விகடன் vs  குமுதம்

விகடன் vs  குமுதம்
Published on

ஆனந்தவிகடன், குமுதம் இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமூகத்தின் மிகமுக்கியமான போட்டிகள், முரண்பட்ட போக்குகளைப்  பற்றிய இவ்விதழின் கட்டுரைத் தொகுப்பு முழுமை அடையாது. இவ்விரண்டு பத்திரிகைகளும் தமிழ்ச்சமூகத்தின் மனச்சாட்சிகளாக இருந்தன. இரண்டுமே தேசியவாதக் கொள்கை கொண்டிருந்த ஆசிரியர்களால் நடத்தப்பட்டவை என்றாலும் கூட வெவ்வேறு அணுகுமுறையைப் பின்பற்றின. அவை தமிழ்ச்சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்கியலின் இரண்டு முகங்கள்.

ஆனந்தவிகடன் குமுதத்துக்கு வயதில் அண்ணன். 1926-ல் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையை இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எஸ்.எஸ்.வாசன் வாங்கி நடத்தினார். இயல்பிலேயே மிகப்பெரிய கலாரசிகரான அவர் ரசனைமிக்க இதழாக, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இதழாக அதை நடத்தினார்.

அக்காலகட்டத்துக்கு ஏற்ப சிறுகதைகள், தொடர்கதைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இதழாக அது இருந்தது. திருவிகவின் நவசக்தியில் பணிபுரிந்த கல்கியை வாசன் விகடனுக்கு 1931ல் அழைத்துவந்தார். கல்கி முதன் முதலில் விகடனில் எழுதிய கட்டுரை, ‘ஓ மாம்பழமே’. கல்கியின் அரசியல் கட்டுரைகள், தலையங்கங்கள் மிக வலிமையானவை. கல்கி விகடனிலிருந்து வெளியேறிய பின்னர் தேவன் தலைமையிலான குழு விகடனைக் கவனித்துக் கொண்டது.

எப்போதும் விகடனின் அட்டையில் ஜோக்தான் போடுவார்கள். மாலியின் தலைமையிலான மிகச்சிறந்த கலைப்பிரிவு அங்கே இருந்தது. இந்த நிலையில்தான் 1947 நவம்பரில் இரு இளம் நண்பர்களான எஸ்.ஏ.பி.அண்ணாமலையும் பார்த்தசாரதியும் இணைந்து குமுதத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் மெல்ல வளர்ந்த குமுதம் 1950களின் நடுவே ஒரு லட்சத்து இருபதாயிரம் என்கிற எண்ணிக்கையைத் தொட்டது. அப்போது விகடன் அச்சிட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐந்துநாடுகளில் அறுபது நாட்கள் என்ற பயணத்தொடரில் தேவன் சொன்னதுபடி 60,000.

ஆனந்தவிகடன் அந்த காலகட்டத்தில் மிகுந்த கட்டுப்பெட்டியான பத்திரிகையாக இருந்தது. குமுதம் பிராமணரல்லாத ஒருவரால் தொடங்கப்பட்டு வெற்றி அடைந்த பத்திரிகையாக உருவெடுத்தது. குமுதம் செய்யும் எதையும் விகடன் செய்யக்கூடாது என்று விகடன் குழுவில் இருந்தவர்கள் நினைத்தார்கள். குமுதமோ எதையும் செய்யக்கூடிய பத்திரிகையாக இருந்தது. புதிது புதிதாக, குறும்புத்தனமாக, கோமாளித்தனமாக செய்வார்கள். அத்துடன் திராவிடநாடு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றிய விவாதம், வாசகர்கள் பங்கேற்கும் போட்டிகள், பரிசுகள், கவர்ச்சிப்படங்கள் என்று குமுதம் களை கட்டிக்கொண்டிருந்த அக்காலகட்டத்தில் விகடன்  அமைதியாக இருந்தது.

