெற்றியின் சுவை இனிப்பு

வெற்றியின் சுவை இனிப்பு
Published on

எண்பத்திரண்டு வருட தமிழ் சினிமாவில் 5283 நேரடி தமிழ் படங்கள் 2012 வரை வெளியாகியுள்ளன. அவற்றில் எண்ணற்ற திரைப்படங்கள் 100 நாட்களையும் வெள்ளிவிழாக்களையும் கொண்டாடியுள்ளன. மூன்று தீபாவளி பண்டிகைகளைக் கொண்டாடிய, 1944ல் வெளிவந்த ஹரிதாஸின் வெற்றி இன்று வரை அனைவராலும் பேசப்படுகிறது.

2005-ல் வெளிவந்து 880 நாட்கள் ஒடிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி அதிக நாட்கள் ஓடிய படம் என்ற அடிப்படையில் ஹரிதாசையும் விஞ்சியது என்றாலும் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே திரைப்படம் என்ற பெருமையை ஹரிதாஸ் இன்று வரை தக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஓர் ஆண்டு ஓடிய முதல் திரைப்படமாக எம்.கே. தியாகராஜ பாகவதரின் சிந்தாமணி 1938-ல் அமைந்தது. அப்படத்தின் வெற்றி சிந்தாமணி என்ற திரையரங்கம் மதுரையில் தோன்றக் காரணமாக இருந்தது. இத்திரைப்படத்திற்குப்பின் மேலும் இரண்டு திரைப்படங்களை ஓர் ஆண்டு ஓடிய திரைப்படங்களாகத் தந்தார். அவை அம்பிகாபதி (1938) மற்றும் தீருநீலகண்டர் (1939) ஆகும்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி நடிப்பில் ஏ.வி.மெய்யப்பன் இயக்கித்தில் வெளிவந்த ஏ.வி.எம்மின் ஸ்ரீ வள்ளி என்ற படம் ஒரு வருடம் ஓடி சாதனை செய்தது. இதன்பின் ஒரு திரைப்படம் ஓர் ஆண்டு ஓடுவது அரிதாகி ஒரு சில படங்களே அத்தகைய வெற்றியை அடைந்தன. 1979-ல் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், 1981-ல் மகேந்திரனின் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் டி.ராஜேந்தரின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த ஒரு தலை ராகம், இளையராஜாவின் அற்புதமான இசையினால் 1983-ல் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த ஆர். சுந்தராஜனின் பயணங்கள் முடிவதில்லை, கங்கை அமரனின் எழுத்து இயக்கத்தில் இன்னும் ஒரு தில்லானா மோகனாம்பாளாக 1990-ல் வெளி வந்து கலக்கிய கரகாட்டக்காரன் மற்றும் 17 ஆண்டுகளுக்குப் பின் 2007-ல் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற அமீரின் பருத்தி வீரன் ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவையாவுமே ஒரு வருடம் ஓடி தமிழ் சினிமாவில் சாதனை படைத்த திரைப்படங்களாகும்.

அடுத்தக்கட்ட வெற்றிப் படங்களாக தமிழ் சினிமாவை அலசும் போது, 200 நாட்கள் ஒடி சாதனை படைத்த ஐம்பது திரைப்படங்களை குறிப்பிடலாம். அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி(1952), சம்பூர்ண ராமாயணம்(1958), சிவாஜியின் பாகப்பிரிவினை(1960) மற்றும் வசந்த மாளிகை(1973), எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்(1974), இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி (1976), தேவரின் ஆட்டுக்கார அலமேலு (1978), சிவாஜியின் 200வது திரைப்படமான திரிசூலம்(1979), கே.பாக்யராஜின் கன்னிப்பருவத்திலே (1980), பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் (1980), பாரதி வாசுவின் பாலைவனச்சோலை (1981), துரையின் கிளிஞ்சல்கள் (1982), கங்கை அமரனின் கோழி கூவுது (1983), மணிவண்ணனின் கோபுரங்கள் சாய்வதில்லை (1983), பாரதிராஜாவின் மண்வாசனை(1983), கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே (1983), தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் (1984), கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு (1984), தமிழில் முதல் 3டி படமான மை டியர் குட்டி சாத்தான் (1986), கே.பாலசந்தரின் சிந்துபைரவி (1986), ஸ்ரீதரின் தென்றலே என்னை தொடு (1986), ஆர்.பாண்டியராஜனின் ஆண்பாவம் (1986), மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் (1988), டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி (1989), பி.ஆர்.தேவராஜனின் செந்தூரப்பூவே (1989), கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் (1989), ஆர்.பார்த்திபனின் புதிய பாதை (1989), தெலுங்கு மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ராம்கோபால்வர்மாவின் உதயம் (1990), வசந்தின் கேளடி கண்மணி (1991), பி.வாசுவின் சின்ன தம்பி (1991), விஜய்காந்தின் கேப்டன் பிரபாகரன் (1991), ஆர்.வி.உதயகுமாரின் கிழக்குவாசல்(1992), ஷோபா சந்திரசேகரின் நண்பர்கள் (1991), ரஜினிகாந்தின் மன்னன் (1992), சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் (1993), ரஜினிகாந்தின் பாட்ஷா (1995), மணி ரத்னத்தின் பம்பாய் (1995), வசந்தின் ஆசை (1996), விக்ரமனின் பூவே உனக்காக (1996), சுந்தர் சி. யின் உள்ளத்தை அள்ளித் தா (1996), ராஜீவ் மேனனின் மின்சார கனவு (1997), அகத்தியனின் காதல் கோட்டை, ஆர்.பாலுவின் காலமெல்லாம் காதல் வாழ்க (1997), ரஜினிகாந்தின் அருணாசலம் (1997), ஃபாசிலின் காதலுக்கு மரியாதை (1998), விக்ரமனின்  உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998), ரஜினிகாந்தின் படையப்பா (1999) ஆகிய திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.

