வெறுங்கையால் முழம் போடல்

Published on

நான் சிக்ஸ்த்சென்ஸில் பதிப்பித்த முதல் நூல் ஏ4 அளவில் 348 பக்கத்தில் அதிக விளக்கப்படங்களுடன் ஏராளமான செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவந்தது. அப்போது 50 ரூபாயிலிருந்து அதிக பட்சமாக 125 ரூபாய்க்குள்தான் இண்டர்நெட் புத்தகங்கள் வந்திருந்தன. எங்கள் பதிப்பின் அளவும் உள்ள டக்கமும், உருவாக்கமும் நன்றாக இருந்ததால் 13 நாட்களில் முதல் பதிப்பை விற்றோம். நான் இதில் சில முக்கியமான முடிவுகள் எடுத்தேன்.

புத்தக அளவு பெரிதாக இருக்க வேண்டும்.

பளிச்சென்று கையில் எடுக்கத் தூண்டுவதாக அட்டை இருக்க வேண்டும்.

விலை ஞாபகத்தில் நிற்க வேண்டும்.

லாபமே இல்லாவிட்டாலும் குறைந்த நாளில் விற்று கடனை அடைத்து விட வேண்டும். அடுத்த பதிப்பில் லாபம் பார்த்துக் கொள்ளலாம்.

யாரோ ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்கின்றது என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு நிறுவனத்தின் பெயரும் இருக்க வேண்டும்.

2000-மாவது ஆண்டில் ஒரு புத்தகத்திற்கான தயாரிப்புச் செலவு 3 லட்சம் என்பதும் 2000 பிரதிகள் அச்சிடுவதும் பெரிய ரிஸ்க் என்று என்னை எச்சரிக்காதவர்களே இல்லை. நான் எடுத்த கால்குலேட்டட் ரிஸ்க் பலன் தந்தது. இன்றைக்கும் கூட எங்களது பணியாளர்கள் மிகவும் பின் தங்கிய நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் நாங்கள் அரங்குகளை அமைக்கும் போது விற்பனை குறைவாக இருக்கிறது. நாமும் குறைந்த விலையுள்ள புத்தகங்களை வெளியிட்டால் அது மாதிரியான இடங்களில் விற்பனை நன்றாக இருக்கும் என்பார்கள். அதைக்கேட்டு நாங்கள் எங்கள் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதில்லை. பெரிதினும் பெரிது கேள் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம்.

இன்று பதிப்புத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் மற்றும் அதிக முதலீட்டுடன் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிறுவனங்களுக்கு இணையான தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதிலும், தயாரிப்பிலும், மொழி பெயர்ப்பு உரிமைகளை அடைவதிலும், விற்பனையிலும் அவர்களிடம் போட்டி போடவும் செய்கிறோம். எந்த ஒரு புத்தகக் காட்சியாக இருந்தாலும் அதில் கலந்து கொள்கிறோம். சமீப ஆண்டுகளில் நாங்கள் பங்கு பெற்ற எந்தவொரு புத்தக காட்சியிலும் நாங்கள் நட்ட மடைந்ததே இல்லை. இதற்கு காரணம் என்ன?

அந்தந்த இடத்திற்கு தகுந்தவாறு எங்களுடைய அரங்க அமைப்பும் விற்பனை முறையும் அரங்கில் புத்தகங்களை காட்சிப் படுத்தலும் அமையும்.  நாங்கள் நூலின் தரத்தில் தான்  மற்றவற்றைவிட அதிக கவனம் செலுத்துகிறோம். அதனால் புத்தகங்கள் பல பதிப்புகள் வருகின்றன. இன்னொன்று நான் என் உள்மன உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கிறேன். அதன் வழிகாட்டுதலின் படி நடத்து கொள்கிறேன். அது பெரும்பாலும் தவறு செய்வதில்லை.

பிறர் போடும் புத்தகங்கள் விற்பனையானால் சிலர் அதே மாதிரியான புத்தகங்களை கொண்டு வர முயற்சிப்பார்கள். நான் அந்த புத்தகத்தை விட தரமான நிறையச் செய்திகளடங்கிய, தயாரிப்பில் புதுமையான தாக அதை வெளிக்கொண்டு வர முடியுமானாலே தவிர அதைச் செய்வதில்லை. நிறையபேர் கடன் வாங்க பயப்படுவார்கள். நான் அதற்கு நேர் எதிர். முதலில் நான் என்னை நம்பிக் கடன் கொடுப்பவர்களுடைய வட்டத்தை அதிகரித்துக்கொண்டே சென்றேன். அதை ஒழுங்காகத் திரும்பச் செலுத்துவதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டு மிகவும் கவனமாக செயல்பட்டேன். வெறும் கையால் முழம் போட முடியும். நாம் நாணயமானவர்களாக இருக்கும் பட்சத்தில்.

ஒரு காசு கூட முதலீடு இல்லாமல் கடனில்தான் நான் தொழிலில் இறங்கினேன். அப்படியானால் வாழ்வை நடத்திச் செல்வதற்கான பணம் எனக்கு எங்கிருந்து கிடைத்தது. கடன் வாங்குவதில் என்னென்ன முன் ஜாக்கிரதைகளை கையாள வேண்டும்? அந்தப் பாடத்தை எனக்கு கற்றுக்கொடுத்தவர் தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர்.

நவம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com