வாய்மையின் நல்ல பிற

வாய்மையின் நல்ல பிற
Published on

காலை தாமதமாக எழுந்தபோதும் அயர்ச்சி நீங்கிய பாடில்லை. அகலத் திறந்த பூமிக்குள் நழுவிச் செல்வது போன்ற அரூப நடனத்தில் பைத்தியமுண்டாகித் தலை தெறிக்க ஓடுவதாக தோன்றிய நேற்றைய இரவின் கனவுகளை எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கண்ணாடிகளை ஊடறுத்து சூரிய ஒளி அறையில் விரவியிருந்தது.

ஞாயிறு வீரகேசரி, தினக்குரல், சன்டே ஒப்சர்வர் பத்திரிகைகளில் தெஹிவளை பிரதேசத்தில் பத்திலிருந்து பதினைந்தாயிரத்திற்கு மேற்படாத ஒரு அறை சமையலறை கூடம் குளியலறை என்பவற்றுடனான வீட்டைத் தேடிக் கொண்டிருந்தாள். நேற்றுப் பார்த்த வீடு சௌகரியமானதே. தெஹிவளை காலி பிரதான சாலையிலிருந்து களுபோவிலைக்கான திருப்பத்தில் கிளைக்கும் தெருவில் இருந்தது.  சில்லிடும் கூடமும் மாபிள் தரையும் காற்றை வாரியிறைக்கும் ஆறடி உயர ஜன்னல்களும் மனதுக்கு இதம் தருவதாகத் தோற்றம் தந்தன. இந்த வீட்டைக் காண வருவதற்கு முன்னர் கணக்கில்லாத வீடுகளைப் பார்த்துவிட்டிருந்தாள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் கையைக் கடிக்காத மாதவாடகையுடனும் அந்த வீடுகளும் இருந்தபோதும் குடிபுக முடியவில்லை.

விடுதி அறையில் முடங்கிக் கிடப்பது இன்னமும் சலித்துவிடவில்லை என்றாலும் ஷாஜி லாடம்போன்ற அறையில் வளர்வதற்கு மனது ஒப்பவில்லை. அறை வாழ்வு இனி வேண்டாதென்றும், அது ஷாஜிக்கு உகந்ததில்லை என்பதுமே அவளது இப்போதைய எண்ணம். ஷாஜி தனது கனவுகளுக்கு வர்ணம் தீட்ட இந்த அறையை விடவும் சற்று விரிந்த உலகுக்கு மாறவேண்டும் என்பதை தீர்மானித்த நாள் முதலே விடுதியில் சலசலப்பு ஆரம்பமாகிவிட்டிருந்தது.

“இங்க என்ன குறை.. ஏன் வீடு தேடுகிறாய்?” என்ற விடுதித் தோழிகளின் குரல்கள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

“இங்கு குறையென்பதற்காக இல்லை. இதைவிடவும் நல்ல இடத்திற்கு மாறுவதற்காக...” என்ற மெஹ்ரூனை சிலர் விநோதமாக நோட்டமிடுகின்றனர்.

மெஹ்ரூனில் இதற்கு முன்பு காணமுடியாத மாற்றங்கள் வந்துவிட்டதாக கற்பனையில் அவளை ஆய்ந்து கொண்டிருந்தனர். சிலர் கிளுகிளுப்பூட்டும் விதமான கதைகளை உருவகித்துக் கிசுகிசுத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மெஹ்ரூன் காதலில் வீழ்ந்துவிட்டாள் என்றே அவர்களில் பலர் நம்பத் தொடங்கிவிட்டனர். காதலனை அழைக்கவும் விருந்தோம்பவும் கொண்டாடவும் விடுதியில் அனுமதியில்லையென்பதா லேயே  வீடு தேடுகிறாள் என்பது அவர்களது ஊகம்.

இதற்காகவெல்லாம் சரிந்துபோகிற மணல் உருவா அவள்?  தனது அசாதாரணத் தன்மையும் மௌனமும் விரதமும் எல்லோரினாலும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் அவளுக்கு இல்லை. தனது வாழ்வை எப்படி வாழவேண்டும் என்று தீர்மானிக்கிறவளாகத் தானே இருப்பதே  நிறைவைத் தருவதாக இருந்தது.

