''விவசாயத்தை புனிதப்படுத்த வேண்டாம்''

''விவசாயத்தை புனிதப்படுத்த வேண்டாம்''
Published on

விவசாயி  என்பதற்கான வரையறையே நம் நாட்டில் இன்னும் ஐயத்துக்கு உரியதாக  இருக்கிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும்  விவசாயி என்று சொல்லிக்கொள்கின்றனர்.

இன்று கணிசமான நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகரத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நில உரிமையாளர்கள் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக விவசாய தங்க நகைக்கடன், சிட்டா அடங்கலைக் காட்டி பயிர்க்கடன் பெற்றுக்கொள்கின்றனர். வங்கிகளுக்கு இவை எல்லாம் நன்றாகத் தெரியும் என்றாலும் தங்களது கடன் வழங்கல் இலக்கு எட்டப்படுவதோடு, கடனுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதால் கண்டுகொள்வதில்லை.

பருவமழை சரியாக பொழியாததற்கு தீர்வு யாரிடமும் இல்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரவேண்டிய ஆற்றுநீர் வரவில்லை என்பது மேல்மட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய  பிரச்சினையாகி விட்டது.

விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உற்பத்தியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு எந்த உரிமையையும் வழங்காத விவசாயிகள், விலையையும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சரக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று நாம் பேசுவதற்கு தயாரில்லை. உதாரணமாக அதிக தண்ணீர் தேவைப்படக்கூடிய தென்னை, வாழை போன்ற பயிர்களைப் பயிரிடுவதைக் கட்டுப்படுத்தினால், பல ஆயிரம் ஏக்கர்களில் மற்ற விவசாயிகள் மேட்டாங்காட்டுப் பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு இத்தனை ஏக்கர் தென்னை, வாழை மட்டுமே பயிரிட அனுமதி என்று அரசு சொன்னால் கேட்டுக்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாக இருந்தால்தானே, வரக்கூடிய விளைபொருளுக்கான சந்தையையும், தேவையையும் கணித்து விலை நிர்ணயம் செய்ய  ஒரு மாடலை ஏற்படுத்த முடியும்?

தொழில்நுட்பங்களும், சாலை வசதிகளும் பெருகுவதால் நுகர்வோருக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கினால் எப்படி இரண்டு நாட்களில் மும்பையில் இருந்து திருச்சிக்கு டெலிவரி செய்யப்படுகிறது என்பதை மக்கள் அறிவர். அதேபோல் தக்காளி இங்கே கிலோ நாற்பது ரூபாயைத் தொடும்போது, சட்டீஸ்கரில் பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தால் இங்குள்ள வியாபாரிகள் பெரும்பணத்தை & எந்த காப்பீடும் இல்லாமல் தனிநபர்களுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையில் & இறக்கி பத்து, பத்து டன்னாக வாங்குகின்றனர். கிலோ பதினைந்து ரூபாய்க்கு சட்டீஸ்கரில் வண்டியேறும் தக்காளிக்கு போக்குவரத்து செலவையும் சேர்த்து இருபத்தைந்து ரூபாய்க்கு இங்கு வந்து சேர்கிறது. பத்து ரூபாய் இலாபத்துடன் முப்பத்தைந்து ரூபாய்க்கு சந்தையை வந்தடையும்போது நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த நுகர்வோருக்கு ஐந்து ரூபாய் குறைவாகக் கிடைத்துவிடுகிறது.

உள்ளூர் விவசாயிக்கு இதில் இலாபம் குறைவதையோ, நட்டப்படுவதையோ குறித்து நுகர்வோர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று சொல்பவர்கள் ஆண்டு முழுவதும் தக்காளி ஐம்பது ரூபாய்க்குத்தான் கிடைக்கும் என்றால் அறச்சீற்றம் கொண்டு அரசாங்கத்தைத் திட்டித் தீர்ப்பார்கள். Free market trade-இல் உள்ள பலன்களை அனுபவிக்கையில் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்.

மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று பலராலும் தொடர்ந்து ஆலோசனை சொல்லப்பட்டு வருகிறது. இதில் நகரத்தில் வாழ்ந்துகொண்டு அல்லது கிராமத்தில் இருந்தவாறே கூடுதலாக சில தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள், முழுநேர விவசாயம் செய்பவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள் என இரண்டுவகை உண்டு.

தென்னை, மா, மாதுளை, கொய்யா, வாழை, முருங்கை, சவுக்கு, யூகலிப்டஸ், மலைவேம்பு போன்றவற்றை பெரும்பாலும் absentee landlords  எனப்படும் நகரவாழ் விவசாயிகள் விரும்புகின்றனர். அரசாங்கத்தின் கணிசமான மானியங்களை உறிஞ்சிக்கொள்ளும் செல்வாக்குப் பெற்றவர்களும் இப்பிரிவினரே.

மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்), செங்காந்தள் மலர் (கண்ணுவலிக் கிழங்கு), பூனைமீசைச் செடி, கீரைகள் போன்றவற்றை ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முழுநேர விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சந்தை ஏறி இறங்கும் என்பதைத் தெரிந்தே இதில் ஈடுபடுவதால் பெரும் இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமானாலும் சரி, அடக்கி வாசிக்கின்றனர்.

உலக வர்த்தக மையத்துடன் இந்தியாவும்  இணைந்திருப்பதால் பல விளைபொருட்கள் சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை விலையைவிட சாலமன் தீவுகளில் இருந்து வரும் கொப்பரை நம்மைவிட நான்கில் ஒருபங்கு விலைக்கே கிடைக்கிறது. எங்கு மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விளைபொருட்களை இறக்குமதி வரி விதித்து தடுக்க முடியாது என்பதால், உள்ளூர் கொப்பரையின் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உள்நாட்டு விவசாயிகளைக் காப்பதாக நினைத்து நாம் இறக்குமதியைத் தடுத்து நிறுத்தினால் ஏலக்காய், மஞ்சள் போன்ற வாசனைத் திரவியப் பயிர்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தக மையத்தின் வாயிலாக விதிக்கப்படும்.

வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் (இடுபொருட்களுக்கான மானியம் வழங்குவதில் உள்ள சிக்கலான கணக்கீடுகள் காரணமாக) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலக வர்த்தக மையத் தலையீடுகள் குறைவு. உதாரணமாகத் தேங்காய் ஏற்றுமதி, இறக்குமதியைக் காட்டிலும் தேங்காய் எண்ணெயில் கட்டுப்பாடுகள் குறைவு. இந்தியாவிலிருந்த பல ஆயிரம் கோடிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் சீனாவைக் காட்டிலும் நாம் வெகுதூரம் பின்னே இருக்கிறோம்.

மூலிகைப் பயிர்களுக்கான சர்வதேச டிமாண்ட் வருடந்தோறும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாவது குஜராத், இராஜஸ்தானிலிருந்து இசப்கோல் என்ற மூலிகை என்றால் அதற்கடுத்த இடத்தில் இருந்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது  தமிழகத்தில் இருந்து செல்லும் சென்னா இலைகள்தான்.

மருந்துக்கூர்க்கன், முருங்கை இலைப் பொடி, பூனைமீசைச் செடி, ஃபேசிஃபுளோரா செடி, வல்லாரை, அமுக்கராங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு  என பலவும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு ஏற்றுமதியாகிறது. நம்மிடம் ஒவ்வொரு பயிரிலும் உள்ள முக்கிய செயல்படு மூலப்பொருளை (active-principle) பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பம் இல்லாததால் பல அரிய வேளாண் விளைபொருட்கள் அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சிறு விவசாயிகள் இடைத் தரகர்களைத் தவிர்த்து நுகர்வோருக்கு நேரடியாக சந்தைப்படுத்துதலில் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த மாடல் நமது உழவர் சந்தைதான். இதன் எண்ணிக்கையை அதிகரித்து அதிலுள்ள சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்து விற்பனை நேரத்தை மதியத்துக்கு மேல் ஆரம்பித்து இரவு எட்டு மணி வரைக்குமாக செய்தால் நுகர்வோருக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் மிகச்சிறந்த பயன் தரும். சிறு விவசாயிகளும் பல புதிய வெள்ளாமையை ஆரம்பித்து அந்தந்த ஊரில் உள்ள வரவேற்புக்குத் தக்கபடி சாகுபடியைத்  தகவமைத்துக்கொள்வார்கள்.

அரசாங்க விழாக்கள், பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு உழவர் சந்தைகளிலிருந்தே காய்கறிகளை வாங்க வேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டால் சிறு குறு விவசாயிகள் & அதாவது நேரடியாக உழவில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்கள் & வேறு தொழில்களுக்குச் செல்லும் எண்ணிக்கை குறையும். இத்தகைய முன்னெடுப்புகள் இரு தரப்புக்குமே பலன் உண்டாக்கும். இராணுவத்தின் தேவைகளில் குறிப்பிடத்தக்க அளவு உழவர் சந்தைகளில் இருந்து செல்கிறது என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தையில் கடை போட விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தைப் பின்பற்றும்போது அனைத்து சமூகத்தினரும் ஏற்றமடைய முடியும்.

உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற மாடலை நபார்டு வங்கி மூலம் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு உ.உ.க-வுக்கும் நபார்டு வங்கி பின்வாசல் மானியமாக பத்து இலட்ச ரூபாயை வழங்கும். அது தவிர சில இலட்சம் செலவினங்களை நபார்டு ஏற்கிறது. ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து தங்களது விளைபொருட்களை நேரடியாகவோ மதிப்பு கூட்டியோ, தங்களது கம்பெனி பெயரில்  சந்தைப்படுத்தும் மாடல் என்பதால் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது தோல்வியுறும் மாடல் ஆகும். சாதி இல்லாமல் இந்திய கிராமமும், விவசாயமும் இல்லை என்பதால் இந்த உஉக மாடலில் சாதி நுண்ணிய அளவில் நுழைந்து பெரும் பிளவு சக்தியாக நிற்கிறது. பல உஉக&கள் மூடுவிழா காணும் நிலையில் உள்ளன.

உஉக&களை ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து நடத்துவதற்கும் மூலதனமும், தொடர் செலவினங்களும் அதிகம். அடுத்தடுத்த விரிவாக்கத்தின்போது அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து நிற்கும் சவலைப்பிள்ளையாகவே ஒவ்வொரு ஊரிலும் வளர்ந்து வருகிறது. உஉக என்பது கம்பெனி அமைப்புக்குள்  செல்வதால் அதிகாரம் மேல்மட்டத்தில் குவிவதுடன், தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

இதை ஒப்பிடுகையில் உழவர் சந்தை என்பது decentralized, lean management  மாடல். உற்பத்தி, விற்பனை குறித்த  முடிவு எடுத்தல் அத்தனையும் அந்தந்த விவசாயி கையிலேயே இருப்பதால் நேரமும், அலைச்சலும், தேவையில்லாத சர்ச்சைகளும் தவிர்க்கப்படுகிறது.

நூறு விவசாயிகளிடம் தேங்காய் வாங்கி, ஒரு நிறுவனம் எண்ணெய் ஆட்டி விற்று இலாபத்தைப் பிரித்து அளிக்கும்போது அதில் இயக்குநர் மட்டத்தில் உள்ளவர்கள் இதை நாமே தனியாகச் செய்தால் என்ன என்று நினைப்பது இயல்புதானே. அப்படி யாராவது ஒரு இயக்குநர் எண்ணெய் ஆலை அமைத்து விவசாயிகளிடம்  நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அங்குள்ள உஉக மூடுவிழா கண்டுவிடும். பல ஊர்களில் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.

இன்று venture capital உதவியுடன் B2B, B2C மாடலில் அலைபேசி செயலி வழியாக வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த பல நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனி மாடலில் சந்தையில் நுழைந்துள்ளன. இதில் சம்பளமும், இதர செலவினங்களும் அவர்கள் வாங்கி விற்கும் மாங்காய், தேங்காயிலிருந்தே வரவேண்டும் என்பதோடு பணம் போட்ட முதலீட்டாளருக்கும் இலாபத்தையும் காட்ட வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இலாபம் எங்கிருந்து வரும் என்பதை யோசித்தால் இந்த கம்பெனிகள் கையிருப்பு கரையும்வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சூப்பர் மார்க்கெட்டுகளின்  (F&V (Fruits & Vegetables) ) பிரிவுகளும் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் உள்ளன. இவை அதிலுள்ள மற்ற பிரிவுகளுடன் செலவினங்களைப் பகிர்ந்துகொள்வதால் பார்ப்பதற்கு கொஞ்சம் வெற்றிகரமாகத் தோன்றலாம்.

பொதுவாக வறட்டு கம்யூனிசம் பேசிப்பேசியே நாம் எதார்த்தத்தை மறந்து வீணாகப் போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தரகு முதலாளிகள், புரோக்கர்கள், கமிஷன் மாமாக்கள் என்று விற்பனைச் சங்கிலியில் உள்ள தவிர்க்க முடியாத ஒரு பிரிவினரைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் செயலையே மக்கள் செய்கின்றனர். இடைத்தரகர்கள் என்பவர்கள் தங்களது முதலை இறக்கி விற்பனைச் சங்கிலியில் ஒரு சிறிய அளவிலான ரிஸ்க்கை ஏற்றுக்கொள்கின்றனர். தினசரி ஐம்பது கிலோ பப்பாளி உற்பத்தி செய்யும் விவசாயி உழவர் சந்தை வாயிலாக விற்கலாம். ஆனால் தினசரி ஒரு டன் உற்பத்தி செய்பவர் அதை எப்படி அழிப்பார்?