குமுதம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் பத்திரிகையாக இருந்தபோதும் அப்போது வளர்ந்துகொண்டிருந்த திமுகவுக்கும் இடம் தந்தது. உண்மையில் குமுதத்தின் வளர்ச்சியை திராவிட இயக்க அரசியலின் வளர்ச்சியுடன்தான் பார்க்கவேண்டும்.

குமுதத்தின் வளர்ச்சியை வாசன் கவனித்தார். அவருக்கு விகடனையும் அப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. 1956-ல் வாசன் மீண்டும் விகடன் அலுவலகத்தின் அன்றாடப் பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தார். விகடனில் இருந்த கவனக்குறைவுகளைச் சுட்டிக்காட்டத்தொடங்கினார். அப்போது டிசம்பர் சீசனில் இசைத்துக்கடா என்று சிறு பகுதிகள் வரும். அது ‘இசைத்துக் கடா’ என்று கவனக்குறைவுடன் அச்சிடப்பட்டதைச் அவர் சொல்லிக் காட்டியதாகக் கூறுவார்கள். விகடன் ஆசிரியர் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இளைஞர்களான மணியன், பரணிதரன் போன்றோர் முக்கியத்துவம் பெற்றனர். குமுதம் செய்யும் எல்லாவற்றையும் நாமும் நுணுக்கமாகச் செய்யவேண்டும் என்ற உத்வேகம் விகடனில் ஏற்பட்டது.

அதுவரை விகடனில் பெரியார் பற்றி எழுதியதே கிடையாதாம். அவருக்கு இடம் கிடைத்தது. 1957-ல் தேர்தலுக்குப் பின்னால் வருக அண்ணாதுரை என்று தலையங்கம் எழுதப்பட்டது. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் தொடருக்கு கோபுலு மிக கவர்ச்சிகரமாக இரட்டைப்பக்கத்தில் வரைந்து விகடன் வாசகர்களுக்குப்  பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார். நேரு பதவி விலகி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற துணிச்சலான தலையங்கம் எழுதப்பட்டது. மு.வ., திரிலோக சீதாராம் போன்ற பல அறிஞர்களின் இலக்கியக் கட்டுரைகளுக்கு முதல்முதலாக இடம் அளிக்கப்பட்டது. பெரும் பணமதிப்பிலான போட்டிகளையும் வாசன் அறிவித்தார். தமிழ்வாணனின் கல்கண்டு பத்திரிகையும் இக்காலகட்டத்தில் பெருவிற்பனை ஆனது. அதன் சர்க்குலேஷன் ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது. தமிழ்வாணனை விகடனில் அழைத்து  ‘மணிமொழி என்னை மறந்துவிடு’ தொடர்கதை எழுத வைத்தார்கள். இந்நிலையில் மெல்ல விகடன் விற்பனை உயர்ந்து இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை சில ஆண்டுகளில் எட்டியது.

குமுதத்துக்குக் கடுமையான போட்டியை விகடன் இந்த காலகட்டத்தில் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

61-ல் வாசன் ஜெமினி ஸ்டூடியோ பணிகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார். (இந்த தகவலை குமுதம் ஆசிரியர் குழு உற்சாகமாகக் கொண்டாடியது என்பது சுவாரசியத் தகவல்). அவரது மகன் எஸ்.பாலசுப்பிரமணியன் பத்திரிகையை அதே தரத்துடன் பார்த்துக்கொண்டார். இரண்டுஆண்டுகள் கழித்து பாலசுப்பிரமணியனும் திரைப்பணிகளில் கவனம் செலுத்த, மணியனும் பரணிதரனும் விகடனில் கோலோச்சினார்கள். குமுதம் இக்காலகட்டத்தில் முதலில் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை  வெளியிட்டது. அடுத்ததாக திராவிட இயக்கத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டது. யாரையாவது தூக்கிப் பிடித்தால் இரு இதழ்கள் கழித்து அவரை போட்டுடைக்கும் ஒரு கட்டுரையையும் குமுதம் வெளியிடும். அது சூடான அரசியல் விவாதங்களில் கவனம் செலுத்திவந்தது. சினிமா செய்திகளும் மிளகாய் கடித்ததுபோல் இருக்கும். குனேஹா என்ற வாசனைத்திரவியத்தை குமுதம் தன் இதழ்களில் தெளித்து தமிழ்நாட்டையே மணக்கவைத்த ‘ஜிம்மிக்’ வேலைகளிலும் ஈடுபட்டது.

