ஏழு கடல் தாண்டி... ஏழு மலை தாண்டி ஒரு பெரிய ஆலமரப் பொந்துக்குள்ள இருந்து ஒரு வால் கோமாளி வர போறான். அவனோடு நீங்கள் ஆடலாம், பாடலாம் அவரை நீங்க தொடலாம். அவருக்கு பெரிய்ய்ய வால் இருக்கு, அதைப் பிடித்து
நீங்க இழுக்கலாம்”. என்று வாய் நிறைய சிரிப்போடு உற்சாகம் பொங்கப் பள்ளி வளாகத்தில் கூடியிருக்கும் மாணவர்களிடம் தமிழ் ஆசிரியை மரியாமணி பேசினார்.
“நாம எல்லோரும் ஒரு மாய மகிழ்ச்சி நதியில் நீந்தப்போறோம் தயாரா இருங்க” எனக் கூறிய அவர் கதைசொல்லி சங்கர்ராமை அறிமுகம் செய்துவிட்டு தானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று “வால் கோமாளி , வால் கோமாளி, வால் கோமாளி,” என குழந்தைகள் ஒரே சத்தமாகக் கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். சங்கர்ராம் அரங்கத்தின் உள்ளே துள்ளலாக நுழைந்தவுடன் பள்ளிக் குழந்தைகள் அவரைப் பிடித்து இழுத்து தங்களுக்குள் நிரந்தரமாக வைத்துக்கொள்ளுவதற்கு முயன்றனர். வால்கோமாளியும் குழந்தைகளோடு குழந்தையாகக் கரைந்துபோனார்.
”கத்தரிக்காய்க்குக் கொடப்பிடிக்க கற்றுக்கொடுத்தது யாரு?
அந்த கடலக்கொட்டைக்கு முத்துச்சிப்பி போல மூடி வைத்தது யாரு?
பூசணி தலையில் பூவை அழகாய் முடிந்துவைத்தது யாரு..?
அந்த வாசனை இல்லா காகிதப்பூவுக்கு வர்ணம் அடித்தது யாரு..?
துள்ளல் ஒசையுடன் கூடிய பாட்டைப் பாடினார். உடனே குழந்தைகள் இன்னொரு பாட்டுப்பாடு கோமாளி என ஆரவாரம் செய்தனர். சங்கரராமன் தென்மாவட்டப் பள்ளிகளில் மாணவர்களைக் கவரும் கதை சொல்லியாக இருக்கிறார்.
“இந்தப் பாட்டு வையம்பட்டி முத்துச்சாமி எழுதிய பாட்டு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. நான் எந்த ஊரில் கதை சொல்லப்போனாலும் இந்தப் பாட்டைக் கதைகளுக்கிடையே பாடுவேன். அவர் இந்தப்பாட்டு முழுவதும் கேள்வி வடிவத்திலேயே எழுதிஇருப்பார்”. என்று கூறி, தான் கதை சொல்லியாக ஆன கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“நான் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரத்தைச் சேர்ந்தவன். எல்லோரையும் போல நானும் அம்மாவிடம் தான் கதைக்கேட்டு வளர்ந்தேன். அம்மா சொன்ன கதைகள் நம் நினைவில் பதிந்திருந்த அதேநேரத்தில், 1990களில் அறிவொளி இயக்கத்தில் தன்னார்வத் தொண்டனாக சேர்ந்தேன். இதனிடையே எழுத்தறிவைச் சொல்லிக்கொடுக்க கிராமங்களுக்கு கருத்தாளராக சென்றபோது வயதான பெரியவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களது இயல்பான பேச்சில் நிறைய கதைகள், சொலவடைகள், வட்டாரசொற்கள் கலந்து வந்தது எனக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. நாம இதை தவறவிட்டுட்டோமோ என என்னை ஏங்க வைத்தது.
அதற்கு அப்புறம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தபோது பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ. பரமசிவம் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் இலக்கியத்தை மட்டும் படிக்காதீர்கள். மக்களையும் வாசியுங்கள் என்று புதுமையாகச் சொன்னார். அவர் பேசியது, நான் கதைசொல்லி ஆவதற்கான முக்கியமான துண்டுகோலாக இருந்தது.
