ஆ று பெண்கள், நான்கு பையன்கள்.. மொத்தம் பத்துக் குழந்தைகள் அவருக்கு!
முதல் பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கிறார். இரண்டு மாதத்தில் கல்யாணம். எப்படியும் இருபதாயிரம் ரூபாயாவது தேவைப்படும் (சம்பவம் நடைபெறுவது 60 வருடங்களுக்கு முன்பு என்பதை கவனத்தில் கொள்ளவும்). கையில் இருப்பது வெறும் ஐயாயிரம் ரூபாய்தான். மிச்சப் பணத்துக்கு என்ன செய்வதென விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார் அவர்.
முதல் பெண்ணைக் கரையேற்றுவதற்கே இந்தப் பாடு என்றால் இனி எப்படி அடுத்தடுத்த திருமணங்களை எப்படி நடத்தி முடிப்பது என்ற கவலை அவரை அரித்துக் கொண்டிருக்கிறது.
*****
1923 ஆம் ஆண்டு. திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் சேரன் மகாதேவி கிராமத்தில் பிறந்தார் அவர். தந்தையார் ரிட்டயர்ட் சப் - ரிஜிஸ்ட்ரார். தந்தையின் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைதான் அவர் - இந்தக் கதையின் நாயகர்.
நடுத்தரக் குடும்பம். வரவுக்குள் செலவைக் கொண்டு வருவதற்கே மல்லுக்கட்ட வேண்டிய சூழ்நிலை. பிறந்த ஊரிலேயே எட்டாம் வகுப்புவரை படித்தார். பள்ளி உயர் படிப்புக்காக பத்தமடை சென்றார். பிறகு, திருநெல்வேலி இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பு.
படித்துக் கொண்டிருக்கும்போதே, அவருக்குத் திருமணம் நடந்தது. கேரளாவின் கொல்லம் நகரைச்சேர்ந்த வக்கீல் ஒருவரின் ஐந்தாவது மகளை மணமுடித்தார்.
திருமணத்துக்குப் பின்னரே இன்டர்மீடியட் தேர்வெழுதி முதல் வகுப்பில் தேறினார். படிப்பைத் தொடர ஆசைப்பட்ட மருமகனை உற்சாகப்படுத்திய மாமனார், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. வேதியியல் படிக்க பண உதவி செய்தார்.
பி.ஏ. முடித்தபோது தந்தையார் காலமாகிவிடவே, தொடர்ந்து படிக்கும் ஆசைக்கு அணை போட்டுக்கொண்டார் அவர். மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. நாற்பத்தொன்பது ரூபாய் சம்பளம்!
1945 ல் முதல் வாரிசாக பெண் பிறந்தாள். கூடுதலாக வருவாய் தேவைப்படவே, தூத்துக்குடி எஸ்.ஏ.வி. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பணிக்கு இடம் பெயர்ந்தார்.
இரண்டாவது மகள் பிறந்தாள். தேவை அதிகமானது. ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். இந்தியன் வங்கியில் குமாஸ்தா வேலை வாங்கிக்கொடுத்தார் மாமனார். புதிய உறவுகள் பூத்தன வீட்டில். மொத்தம் பத்து வாரிசுகள்!
அத்தனை பேரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் அவர். பசியும் பட்டினியும் இல்லாமல் இருந்தாலும், கஷ்ட ஜீவனம்தான். குடும்பக் கஷ்டம் அறிந்து பிள்ளைகள் அனைவரும் நன்றாகவே படித்தனர்.
ஆரம்பத்தில் பார்த்த ஆசிரியப் பணி ஆபத்துக்கு உதவியது. பகலில் வங்கிப் பணி முடிந்ததும்,
சைக்கிளை மிதித்துக் கொண்டு கோடம்பாக்கத்துக்கும் எக்மோருக்கும் சென்று பொறியியல் கல்லூரிகளில் கெமிஸ்ட்ரி பாடம் நடத்தினார். கூடுதல் வருவாய் மூலம் குடும்பச் செலவுகளை சமாளித்தார்.
முதல் பெண்ணுக்குத் திருமண வயது வந்தது. இவரது உடன் பிறந்த சகோதரி மகனுக்கு அவரை திருமணம் பேசிமுடித்தார்.
அந்தத் திருமணத்தை நடத்தி முடிக்கத்தான் பணமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
*****
கொல்லத்தில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. முகம் தெரியாத யாரோ ஒருவர் எழுதிய அந்தக் கடிதம் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது!
அவருடைய மனைவி வழியில் பூர்வீக சொத்து ஒன்று கொல்லத்தில் இருந்தது. அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது.