ஒருநாள் இரண்டு நாளோ ஒன்றிரண்டு வருடமோ அல்ல; ஆறு வருடம்... இதே விடுதியில் இருந்திருக்கிறாள். இங்கிருந்துதான் இதழியல் படித்துத் தன்னை ஒன்றுகூட்டினாள். இங்கிருந்துதான் வேலைக்குச் சென்றாள். தன்னை விசாலப்படுத்தினாள். இங்கிருந்துதான் திருமணத்திற்கான விடுப்பில் சென்றாள். தன்னைத் தொலைத்தாள். திருமணம் என்ற வசீகரப் பிரதேசத் திற்குள் நுழைந்துவிட்ட அவள் விடுதிக்குத் திரும்பி வருவாள் என்று அவளது தோழியருள் ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. எப்போதாவது தற்செயலாக அந்தத் தெருவில்  விடுதியைக் கடக்க நேரும்போதெல்லாம் பனிபோல தூய்மையாக வானம் போல தெளிவாக இருந்த விடுதி வாழ்வை அதன் நியாபகங்களை வெஸாக் காலங்களில் பயமுறுத்தும் முகமூடிகளை அணிந்து கொண்டு அலைந்து சுற்றியதை பொசன் போயாக்களில் தன்சலில் கியூவில் நின்று கடலையும் ஐஸ்கிறீமும் மஞ்சொக்காவும் திண்டதையெல்லாம் தடவென்று மௌனமாக மீட்டியபடி நகர்ந்தாள்.

ஒரு மழை இரவின் குளிரில் மரங்கள் நடுங்கி நின்ற நள்ளிரவில் ஆளை மறைக்கும் விடுதியின் உயர்ந்த இரும்புக் கேற்றுக்குப் பின்னால் நின்று அவள் கூவினாள். “குசுமா குசுமா” என்று கத்தினாள். உடைந்த ஊசிகளாக வானிலிருந்து விழுந்து கொண்டிருந்த மழையின் இரைச்சலில் அவள் கத்தல் கரைந்து கொண்டிருந்தது. குசுமா - பூட்டிய விடுதிக் கேற்றின் சாவியை தலையணைக்குக் கீழே வைத்தவளாக அந்தரங்கமான கனவுகளில் மூழ்கியிருந்தாள். அன்று விடுதி மண்டபத்தில் நிகழ்ந்த வைபவமொன்றுக்காகச் சுழன்றடித்துப் பணியாற்றியதன் களைப்பு உலகை மறந்து அயர்ந்து கிடக்கச் செய்தது அவளை.

