வைகோ புதுக்கட்சி தொடங்க நினைத்த காலம் அது. சட்டக்கல்லூரி மாணவர்களாக இருந்த நாங்கள் சென்னையில் நடந்த ஒரு விழாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு இராசு அண்ணன் நின்று கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும், ‘உங்களைத் தேடிக்கொண்டு இருந்தேன்' என்றார். ‘என்ன அண்ணே!' என்றேன். ‘அகாலிதளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வேண்டும்' என்றார். ‘எதற்கு?' என்றேன். ‘அதில் தான் புரட்சிகர முழக்கங்கள் இருக்கும்' என்றார். ‘இப்போது எதற்கு?' என்றேன். ‘வைகோ கட்சி ஆரம்பிக்கப் போகிறார், அதனுடைய தேர்தல் அறிக்கைக்கு வேண்டும்' என்றார்!
அதன்பிறகு முன்போ பின்போ ‘அசைட்' இதழை எனக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் குறித்து ஏதோ ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
எதையாவது பேசும் போது, ஜெயப்பிரகாஷ் நாராயண், நம்பூதிரிபாத், மதுலிமாயி என்று அவர்களது மேற்கோள்களை அள்ளி வீசுவார். திடீரென்று, 'சம்பத் என்ன சொல்வார்ன்னா..‘ என்று ஆரம்பிப்பார். அவர் சொல்வது, ஈ.வெ.கி.சம்பத் ஆக இருக்கும். மிகப்பழைய கட்டுரைகள், புத்தகங்களைச் சொல்லி எடுத்துத் தரச் சொல்வார்.
இதில் மறக்க முடியாதது...
மதுரை மாநாடு என்று நினைக்கிறேன். கலைஞர் மேடைக்கு வரப்போகிறார். ‘தலைவர் வரப்போகிறார், நாற்காலியைத் துடையுங்கள்' என்று ஒரு நிர்வாகி கட்டளை இடுகிறார். தொண்டர் படையைச் சேர்ந்தவர் வந்து நாற்காலியைத் துடைக்கிறார். அப்போது இராசு அண்ணன் சொன்னதை அப்படியே சொல்கிறேன்....
“காங்கிரஸ் காரியக் கமிட்டி நடந்துட்டு இருக்கு. அவங்க எல்லாம் தரையில திண்டு போட்டு அதுல உட்கார்ந்து தான் பேசுவாங்க. தனக்கு ஏதோ உட்கார கஷ்டமாக இருந்ததா பிரதமர் நேரு நினைத்தார்.நெளிந்து நெளிந்து உட்கார்ந்தார். அங்க இங்க பார்த்தார். இதை யாருமே கவனிக்கல.
காமராசர் மட்டும் தான் கவனிச்சார். உடனே காமராசர், எழுந்து போய் எங்கேயோ கிடந்த ஒரு தலையணை திண்டுவை எடுத்துட்டு வந்து நேருவுக்கு கொடுத்தார். நேரு வசதியாக உட்கார்ந்து கொண்டார்.
அதேமாதிரி தலைவர் கலைஞர் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி... எமர்ஜென்சி காலம். கோபாலபுரம் வீட்டுக்கே அனைவரும் வர பயந்த காலம். திருச்சியில் இருந்து அன்பிலார், கழகத் தொண்டர்களை அழைத்து வந்தார். வந்தவர்கள் தலைவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள நினைத்தார்கள். ‘நாங்கள் நிற்கிறோம், தலைவரை உட்காரச் சொல்லுங்கள்' என்று சொல்லி ஓரமாகக் கிடந்த ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டார்கள். அது ரொம்பவே தூசியாக இருந்தது. அதில் உட்காரப் போன கலைஞரை அன்பிலார் தடுத்து... தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து அந்த நாற்காலியைத் துடைத்தார். அதன்பிறகு தான் உட்காரச் சொன்னார் கலைஞரை!
இப்படிப்பட்ட மனிதர்களால் வளர்ந்த இயக்கம் இது'' என்றார் இராசு. இப்படி பலநூறு அரசியல் கதைகளைச் சொன்ன கதைசொல்லி தான் ‘தாயகம்' இராசு, விருத்தாசலம் இராசு, ரொட்டிக்கடை இராசு என்கிற எங்களது இராசு அண்ணன்.
