சென்னைக்கு வந்த புதிதில் போரூர் காரம்பாக்கத்தில் குடியேறினோம்.
அந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி முறைவாசல் தெளித்து கோலம் போடுவதோடு இல்லாமல், நான்கு வீடுகள் அடங்கிய அந்தக் காம்பவுண்டு வீடுகளில் வசிப்பவர்கள் முழுவதையும் முறைவைத்துக் கூட்டவேண்டும் என்ற ஒரு கண்டிஷன் போட, அந்த முறையைக் கேட்டு என் இல்லத் தலைவி முறைத்த முறைப்பில்.. அங்கிருந்து ஜூட் விட்டு தேனாம்பேட்டைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வீடு பிடிக்கும்போது ஆறுமாத வாடகை அட்வான்ஸ் என்றார்கள். ஆண்டுக்கு ஒரு முறை வாடகை ஏறும் என்றார்கள். முதலாண்டு வாடகை ஐந்நூறு ரூபாய் ஏற்றினார்கள். மாதம் முடிந்ததும் வாடகையுடன் சேர்த்துக் கொடுத்தோம். கொடுத் தவுடன் அந்த வீட்டம்மாள் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி, ஆடிப்போய்விட்டேன்: ‘ வாடகை கூட்டித் தந்துவிட்டீர்கள், சரி. கூட்டிய தொகைக்கு ஆறுமாத அட்வான்ஸும் எப்போது கூட்டிக் கொடுக்கப்போகிறீர்கள்?'' முப்பதாயிரம் அட்வான்சில் ஆரம்பித்து கடைசியில் 60ஆயிரம் வந்தபோது விடைபெற்றோம்.
சென்னை புறநகரான செங்குன்றத்தில் வாடகை குறைவு என அங்குள்ள எம்.ஏ.நகரில் ஒரு பெரிய வீட்டை பேசி முடித்து அங்கு குடியேறினோம். அண்ணன் தம்பி மூன்று பேருக்கு சொந்தமான வீடு இது. எல்லோருக்கும் திருமணமாகி இருந்தது. ஆக ஆறு உரிமையாளர்கள். ஒரு உரிமையாளரையே தாங்க முடியாத நமக்கு ஆறு அதிகார மையங் களைச் சமாளிக்க முடியுமா? என்ன செய்வது? நாகராஜா நீதான் காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்துக்கொண்டேன்.
அவருடைய தயவும் கிடைத்தது. வீட்டு ஓனர்களின் ஒருவருடைய பையன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு ஒன்று வர, அதைப்பார்த்து அவன் அலற, பயந்துபோன நாகராஜா எங்கள் வீட்டின் வெளியிலிருக்கும் பாத்ரூமில் போய் பள்ளி கொண்டார். எங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் சிவராத்திரிதான். அருகில் உள்ள புழல் ஏரி போக வர இடம் அளித்தது. ஆள் யாரையாவது அழைத்து வந்து பாம்பை வெளியேற்றுங்கள் என்றால், உரிமையாளர்கள் புது வீடு, பாத்ரூமை இடித்து தேட முடியாது என்றார்கள்.
பாத்ரூமின் வெளியே நின்று உள்ளே எட்டிப்பார்த்தால் தெரிவதெல்லாம் பாம்பின் வாலாகவோ அல்லது தலையாகத்தான் இருந்தது. இது போதாதா? வீட்டைக் காலி செய்ய நாகராஜன் உதவி செய்தார். உங்கள் காதைக் கொடுங்கள், வீட்டின் உரிமையாளரின் பெயரும் நாகராஜன்தான்.
மீண்டும் செங்குன்றத்திலேயே இன்னொரு வீடு. அதிலும் சிக்கல் ஏற்பட்டு அடுத்த வீட்டில் குடியேறினோம். அந்த ஹவுஸ் ஓனர் உழைத்து முன்னேறியவர். சிக்கனமாக வாழ்பவர். பத்திரிகையாளன் என்பதால் என்னைக் கூடுதலாகவே மதித்தார். அதனால் மட்டுமல்ல, இயல்பாகவே நல்ல மனிதராகவும் விளங்கினார்.
அது மட்டுமல்ல. எனது பையன்கள் வேலைக்குச் செல்லாமலிருப்பதைக் குறிப்பிட்டு அங்கு குடியிருந்த மூன்று ஆண்டுக்கும் வாடகையை அவர் கூட்டவே இல்லை. வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்தும் வீடு மாற வேண்டிய கட்டாயம். நாங்கள் வீடு மாறிய அன்று எங்கள் வீட்டு ஓனர் அட்வான்ஸ் பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்! அவர் நாங்கள் வெளியேறுவதைக் காண விரும்பவில்லை! இப்படியொரு தங்கமான மனிதரின் வீட்டில் வசிக்க எங்களுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.
ஜூன், 2018.