சாலையின் நெடுந்தொலைவில் நடுங்கச் செய்யும் விதமாக சீறிக்  கொண்டு ஒரு ஆட்டோ புறப்பட்டு வந்தது. எங்கிருந்து புறப்பட்டது அல்லது எந்தத் தெருவிலிருந்து திரும்பியது என்பதைக் கவனிக்கத் தவறிய அவள் திடீரென வரும் அதனை நிறுத்தக் கைகளை நீட்டினாள். அவளைக் கடந்து வேகமாகச் சென்று முனையில் திரும்பியது அந்த ஆட்டோ. ஒளிரும் விநாசயத்தில் ஒன்றிணைந்த எதிர்பார்ப்பு இப்போது மறைந்து போய்விட்டிருந்தது. நனைந்திருந்த தார்ச் சாலையில் மழை நீர் பள்ளத்தை நோக்கிப் பாம்புபோல் மினுங்கி ஊர்ந்து கொண்டிருந்தது. தானும் குவளையிலிருந்து கவிழ்ந்துவிட்ட நீராக மழையில் கலந்து சமுத்திரத்தில் சங்கமிக்க நகர்வதாகத் தோன்றியது. அன்பின் பேரிலான சடங்குத்தனமான வன்முறையிலிருந்து இவளை விடுவித்து மழை புனித நீராடல் செய்து கொண்டிருக்கும்போது அதே சாலையில் மீண்டும் சீறிக்கொண்டு மற்றுமொரு ஆட்டோ வந்தது. அவள் பக்கமாக வரும்போது வேகத்தைக் குறைத்து மீண்டும் திடீரென்று வேகத்தை அதிகரித்துக் கொண்டும் பாய்ந்த ஆட்டோவை “கருணாக்கரலா நவத்தன்டெ” என சிங்களத்தில் நிறுத்தக் கோரியது மெஹ்ரூனின் ஆர்ப்பரிக்கும் குரல். ஆட்டோ உடனே நின்றது. இந்த நள்ளிரவில் விடாது பெய்யும் மழையில் துளியும் நனையாத அதிசயப்பிறவியாக இவன் எங்கிருந்து புறப்பட்டான் என்பதையோ தன்னைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பானா என்பதைப் பற்றியோ எந்தவித முன்யோசனையுமின்றி ஆகாயத்திலிருந்தோ பூமியிலிருந்தோ தனக்காகவே வந்த வண்டியிதென்பதாக ஓடிச் சென்று ஏறியதும் அவளை மேலும் கீழுமாக நோட்டமிட்டான் ஆட்டோ சாரதி. நனைந்து உடலோடு அப்பியியிருந்த வெலோனா நைட்டியில் உள்ளிருந்த காட்டன் பாவாடையும் மீறி மேடு பள்ளங்கள் திமிறிக் கொண்டிருந்தன. பால் சுரக்கும் இளம் முலைகள் தெரியாமலிருக்க குழந்தையை நெஞ்சோடு அணைத் தாள். குழந்தையைச் சுற்றியிருந்த குயில்ட் அதன் மேல் போர்த்தியிருந்த இறப்பர் விரிப்பினால் நனையவில்லை என்பதை உறுதிபடுத்தினாள். அவன் அவளை நோட்டமிட்டானே தவிர அந்தப் பார்வையில் யாதொரு மாறுதலையும் கவனிக்க முடியவில்லை. யாரென்றே தெரியாத ஒருவன் முன்னிலையில் அரைநிர்வாணமாக நிற்க நேர்ந்த  அவல கணத்தைக் குறித்து அவள் எதுவித அக்கறையும் கொண்டவள் போலின்றியே இருந்தாள்.

“கையில் என்ன இது குழந்தை?” என்றான். “ம்” என்ற தலையசைப்பில் வெறுமனே பதிலளித்துக் கொண்டே சுருட்டி மடித்திருந்த மெத்தையை விலக்கினாள். பூவிதழைத் தடவுவதுபோல குழந்தையின் பிஞ்சுக் கரங்களைக் கோதினாள். அவளது குளிர்கரத்தின் தொடுகையில் திடுக்குற்ற குழந்தை கால் கைகளை நீட்டி முடக்கி முறித்தது. “என்ன இந்த நேரத்தில்... எங்க போகணும்?”எனக் கேள்விகளைக் கேர்வையாகத் தொடுத்தான். “நான் உங்களைப் பார்த்து பேய் என்று பயந்துட்டேன்” என்றான் மிக மென்மையாக.பேயா?  தன்னை விரட்டியத்த பேய் உள்ளே குளிர் நடுக்கத்தில் இழுத்துப் போர்த்திப் படுத்திருக்கிறது. ஆணின் விலா எழும்பிலிருந்து படைக்கப்பட்டவள் ஆணுக்கு அடிமையானவள் என்ற ஆங்காரத்துடன் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காதவள் எக்கேடு கெட்டாலென்ன என்ற அலட்சியத்துடன் தனது இந்திரியத்துளியிலிருந்து உருவான குழந்தையே!  என்ற இரக்கமேயின்றி அந்தப் பேய் படுத்திருக்கிறது என்று சொல்ல நினைத்துப் பிறகு வெறுமனே புன்னகைத்தாள். நள்ளிரவில் கையில் எதையோ அணைத்துக் கொண்டு வெள்ளை வெளேர் நைட்டியில் தலைவிரிகோலமாக சாலையில் நின்ற தன்னை அவன் பேயாக எண்ணியது அவளைத் திகைப்பிலாழ்த்தவில்லை. முன்னைய ஆட்டோக்காரன் நிறுத்தாமல் தெறித்து ஓடியதும் பேயின் பொருட்டாக இருக்கலாம்.

