வீட்டுக்குத் தெரியாமல் கல்லூரியில் சேர்ந்தேன்!

சிவகுரு பிரபாகரன்
சிவகுரு பிரபாகரன்
Published on

இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் சிவகுரு பிரபாகரனின் கதை மிகவும் சுவாரசியமானது. பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும்  நான்கு ஆண்டு படிப்புக்கு இடைவெளி. அதன் பிறகு மீண்டும் கல்லூரிக்குப் போய்ப் படித்து, பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வென்றிருக்கும் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவரைத் தேடிப்பிடித்துப் பேசினோம்.

என் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோடை தாலுக்கா மேலஒட்டங்காடு கிராமம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, நான், தம்பி என பெரிய குடும்பம்தான் எங்களுடையது. அப்பா மரம் இழைக்கும் மில் வைத்திருந்தார். ஓரளவுக்கு சுமாரான வருமானத்தில் குடும்பம் நடந்தது. ஆனால் அப்பாவின் குடிப்பழக்கம் அந்த குறைந்தபட்ச வசதி வாய்ப்புக்கும் வேட்டு வைத்தது. அப்பாவின் குடிப்பழக்கத்தால மரம் இழைக்கும் மில்லை மூடியாச்சு. குடும்பத்துல வறுமை மெல்ல தலைதூக்க ஆரம்பிச்சது. அம்மா, பாட்டி, அக்கான்னு சின்னச்சின்ன கூலி வேலைக்கு போனாங்க. அது சாப்பாட்டுக்கே போதவில்லை என்பதுதான் உண்மை.

நான் 2004ஆம் வருடம் +2 முடிச்சேன். எனக்கு பொறியியல் படிக்கணும்னு ஆசை. ஆனால் வீட்டிலோ கவுன்சிலிங் கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய்கூட கட்ட முடியாத சூழல். அம்மா பத்தாயத்துல இருந்த விதை நெல்ல வித்து பணம் கொடுத்தாங்க. கவுன்சிலிங்குக்கு பணம் கட்ட கொஞ்சம் கால தாமதம் ஆனதால எனக்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கல. தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைச்சது. வருஷம் 32000 ரூபாய் கல்விக் கட்டணம். ஐந்தாயிரம் ரூபாய்க்கே நான் பட்ட பாடு எனக்குத் தெரியும், அதனால தனியார் கல்லூரியில சேரல. எல்லாரும் வேலைக்கு போடான்னு சொன்னாங்க. எனக்கு அழுகைதான் வந்தது. அப்ப யாரோ ஒருத்தர் போற போக்குல சொல்லிட்டு போனார்: 'என்ஜினியரிங் படிப்பு இல்லைன்னா என்ன ஐ.ஏ.எஸ் படிப்பு படி'. அது கேலியாகக்கூட இருக்கலாம். ஐ.ஏ.எஸ் படிக்கனும்னு மனசுல விழுந்த முதல் விதை அதுதான். சின்னச் சின்ன கூலி வேலைகள் செஞ்சேன். புதுக்கோட்டையில 2004ஆம் வருஷம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துல ஆசிரியர் பயிற்சி படிப்புல சேர்ந்தேன்.இரண்டு வருஷ படிப்பு அது.

சிவகுரு பிரபாகரன்
சிவகுரு பிரபாகரன்

படிப்பு ஒரு பக்கம். கூலி வேலை ஒரு பக்கம். பெரியம்மா வீட்ல தங்கித்தான் படிச்சேன். 2006ல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடிச்சதும் அப்பாவோட மரம் இழைக்கும் மில்லை மீண்டும் நானே நடத்த ஆரம்பிச்சேன். வருமானம் வர ஆரம்பிச்சது. அப்பா வெச்சிருந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாய் அடைச்சேன். அக்காவுக்கு மூணு லட்ச ரூபாய் செலவு செய்து கல்யாணம் செஞ்சு வைச்சேன். தம்பி +2 முடிச்சான். அவன் கூடபொறியியல் கவுன்சிலிங்குக்கு நான்தான் போனேன். காரைக்குடி அழகப்பா கல்லூரியில தம்பிக்குப் பொறியியல் பிரிவில் ஃப்ரீ சீட் கிடைச்சது. குடும்பம் திரும்பவும் நல்ல நெலமைக்கு வந்தது. நாலு வருஷம் போனதே தெரியல. மீண்டும் எனக்குள்ள பொறியியல் படிக்கணும்னு தோணுச்சு. வீட்ல