அரசாங்கம் perishable commodity  விற்பனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட என்றைக்குமே முடியாது. இலாபம், நட்டத்தை யார் ஏற்றுக்கொள்வது என்பதைப் பதினைந்து நிமிடங்களில் முடிவுசெய்து அதை அமுல்படுத்தியாக வேண்டும். நான்கு மட்டங்களில் ஒப்புதல் பெற்று நடத்தப்படும் காரியமல்ல என்பதால் இடைத்தரகர்கள் தவிர்க்க முடியாத சக்திகள் ஆகிவிடுகின்றனர். கேரளாவிற்கு பத்து டன் பப்பாளி வாங்கி அனுப்பும் தரகர், பப்பாளியை அனுப்பும் லாரி விபத்தில் சிக்கினாலும் சரி, அங்குள்ள வியாபாரி பணம் தராமல் ஏமாற்றினாலும் சரி, இழுத்தடித்தாலும் சரி, பேசியபடி இங்குள்ள விவசாயிக்கு செட்டில் செய்தாக வேண்டும். இந்த ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் புரோக்கர் ஆகலாம். பல விவசாயிகள் புரோக்கர்களாக பகுதிநேர வேலை செய்துவருவது எல்லா கிராமங்களிலும் உண்டு.

ஒரு ஊரில் ஒரு ஹார்டுவேர் கடை மட்டும்  இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கூடுதலாக இரண்டு கடைகள் திறக்கப்படும்போது போட்டி காரணமாக நுகர்வோருக்கு விலையைக் குறைத்து விற்றாக வேண்டும். உடனே, இந்த வியாபாரிகள் இரகசியமாக சங்கம் அமைத்து கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு விற்பார்கள் என்ற ஸ்டேண்டர்டு வசனம் வரும்.

அங்குதான் நமது சாதி அமைப்பு நுண்ணியமாக செயல்படுகிறது. கடைக்காரர்கள் வெவ்வேறு சாதியாக இருந்தால் நிச்சயம் இரகசியக்குழு அமைக்க மாட்டார்கள். என்னதான் சொந்த சாதிக்காரனாகவே இருந்தாலும் மூட்டைக்குப் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து சிமென்ட் வாங்கி வீடு கட்ட யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

இதையே வேளாண் விளைபொருட்கள் விற்பனையில் பொருத்திப் பாருங்கள். சொந்த சாதிக்காரன் வியாபாரி என்பதற்காக உங்களிடம் ஓர் ஏக்கர் பரப்பளவில் இருபது டன் தர்பூசணி விளைந்து நிற்கையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுப்பீர்களா அல்லது ஸ்பாட் பேமன்ட் கொடுத்து எடுக்கத் தயாராக இருக்கும் வேறு சாதிக்கார வியாபாரிக்குக் கொடுப்பீர்களா?

இடைத்தரகர்களுக்கு கொழுத்த பணம் இலாபமாகச் செல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியெனில் நாம் அதிகமான இடைத்தரகர்களை உண்டாக்கும்போது மட்டுமே அவர்களுக்கிடையிலான போட்டியில் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் கணிசமான இலாபம் கிட்டும். இன்று venture capital  பணத்துடன் களமிறங்கியிருக்கும் அத்தனை கம்பெனிகளும் இடைத்தரகர்களே. Perishable commodity  தரகு தொழிலில் கம்பெனியைக் காட்டிலும் தனிநபர்களின் செயல்திறனே அதிகமாக இருக்கும். கம்பெனிகள் விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் அதிகளவில் வாங்கி, கிட்டங்கிகளில் வைத்து விலை ஏறும்போது விற்று காசு பார்த்தால் மட்டுமே உண்டு. அதுவும் ஒருவகையில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் ஒரு buffer -தான். விலை சரிந்த காலங்களில் அந்த கம்பெனிகள் அடிமாட்டு விலைக்காவது வாங்காவிடில்,  விளைபொருட்களை வயலிலேயே வீசி எறிய வேண்டிய நிலைமைதான் விவசாயிகளுக்கு. விலை ஏறும்போது சந்தை விலையைக் காட்டிலும் ஐந்து, பத்து குறைவாக விலை வைத்து கிட்டங்கிகளில் உள்ள சரக்கைக் கம்பெனிகள் தள்ளிவிடுவதால் நுகர்வோருக்கும் சிறிது இலாபமே.

சந்தைப்படுத்துதலில் நிறைய இளைஞர்கள் இடைத்தரகர்களாக நுழைய வேண்டும். வெறும் செல்போனை வைத்துக்கொண்டு தினசரி ஐம்பதாயிரம் இலாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் எனில், எத்தனை இளைஞர்கள் இதில் நுழைந்து இலாபத்தைப் பிரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

சந்தைப்படுத்துதல் என்றதும் வீடுகளுக்கு காய்கறி, மளிகைச் சாமான்களை டெலிவரி செய்வதையே பெரிதாக ஊடகங்களில் பேசுகின்றனர். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. வீட்டில் அடைந்து கிடக்கும் இந்திய குடும்பத்தலைவிகளுக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கோ, சந்தைக்கோ, அருகிலுள்ள கடைக்கோ சென்று வருவதுதான் பொழுதுபோக்கு. அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கினாலே போதும் என்று சொல்லி, செய்துகாட்டிய பிக் பஜார் கிஷோர் பியானி போன்றவர்களும் இதே சந்தையில்தான் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

மார்ச், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com