வாழ்வென்பது இரண்டுமே சேர்ந்த கலவைதான்!   பவா செல்லதுரை

வாழ்வென்பது இரண்டுமே சேர்ந்த கலவைதான்!   பவா செல்லதுரை
Published on

திமணத்திற்கு முன்பே நாம் காதலின் கடைசி சொட்டையும் சிந்திவிடுகிறோமா என்பதை அதற்குப் பின்பான நாட்களில் தான் முழுமையாக உணர முடிகிறது.

லைலா, மஜ்னு காதலின் கதையை மீண்டும் எழுதிப் பார்த்த ஜெயந்தன் அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்து எப்படி குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்க அவர்களில் எழுத்தில் வாழவைத்தவன் என்ற முறையில் அவர்கள் வீட்டிற்குப் போவதாக ஒரு கதை எழுதி இருப்பார்.

இவர் போகும் போது அவர்களுக்குள் குடும்ப சண்டை உக்கிரமாக நடந்துகொண்டிருக்கும்.

லைலா; நான் உன்னைக் கல்யாணம் செய்ததற்கு பதிலாக ஒரு ஒட்டகத்தை கல்யாணம் செய்திருக்கலாம். தினம் அரை லிட்டர் பாலாவது மிஞ்சியிருக்கும்.

மஜ்னு; உன்னைத் திருமணம் செய்ததற்கு பதிலாக நான் ஒரு பேரீட்சம் பழ மரத்தை திருமணம் செய்திருக்கலாம். தினம் அரைக் கிலோ பேரீட்சம் பழமாவது எனக்கு கிடைத்திருக்கும்.

இவ்வுரையாடலில் அதிர்சியுற்ற அந்த எழுத்தாளனுக்கு, இவர்களின் காதலை நிறைவேறாத காதலோடே நிறுத்தியிருக்கலாமோ எனத் தோன்றும்.

பலபேரின் நிறைவேறிய காதல், குடும்ப வாழ்விற்குள் இப்படித்தான் அகப்பட்டு சிதறுண்டுப் போவதைப் பார்க்கிறோம்.

காதலின் போது ஒவ்வொரு சொட்டாக நாம் சேகரிக்கும் அன்பின் துளிகளை, திருமணத்திற்கு பின்னான வறண்ட நாட்களுக்கும் கொஞ்சும் மிச்சப்படுத்தியிருக்க வேண்டும். ஏனோ அதை தொடர்ந்து தவறவிட்டுவிடுகிறோம்.

நாம் அப்படி மிச்சம் வைத்திருந்தோமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலே மிஞ்சுகிறது.

ஆம் என்பது உண்மையெனில், ஏன் இந்த இருபத்தேழு வருடங்களில் உங்களுக்குள் இத்தனை முரண்பாடுகள், சிக்கல்கள், முரண்டுபிடித்தல்கள், விடுபடல்கள், நெருக்க மின்மைகள்?

இல்லையென்பது உண்மையானால் இத்தனை வருடங்களுக்கு பிறகும் இன்னமும் தேங்கியிருக்கிற ஈரம்மிகுந்த நேயம், பிரியம், விட்டுக்கொடுத்தல், நெருக்கம், எப்போதாவது கொடுக்கும் அல்லது பெறும் முத்தம் இவையெல்லாம் எப்படி சாத்தியம்?

வாழ்வென்பது இரண்டுமே சேர்ந்த கலவைதான் என்பதை இன்றளவும் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

ஒரு மாதம் எங்களோடு வந்து தங்கியிருந்த மார்க்சிய பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ஆர், சகுந்தலா அம்மாவை அருகிலிருந்து கவனித்தேன். இருவருமே அளவுகடந்த காதலால் நிரம்பியிருந்தார்கள். அதன் மூலமே காலத்தின் கசப்பை சுலபமாக கடந்தார்கள். முதுமையின் அக்காதல் என் நிறைவேற வேண்டிய கனவுகளில் ஒன்று.

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ‘ஆனந்த்', என காற்றில் தேடியலையும் ஓவியரும் என் தோழியுமான காயத்ரி கேம்யூசின் குரலைக் கேட்கும்போதெல்லாம். காற்றிலும் தங்கள் காதலை நிரப்பி வைத்திருக்கும் ஆச்சரியம் இன்னும் என்னை விட்டகலாதது.

இந்த இருவரின் மன வாழ்வின் வெற்றியின் கடைசிப் படிக்கட்டில் கூட நிற்கமுடியாமலும் ஆனால் முதல் படிக்கட்டை நோக்கி முந்திவிட வேண்டுமென்ற எத்தனிப்பே இவ்வாழ்வின் அதிக பட்ச ஆசை.

மனித மனங்கள் என்றுமே பெருங்காதலாலும், அகங்காரத்தாலும் குழைக்கப்பட்டவையே. நாம் காலத்தைக் கடக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் அவை நம்மை சண்டைக்கோ, சவாலுக்கோ சதா இழுத்துக்கொண்டேயிருக்கின்றன. 

இருபத்தைந்து ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்பது பெரும் சாதனையல்ல. அது யாருடைய வெற்றி? என்பது தான் பெரும் கேள்வியாக மிஞ்சுகிறது.

சக்காரியா தன்னுடைய அன்புள்ள பிலாத்துவுக்கு கதையில் இப்படி எழுதியிருப்பார். ‘எப்போதும் மீட்பனும், மீட்கப்படுபவனும் ஒருவனாகவே இருக்க முடியாதில்லையா?' எங்கள் வாழ்க்கை ஒருமனதான சுயமரியாதை வாழ்க்கையாகவே உள்ளது!

ஆகஸ்ட், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com