இது தவிர 100 திரைப்படங்கள், வெள்ளிவிழா அதாவது 175 நாட்கள் ஒடி வெற்றி கண்டவை. அவற்றுள் குறிப்பிட்டு சொல்லும்படியானவை: 1950ல் வெளி வந்த ஏழை படும் பாடு, 1954ல் வெளிவந்த கே.பி.சுந்தராம்பாள் நடித்த ஜெமினியின் ஓளவையார், சிவாஜியின் சரித்திரம் படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் (1959), ஒரே வருடத்தில் மூன்று வெள்ளிவிழா திரைப்படங்களாக 1961-ல் சிவாஜியின் பாசமலர், இரும்புத்திரை மற்றும் பாவமன்னிப்பு அமைந்தது. 1964ல் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை வெள்ளி விழா கண்டு நகைச்சுவைப் படங்களில் சாதனை படைத்தது. 1965-ல் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை மிகப் பெரிய வெற்றி கண்டு இரட்டை வேடப் படங்களுக்கு முன் உதாரணமாக அமைந்தது. 1966ல் சிவாஜியின் திருவிளையாடல், 1968ல் டி.ஆர்.ராமண்ணாவின் நான், 1969ல்  எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் மற்றும் சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள்  ஆகியவை வெள்ளிவிழா கண்டன. 1970ல் எம்.ஜி.ஆரின் மாட்டுக்கார வேலன், 1971ல் சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ஆதிபரா சக்தி, 1974ல் சிவாஜியின் தங்கப்பதக்கம், 1975ல் எம்.ஜி.ஆரின் உரிமைக்குரல், 1977ல் ஏ.சி.திருலோகசந்தரின் பத்ரகாளி, பாரதிராஜாவின் முதல்படமான 16 வயதினிலே, 1978ல் ஸ்ரீதரின் இளமை ஊஞ்சல் ஆடுகிறது, சிவாஜியின் தியாகம், 1979ல் பாரதிராஜா-கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள், ரஜினிகாந்தின் பிரியா, ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஆகியவை வெள்ளிவிழா கண்டன. 1980ல் மகேந்திரனின் உதிரிப்பூக்களும் ரஜினிகாந்தின் பில்லாவும் வெள்ளிவிழா கண்டன. 1981ல் கோனா வெங்கட்டின் அவன்,அவள்,அது , டி.ராஜேந்தரின் ரயில் பயணங்களில், கமல்ஹாசனின் மீண்டும் கோகிலா, கே.பாக்யராஜின் மௌன கீதங்கள் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தன. 1982ல் கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள், 1983ல் டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா, கமல்ஹாசனின் சகலகலா வல்லவன் வெள்ளிவிழா தாண்டியும் ஓடியவை. 1984ல் சுஜாதாவின் விதி, 1985ல் பாரதிராஜா-கமல்ஹாசனின் ஒரு கைதியின் டைரி, 1986ல் பாரதிராஜா-சிவாஜியின் முதல் மரியாதை, விஜய்காந்தின் அம்மன் கோவில் கிழக்காலே, ரஜினியின் படிக்காதவன், ஃபாசிலின் பூவே பூச்சூட வா வெள்ளிவிழா சாதனை படைத்தன. 1987ல் மணி ரத்னத்தின் மௌன ராகம், விசுவின் சம்சாரம் அது மின்சாரம் வெள்ளி விழா கண்டன.1988ல் விஜய்காந்தின் பூந்தோட்ட காவல்காரன், மணி ரத்னம் - கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் மனிதன் சாதனை படைத்தன. 1989ல் கே.பாக்யராஜின் இது நம்ம ஆளு, ராஜ சேகர் - ஆர்.பாண்டியராஜின் பாட்டி சொல் லைத் தட்டாதே, 1990ல் கே.பாலசந்தரின் புது புது அர்த்தங்கள், தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட டாக்டர் ராஜசேகரின் இது தாண்டா போலீஸ், விக்ரமனின் புது வசந்தம், ஆர்.கே.செல்வமணி-விஜய்காந்த் கூட்டணியின் புலன் விசாரனை வெற்றி கண்டன. முப்பது வருடங்களுக்குப் பிறகு ஒரே வருடத்தில் மூன்று வெள்ளிவிழா திரைப்படங்களாக ராஜா சின்ன ரோஜா, பணக்காரன் மற்றும் மாப்பிள்ளை படங்களை ரஜினிகாந்த் அளித்தார். 1991ல் ரஜினிகாந்தின் தர்மதுரை, ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே, கமல்ஹாசனின் மைக்கேல் மதன காம ராஜன், தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட விஜய சாந்தியின் வைஜெயந்தி ஜபிஎஸ் வெள்ளிவிழா கண்டன. 1992ல் கதிரின் இதயம், ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி, மணி ரத்னம் - ரஜினியின் தளபதி, ரஜினியின் அண்ணாமலை, கே.பாலசந்தரின் வானமே எல்லை வெள்ளி விழா கண்ட படங்கள். 1993ல் கமல்ஹாசன்-சிவாஜியின் தேவர் மகன், ரஜினிகாந்தின் எஜமான்; மணி ரத்னத்தின் ரோஜா, ராஜ்கிரணின் அரண்மனை கிளி. 1994ல் இயக்குநர் ஷங்கர் அறிமுகமான ஜென்டில்மேன், பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே, சிங்கீதம் ஸ்ரீநிவாஸராவின் மகளிர் மட்டும், மணிவண்ணன்-சத்யராஜ் கூட்டணியின் அமைதிப்படை வெள்ளிவிழா கடந்தவை. இப்படி நீண்டு செல்லும் இந்த பட்டியலில்  2010ல் ஷங்கர் -ரஜினிகாந்த் கூட்டணியின் எந்திரன்  படமும் வெள்ளிவிழா கண்டு கடைசியாகச் சாதனைப் படைத்தது.  இதற்குப் பிறகு தமிழில் வெள்ளிவிழா காணும் படங்கள் அரிதாகிப்  போனது.