சொன்னதும் ரொம்ப பிரச்சினை ஆயிடுச்சி. அப்படி இப்படி இப்பதான் குடும்பம் தலையெடுக்குது. நீ படிக்க போனா திரும்பவும் கஷ்ட ஜீவனம்தான். படிப்பை எல்லாம் மூட்ட கட்டி வெச்சுட்டு ஒழுங்கா வேலையப் பாருன்னு ஏகப்பட்ட அட்வைஸ். அதனால் நான் யாருக்கும் தெரியாமல் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டேன்.

2008 ஆம் வருஷம் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில எனக்கு சீட் கிடைச்சது. சீட் கிடைச்ச பிறகுதான் வீட்ல எல்லாருக்கும் சொன்னேன். அம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க. நான் படிச்சே ஆகணும்னு தீர்மானமா இருந்தேன். கட்டிடப் பொறியியல் பிரிவில் சேர்ந்தேன். அதன் பிறகு வேறு மாதிரியான போராட்டங்கள். தமிழ் வழிக்கல்வியில படிச்ச எனக்கு ஆங்கிலம் மூலமா சொல்லித்தர்ற பொறியியல் வகுப்புகள் கொஞ்சம் கூட புரியல. எப்படியாவது ஒரு மாசம் ஓட்டிடலாம். பாடங்கள் புரியுதான்னு பார்ப்போம். இல்லன்னா ஊருக்குப் போய் அம்மா சொன்ன மாதிரி மீண்டும் அப்பாவோட தொழிலை தொடரலாம்னு சிந்தனை உள்ளுக்குள் ஓடியது. ஆனா ஒரு

ரெண்டு வருஷம் முடிஞ்சது. அப்புறம் ஹாஸ்டல்ல இடம் இல்லைன்னு சொல்லி வெளியே போய் தங்கிக்கன்னு சொன்னாங்க. திரும்பவும் போராட்டம். கண்ணக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்தது. என்ன செய்யுறதுன்னு தெரியல. சரி போராடிப் பார்ப்போமுன்னு நாலைந்து நண்பர்களைக் கூட்டிக்கிட்டு சென்னையில இருக்கிற தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு போய், ஹாஸ்டல்ல தங்க எங்களுக்கு அனுமதி கொடுக்கனும்னு மனு கொடுத்தோம். பெருசா எதுவும் நடக்கலைன்னாலும் என் போராட்ட குணம் எனக்கே மீண்டும் உறுதியா தெரிய ஆரம்பிச்சது அப்பதான்னு நினைக்கிறேன். மீண்டும் அங்க இங்க தங்கி சமாளிச்சேன். பிறகு கல்லூரியின் வேறு பிரிவில் படிக்கும் நண்பர்களோட அறையில் தங்கி படிப்பைத் தொடர்ந்தேன்.மூன்றாம் வருடம் படிக்கும் போது என் சீனியர்  மூலமா என் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை வந்தது.

அந்த சீனியர் பெயர் ரூபன். அவரை நான் தூர இருந்தே மரியாதையோட பார்த்திருக்கேன். அவர் கல்லூரியின் டாப்பர்களில் ஒருவர்.  ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு கேட் தேர்வின் கேள்வித் தாளை கொடுத்து பதில் எழுதச்

சொன்னார். நான் பதில் எழுதிக் கொடுத்தேன். நான் பன்னிரெண்டு மார்க் சரியா எழுதியிருந்தேன். அவர் சொன்னார். ‘நான் ஃபைனல் இயர் படிக்கிறேன். நானே 42 மார்க் தான் வாங்கினேன். நீ கொஞ்சம் படிச்சி தேர்வுக்கு தயாரானா உன்னால கேட் எக்ஸாம் கிளியர் பண்ண முடியும்.' எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் நம்பிக்கை அளித்தது. உள்ளுக்குள் மகிழ்ச்சியும் ஆர்வமும் பொங்கியது. பின்னர் அவரே சென்னைல, செயிண்ட் தாமஸ் மவுண்ட்ல உள்ள ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டியூட்ல கேட்' எக்ஸாம் கோச்சிங் கிளாஸ் போகச்