ஒரு நள்ளிரவில் மழைநாளில் விரட்டிவிடப்பட்டதற்காக அவள் சிறிதும் கலங்கவில்லை. அதற்கு காரணமாக இருந்த அற்பத்தனமான விவரணத்தை ஜீரணிப்பது கொடுமையாக இருந்தது. இருபதே நாளேயான பச்சிளம் குழந்தை! அது அப்பா போலிருக்குமா அம்மா போலிருக்குமா அல்லது இருவரைப் போலா அல்லது இருவரைப் போலவும் இல்லாமலா... !!! ஏன் இவள் குழந்தை மட்டும் யார் சாயலிலும் இல்லாமல் அம்மா வீட்டுக்கு அருகில்  வசிக்கும் வயதான இலக்கிய வாத்தியாரைப் போலவிருந்தான். “பிறந்த நாளிலிருந்தே கவனிக்கிறேன். இவன் சாயல் எனக்குப் பிடிபடவில்லை. இவனது நீண்ட மெலிந்த விரல்களும் நெடிய கழுத்தும் அகன்ற நெற்றியும் எனக்கு அந்தக் கிழவன் செபஸ்டியனைத்தான் நினைவுபடுத்துகிறது”. கவிழ்ந்த குடத்து நீராக அவள் சிறுது நேரம் விடாது சிரிக்கவும் அவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று.

“நான் ஜோக்கடிக்கல்லை. சீரியஸாகச் சொன்னேன்” என்றான்.

“நானும் சீரியஸாகத்தான் சிரிக்கிறேன்”. ஆரஞ்சு வெளிச்சம்போலச் சிரித்தபடி இருந்த அவள் முகத்தில் பளார் என அறைந்தான்.

“உனக்கென்ன கிறுக்கா. நம்ம புள்ளயப்பார்த்து எங்கேயோ இருக்கிற கிழட்டு வாத்தியார் போல இருக்கான் என்கிறாய். சிரிக்காமல் என்ன செய்வேன். ஓம் என்று சொல்லச் சொல்றியா? இல்லை என்றால் நம்புவியா?” வார்த்தைகளால் அவனைத் திரும்ப அறைந்தாள். அவனது இருதயத்தில் இருளும் தோல்வியும் அவநம்பிக்கையும் நிறைந்திருப்பது முன்னமே தெரிந்திருந்திருந்தாலும் அவனது இன்றைய - இந்த முகம் முற்றிலும் விசித்திரமாக இருந்தது.

அந்த இலக்கிய ஆர்வலன். வெளுத்த வெள்ளை முடியும் தடித்த மீசையுமாக இவளது கவிதைகளை ரசிப்பதற்காக - இவளது எழுத்துக்களின் குறையை நிறையைத் தர்க்கிப்பதற்காக அவளது ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் காட் பிளஸ் யூஎன்று வாழ்த்தியதற்காக ஒப்புக் கொள்வாளா இவள்! முதல் பூவாக சின்னப் பட்டுப் புறாவாக அவள் மடியில் கிடக்கும் இந்தக் குழந்தை, இவன் தின்ற இரவுகளின் மிச்சம்தானே!

இந்த முறை அவளது கோபம் விசித்திரமான ரூபங்களால் தன்னை அரட்டும் கணவனில் இல்லை. அவனது அடக்கு முறைக்கும் வன்செயலுக்கும் தனது தனித்துவமும் அடையாளமும் சுயகௌரவமும் பணிந்துபோகாது என்று எத்தனை எடுத்துக்கூறியும் பொருட்படுத்தாமல் “அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா. குழந்தைக்காக... அதுக்கு அப்பா வேணும்ல்ல” என்று அவனை மீண்டும் அவளுடன் பிணைத்துவிட்ட பெரியவர்களில்.ஆமாம்! குழந்தைக்கு அப்பா வேணும்தான். எந்தக் குழந்தையும் ஆணின் இந்திரியமின்றி உருக்கொள்வதில்லை. அற்பத்தனமான இந்திரியம்!!