சட்டக்கல்லூரியில் பயின்ற காலத்தில் என்னைப் பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தவர் அண்ணன் இராவணன். ஆசிரியர் வீரமணி, வைகோ, சுப.வீரபாண்டியன், விடுதலை, அருள்மொழி, பெல் ராசன், வரதன் என பலருக்கும் அறிமுகம் செய்துவைத்தார். 1988ம் ஆண்டு நான் சென்னை வந்தேன். சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டே விடுதலைக்குயில்கள், இனி, போர்வாள் ஆகிய இதழ்களில் பணியாற்றினேன். அன்று திக, திமுக, தமிழீழ ஆதரவுக்கூட்டங்கள் எதுவாக இருந்தாலும் விடுதலை, இராவணன், அருள்மொழியுடன் நானும் இருப்பேன். இராசு அண்ணன், விருத்தாசலத்தில் இருந்து வந்துவிடுவார். ஒரு மஞ்சள் பையில் பிஸ்கெட், ரொட்டி,ரஸ்க் ஆகியவற்றுடன். செவிக்கும் வயிற்றுக்கும் பிரச்னை இல்லாத காலம் அது.
வெள்ளைக் கதர் சட்டை, கதர் வேட்டி, கையில் திமுக வண்ணம் பூசிய சிறு வெள்ளைத்துண்டு மற்றும் மஞ்சள் பை. அதில் ரொட்டியுடன் சில புத்தகங்கள், பிரெண்ட் லைன் மாதிரியான இதழ்கள் இருக்கும். அண்ணனுக்கு அப்போது ஐம்பதைத் தாண்டிய வயது. நான் இருபதில் இருந்தேன். தன்னை விட மூத்தவராக என்னை நினைத்துக் கொண்டு பேசுவார். அவர் வாயைத் திறந்தால் பத்து புத்தகத்தை திறந்து படிப்பதாகப் பொருள். அவ்வளவு செய்திகளைச் சிந்துவார்.
பள்ளிக்காலத்திலேயே திராவிட இயக்கச் சிந்தனைகள் அவரது உள்ளத்தில் பதிந்தன. விருத்தாசலத்தில் இருந்த ‘திராவிட பாசறை மன்றம்' என்ற அமைப்பை அந்த ஊரில் ஒரு தோழர் நடத்தி வந்தார். அங்கு வரும் திராவிட இயக்க இதழ்களை படித்திருக்கிறார். மிகச் சிறுவயதிலேயே 1957
சட்டமன்றத் தேர்தலில் வேலை பார்த்தார். கொஞ்சம் வசதியான வீடு இவருடையது. அப்பா காங்கிரஸ்காரர். அதனால் திமுக வட்டாரத்தில் இவர் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார்.இவருக்கு 19 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார். அதில் இருந்து தீவிர அரசியலுக்கு வந்தார்.
பழைய ஆட்களுக்குத் தெரியும், இன்றைய ஹெச் ராஜாக்களை விட மிகமோசமான பேச்சா ளர்கள் விபூதி வீரமுத்துவும் அணுகுண்டு அய்யாவும். திராவிட இயக்கத்தைத் திட்டித்தீர்த்த கெட்டி நாக்குகள் இவை. இவர்களது எதிர்ப்பையே பார்த்ததால் தான் ராஜாக்கள் மாலன்கள் நாராயணன்கள் ராகவன்கள் பொருட்டாக இல்லை இன்று. அத்தகைய விபூதிவீரமுத்து விருத்தாசலத்துக்கு பேச வந்தார். காங்கிரசு கட்சியின் கொடியை புகழ்ந்து பேசியவாறே தனது மடியில் இருந்து ஒரு கொடியை எடுத்தார். அது திமுக கொடி. கூட்டம் கேட்டுக்கொண்டு இருந்த இராசு அண்ணன் தயார் ஆனார். விபூதி என்ன செய்வார் என்று தெரியும். எழுகிறார் ராசு. கொடியை விரிக்கிறார் விபூதி.மேடைக்கு ஓடுகிறார் ராசு. திமுக கொடியைக் கொளுத்தப் போகிறார் விபூதி. மேடையில் நின்று கொண்டு இருக்கும் தியாகராஜன்,பாலகிருஷ்ணனைத் தள்ளி விடுகிறார் ராசு.தீ பொருத்துகிறார் விபூதி. அவரைத் தள்ளிவிட்டு கொடியைப் பறிக்கிறார் ராசு. அதன்பிறகு கூட்டம் நடக்கவில்லை. பிரச்னை, கலகம் ஏற்பட்டது. தலைமறைவானார் ராசு. ஐந்து நாட்கள் தலைமறைவாக இருந்தவர் அவராகவே விருத்தாசலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
நீதிபதி அவருக்கு 86 ரூபாய் அபராதம் விதித்தார். கையில் பணம் இல்லை. பதினைந்து நிமிடம் அவகாசம் கேட்டார். நீதிபதி தந்தார். வெளியில் வந்தவர், விருத்தாசலம் வீதிகளில் துண்டு ஏந்தி நன்கொடை திரட்டினார். பணத்தைக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் கட்டினார். விடுதலையானார். விருத்தாசலத்தில் வீர ராசுவாக வலம் வர ஆரம்பித்தார்.