'வழக்கினை நான் நடத்திக் கொள்கிறேன். இந்த நிலையிலேயே அந்தச் சொத்தை நான் வாங்கிக் கொள்கிறேன். நேரில் வந்து பணம் பெற்று, எழுதிக் கொடுக்கவும்' என்று கடிதத்தில் சொல்லியிருக்கிறார் அந்த யாரோ ஒருவர். கிடைக்கிறது 20,000 ரூபாய்!
அந்தப் பணத்துடன் சென்னை திரும்புகிறார் அவர். 'கல்யாணச் செலவுக்குத் தேவையான பணம் கிடைத்து விட்டது' என எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால், அவரது எண்ணம் வேறாக இருக்கிறது!
சகோதரியைச் சந்திக்கிறார். திருமணத்தை ஆறு மாதங்கள் தள்ளிப் போடும்படி கேட்கிறார். அவரைச் சம்மதிக்க வைத்து விட்டு, நிம்மதியோடு வீடு திரும்புகிறார்.
வீதி வீதியாக அலைகிறார். இருபதாயிரம் ரூபாய்க்கு எங்கே வீடு கிடைக்கும் என அலசி ஆராய்கிறார். மேற்கு மாம்பலத்தில் ஒரு பழம்பெரும் வீடு பட்ஜெட்டுக்குத் தோதாகச் சிக்குகிறது!
வீட்டை வாங்கிய வேகத்தில், கையிலிருக்கும்
சேமிப்பான ஐந்தாயிரம் ரூபாயைச் செலவழித்து, புதுப்பிக்கிறார். ஒண்டுக்குடித்தனத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பெரிய குடும்பம் கொஞ்சம் விசாலமான வீட்டுக்குள் வாழ ஆரம்பிக்கிறது.
நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிதி நிறுவனத் துக்குள் நுழைகிறார் அவர். வீட்டுப்பத்திரத்தை அடகு வைத்து, இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்குகிறார். அப்போதுதான் அவரது திட்டம் அனைவருக்கும் தெரியவருகிறது. கிடைத்த பணத்தில் ஜாம்ஜாமென திருமணம் நடக்கிறது.
இனி, அடகு வைத்த வீட்டுப் பத்திரத்தை
மீட்டெடுக்க வேண்டும். ஓய்வில்லாமல் உழைக்கத் தயாராகிறார் அந்தத் தலைமகன்.
சென்னையில் இருக்கும் சில டுடோரியல் கல்லூரிகளிலும் பாடம் நடத்துகிறார். காலையிலும் மாலையிலும் வாத்தியார் வேலை. பகலில் வங்கி குமாஸ்தா வேலை. வார விடுமுறை நாட்களிலும் வேலை.. வேலை.. வேலை!
அத்தியாவசியத் தேவைக்கு அதிகமாக நயா
பைசாகூட செலவு செய்யாமல் சேர்த்து வைக்கிறார். பணம் சேரச்சேர நிதி நிறுவனத்தில் கட்டுகிறார். மூன்று வருடங்களில் பத்திரத்தை மீட்கிறார்!
உத்தியோகமும் வருமானமும் புருஷ லட்சணம் என்றால், இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இன்முகத்துடன் செய்கிறார் அவரது மனைவி. அத்தனை குழந்தைகளையும் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கிறார்.
இரண்டாவது பெண் இப்போது திருமணத்துக்குத் தயார்!
அதே பத்திரம்.. அதே நிதி நிறுவனம்.. முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்குகிறார் அவர். கல்யாணம் ஜாம்ஜாம்!
நின்று நிதானிக்காமல் உழைப்பைத் தொடருகிறார் அவர். அப்பாவுக்கு ஒத்தாசை செய்யும் நோக்கத்தில், படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்குப் போக விரும்பும் பையன்களை அதட்டுகிறார். 'இத்தனை பிள்ளைகள் பெத்துக்கத் தெரிஞ்ச எனக்கு அத்தனை பேரையும் படிக்க வைத்து கரையேற்றத் தெரியாதா' என கட் அண்ட் ரைட்டாகச் சொல்கிறார்.
விடிவதற்கு முன்னர் சைக்கிள் எடுக்கிறார். இரவு வெகு நேரமான பின்னரே வீட்டுக்கு வருகிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து, அடுத்த சில வருடங்களில் கடனை அடைத்து, பத்திரத்தை மீட்கிறார்.
அடுத்து இருப்பது மூன்று ஆண் குழந்தைகள். கல்யாணத்துக்கு அவசரமில்லை. ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த முதல் மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறார். அடுத்த மகன் கல்லூரிக்குள் நுழைகிறார்.
முதல் மகனுக்குத் திருமணம் நடக்கிறது. வீட்டுக்கு வந்த மருமகள் இன்னொரு தாயாகவே மாறி, கணவரின் உடன்பிறப்புகளை பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார்.