ஆட்டோ சாரதி வாலிபன்.கரிய அவன் முகம் இரவின் இருளையும் மீறிக் கவர்ச்சி தருவதாக இருந்தது. சுருள் முடிக்கற்றைகளை கோதிவிட்டபடி மிக மகத்தான பணிக்காக தான் அமர்த்தப்பட்டிருப்பதுபோல வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். மழையில் துவண்டு கடந்து செல்லும் சாலையோரத்து மரங்களை அலட்சியமாக கவனித்தபடி எதைஎதையோ அசைபோட்டாள் மெஹ்ரூன். அவள் கூறியபடியே அவன் இடத்திற்கு வந்துவிட்டிருந்தான். களுபோவிலை ஆஸ்பத்திரி தாண்டி வந்ததும் இங்கிருந்து எங்கு என்பதுபோல அவளைத் திரும்பிப் பார்த்தான். நேராகச் சென்று செகண்ட் லெப்டில் திரும்புமாறு கேட்டாள். அவள் சொன்னபடி ஆட்டோவை நிறுத்திவிட்டுக் குதித்து இறங்கி கேற்றைத் தள்ளினான் அவசரமாக.“பூட்டியிருக்கிறது” என்றான்.அவனது குரலில் ஏமாற்றம் தெரிந்தது.தான் இருந்த காலத்தில் ஏழு மணிக்கே விடுதி கேற் பூட்டப்படுவதை அவள் அறிந்துதான் இருந்தாள். “எனக்கொரு உதவி பண்ணமுடியுமா?” என்றாள். இப்போது அவளைப் பக்குவமாகப் பாதுகாப்பாக அழைத்து வந்து பேருதவி செய்திருக்கும் அவனில் அவளுக்கு நம்பிக்கை உண்டாகி யிருப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. கேற்றின் மேலாக ஏறிக் குதிக்கவும் தயாராக இருப்பவன் போல இருந்தான்; “என்னிடம் இப்போது பணமில்லை. நாளைக்காலை இந்த இடத்திற்கு வந்துவிடுங்கள். பணம் தருகிறேன்” என்றாள். அவன் மிகப்பரிதாபமாகப் பார்த்தான். உடனடியாக வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு. “நங்கி” என்றான். “உங்கள் முன்னால் நிற்கிற இந்த ஆட்டோக்காரன் மூன்று தங்கைகளின் அண்ணன்” என்று அமிழ்ந்த குரலில் கூறினான். மூடியிருக்கும் கேற்றுக்குப் பின்னால் அவளைத் தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனதில்லை.அவன் தன்னுடன் நிற்கவே கூடாதென்பதாக உறுதியாக அவனை விரட்டினாள் மெஹ்ரூன்.

ஒரு நள்ளிரவில் ஒரு மழைநாளில் ஆட்டோவில் வந்தவொரு வாலிபனுடன் மெஹ்ரூன் ஓடிப்போனாள் என்றோ அவளை இந்த வாலிபனோடு பார்த்ததாகவோ வரப்போகிற கதைகளுக்கு முளைக்கும் கண் வாய் மூக்குகள் அவளை எச்சரித்தன.“நான் பார்த்துக் கொள்வேன். நீ போய்விடு ப்ளீஸ்” என்று கெஞ்சும்போது அவளது குரல் உடைந்துவிட்டிருந்தது. மூணு வருசம் கூடவே வாழ்ந்தவனுக்கு வராத கருணையும் அக்கறையும் இவனுக்கு வந்ததற்காக அவனை மனதார மெச்சலாம் என்றாலும் அது அவளுக்கு வேண்டாததாக இருந்தது. அவன் மௌனமாக ஆட்டோவைத் திருப்பிக் கொண்டு சென்றான்.

