வீட்டை சுற்றிப் பறவைகள்

வீட்டை சுற்றிப் பறவைகள்
Published on

ஊ ரடங்கு நாட்களில் புதிய பழக்கமாக  பறவைகளை அவதானிக்கத் தொடங்கியுள்ளேன். வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் கடந்த சில நாட்களாக ஏராளமான பறவைகளை காணமுடிகிறது.

எம்முடன் இந்த சூழல் தொகுதியில் இணைந்து வாழும் இந்த பறவைகளை காண்பதும் அவற்றின் நுண்ணிய  அசைவுகளை அவதானிப்பதும் அவை எழுப்பும் விதம்விதமான  ஒலிகளை கேட்பதும் எனது அன்றாட  பொழுது போக்குகளாக அமைந்துவிட்டது.

வசந்தகால அறிகுறியாக குயிலின் கூக்கூ... கூவலை கருதலாம். சித்திரை  புதுவருடப் பிறப்பின் குறியீட்டு இசையும் இந்த குயிலின் கூவல்தான். காதல் கிளர்ச்சியுடன் கூவும் ஆண்குயிலின் கூவல்தான் கூ...கூ...பெண் குயிலோ கீக்...கீக்..என்று உயர் ஒலியைத்தான் எழுப்பும்.ஆண் குயில்கள் ‘குக்கூ' எழுப்பும் பிரபலமான ஓசையை விட பத்துக்கும் மேற்பட்ட ஒலிகளை எழுப்புமாம். இன்றைய நாட்களில் அந்த  ஒலிகளை துல்லியமாக கேட்க முடிகிறது. ஆண்குயில் கருமை நிறமானது. பெண்குயிலோ மண்ணிற பின்னணியில் வெள்ளை புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டது. திடீரென பார்த்தால் இரண்டும் வேறுவேறு பறவைகள் போல தெரியும்.

குயில்களள் brood parasitism எனும் ஒட்டுண்ணி வாழ்வை வாழ்கின்றன. அதாவது காகம் போன்ற வேறு பறவைகளின் கூடுகளில் அவற்றுக்கு தெரியாமல் முட்டையிடுகின்றவை. குஞ்சு பொரித்து சில நாட்கள் வரை காகத்தால் குயில் குஞ்சை அடையாளம் காண இயலாது.  கண்டுபிடிக்கும் வரை காகம் குயில் குஞ்சுக்கு உணவூட்டும்.ஆரம்பத்தில் காகக் குஞ்சுகளை போல சப்தமிடும் குயில் குஞ்சு எப்போது குயில்போல ஒலி எழுப்புமோ  அப்போது காகம் அதனை கண்டுபிடித்து கொத்தி துரத்தி விடும். குயில் காகம் இனப்பெருக்கத்தில் ஈடுபட தொடங்கி முட்டையிட்டு கூடு கட்ட தொடங்கும் போதுதான்  குயிலும்  இனச்சேர்க்கை செய்து முட்டையிடும்.இந்த நாட்களில்தான் அதிக காகங்களையும் காணமுடிகிறது. குயில் குஞ்சுகள் முதலில் பொரிப்பதால்  சிலவேளைகளில் காகத்தின் முட்டைகளை விழுத்திவிடும். இது காகத்தின் பெருக்கத்தை குறைக்க இயற்கை செய்த உத்தியாகும்.இந்த மாதங்களில் காகங்கள் சிறிய குச்சிகளையும் தாவர நார்களையும் கொண்டு திரிந்து கூடுகளை மரங்களில் அமைப்பதையும் குயில்களை கலைத்து திரிவதையும் காணலாம்.

எங்கள் வீட்டிலுள்ள மின் விசிறி ஒன்றுக்குள் கொண்டலாந்தி (Red Vented bulbul)  பறவைகள் சிறிய நார்களை கொண்டு கூடுகட்டுகின்றன. குட்டுறுவான் பறவைகள் (Brown Headed barbet) சோடியாக குட்ரூ...குட்ரூ என ஒலி எழுப்பியபடி திரிகின்றன.கொண்டுகரிச்சான் (Oriental marbie robin)  பறவைகளும் இதேபோல் சோடியாக திரிகின்றன. இந்த பறவைகள் மிக அழகான ஒலியை எழுப்புகின்றன.

நந்தியாவட்டை மற்றும் செவ்வரத்தை பூக்களில் மிகச்சிறிய தேன் சிட்டுகள் (Sunbirds) தேன் குடிக்கின்றன.பெரும்பாலும் அவை சோடியாகவே இந்த வேலையில் ஈடுபடுவதோடு ட்யூட்...ட்யூட் எனும் அழகிய ஒலியையும் எழுப்புகின்றன. Lotens sunbird எனும் கறுப்பு ஊதா நிற தேன் சிட்டையும் Olive back sunbird எனும் மண்ணிற மஞ்சள் கலந்த தேன்

சிட்டையும் அடிக்கடி காணமுடிந்தது. எனக்கு தெரிந்த வீடொன்றின் செவ்வரத்தை மரத்தில் அவை  கூடுகட்டுவதையும் காணமுடிந்தது.