வெளியில் வந்தவரால் சும்மா இருக்க முடியுமா? ‘இளம் துருக்கியர்கள் ' என்ற அமைப்பை ஆரம்பித்து விடுதலை வீரர்களின் வரலாற்றை இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு பாடமாக எடுத்தார். அவரை விருத்தாசலம் வாசிகள் ‘கரிபால்டி' என்றார்கள். உள்ளூர் கரிபால்டி, வெளியூர் கரிபால்டிகளுக்கும் தெரியத் தொடங்கினார். கலைஞர், நாவலர், பேராசிரியர் என அனைவர் அறிமுகமும் கிடைத்தது. 1967 தேர்தலில் கழக வெற்றிக்காக வேலை பார்த்தார். 1976ல் கழக ஆட்சி கலைக்கப்பட்டபோது எங்கும் கூட்டங்கள் நடத்தத் தடை இருந்தது. 1976ம் ஆண்டு ஆகஸ்ட் சுதந்திர தினம் என்று காவல்துறை அனுமதி பெற்று ‘தத்துவங்களின் தேரோட்டம்' என்ற தலைப்பில் டி.கே.சீனிவாசனை( இவர் தான் டி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையார்) பேச வைத்தார் ராசு.அடுத்த மாதம் விருத்தாசலத்துக்கு ஒரு திருமணம் நடத்தி வைக்க வந்தார் கலைஞர். அதற்கு முந்தைய நாள் ராசு கைதானார். அந்த திருமண மேடையில் இதனைக் கலைஞர் அறிவித்தார். ஐந்து மாதம் சிறையில் இருந்தார். 1982-ல் ஒன்றியச் செயலாளர் ஆனார். 1980-களில் ஈழப்போராட்டம் தீவிரமான காலம். 1987 காலம் மிக நெருக்கடியான காலம். இந்திய அமைதிப்படை சென்றது, இங்கு அடக்குமுறைகள் தொடங்கின. இந்த நேரத்தில் தான் எனக்கு அண்ணன் அறிமுகம் ஆனார். அவரைப் பார்த்ததுமே பிடித்துப் போனது. அதற்குக் காரணம் அவரது தியாக வாழ்க்கைதான்!
எனது திருவல்லிக்கேணி அறையில் அண்ணனோடு நானும் நெய்வேலி அண்ணன் செந்திலதிபனும் ஒருநாள் பேசிய நான்கு மணிநேரம் என்பது திராவிட இயக்கத்தின் முழு வரலாற்றை திரும்பிப் பார்ப்பதாக அமைந்தது!
திருமணம் செய்து கொள்ளவில்லை அவர். 'திராவிட நாடு வாங்கித்தான் திருமணம் என்று சபதம் செய்து கொண்டவர்கள் நாங்கள்' என்று சொன்னார் அண்ணன். 'அப்படியானால் திருமணம் இல்லை அப்படித்தானே' என்றேன். தோளில் அடித்துச் சிரித்தார். தந்தை பெரியாரிடம் இவரும் 12 இளைஞர்களும் இரத்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்களாம். அதில் இருந்து இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் உறுதியாக இருந்தவர் அவர். விடுதலை & அருள்மொழி திருமணம் நடந்து அவர்களோடு விருந்துக்கு விருத்தாசலம் சென்ற மூன்றாவது நபர் நான். ‘தாயகத்தில்' மரம் நட்டோம் அன்று. அன்றைய தினம் தான் அந்த நகரத்தில் அண்ணனுக்கு இருக்கும் செல்வாக்கை முழுமையாக பார்க்க முடிந்தது. திமுக ஒன்றியச் செயலாளரான அவர், அந்த ஊர்த்தலைவரைப் போல மதிக்கப்பட்டார். அவர் கழகத்தவராக இருந்தாலும் ஊர்க்காரர்கள் அனைவரும் அவரைப் பொதுவானவராகவே பார்த்தார்கள். இராசு அண்ணனாக அல்ல, விருத்தாசலத்தின் அண்ணனாக இருந்தார் அவர்.