எஸ்.ஏ.பியும் வாசனும் ஒருவர் மீது ஒருவர் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள். இருவருமே காங்கிரஸ்காரர்கள்தான். எஸ்.ஏபி. நேரு குடும்பத்தை பெரிதும் நேசித்தார். அதனால்தான் தன் வாரிசுகளுக்கு ஜவஹர், கிருஷ்ணா, விஜயலட்சுமி என்று மோதிலால் நேருவின் வாரிசுகளின் பெயர்களை வைத்தார் என்று சொல்லப் படுவதுண்டு. பொதுவாக ஜெமினி தயாரிப்புப் படங்களை குமுதம் மென்மையான போக்குடன்தான் விமர்சிக்கும் என்பார்கள்.

இந்த காலகட்டத்தில் குமுதம் தன் அட்டையில் இருபக்கமும் சேர்த்து அழகிய பெண்களின் படங்களை வெளியிட்டுவந்தது. விகடன் இன்னமும் ஜோக்தான். அக்காலகட்டத்தில் விகடனுக்கும் குமுதத்துக்கும் என்று தனியான வாசகர்கள் உருவாகி இருந்தார்கள். விகடன் வாங்கும் குடும்பங்களில் குமுதத்துக்கு அனுமதி இல்லை. ஆனால் குமுதத்துக்கு அப்போது கல்விகற்ற முதல்தலைமுறை இளைஞர்கள் வாசகர்களாக உருவாகி இருந்தார்கள். அவர்கள் கடைகளிலேயே குமுதத்தை வாங்கி அங்கேயே வாசித்துவிட்டுச் செல்வார்கள்.  ஆனால் குமுதம் போலவே விகடனும் மாறத்தொடங்கிய பின்னர் இரண்டையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி கிடைக்க ஆரம்பித்தது. மார்புப் பிளவு தெரியும் மகளிர் படங்களை தமிழ்க்குடும்பங்கள் அங்கீகரித்தன. இந்த காலகட்டத்தில் குமுதத்தில் ஓவியர் ஜெயராஜ் படங்களைப் போட ஆரம்பித்தார் என்பதும் முக்கியமான குறிப்பு.

1968-ல் கல்கி பத்திரிகையின் பொன்விழா. அதில் தம்பிவீட்டுத் திருமணம் என்று வாசன் பேசினார். அவ்விழாவில் எஸ்.ஏ.பியும் கலந்துகொண்டிருந்தார். அந்த விழாவின்போது வாசனுக்கு மீண்டும் விகடனில் கவனம் செலுத்தவேண்டும் என்று தோன்றியிருக்கவேண்டும். அந்த வாரமே விகடனில் ஜோக் அட்டை மாற்றப்பட்டு அழகான முருகன் படம் வெளியானது. அடுத்தவாரம் மேலும் சில மாற்றங்களுக்காக விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் பத்திரிகைப் பணிகளைக் கவனிக்க இயலவில்லை. ஓராண்டில் அவர் மறைந்துவிட்டார்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் குமுதம் ஆறுலட்சத்தி எண்பதாயிரம் பிரதிகளை எட்டியது. இந்தியாவிலேயே அதிகம் விற்கும் வாரப்பத்திரிகை ஆனது. ரா.கி. ரங்கராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், ஜா.ரா.சு.வின் அப்புசாமி- சீதாப்பாட்டி கதைகள் என பெரும் கொண்டாட்டமாக குமுதம் இருந்தது. இப்பத்திரிகையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக எழுத்தாளர் குஷ்வந்த் சிங் வாரந்தோறும் இதன் பிரதியைப் பார்ப்பாராம்.