இப்போது மழை ஓய்ந்துவிட்டிருந்தது. மெஹ்ரூனின் ஆர்ப்பரிப்பும் அடங்கிக் கொண்டிருந்தது. இறுதியானது என எண்ணிக் கொண்டு வலிந்து தன் முழுப்பலத்தையும் திரட்டி உரத்துக் கத்தினாள் “குசுமா” சற்று நேரத்தில் கேற்றின் பிரதான விளக்கு எரிந்தது. குசுமா எழுந்திருக்க வேண்டும்.“குசுமா, குசுமா” என்று கேற்றில் மேலும் பலமாகத் தட்டினாள். குளிர் மேல் கோட் அணிந்தபடி கைகளில் குடையும் டோச் லைட்டுமாக குசுமா நடந்து வருவதைக் கேற்றின் துவாரத்தினுடாக மெஹ்ரூன் கவனித்தாள். கூடத்தில் நின்றபடி “கௌத” என்றாள் குசுமா.“மம மெஹ்ரூன், மம மெஹ்ரூன்”. கேற் திறந்தது. பெயரைக் கேட்டு இல்லை, குரல் பெண்ணுடையது என்றதுமே பரபரப்புடன் கேற்றைத் திறந்தாள் குசுமா. செழிப்பான அழகான எப்போதும் ஒரு பறவையைப் போல குதூகலமாகச் சுற்றித்திரிகிற மெஹ்ரூனை அந்தமட்டில் எதிர்பார்க்காத அதிர்ச்சியை குசுமா புலன்களில் வெளிப்படுத்தினாள். மெஹ்ரூனின் கையில் பனிக்கட்டியாக உறைந்து உறங்கிக் கிடக்கும் குழந்தையை தாவிப் பெற்றாள். ஏன் என்ன என்ற எந்த விசாரணையுமின்றி உள்ளே அழைத்துக் கொண்டு விடுவிடென்று நடந்தாள். நேராகத் தனது அறைக்குச் சென்று கட்டிலில் குழந்தையைக் கிடத்தினாள். டவலைக் கொடுத்து மெஹ்ரூனைக் தலைதுவட்டக் கோரினாள்.

மெஹ்ரூன் இரண்டு மணி நேரமாக கத்தியும் கூப்பாடிட்டும் கேட்காமல் போனதற்காக வருந்தினாள். ஒரு எருமையைப் போலப் படுத்திக் கிடந்திருக்கிறேன் என்று தன்னையே நொந்து கொண்டாள். குழந்தையின் உள்ளங் கைகளையும் கால்களையும் தேய்த்து சூடேற்றினாள். உடல் முழுவதும் மூடிய மழை உடையில் இருந்தது குழந்தை. கால்மேசை தொப்பியைக் கழற்றினாள். ஈரத்துடனேயே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள் மெஹ்ரூன். இத்தனை நேரமும் மூண்டெழாத துயரமும் ஆற்றாமையும் பொங்கியது. கண்ணீர் சொரிந்தாள்.

“மெஹ்ரூன் நீ ஏன் அழுகிறாய் என்று நான் கேட்கமாட்டேன். குழந்தையும் கையுமாக நீ தனித்து விடப்பட்டிருக்கிறதைப் புரிஞ்சிக்க முடிகிறது. அழு நல்லா அழு. உன்ட மனதிலுள்ள அவநம்பிக்கையும் அச்சமும் தீரும் வரையும் அழு. அழுகை உன்னைத் தெளிய வைக்கட்டும். உனக்குப் புதிய நம்பிக்கைகளைத் தரட்டும்..’.

குழந்தை தூக்கம் கலைந்து கண்களைத் திறந்துவிட்டிருந்தது. டியூப் லைட்டின் வெண்ணிற வெளிச்சத்தில் கண்கள் கூச கால்களை நீட்டி முடக்கியது.“பால் கொடுக்கணும்” என்றாள். அலமாரியைத் திறந்து “மெஹ்ரூன் இதிலிருந்து உனக்கு வேண்டியதை உடுத்துக் கொள். ஈரத்துடன் பிள்ளைக்குப் பால் கொடுக்காதே. உனக்கு அறை தயார் செய்துவிட்டு வருகிறேன்” என்றபடி கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தாள். நேரம் அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.

இந்த விடுதியை மேற்பார்வை செய்வதற்காகவே பிறந்தவள்போல குசுமா இங்குதான் வாழ்கிறாள். மெஹ்ரூன் விடுதிக்கு வரும்போதும் அவள் வருவதற்கு முன்னரும் குசுமாதான் மேற்பார்வை செய்தாள். இப்போதும் குசுமாதான் இங்கு இருப்பாள் என்று மெஹ்ரூன் முழு மனதாக அறிந்திருந்தாள். அவளது கரம் எந்தவித சஞ்சலமுமின்றி எந்நேரத்திலும் எவரை நோக்கியும் நீளக்கூடியது என்ற கணிப்புக்குப் பிசகின்றி இருந்தது குசுமாவின் ஒவ்வொரு செயலும்.

