கொரோனா காலத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும்போது உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பார்த்து பார்த்து சலித்தவர்களுக்கு இளைப்பாறலாக சுவாரஸ்யமான டாக்குமெண்ட்ரிகளும் அதே தளங்களில் கொட்டிக்கிடக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் உள்ள ‘ரெஸ்டாரண்ட் ஆன் தி எட்ஜ்' அதில் ஒன்று.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் சில மோசமான நிர்வாகம் கொண்ட உணவங்கள் இருக்கும். அதனால் அவை வியாபாரம் குறைந்து, மூடும் நிலைக்கு தள்ளப்படும். இதுபோன்ற உணவகங்களை மறு சீரமைப்பு செய்து நல்ல மாதிரியாக மாற்றுவதே இந்த தொடர். இதற்காக உணவக நிபுணர் நிக் ரொபர்டோ, சமையற்கலைஞர் டென்னிஸ் பிரஸ்காட் வடிவமைப்பாளர் கரீன் போன் மூவரும் இணைந்து பயணம் செய்கிறார்கள். உணவக உரிமையாளரின் தேவையை பேசி அறிந்து, அந்த ஊரின் கலாச்சாரத்தை நன்றாக ஊர் சுற்றி அறிந்த பின்னர் மொத்தமாக உணவகத்தை அழகாக மாற்றி அமைக்கிறார்கள். அழகான தீவுகளும், கண்ணைக் கவரும் இயற்கை எழிலும் நமக்கு போனஸ்.
மத்திய தரைக்கடலில் ரம்மியமாக அமைந்துள்ளது மால்டா தீவு. ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் கலவையான கலாச்சாரம், உணவு முறையைக் கொண்ட ஊர். அங்கே மார்ஷல்சாக்ஸ் என்ற பழமையான ஊரில் கால்பந்து வீரரான ஜஸ்டின் ஹாபர் என்பவர் 'ஹாபர் 16' என்ற பெயரில் உணவகத்தை வைத்திருக்கிறார். வெற்றிகரமான விளையாட்டு வீரர், உள்ளூர் பிரபலம். ஆனால் உணவகம் நடத்துவதில் தடுமாடுகிறார். அங்கேதான் இந்த மூவர் குழு களமிறங்குகிறது. மத்திய தரைக் கடல் பகுதியில் கிடைக்காத மீன் இல்லை. ஆனால் சுற்றுலாவாசிகளுக்காக பிரபலமான ஐரோப்பிய நகரங்களிலிருந்து மீனை வரவழைத்து தவறு செய்துகொண்டிருக்கிறார் ஹாபர் என்பதை கண்டறிந்து திருத்துகிறார்கள். அந்த ஊரின் பிரபலமான உப்பளத்திலிருந்து உப்பு, மால்டாவின் பாரம்பரியமான வண்ண டைல்ஸ், மால்டாவின் பாரம்பரிய உணவு கட்டோ என்று அனைத்தையும் உள்ளடக்கி ஹாபரின் குடும்ப மற்றும் புட்பால் புகைப்படங்களை அலங்கரித்து உணவகத்தை முற்றிலுமாக மாற்றுகிறார்கள். மொனிக் என்பவர் மால்டா பத்திரிகைகளில் உணவு பற்றி எழுதும் பிரபலமான பத்திரிகையாளர். அவருக்கும் ஹாபரை நன்றாக தெரிந்திருக்கிறது, ஆனால் அவர் நடத்தும் உணவகத்தை மொனிக் அறிந்திருக்கவில்லை. சரியாக விளம்பரப்படுத்தப்படவில்லை என்பதையும் இவர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். எல்லா ஊருக்கும் எல்லா உணவகத்திற்கும் ஒரே மாதிரியான மாற்றங்கள் இல்லை. தேவைக்கேற்ப மாற்றுகிறார்கள்.
ஐந்தரை வருடங்களாக லாபம் ஏதும் பார்க்காமல் மூடிவிடும் நிலையில் இருக்கிறது 'பானியன் ட்ரீ' உணவகம். அது எட்டு பேர் மட்டுமே அமரக்கூடிய வசதியுள்ளது. அதிலும் அந்த உணவகத்தில் வாசலில் நின்று இது உணவகம் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாத வகையில் ஃபேன்சி ஸ்டோர் போல அமைந்திருக்கிறது. ஹாங்காங்கிலுள்ள டாய் ஓ என்ற அழகான மலை கிராமத்திலுள்ளது இந்த உணவகம். பானியன் ட்ரீ உணவகத்தை நம் மூவர் கூட்டணி கையிலெடுக்கிறது. இவர்கள் சில உணவுகளைத் தயாரிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார்கள் என்கிற குறையைக் கண்டறிகிறார்கள். ஹாங்காங்கில் தெருவோரக் கடைகளும், மீன் உணவும் பிரபலம். அந்த முறைகளை இங்கே புகுத்தி, இந்த உணவகத்தின் உள் அமைப்பைச் சரி செய்து, துரித உணவுகளை மெனுவில் சேர்த்து சீனர்களின் முறைப்படியே உணவகத்தை புதுப்பித்தவுடன் வணிகம் சூடுபிடிக் கிறது!
கனடாவின் டோபர்மரி நகரத்திலுள்ள ஜான்சனின் ‘கோக்கனட் ஜோ' விற்கு இவர்கள் அளிக்கும் யோசனைகள் சிறு வியாபாரத்திலுள்ள எவருக்கும் பொருத்தமானது. ஜான்சன் எல்லாவற்றையும் தன் கையாலேயே செய்ய வேண்டும் என்ற விருப்பமுள்ளவர். அவருடைய உணவகத்தில் அவரே சமையல், பரிமாறுபவர்.. எல்லாமே அவர்தான். அதிலிருந்து கொஞ்சம் விலகி உணவகத்தை பிரபலப்படுத்தவும்,மெருகேற்றவும் நேரம் ஒதுக்கும்படி இவர்கள் சொல்கிறார்கள். அதனுடன் அந்த பகுதியில் கிடைக்கும் உள்ளூர் காய்கறிகளை இணைத்து குறைவான மெனுவை உருவாக்குகிறார்கள், கூடவே அடர் நீல நிற கடலை குறிக்கும் வண்ணமாக காக்டெயிலும். இதை அவர்கள் அருந்துவதைப் பார்ப்பதே மிக அழகு!
ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலையின் பாதங்களில் உள்ள ஊர் டைரோல். மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு. ஆஸ்திரியாவின் பழமையான பொருட்களை உணவகத்திற்காக வடிவமைத்து, அவர்களின் கலாச்சார உணவையும் மெனுவில் சேர்க்கிறார்கள். பிராண்டிங், கலாச்சார உணவுகளை
சேர்த்தல்,தனித்தன்மையான வடிவமைப்பை உருவாக்குதல் என்று அந்தந்த ஊருக்கேற்றவாறு செய்கிறார்கள். இந்த பிசினெஸ் உத்திகளை அறியும்போதே கூடுதலாக சுற்றுலா போன்ற உணர்வையும் தருகிறது இந்த டாகுமெண்டரி.
ஆகஸ்ட், 2020.