குடும்பத்தில் இன்னொருவருக்கு வங்கியில் வேலை கொடுக்கச் சம்மதிக்கிறார்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இரண்டாவது மகனின் படிப்பை பாதியில் நிறுத்தச் செய்கிறார். வேலை வாங்கிக் கொடுக்கிறார். தபால் மூலம் தொடர்ந்து படிக்கச்
சொல்கிறார்.
இரண்டாவது மகனுக்கும் திருமணம் நடக்கிறது. வங்கிப் பணிக்காக மும்பை செல்லும் அவர் மூலம் நல்ல வரன் ஒன்று அமைகிறது. ஆறாவது
வாரிசான பெண்ணுக்குத் திருமணம் நடத்தி வைக்கத் தேதி குறிக்கிறார்.
பணியிலிருக்கும் இரண்டு மகன்களிடமும் பணம் வாங்கவில்லை. மறுபடியும் அந்த வீட்டின் பத்திரத்தை அடகு வைக்கிறார். நாற்பதாயிரம் வரை பணம் கிடைக்கிறது. சிறப்பான முறையில் திருமணம் நடக்கிறது.
திருமண மண்டபத்தில் அவரது அடுத்த பெண்ணைப் பார்க்கும் தூரத்து உறவினர் குடும்பம், சம்பந்தம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக ஒவ்வொரு திருமணத்துக்கும் இடையே இரண்டு மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்வார் அவர். காரணம்.. அதற்குள் கடனை அடைத்து, பத்திரத்தை மீட்டு விடுவார். ஆனால், இம்முறை ஒரே வருடத்தில் அடுத்த திருமணம் நடத்தியாக வேண்டிய சூழ்நிலை!
அவரது நிலை அறிந்து, அந்த வீட்டின் பேரில் கூடுதலாகக் கொஞ்சம் கடன் கொடுக்கிறார்கள் நிதி நிறுவனத்தினர். அது போதாது என்பதால் கவலையில் இருக்கிறார் அவர். கைகொடுக்கிறார் முதல் மகன். தன் பி.எஃப். பணம் முழுவதையும் எடுத்து அப்பாவிடம் கொடுக்கிறார்.
அந்தத் திருமணமும் ஜாம்ஜாம்!
அப்பா மீண்டும் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் உழைப்பைத் தொடர்கிறார். திருமணச் செலவுக்காக மகனிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்.
மூன்றாவது மகனுக்கும் வேலை கிடைக்கிறது. திருமணம் நடக்கிறது. வங்கிப் பணிக்காக வெளியூர் செல்கிறார்.
வீட்டில் இப்போது மிச்சமிருப்பது கடைசி மகனும், இரண்டு மகள்களும். மகனின் திருமணம் பற்றிக் கவலையில்லை. மகள்களை மனநிம்மதியுடன் திருமணம் செய்து வைத்தாக வேண்டுமே!
தன் முயற்சியில் மனம் + உடல் தளராத விக்கிரமாதித்தனாக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஓடி ஓடி உழைக்கிறார். பணம் சேர்க்கிறார். பத்திரத்தை மீட்கிறார்.
அதே வீடு.. அதே பத்திரம்.. அதே நிதி நிறுவனம்.. அடுத்த பெண்ணின் திருமணம்! அதே ஓய்வறியா உழைப்பு.. அதேபோல் பத்திரம் மீட்பு!
ஐந்து பெண்களைக் கரையேற்றிய நிம்மதியோடு, பணியிலிருந்து ரிட்டையர் ஆகிறார். கூட்டுக்குடும்பத்திலேயே அதுவரை இருந்த முதல் மகன் தனக்கென ஒரு வீடு வாங்கிக்கொண்டு தனிக்குடித் தனம் போகிறார். கடைசிப் பையனுக்கும் திருமணமாகிறது. அவரையும் தனிக்குடித்தனம் போகச் சொல்லிவிட்டு, அடுத்த அதிரடிக்குத் தயாராகிறார் அவர்!
அந்தக் குடும்பத்தின் பாரம் சுமக்க அவருக்கு உறுதுணையாக இருந்த அந்த வீட்டினை விற்கிறார். கிடைத்த பணத்தில் பாதியை வைத்து தி.நகரில் ஒரு ஃப்ளாட் புக் பண்ணுகிறார். மீதப்பணத்தை வங்கியில் போட்டு, வரும் வட்டியில் நிம்மதியாக வாழத் தொடங்குகிறார்.
திடீரென ஒருநாள்.. பெற்றோருக்குத் தெரிவிக்காமல் காதல் திருமணம் செய்து கொள்கிறார் கடைசி மகள். கணவருடன் மும்பை செல்கிறார்.