மெஹ்ரூன் விடுதியிலிருந்து செல்வது குசுமாவுக்கும் எண்ணற்ற சந்தேகங்களை உருவாக்கியிருந்தது. வேலைக்குச் செல்கிற இவள் தனியாகப் போய் என்ன செய்யப் போகிறாள் என்ற கேள்வியும் இங்கு அவசரம் ஆபத்திற்கு நாங்களெல்லாம் இருக்கிறோம், வீடென்றால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வருவார்களா அதுவும் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொண்டு ராட்சதப் பாம்பமாக இரவில் சுருண்டு பகலில் விரியும் இந்த நகரத்து வாழ்வில் நடக்கவே நடக்காது என்றெல்லாம் பேசிப் பார்த்துவிட்டாள். ஷாஜியின் எதிர்காலத்திற்காக விடுதியிலிருந்து வெளியேறியே ஆகவேண்டும் என்ற மெஹ்ரூனின் தீர்மானத்தை யாரும் புரிந்து கொள்வதாக இல்லை.

ஷாஜி முழுக்க முழுக்கப் பெண்களின் வாசனையிலேயே முழுப் பொழுதும் வாழ்கிறான். அவர்களின் செய்கைகளையே கவனிக்கிறான். சில சமயங்களில் அவனில் அவை பிரதிபலிக்கின்றன. மனவடு வந்துவிட்டால் உலகத்தில் எந்த மூலைக்கு ஒடினாலும் ஆற்றமுடியாதென்ற எண்ணமே மெஹ்ரூனை மீளாது இயக்கியது. அவனுக்கான சாதாரணமான எளிமையான உலகொன்றை உருவாக்கிக் கொடுக்கும் தேவை தனக்கிருப்பதாக நம்பினாள்.

வாடகைக்கு வீடு பெறுவதுதான் பெரும் போராட்டமாகியிருந்தது.  “இவங்க அப்பா என்ன பண்றாரு”-

“அவரு எங்க கூட இல்லெ”-

“கூட இல்லைன்னா என்ன

செத்துப் போய்ட்டாரா”

“விவாகரத்தாயிட்டு” என்றதும் மேலும் கீழுமாக அற்பப் பிராணியைப் பார்ப்பதுபோல் நோட்டமிடும்போது தாங்கமுடியாத கோபம் எழுந்தது அவளுக்கு. ஒருவள் மணம் முடிக்காமல் இருக்கலாம். அதுவும் சமூகம் விதித்திருக்கிற காலம் வரையுமிருந்தால் கௌரவம். விதவையாக இருக்கலாம். சடங்குத்தனமான புறக்கணிப்புகள் இருந்தாலும் அனுதாப உணர்வேணும் மிஞ்சுதவதற்கு இடமுண்டு. இந்த இரண்டுமில்லாது கணவனைப் பிரிந்தோ விவாகரத்தாகியோ வாழ்கிறவர்களை அலசி அலசிக் குடிக்கிற சுகம் பலருக்கு அலாதியானது. இந்தப் பெண்கள் மரியாதை வேண்டுவதாக இருந்தால் எந்தவொரு ஆணோடும் நட்போ தொடர்போ இருக்கக் கூடாது. இவர்களைத் தேடி ஆண்கள் எவரும் அலுவலகத்திற்கோ விடுதிக்கோ வரவோ டெலிபோன் செய்யவோ கூடாது. “யாரு அது...” “மாட்டிக்கிட்டானா”“செட்டாகிட்டா” என்றெல்லாம் அருவருப்பே இல்லாமல் கேட்கின்ற நிதர்சனத்தை புறந்தள்ளவோ ஆத்திரப்படவோ கூடாது. தள்ளினால் “அவள் ஒரு மாதிரி” என்ற ஆவிகளை ஏவிவிடுவார்கள்.

“மம்மீ”குளித்த மேகம் தரையிறங்கி நடப்பதுபோன்று வந்தான் ஷாஜி. தடுக்கி விழுந்திடக்கூடும் என்ற குசுமாவின் எச்சரிக்கையின் பொருட்டு வெள்ளை டவலைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வந்து கொண்டிருந்தான். இவள் எழுந்துவிட்டாள் என்பதைக் கவனித்ததும் ஏதும் பேசாமல் திரும்பி நடந்தாள் குசுமா. இவள் வீடு தேடும் படலத்தைத் துவக்கிய நாளிலிருந்து குசுமா இப்பிடித்தான் நேராகப் பாராமல் திரும்பி நடந்து கொண்டிருக்கிறாள். குசுமா விலகி நடக்கிற ஒவ்வொரு கணமும் மீண்டும் மீண்டும் மெஹ்ரூன் தன் தீர்மானத்தைப் பரிசீலனை செய்யும் விதமாக இருந்தது. என்னதான் என்றாலும் தனக்கும் பிள்ளைக்கும் விடுதி வாழ்வு தத்ரூபமாகாது என்ற முடிவுக்கே வந்தாள்.

