வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வோம்!

இணையம்: என்ன பார்க்கலாம்?
வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வோம்!
Published on

மினிமலிசம் 

மினிமலிசம் என்ற வார்த்தையே போதுமான விளக்கத்தை கொடுத்துவிடுகிறது. ஜோஸ்வா பீல்ட்ஸ், ரியான் நிகோடிமஸ் என்ற இரு அமெரிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டு எழுதிய புத்தகம் மினிமலிசம் (Minimalism : Live a meaningful life). இந்த அனுபவத்தோடு தொடர்புடைய பலரின் கருத்துக்களையும் சேர்த்து மினிமலிசம் (Minimalism: Live a meaningful) என்ற டாகுமெண்ட்ரியும் நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கிறது.

மினிமலிசம் என்பது நமக்கு தெரியாத,புரியாத விஷயம் ஒன்றுமில்லை. நம்முடைய தாத்தாக்களும், அப்பாக்களும் வாழ்ந்த வாழ்க்கைதான். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து', ‘தேவையில்லாததை வாங்கி குவிப்பவன் தேவையானதை இழக்க நேரிடும்' என்ற முதுமொழிகளிலிருந்தும் மினிமலிசத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜோஸ்வா, ரியான் இருவரும் பள்ளி தோழர்கள். விவாகரத்தான குடும்பத்தில் ஏழ்மையான அம்மாவினால் வளர்க்கப்பட்டவர்கள். ஜோஸ்வாவின் அம்மா குடும்ப பிரச்னைகளால் குடிக்கு அடிமையாகிறார். ரியானின் அம்மா போதை மருந்தை நாடுகிறார். இருவருக்கும் சிறுவயதிலிருந்தே பணம் மட்டும் தான் பிரச்னை. பெரியவனாகி நன்றாக சம்பாதித்தால் (சுமாராக வருடத்திற்கு ஐம்பதாயிரம் டாலர்) வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஜோஸ்வா விற்பனைத் துறையில் இளம் வயதிலேயே நுழைந்து கடுமையான உழைப்பினால் 22 வயதில் முதல் புரமோஷன் வாங்குகிறார். அந்த நிறுவனத்தின் 130 வருட வரலாற்றில் மிக இளம் வயது மேனேஜர் ஜோஸ்வா.

அதிகமான சம்பளம், அதிகமான பொறுப்பு, அதிகமான வேலை என்று தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. பெரிய வீடு, பெரிய கார், விலை மதிப்புள்ள ஆபரணங்கள் என்று சம்பாதிப்பதை விட வேகமாக செலவு செய்கிறார். ஆனாலும் மகிழ்ச்சி இல்லை.

மற்றொருபுறம், ரியான் மிக இள வயதிலேயே திருமணம்,பிறகு மணமுறிவு என்று பிரச்னைகளில் சிக்கி குடி,போதைபொருள் பக்கம் சாய்கிறார். பிறகு அதிலிருந்து மீண்டு தன்னுடைய தந்தை வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தாலும்  அதில் பெரியதாக வளரமுடியாது என்பதை உணர்ந்து ஜோஸ்வாவின் உதவியுடன் விற்பனைத் துறைக்குள் நுழைகிறார். ஜோஸ்வாவைப் போலவே ரியானும் கடும் உழைப்பை செலுத்த உடனடி பலனும் கிட்டுகிறது. ஆனாலும் வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சுகிறது.

ஜோஸ்வாவின் அம்மா புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் இருக்கிறார். மகனிடம் பேச பலமுறை தொலைபேசியில் முயற்சிக்கிறார். ஆனால் ஜோஸ்வா வழக்கம்போல வேலையில் பிஸி. அம்மா இறந்த அதே மாதத்தில் அவரின் மண வாழ்க்கையும் முடிவுக்கு வருகிறது.

நண்பர்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே மன நிலையில் சந்தித்து பேசுகிறார்கள். ஐம்பதாயிரம் டாலர் என்பது ஒரு லட்சம் டாலராக ஆன பின்னும் மகிழ்ச்சியும் திருப்தியும் இல்லை. வாழ்க்கையில் நாம் எதை தவற விட்டோம், எப்படி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு திரும்புவது என்று பேசி இறுதியாக மினிமலிசத்தை வந்தடைகிறார்கள்.

மினிமலிசம் என்பது எது தேவையோ அதை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை துறப்பது. அதன் மூலம் பொருளாதார சுதந்தரத்தையும், கட்டுக்களிலிருந்து விடுதலையையும் பெறுவது. இதன் மூலம் நம்முடைய நேரம், பணம் எல்லாவற்றையும் உபயோகமான முறையில் செலவிடுவது. முக்கியமாக வாழ்க்கையில் நாம் விரும்புவதை மகிழ்ச்சியாக செய்வது.