சிறு குச்சிகள், தும்புகள், பறவைகளின் இறகுகளை கொண்டு அவை அந்த கூட்டை அமைக்கின்றன. தேன் சிட்டுகளை போன்ற தையல் சிட்டுகளையும் காணமுடிந்தது (Comman Tailobird - Orthotomus suto - rius). மரங்களின் இலைகளை துளையிட்டு தாவர நார்களை கொண்டு தைத்து கூட்டினை அமைப்பதால் இவை தையல் சிட்டு எனும் காரண பெயரை கொண்டுள்ளன. வீட்டின் மாமரங்களில் உள்ள

சிறிய பூச்சிகளை பிடித்து உண்கின்றன. இவற்றின் ஓசையும் இனிமையானது. தேன்சிட்டின் அளவிலான இவற்றின்  அலகுகள் நேரான தோற்றமுடையன. எனினும் தேன்சிட்டு சிறிய பூக்களில் தேன் எடுக்க வசதியாக நீண்ட வளைந்த ஊசி போன்ற அலகுகளை கொண்டவை.

கூட்டமாக புலுனிகளை (தவிட்டுக் குருவிகள் - Turdoides affinis) ஒலியெழுப்பியபடி காண முடிகிறது. அவை தங்களுக்குள் சத்தமிட்டபடி செல்லச் சண்டைகள் போடுவதோடு காகம் போன்ற ஏனைய பறவைகளையும் சண்டைக்கு அழைக்கவும் தவறுவதில்லை.மேலும் மரங்கொத்திகள், மணிப்புறாக்கள்,மீன்கொத்திகள்,பலவிதமான  கொக்குகள்,சோடியாக நாகணவாய் புள் எனும் மைனாக்கள், செண்பகங்கள், பருந்துகள், கிளிகள் போன்றவற்றைக்  காணமுடிகிறது. அயல் வீட்டிலுள்ள தென்னையின் பொந்துக் குள் கிளி ஒன்று குஞ்சு பொரித்து உணவூட்டுவதையும் அவதானிக்க முடிகிறது.பொதுவாக காலை 5&8 மணி வரையிலும் மாலை 4&7 மணி வரையிலும் அதிக பறவைகளை காணமுடிகிறது. ஊரடங்கு நாட்களில் அதிக வாகன இரைச்சல் இல்லாதபடியால் மிகத் தொலைவிலிருந்தும் பறவைகளில் ஒலி தெளிவாக கேட்கிறது.இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத பறவைகள் என்னை கடந்து செல்வதனையும் காணமுடிகிறது.

தமிழ் சூழலியல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரனின்‘ வீட்டைச் சுற்றி காட்டுயிர்‘ எனும் கட்டுரையை நினைவு படுத்துகிறேன். அவரின் வீட்டைச் சுற்றி தினமும் வரும் விலங்குகளை பற்றி எழுதியிருப்பார். அதுபோல் எனது வீடுகளை சுற்றி வரும் பல விதமான பறவைகளை இந்த நாட்களில் அவதானிக்கிறேன்.அவை பல வருடங்களாக எம்முடன் இணைந்து வாழ்கின்றன. இன்றைய இந்த பருவ நாட்களில்தான் மா, பலா, ஜம்பு என  பலவகையான பழ மரங்கள் காய்த்து கனிந்துள்ளன. வழமையாக பல தென்னிலங்கை வியாபாரிகள் மரத்துக்கு இவ்வளவு,காய்க்கு இவ்வளவு என்று விலை நிர்ணயித்து வாங்கிச் செல்வார்கள்.

இந்தமுறை  ஊரடங்கால் வியாபாரிகள் யாரும் வருவதில்லை. மரங்களிலேயே பழங்களை விட்டுவிட்டோம். இதன் காரணமாக அதிகதிகமாக பல பறவைகளும் அணில் போன்ற சிறிய விலங்குகளும் அந்தந்த மரங்களை நாடி வருகின்றன. இந்த உயிரினங்களை தொடர்ச்சியாக  அவதானிப்பதன் மூலம் என்னை பொறுத்த வரையில் இயற்கையின் சில  சூட்சும முடிச்சுகள் தொடர்ச்சியாக அவிழத்தொடங்கியுள்ளன.இந்த பிரபஞ்சத்தின்  ஒவ்வொரு படைப்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதையும் ஏதாவது ஒரு பிணைப்பு அறும் போது முழு பிரபஞ்சமும் அதிரவே செய்கிறது என்பதையும் உணர முடிகிறது.இனியாவது இயற்கையின் ஏனைய அங்கத்தவர்களுடன் ஒன்றித்து வாழவேண்டுமென நினைத்துக் கொள்கிறேன்.

(கட்டுரையாளர் இலங்கையில் கால்நடை  மருத்துவர்)

ஜூன், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com