சாண்டில்யனின் தொடர்கதைகள் குமுதத்தில் பெரும் புகழ் அடைந்திருந்தன. விகடனில் இவரையும் கூப்பிட்டு எழுதவைத்தனர். மனமோகம் என்ற தொடர். மணியம் செல்வம்  ஓவியம் வரைந்த முதல் தொடர்கதை இதுதான். ஜெயகாந்தன் விகடனில் கதைகளை எழுதிக் குவித்த காலத்தில் குமுதத்தில் அவரை கட்டுரைத்தொடர் எழுதவைத்தார்கள்.

விகடனில் மணியன் உலகம் முழுக்க சுற்றி மிக அற்புதமான கட்டுரைகளை எழுதி வந்தார். இந்திராவை மிகவும் ஆதரித்து கட்டுரைகள் எழுதினார். இதனால் இக்காலகட்டத்தில் காங்கிரஸ் ஆதரவுத் தோற்றத்துடன் விகடன் காணப்படுகிறது. 70களின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன் தொடர் விகடனில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொடரின் மூலம் குமுதத்தை விகடன் முந்திவிடும் என்று கருதப்பட்டது. நான்குவிதமான பெரிய பெரிய வண்ண போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை. ஆரம்பத்தில் குமுதத்தைவிட விகடன்தான் போஸ்டர்கள் அடிப்பதில் கவனம் செலுத்திவந்தது என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம். குமுதத்தில் ஜெயலலிதா ஒரு தொடரை எழுதினார் என்பதையும் இங்கே சொல்லவேண்டும்.

எழுபத்தியேழில் மணியன் வெளியேறிவிட, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் எஸ்.பாலசுப்பிரமணியன் விகடனைக் கையில் எடுத்தார்.  அதைத்தொடர்ந்து மதன், ராவ் ஆகிய இருவரின் கவனத்தில் விகடன் மெருகேறியது. விகடனின் ஜோக் அட்டை கைவிடப்பட்டு சிக்மகளூரில் போட்டியிடப்படும் இந்திரா காந்தி அட்டையில் இடம் பெற்றார். அடுத்ததாக கருணாநிதியின் நீதிகேட்டு நெடும்பயணம் அட்டையில் படத்துடன் இடம்பெறவே ஆளும் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. இப்போது நாங்கள் ஜோக் போடுவதை விட்டுவிட்டோம் என்று விகடன் அவர்களுக்கு விளக்கமளிக்க நேர்ந்தது.

பின்னர் எம்ஜிஆரை அட்டையில் போட்டார்கள். சமூகப்பிரச்னைகளை அட்டையில் வெளியிட்டார்கள். டாபிகலாக செய்தி வெளியிட்டு குமுதத்துடன் போட்டி போட்டார்கள். மதன் ஜோக்ஸ், கார்ட்டூன்களில் புது எழுச்சியையே உருவாக்கினார். வழக்கமான ஜோக், கார்ட்டூன் ஐடியாக்கள் மாறி விகடனில் அவை புத்துயிர் பெற்றன. அது ஒரு ‘மதனோற்சவ’ காலகட்டம்.