2010 முதல் எத்தனை நாட்கள் ஒரு திரைப்படம் ஒடுகிறது என்கின்ற இலக்கணம் மாறி எவ்வளவு தொகை ஒரு படம் வசூல் செய்கிறது என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திரைப்படங்களின் வினியோக முறை ஆரம்பமானது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 100 திரையரங்குகளில் ஒரு புதிய படம் வெளியாகும் நிலைமாறி, 250 முதல் 400 திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதனால் அனைத்து நகரங்களிலும் உடனே ஒரு புதிய திரைப்படத்தை மக்கள் காணும் வாய்ப்பு ஏற்பட்டு, அதிக நாட்கள் ஒரு படம் ஓடும் வாய்ப்பைக் குறைத்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் தமிழில் அதிகபட்சம் வருடத்தில் 80 முதல் 90 படங்கள் வெளியாகும் நிலைமாறி தற்போது 160 திரைப்படங்கள் வெளியாகும் நிலை ஏற்பட்டு உள்ளதால், ஒரே வாரத்தில் ஒரு திரைப்படம் பழைய திரைப்படமாகும் என்ற நிலை வந்து விட்டது. இத்துடன் இணைந்து திருட்டு விசிடிக்களும், இணைய தளங்கள் மூலமும் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக ஒளிபரப்பப்படுவதும் ஒரு புதிய திரைப்படத்தை அதிக நாட்கள் திரையரங்குகளில் திரையிடப்படும் வாய்ப்பைக் குறைத்துவிட்டன.

இனி ஒரு படம் எத்தனை நாள் ஓடியது என்ற கணக்கைவிட எவ்வளவு வசூலித்தது என்கிற கணக்கே முக்கியம் என்கிற வகையில் தமிழ் சினிமா மாற்றம் கண்டுள்ளது.

(இந்த கட்டுரையில் உள்ளவை எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அவர் சார்ந்துள்ள நிறுவனத்தின் கருத்தல்ல).

ஏப்ரல், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com