சொல்லி ரெகமண்ட் பண்ணார். ஐயாயிரம் ரூபாய் கொடுத்து உதவியும் செய்தார். கல்லூரி மூன்றாம் வருடத்திலிருந்து (2011) வாராவாரம் சனி ஞாயிறு சென்னைக்கு கேட் பயிற்சி வகுப்புக்கு வந்துடுவேன். இரவில் தங்குவதற்கு இடமிருக்காது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரயில்வே ஸ்டேஷன்ல தங்கிக்கு வேன். விடியற்காலை எழுந்து படிச்சுட்டு குளிச்சி ரெடியாகி மீண்டும் கோச்சிங் கிளாஸ்.  கல்லூரி இறுதியாண்டு முடியும்வரை என் வார இறுதி நாட்கள் இப்படித்தான் போனது. ஃபைனல் இயர்ல கேட் எக்ஸாம்ல இந்திய அளவில 301 ரேங்க் எடுத்தேன். எனக்கு

சென்னை ஐ.ஐ.டியில் சிவில் என்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு ஜியோ டெக்னாலஜி பிரிவில் சீட் கிடைச்சது. சந்தோஷமா சென்னைக்கு வந்து 2013ல ஐ.ஐ.டி - யில சேர்ந்தேன். இந்த கல்லூரி அனுபவம் வேறு மாதிரியானது. மாதம் 8000 உதவித்தொகை கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து ஹாஸ்டல் செலவுகள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்குறதுன்னு செலவுகளைச் சமாளிச்சேன். ஐ.ஐ.டி- யில சேர்ந்தாலும் கோச்சிங் கிளாஸ் போறத நிறுத்தவில்லை. அன்றைக்கு நடத்துற பாடங்களை அன்றே படிச்சுடுவேன். படிப்பை ஒரு நாளும் அப்புறம் படிக்கலாம்னு தள்ளிப்போட்டதே இல்லை. இத ஒரு தவறவிடக்கூடாத பழக்கமா நான் மாத்திக்கிட்டேன். தேர்வுக்கு தயாராகிற மாணவர்களுக்கு இந்த முறைதான் சரி.

ஐ.ஐ.டியில் சேர்ந்தாலும் கேட் எக்ஸாம் எழுதறத நான் விட்டுவிடவில்லை. முதல் வருஷம் முடிஞ்சதும் கேட் எக்ஸாம் ரேங்க்கை வைத்து எனக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துல வேலை கிடைச்சது. வருடாந்திர சம்பளம் இருபத்திரெண்டு லட்ச ரூபாய். ஆனால் நான் அந்த வேலையில் சேரவில்லை. மீண்டும் இந்திய அளவில் நடத்தப்படுற என்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு எழுதினேன். இந்திய அளவில் 75வது ரேங்க் எடுத்தேன். ரயில்வேயில எனக்கு வேலை கிடைச்சது. ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதணும்னு தோணிச்சி. 2014ல மனித நேய ஐ.ஏ.எஸ் அகாடமி இலவச வகுப்புகள் படிச்சி தேர்வு எழுதினேன். ரயில்வே வேலை, வேலைக்கான பயிற்சிகள்னு என்னால ஐ.ஏ.எஸ் தேர்வை சரியா எழுத முடியலை. அடுத்த வருடமும் தேர்வு எழுதினேன். தேர்ச்சி பெறவில்லை. ரயில்வே வேலையை விட்டேன். 2016ஆம் ஆண்டு  மீண்டும் முழு முயற்சியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாரானேன். அந்த வருடம் இந்திய வனத்துறைப் பணி கிடைத்தது.

ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்ச்சியடையவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வுகள் எழுதினேன். தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இந்திய அளவில் 101வது ரேங்க். தமிழக அளவில் மூன்றாவது இடம். மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கனவு நனவாகிவிட்டது,''

சொல்லி முடிக்கும் சிவகுரு பிரபாகரன்

வார்த்தைகளில் கொஞ்சம்கூட சோர்வில்லை. மாறாக வெற்றிக்களிப்பின் பெருமிதம்.

ஜூன், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com