ஒருவித பிடிவாதத்துடன் எழுந்தாள். நேற்றுப் பார்த்த அந்த வீட்டுக்கு மறுபடியும் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் கால்களை இழுத்தாள்.  ஓய்வு உறக்கம் கூடாத பணிச்சுமையும் ஏமாற்றங்களும் அவளைக் கடுமையாகப் பலவீனப்படுத்தியிருந்தது. சாய்வாகப் பறக்கும் பாரம் குறைந்த பறவையாக தேகம் வலிமையிழந்துபோயிருந்தது. 

நேற்றுச் சென்றபோது வீட்டில் உரிமையானவள் இருக்கவில்லை. அங்கிருந்த இரு வாலிபர்கள் “அம்மா வீட்டில் இல்லை” என்றதால் வீட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தாள். புதிதாக நிர்மாணம் பெற்றிருந்த அந்த வீடும் சூழலும் அண்டையும் அவளை வெகுவாக இழுத்தது.ஷாஜி இடுப்பில் இருந்து இறங்கி தக்கதக்கவென நடந்தான்.

சமையலறைக்குள் சென்று நின்று இவளை அழைத்துச் சிரித்தான். “வீட்டு வாடகை பதினைந்தாயிரம் ரெண்டு இலட்சம் முற்பணம்” என்றாள் சந்திரிக்கா. அதற்கு உடன்பட்டவளாக

மின்சாரம் தண்ணீர் போன்ற இன்னோரன்ன விடயங்களைப் பேசினாள். “தனி மீற்றர். பாவணைக்கு ஏற்றபடி பில் வரும்” என்பதும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. வாடகைக்கு குடியிருக்கும் இடங்களில் தலைவலி எழுவதே கரண்ட் தண்ணீர் பிரச்சினையிலென்பதை முன்னைய வாடகை அனுபவங்களிலிருந்து அவள் அறிவாள்.

“வீட்டில எத்தனை பேர்? உங்க அம்மா அப்பா?” என்றாள் வீட்டுக்காரி. “அம்மா அப்பா ஊரில் இருக்காங்க. எப்போவதாவது வந்து போவார்கள்”.

“இவங்க அப்பா என்ன செய்றாரு பிஸினஸா வேறெதும் ஜொப்பா” என்ற கேள்வியை மெஹ்ரூன் எதிர்பார்த்திருந்தாள். ஷாஜி வீட்டின் மூலையில் இருந்த மீன் தொட்டியில் நீந்துகிற மீன்களைப் பார்த்துக் குதிபோட்டுக் கொண்டிருந்தான். மெஹ்ரூன் இப்போது அறிந்துவிட்டிருந்தாள், தானும் மகனும் தனியொரு குடும்பமாக தனியொரு வீட்டில் வாழ்வதென்ற தீர்மானத்தில் அவள் உறுதியாக இருந்தாள். எந்தவொரு காரணத்தினாலும் தனது அரிய கனவைக் கலைக்க விரும்பாதவளாய் ஷாஜியை தூக்கி அணைத்துக்கொண்டே சொன்னாள்.

“அவரு இல்லிங்க. இறந்திட்டாரு...”.

புரிபடாத ஏமாற்றத்துடன் “ஓ ஸாரி” என்றாள் சந்தரிக்கா. “நாளைக்கு வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம். இந்த வீட்டின் மேல் போர்சனில்தான் நாங்க இருப்போம். எப்ப என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னைக் கூப்பிடும்மா” என்றாள்.

(வெசாக் - பௌத்தர்களின் விசேட பண்டிகைகளில் ஒன்று

பொசன் , போயா - முழு பௌர்ணமி தினம்.

தன்சல் - அன்னதானம்)

மார்ச், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com