விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற கேலி சரியல்ல!

விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற கேலி சரியல்ல!

Published on

நடிகர்களின் பெயரில் ரசிகர் மன்றங்கள் இருப்பதை பைத்தியக்காரத் தனமாகக் கருதியதே கிடையாது. உண்மையில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் செய்கிற சிலகாரியங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். தாங்கள் போற்றும் நடிகரின் பிறந்த நாளன்று இவர்கள்  ரத்ததானம் செய்வதும் அன்னதானங்கள் செய்வதும் வேறுபல உதவிகள் செய்வதும் பிரமிப்பாகவே இருக்கும்.

எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேனீத் தொண்டர்கள் போல் தேர்தல் சமயத்தில் பணிபுரிவதைப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்த பலர் எங்கள் பகுதியில் நல்ல பசங்கள் என்று ஏழைப்பெண்களின் நற்சான்று பெற்றவர்களாகவே  இருந்தனர்.

எங்கள் பகுதியில் அறிஞர் அண்ணா தமிழ் மன்றம் என்றும் புரட்சித் தலைவர் உடற்பயிற்சி- கலைவளர் மன்றம் என்றும் இரு பெயர்ப் பலகைகள் தாங்கிய அமைப்புகள் இருந்தன. தமிழ் மன்றத்தினர் நடத்தும் சிறிய அறையில் பெரியார் - அண்ணா, லெனின் படங்கள்! உடற்பயிற்சி மன்றத்தில் நீண்ட வாளுடன் சாண்டோ தோற்றத்தில் எம்.ஜி.ஆர் படம் மட்டுமே. அங்கே உடற்பயிற்சிக்கான கருவிகள்! மின்விசிறி இல்லாத சிறிய இடம். வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி நடக்கும். பக்கத்தில் அண்ணா மன்றத்தில் குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்கள் நடக்கும். ஆரம்பத்தில் அந்த இடத்தைக் கடந்து செல்கையில் இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று நினைத்தேன்.

ஆனால் பொங்கல் திருநாள், அண்ணா, பெரியார் பிறந்தநாள் போன்ற தினங்களில் புரட்சித் தலைவர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தெருக்களில் ஏணிகளுடன் திரிவார்கள். ஆங்காங்கே தோரணங்கள் கட்டுவார்கள். ‘தம்பி அங்கே கட்டு.. இன்னும் சற்று இழுத்துக்கட்டு' என்று அவர்களை அண்ணா மன்றத்து இளைஞர்கள் வேலை வாங்குவார்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து அன்புடன் மசால் வடையும் டீயும் சாப்பிடுவார்கள். அவர்களிடையே ஒருவித அன்பு - ஒற்றுமை!

எம்ஜிஆர் மன்றத்தினர் அண்ணா மன்ற இளைஞர்களிடம் ஆவலுடன் அரசியல் சந்தேகங்களைக் கேட்பார்கள். பார்த்திருக்கிறேன்.

தேர்தல் சமயத்தில் எம்ஜிஆர் மன்றத்தினர்தான் ஆட்டோவிலும் டாக்சியிலும் ஏன் சைக்கிளில் டபுள்ஸ் அடித்தும்கூட வாக்காளர்களை வாக்குச்  சாவடிக்கு கொண்டுவருவார்கள்.

எம்ஜிஆர் மன்றத்தில் இருந்த ஒரு ஊமை இளைஞரை இன்றுவரை மறக்கவே இல்லை. தெருவில், மிக அழகாக கலர் சாக்பீஸில் படங்கள் வரைவார்! இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இந்தி  ஒழிக என்று வீட்டுச் சுவர்களில் எழுதித் தீர்த்தார். எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது வாள் ஏந்திச் சுருள் முடியுடன் அவர் வீரமாக நிற்கும் படத்தைத் தெருக்களில் வரைந்து வெற்றி நமதே என்று தி.மு.க கொடியையும் தீட்டினார்! அந்தத் தேர்தலின்போது வீட்டுவாசலில் கோலம் போடும் இடத்தில் உதயசூரியன் சின்னத்தை வெள்ளை பெயிண்டால் வரைந்துவிட்டார்! இத்தனைக்கும் இவர் தையல் கடையில் காஜா தைப்பவர். தையல்காரரோ ஒரு தேசியவாதி! ‘‘ அவன் நல்ல பையன், கொள்கை  அவன் இஷ்டம்!' என்று அவர் கூறுவார்.