மினிமலிசம் என்றவுடன் துறவிகளைப் போல முற்றும் துறந்துவிடுவது, அல்லது ஜோஸ்வா, ரியானைப்போல மண வாழ்க்கையிலிருந்து விலகி தனித்திருப்பது என்பது அர்த்தமல்ல. ஆறு குழந்தைகளுடன் இருப்பவர், தொழில் முனைவோர், விற்பனைத்துறையிலுள்ள பெண் என்று மினிமலிசத்தில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் பலர் தங்களுடைய அனுபவத்தை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

நாங்கள் தேவையானதை மட்டும்தான் வாங்குகிறோம் என்கிறீர்களா? சில தகவல்களைப் பார்ப்போம்.

1974 &இல் ஆண்டிற்கு சுமாராக 7500 ரூபாய் குடும்பப் பொருட்களுக்காக செலவு செய்த இந்திய குடும்பம் 2012 இல் 45000 ரூபாய் செலவழித்திருக்கிறது.

சராசரியாக ஒரு நாளில் 150 முறை நம்முடைய செல்போனை நாம் எடுத்துப் பார்க்கிறோம் என்கிறது ஆய்வு. இது நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பகுதியே. நுகர்வு கலாச்சா ரத்தில் நாம் ஓர் அங்கம். நம்மை விளம்பரங்களும், சுற்றி உள்ளவர்களுமே வழி நடத்துகிறார்கள். நான் எப்படி உடை உடுத்த வேண்டும், என்ன கைப்பேசி வைத்திருக்க வேண்டும், எவ்வளவு பெரிய வீடு, என்ன கார், குழந்தைகள் எந்த பள்ளியில் என்பதைக் கொண்டே சமூகமும் நம்மை மதிப்பிடுகிறது. அப்படியானால் நாம் யார்? பொருட்களால் முடிவு செய்யப்பட வேண்டியவர்களா? யாருக்கானது இந்த வாழ்க்கை? இவைதான் மினிமலிசத்தின் அடிப்படை கேள்விகள்.

‘அந்த காலத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை ஆடைகளை வாங்க சென்றார்கள். இன்று வருடத்தில் 52 முறை ஆடைகளை வாங்குகிறோம். ஒவ்வொரு வாரமும் ஃபேஷன் மாறுகிறது. நீங்கள் அணிந்திருக்கும் உடை ட்ரெண்டியாக இல்லை என்று விளம்பரம் சொல்கிறது,' என்கிறார் ஒருவர்.

1983 இல் ஒரு கோடி அமெரிக்க டாலரை விளம்பரத்திற்காக செலவு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் 2006 இல் 1700 கோடி அமெரிக்க டாலரை செலவழித்துள்ளன.

இப்படி பல தகவல்களின் மூலம் நுகர்வு கலாச்சாரத்தின் பண்டமாக நாம் மாற்றப் பட்டதை விவரிக்கும் இந்த டாகுமெண்ட்ரி, மினிமலிசத்தை நோக்கி நாம் செல்வதற்கான ஐந்து பகுதிகளை சொல்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை (ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியம், பொருளாதார ஆரோக்கியம் அனைத்தையும் சேர்த்தது), உறவுகள், உங்களின் கனவு, வளர்ச்சி, சமூகத்திற்கான பங்களிப்பு என்று ஐந்து வகைகளிலும் கேள்வி,பதிலாக பல பகுதிகளை அமைத்து மினிமலிசத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

மனிதனின் உடல் வெப்ப நிலையைக் கொண்டு செயல்படும் ஒரு செயலி நம்முடைய வீட்டில் ஏறக்குறைய 500 சதுர அடி பகுதிகளை மட்டுமே நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம் என்கிறது. இது அனைவருக்குமான பொது விதி அல்ல. நம்முடைய பயன்பாட்டைப் பொறுத்து நாம் முடிவு செய்து கொள்ளலாம். ஐ போன் மாடல் 6 வைத்திருப்பவர், மாடல் 10 அறிமுகமான உடன் பணமிருப்பதால் உடனடியாக வாங்க முடிவெடுக்கலாம். ஆனால் அது தேவையா என்கிறது மினிமலிசம். விளம்பரங்களில் 50 சதவீத கழிவு என்றவுடன் நம்முடைய கவனம் திரும்புகிறதே... அந்த பொருள் உனக்கு தேவையா என்கிறது.

 ‘ப்ராஜக்ட் 333' என்பதில் பங்கேற்று ஒரே வருடத்தில் 333 பொருட்களிலிருந்து குறைந்து 33 பொருட்களுடன் வாழப் பழகிய பலரின் அனுபவம் நம்மை யோசிக்க வைக்கிறது.

மினிமலிசம் உங்களுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க, கேள்வி கேட்க, மகிழ்ச்சியான வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்வை வாழ, நம்மை தூண்டுகிறது என்பது உண்மை.

ஆகஸ்ட், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com