ஆங்கிலவழிக்கல்வி வளர்ந்துவரும் நேரத்தில் தமிழ்வழிக் கல்விக்கு நாம ஒரு அழுத்தத்தைக் கொடுக்கணும் அப்படீங்கிற எண்ணத்தில்தான் சங்கரன்கோவிலில் 2000, ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று தாய்த்தமிழ் பள்ளியைத் தொடங்கினேன். இந்த பள்ளியியை தொ.ப தான் திறந்துவைத்து என்னை உற்சாகம் ஊட்டினார்.
நீங்கள் சொன்ன முதல் கதை என்ன?
நான் சொன்ன முதல் கதை கட்டவிரல் குள்ளையன். 2002ல் தான் முதன்முதலில் தாய்த்தமிழ் பள்ளியில் கதைசொல்ல ஆரம்பித்தேன். அந்தக் கதையைப் பல இடங்களில், பல வடிவங்களில் சொல்லியிருக்கிறேன். அது இன்று வரை அனைவருக்கும் பிடித்து இருக்கிறது. காரணம் அந்த கதைக்குள் இருக்கும் அதிபுனைவுதான். கட்டவிரல் குள்ளையன் என்று சொன்னவுடனே, குழந்தைகள் தங்களது கனவு உலகத்திற்குள் போய்விடுவார்கள். கூர்ந்து கவனிக்கிற, உள்வாங்குகிற தன்மை குழந்தைகளுக்கு வந்துவிடும்..
இந்தக் கதையை “பெருவிரல் குள்ளையன்” என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார்.. ஆனால் நான் கம்பீரன் என்ற எழுத்தாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். அவர்தான் “கட்டவிரல் குள்ளையன்” என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.
கிராமப்புற பள்ளிகூட மாணவர்களிடம் இந்தக் கதையை நான் சொல்லும்போதே மீதிகதையை அவர்களே சொல்லுவார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். இந்தக் கதை எல்லா இடங்களிலும் உலவிக் கொண்டிருக்கிறது என்று நான் என் மனதிற்குள் நினைத்துக்கொள்ளுவேன். இப்போதும் நான் கிராமப்புறங்களில் கதை சொல்லப்போகும் போது யாராவது ஒரு மாணவன் அந்தக் கதையை என்னோடு சேர்ந்து சொல்லுவான்.
கதைகளைக் குழந்தைகளுக்கு எப்படி சொல்லுவது? என்பது தொடர்பான பயிற்சிகளைத் தாய்த்தமிழ் ஆசிரியர்களுக்குப் பேராசிரியர்கள் மு.ராமசாமி, முனைவர் முருகபூபதி, மேரிருத் மற்றும் வேலு சரவணன் போன்றவர்கள் கொடுத்தார்கள். அந்தக் களப்பயிற்சி என்னை வேறொரு ஆளாக மாற்றியது. அதற்கு அப்புறம்தான் நான் கோமாளி வேடம் போட ஆரம்பித்தேன். இந்த கோமாளி வேடம் மட்டும்தான் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்கிறது. ஏன்னென்றால் கதைக்குள்ள வர்ற கோமாளி பாத்திரம் மட்டுமே எந்த அதிகாரத்தையும் வைத்துகொள்ளாது.. கோமாளியை யாரும் கேள்விகேட்க முடியாது. யாரோடும் எளிமையாகத் தோழமை கொள்ளும்.
இப்போது உள்ள இளம் பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. குழந்தைகளை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக மாற்றுகிறார்கள். அவனுக்கு பிடித்தமான கதை சொல்லும் விசயத்தை விட்டுவிட்டார்கள். நாம் அவனை மடியில் உட்காரவைத்து பாடமும், பாட்டும் சொல்லிக்கொடுத்த பழக்கத்தை மறந்துவிட்டோம். இதனால் அவனது மரபில் .இருக்கும் கதைகேட்கும் ஆசையினால் அவன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்துவிட்டான். ஆகையினால் தொலைக்காட்சியைப் பார்த்துகொண்டிருக்கிற குழந்தைகளிடம் நீங்கள் ஒருநாள் ”நான் ஒரு கதை சொல்லப்போறேன் வாங்க என்று சொல்லிப் பாருங்கள்.. குழந்தைகள் உடனே தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு உங்கள் மடியில் வந்து உட்காரும்.. தினமும் உங்களிடம் ஒரு கதை கேட்கும்.அதற்கு நாம் தயாராக உள்ளோமா? ”கேட்கிறார் வால் கோமாளி.
செப்டெம்பர், 2017.