விபூதிவீரமுத்துவிடம் கொடி பறிக்கும் அளவுக்கு தீவிரமாக இருந்த ராசு அண்ணன், 1993ல் திமுகவிலிருந்து விலக அவரது ஈழ ஆதரவு நிலைப்பாடு காரணம் ஆனது. விருத்தாசலத்தில் அவர் அமைத்த வீட்டின் பெயர், ‘தாயகம்'. அதுதான் மதிமுக அலுவலகத்தின் பெயராக இருக்கிறது.
1998 - ல் மீண்டும் திமுகவில் இணைந்தார் அண்ணன். இவரைப் பார்த்ததும் எழுந்து நின்று கட்டி அணைத்துக் கொண்டார் கலைஞர். இந்தக் காலக்கட்டத்தில் நானும் முழுநேரப் பத்திரிகையாளனாக ‘விகடன் பேப்பர்' மாலை நாளிதழின் செய்தியாளனாக ஆகிவிட்டேன். அண்ணனோடு தொடர்புகள் இல்லை. ஆனால் அவர் அறிவாலயம் வந்துள்ளார் என்று தெரிந்ததும் அங்கு சென்று அவரை் பார்த்தேன். விருத்தாசலம் செல்வராஜ் (தகவல் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!) மறைவை ஒட்டி வீரபாண்டியார் விருத்தாசலம் வருகிறார். அங்கு ராசுவைச் சந்திக்கிறார். அதன்பிறகு தான் மீண்டும் திமுகவில் இணையும் முடிவை எடுக்கிறார் ராசு அண்ணன். இதனை வைத்து, ‘மயானக்கரையில் நடந்த மனமாற்றம்' என்ற செய்தியை 'விகடன் பேப்பர்' நாளிதழில் வெளியிட்டேன். அதன்பிறகு எப்போது சென்னை வந்தாலும் எனது திருவல்லிக்கேணி அறைக்கு வந்து சில மணிநேரம் தங்கிச் செல்வார். அப்போதும் பழைய கதைகள் அதிகம் பேசுவார். அதைக் கேட்பதில் தான் நானும் ஆர்வமாக இருப்பேன்.சர்க்கரைச் சத்து அவரது உடலை வாட்டி வதைத்தது. மருத்துவமனையில் சென்று சந்தித்தேன்.
உற்சாகம் தரும் சந்திப்பாக அது இல்லை. கரிபால்டி தனது கடைசிக்காலத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதாகவே உணர்ந்தேன். ஆனந்தவிகடன் பணியில் இருக்கும்போதுதான் திடீடென்று அந்தத் தகவல் வந்தது( 2000). ‘ராசு அண்ணன் இறந்துவிட்டார், நானும் விடுதலையும் ‘நக்கீரன்' காமராசும் போய்க்கொண்டு இருக்கிறோம்' என்று இராவணன் அண்ணன் தகவல் சொன்னார். நேரில் செலுத்த முடியாத எனது அஞ்சலியை பிற்காலத்தில் நான் எழுதிய, ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்' புத்தகத்தில் செய்தேன். தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூராரைப் பற்றிய புத்தகம் அது. அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் பெரியாரின் சமூகநீதி சிந்தனை கொண்டவர். அதனாலேயே காங்கிரஸ்காரர்களால் பதவி பறிக்கப்பட்டவர். அவர் பதவி விலகியதை வைத்து பேரறிஞர் அண்ணா தீட்டிய தலையங்கம் தான் ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்' என்பதாகும். அந்தத் தலையங்கம் அன்றைய காங்கிரஸ் (1949) அரசால் தடை செய்யப்பட்டது. அந்த வரலாற்றை 2007 - ம் ஆண்டு நான் புத்தகமாக எழுதியபோது விருத்தாசலம் இராசு அண்ணனின் நினைவுகளுக்கு என்று அதில் குறிப்பிட்டேன். ‘உடலில் கதராடை, உள்ளத்தில் கறுப்பு சிந்தனை கொண்ட' என்று அதில் குறிப்பிட்டேன். இயக்கத்துக்கு நான் என்ன செய்தேன் என்று மட்டுமே சொன்னவர் அவர். இயக்கம் தனக்கு என்ன செய்தது என்ற கேள்வியை மறந்தும் எழுப்பாதவர் அவர்.
என்னைப் பொறுத்தவரை அண்ணன் அல்ல அவர், ‘அண்ணா'!
ஜனவரி, 2020.