மிகவும் ஆசாரமான பிராமணக் குடும்பம் அது. ஊர் உலகம் என்னவெல்லாம் பேசுமோ என குடும்பத்தில் அனைவரும் கவலை கொள்கிறார்கள். அப்பா எப்படி இந்த அதிர்ச்சியை எதிர் கொள்வார் என ஒன்பது பிள்ளைகளுக்கும் பதைபதைப்பு.
மகளை மானசீகமாக வாழ்த்துகிறார் அவர். அத்துடன் நிற்கவில்லை, வீட்டை விற்றுக் கிடைத்த பணத்தில் மகளின் திருமணத்துக்காக ஒதுக்கி வைத்திருந்ததை எடுத்து, 'இது உனக்குச் சேரவேண்டிய பணம்' என்று கடிதம் எழுதி, மகளுக்கு அனுப்பி வைக்கிறார்.
வாரிசுகள் பத்துபேரும் பரவிக் கிளைத்து, தனித்தனி மரங்களாகிறார்கள். அனைவரும் நல்ல நிலைக்கு உயர்கிறார்கள். அவர்களிடம் பொருளுதவி எதையும் எதிர்பார்க்காமல் கம்பீரமாக வாழ்கிறார்கள் அந்த உழைப்பாளி அப்பாவும் அவரது ஒத்தாசை மனைவியும்.
*****
வீடு.. மனைவி.. மக்கள்.. என பெருமதிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய அந்த மாமனிதரின் பெயர். எல். ராமஸ்வாமி அய்யர். மனைவியின் பெயர் சாரதாம்பாள்.
சில வருடங்களுக்கு முன்பு அவரை நான் சந்தித்தபோது, தன் வாழ்க்கைப் பயணத்தின் அத்தனை குறிப்புகளையும் அவரே சொன்னார். தன் கைப்பட எழுதி வைத்திருந்த டைரியைப் பார்த்து, தேதிகளுடன் ஒவ்வொரு நிகழ்வையும் தெரிவித்தார்.
தன் வாழ்க்கை பரிபூரணமாக இருப்பதற்குக் காரணம் தந்தை லட்சுமணய்யரும் தாயார் ராமலெஷ்மி அம்மாளும் செய்த பூர்வ புண்ணியம் என்றார். தன்னைப் படிக்க வைத்து, வங்கியில் வேலையும் வாங்கிக்கொடுத்த மாமனார் சீதாராமய்யரை நன்றியோடு நினைவு கூர்ந்தார். கடமைகள் முழுவதையும் சிறப்பாகச் செய்ய வைத்த காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மனையும் கைகூப்பி வணங்கினார்.
அதன் பின்னர் தி.நகர் ஃப்ளாட்டையும் விற்று விட்டு, மூத்த மகன் சங்கர நாராயணனுடனும் கடைசி மகன் வெங்கடகிருஷ்ணனுடனும் மாறிமாறி வசித்து வந்தார்கள் ராமஸ்வாமி அய்யரும் சாரதாம்பாளும். வெங்கட கிருஷ்ணன்தான் திரைத்துறையில் அனுபவம் மிக்க ஆலோசகராக இருக்கும் வெங்கட் சுபா.
2015 ஆம் ஆண்டு சாரதாம்பாள் இயற்கை எய்தினார். 2017 ல் ராமஸ்வாமி அய்யரும் தன் மூச்சை இறைவனிடம் அர்ப்பணித்தார்.
'நாங்களெல்லாம் திருமணமாகி நல்ல நிலைக்கு வரும்வரை, எங்கள் அப்பா தூங்கி நாங்கள் பார்த்ததே இல்லை. அம்மாவின் மருத்துவச் செலவு, அம்மாவின் இறுதிச் செலவு, தன் மருத்துவச் செலவு என அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். அவரது இறுதிச் செலவுக்கும் அவரே பணம் ஒதுக்கி வைத்திருந்தார். எங்கள் நலனுக்காகவே தன்னை உருக்கிக்கொண்ட தியாகச் செம்மல் அவர். இப்பேர்ப்பட்ட அப்பாவின் பிள்ளைகளாக நாங்கள் பிறந்தது எங்கள் பாக்கியம்' என்றார் வெங்கட கிருஷ்ணன்.
'ஒரு ரூபாய்கூட எங்களிடம் வாங்காமல், ஒரு ரூபாய்கூட கடன் வைக்காமல், மன நிறைவோடு தன் வாழ்வை முடித்துக் கொண்டார் அப்பா. அவரது இறப்புக்குப் பின்னரும் அவர் சேமித்து வைத்த பணம் இருந்தது,' என்றார், சங்கர நாராயணன்.
உழைத்துக் களைத்த அந்த மகானுபவர் உயரே இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் உழைப்பை மட்டுமே நம்பி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரையும்!
மே, 2019.