அண்ணா பெரியார்  பிறந்தநாட்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு  இவர்களே மேடை போட்டனர்.

உண்மையில் தி.மு.கழகத்தின் ஆணி வேர் போன்று அவர்கள் செயல்பட்டனர். தி.மு.க. பிளவுபட்ட போது அண்ணா மன்றம் காணாமல் போனது. உடற்பயிற்சி மன்றம் அ.தி.மு.க வட்ட கிளைக் கழகமாக மாறிற்று!

இது கற்றுக்கொடுத்த பாடம்- ரசிகர் மன்றங்கள் என்பது கேலிக்குரியது அல்ல. விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அப்போது எதிர்தரப்பில் கேலி பேசியதை ஒப்புக்கொண்டதே இல்லை!

இன்றும் எனக்கு அந்த  மனநிலைதான்! ரசிகர் மன்றத்தவர்கள் அசகாய சூரர்களாக களத்தில் பணியாற்றத் தெரிந்தவர்களே.. எம்.ஜி.ஆர்  வேறு.. ரஜினி, கமல் கதை வேறு  என்று கருத இடமில்லை. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பெரும்பாலும் ஏழைக் குடிசைவாசிகள். இவர்களது ரசிகர்கள் பொருளாதார ரீதியில் வசதி வாய்ந்தவர்களாக இருக்கலாம்.

 எம்.ஜி.ஆர் ரசிகர்களாக தங்கள் பிள்ளைகள் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் தாய்மார்களைப் பார்த்தது உண்டு! ரஜினி, கமல் காலம் மாறுபட்டது என்றாலும் அவர்கள் ரசிகர்களை மதிப்பதில் அதே பாணிதான் தெரிகிறது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அரசியல் ஆர்வம் ஆரம்பம் முதல் இருந்தது ஒன்றுதான் வேறுபாடு. எம்.ஜி.ஆர் பல நல்லொழுக்கங்களை வலியுறுத்தியவர். ரஜினி ஆரம்பத்தில் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தராவிட்டாலும், கடவுள் மீது வைத் திருக்கும் பக்தி, துறவிகளிடம் காட்டும் மரியாதை தாய்மார்களைக் கவர்ந்திருக்கிறது. அவரைப் பின்பற்றி ராகவேந்திரர் மடத்துக்கு போகின்ற இளைஞர்கள் நிறைய!

இவர்கள் சமீப காலமாக அரசியல் விஷயங்களை அலசுகிறார்கள். ஆனால் எந்தக் கட்சிக்காரர் களுடனும் அவர்கள் சேர்வது இல்லை. கட்சிப் பிரமுகர்களும் அவர்கள் உதவியை நாடுவது இல்லை. அவர்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது என்று ஒதுங்கிப் போவார்கள்.

கமல் ரசிகர்கள் நடுத்தர குடும்பத்தினராகத் தெரிகிறார்கள். சந்துமுனையில் நின்று பேசுவதில்லை. கமல் பிறந்தநாள் சமயத்தில் மட்டுமே கண்ணில் படுகிறவர்களாக இருந்தார்கள்.

ஒன்று நிச்சயம். ரஜினி, கமல் கட்சி ஆரம்பித்தால் வாக்காளர்களைத் திரட்டுவதில் இவர்கள் மன்றங்கள் உயிரை விட்டுப் பணிபுரியப் போவது நிச்சயம். மற்ற கட்சிகளுக்கு அப்படிப்பட்ட தொண்டர்கள் இன்று குறைவு! காரணம் அவை எல்லாம் ஆதாயக் கட்சிகள் ஆகிவிட்டன.

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com