83-ல் ஜூனியர் விகடன் தொடங்கப்பட்டு அரசியல் செய்திகள் வெளியிடப்பட்டு குமுதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ( இதற்கு பதினேழு ஆண்டுக்குப் பின்னர் குமுதம் ஒரு அரசியல் பத்திரிகையாக ரிப்போர்ட்டர் ஆரம்பித்தது). விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் தன் தந்தையைப்போலவே மிகச்சிறந்த ரசிகராக பத்திரிகையை நடத்தினார். கருத்துச் சுதந்திரத்துக்காக அவர் நடத்திய சட்டப்போராட்டம் முக்கியமானது. 1987-ல் கார்ட்டூன் ஒன்றுக்காக  அவர் கைது செய்யப்பட்டது தேசியச் செய்தியாக மாறியது. மாணவப் பத்திரிகையாளர் திட்டம் அவர் அறிமுகப்படுத்திய முக்கியமான ஒன்று. ஏராளமான இளம் பத்திரிகையாளர்கள் உருவானார்கள்.தொண்ணூறுகளில் விகடன் குமுதம் இரண்டுமே சினிமா கட்டுரைகள் நோக்கி நகர்ந்தன. குமுதம் ஒவ்வொருவாரமும் ஒரு பிரபலம் தயாரிக்கும் விதமாக இதழைக் கொண்டுவந்தது. ஆரம்பத்தில் அது நன்றாக இருப்பினும் இதழ் தயாரிக்கும் விஐபியைப் பொறுத்து விற்பனையில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டதாகக் கூறுவார்கள். அத்துடன் குமுதத்தின் தனித்தன்மை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டு இந்த சோதனை முயற்சியை எஸ்.ஏ.பி. நிறுத்திவிட்டார்.

அவரது காலகட்டத்துக்குப் பின்னால் சுஜாதா குமுதம் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். புதுமையான, அறிவியல் கலை தொடர்பான விஷயங்கள் வெளியாயின. அப்போது குமுதம் மீண்டும் ஆறரை லட்சத்தைத் தொட்டது. அவருக்குப் பின் மாலன் ஆசிரியரானதும் வலுவான அரசியல் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.  குமுதத்தில் பெரிய பலமாக அரசு பதில்கள் பகுதி வெகுகாலமாக இருந்துவந்த நிலையில் விகடனில் 90களில் ஹாய் மதன் என்ற கேள்விபதில் தொடர்  ஆரம்பிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக விகடன் தன் 96 பக்கங்களை 144 பக்கங்கள் ஆக திடீரெனக் கூட்டியதைச் சொல்லலாம்.

எண்பது தொண்ணூறு பக்கங்களில் இருந்த குமுதமும் பக்கங்களைக் கூட்டி, மினி குமுதம் என்ற இணைப்பை அளித்தது. இந்த காலகட்டம் இந்தியாவில் கேபிள், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் பரவலான காலகட்டம். இது பத்திரிகைகளின் மீது நேரடியாகத் தாக்கத்தை உருவாக்கியது. வாரப்பத்திரிகைகளான குமுதமும் விகடனும் புதிய கிளைப்பத்திரிகைகளை ஆரம்பித்து விளம்பர வருவாயைப் பெறமுயன்றன. மருத்துவம், மகளிர், பக்தி என ஒவ்வொரு துறைக்கும் புதிய பத்திரிகைகள் உருவாயின  2000த்துக்குப் பின்னர் ஏற்பட்ட  முக்கிய மாற்றங்களில் விகடன் தன் உருவத்தைப் பெரிதாக்கிக்கொண்டதும் விலையை அதிகரித்ததும் முக்கியமான ஒன்று. ஆனால் குமுதம் அப்படியே தன் பழைய உருவ அமைப்பிலேயே வெற்றிகரமாகத் தொடர்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களையே தங்கள் பிரதானமான உள்ளடக்கமாகக் கொண்டிருந்த இரு பத்திரிகைகளும் செய்திகள் சார்ந்து தங்களை மாற்றிக்கொண்டுள்ளன.

இக்கட்டுரையை எழுதும் நேரத்தில் 3டி கண்ணாடியுடன் கூடிய விகடன் மேஜையில் கிடக்கிறது.  ரோஜாவின் படத்தில் தேய்த்தால் ரோஜா வாசனை வரும்படி குமுதம் ஒருமுறை செய்திருந்ததும் தவிர்க்க இயலாமல் ஞாபகத்துக்கு வருகிறது.

டிசம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com