சுதந்தர இந்தியாவின் ஆரம்ப கட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மீது அன்றைய அரசு போட்ட வழக்குகளில் ஒன்று நெல்லை சதிவழக்கு. இந்த வழக்கில் முக்கிய இடதுசாரிக் காரர்களான கே.பாலதண்டாயுதம், வி. மீனாட்சிநாதன், ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, ஐ.மாயாண்டி பாரதி, பாலுதேவர், ஆர்.வேலுச்சாமித் தேவர், நல்லசிவம் போன்ற 97பேர் இணைக்கப்பட்டனர். இவர்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப். இன்றும் நம்மோடு வரலாற்று சான்றாக வாழ்பவர்.
ஒருநாள் அந்திமங்கும் வேளையில் நானும் எழுத்தாளர் நாறும்பூநாதனும் திருநெல்வேலியில் ஆர்.எஸ் ஜேக்கப் வீட்டிற்கு சென்றோம். 90வயது நிரம்பிய அவர் முற்றத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் அவரது ஊன்றுகோல் இருந்தது.. மனதும் உடம்பும் வெவ்வேறாக அவரிடம் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தது. அவரது ஞாபக அடுக்கிலிருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒழுங்கின்மையின் ஒழுங்கில் எங்களுக்கு அறிமுகம் செய்தார்.
“1945ல் என்னுடைய 20வது வயதில் ஆசிரியர் பணிக்காக தூத்துக்குடிக்கு அருகில் உள்ள நயினார்புரம் எனும் பண்ணையூர் கிராமத்திற்குச் சென்றேன். பள்ளியின் உள்ளே சென்றவுடன் என்னைத் தேடி இரண்டு முரடர்கள் வந்தனர். “உங்களை பண்ணையார் கூப்பிடுகிறார்” என்றனர். அப்போது பள்ளியின் உள்ளே மறைவாக நின்ற பணியாளர் மூக்காண்டி, ‘போக வேண்டாம்’; என்று சைகையில் கூறினான். நான் அதை கவனித்துவிட்டு அவர்களிடம் “வேலைகள் உள்ளன. பிறகு வருகிறேன்” என்று கூறினேன். அந்த பண்னையார் வீட்டு வாசலில் நிற்கும் போது, நான் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டும் காலில் செருப்பு போட்டுக் கொண்டும் சென்றதால் அவர் என்னை கூட்டிவர என்று ஆள் அனுப்பிருந்ததாக பின்னர் தெரிந்துகொண்டேன்.
அந்த பள்ளிக் கூடத்தை பார்வையிட்டபோது அங்கே வகுப்புகளுக்குப் பதிலாக ஒவ்வொரு சாதிவாரியாக மாணவர்களைப் பிரித்து வைத்திருந்தார்கள். முதலில் அதை மாற்றி அமைத்தேன். அது ஊரில் மிகவும் பெரிய பிரச்சனையாக ஆயிற்று.
‘அந்த வாத்தியாரை பாடத்தை மட்டும் சொல்லி கொடுக்கச் சொல்லு. தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்ககூடாது. பிறகு ஆபத்தில் போய் முடியும்’ என்று சொல்லி, என்னை அந்த ஊர் பண்ணையார்கள் எச்சரிக்கை செய்தனர். பொதுவாக கட்டுப்படாதவர்களை அடித்து மாட்டுத்தொட்டி தண்ணீரில் தூக்கிப் போடுவது அவர்கள் வழக்கம். என்னையும் அவ்வாறு செய்வதற்கு தகுந்த தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுமட்டுமின்றி இரண்டு மூன்றுமுறை பள்ளியை தீவைத்தும் கொளுத்தியுள்ளார்கள். நாங்கள் அப்போது மடத்தில் வைத்து பாடத்தை நடத்திருக்கிறோம். இந்த சூழ்நிலையில்தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதோட பெரிய கொடுமை அந்த ஊர் பிள்ளைங்க எல்லாம் பண்ணையார்கள் வீட்டில் வயத்துப்பாட்டுக்கு வேலைக்கு வேறு சென்று விடுவார்கள்.
நான் அந்த ஊரில் ஆசிரியர் பணியை சமூகப் பணியாக செய்ததால் எனக்கு பொதுவுடைமை இயக்கத்தினரோடு பழக்கம் ஏற்பட்டது. நான் அடிக்கடி தூத்துக்குடிக்கு கட்சியினர் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வேன். அப்போது அவர்கள் “நீயும் மக்களுக்காகத் தான் பணி செய்கிறாய்” என்று என்னை அரவணைத்துக் கொண்டார்கள். எனக்கு அப்போது இயக்கம் பற்றி எதுவும் தெரியாது. தோழர் பாலதண்டாயுதத்தை சந்தித்த பிறகுதான் எனக்கு பொருள்முதல்வாதத்தைப் பற்றிய ஓர் அடிப்படை தெரிந்தது. பாலதண்டாயுதம் தரையில் குத்தவைத்து வாத்தியார் என்று பேச ஆரம்பித்தால் “பொணம் கூட துடித்து எழும்”. தனிநபர்களிடம் மட்டுமல்ல, கூட்டத்திலும் அவரது பேச்சு மெய்சிலிர்க்கும். முதலாளித்துவத்தின் குணாதிசயங்கள் என்ன?, அதனால் நாம் எப்படி கஷ்டப்படப்போகிறோம். அதை எதிர்த்துப் போராட என்ன செய்யவேண்டும்; என்று எடுத்துக் கூறுவார். அதன் பிறகுதான் நான் காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், மற்றும் லெனின் போன்ற சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.
கம்யூனிஸ்டு இயக்கம் தடைசெய்யப்பட்டபோது, தோழர்கள் தங்களது பாதுகாப்பு கருதி என்னிடம் வந்தார்கள். நான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன். அந்த ஊரில் 6 கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. இதுபோக, பெரிய கிறிஸ்துவ ஆலயம் வேறு இருந்ததால் சாப்பாட்டிற்கும் கவலையில்லாமல் பாதுகாப்பாகத் தங்கினார்கள். மேலும் நான் அந்த ஊரின் சபைக்கு பாதிரியார் மாதிரி இருந்ததால் காவல்துறையினருக்கு என் மீது சந்தேகம் வரவில்லை. என்னையும் அந்த ஊரில் யாரும் கேள்வி கேட்கவில்லை.
ஒரு நாள் கோவில்பட்டி தோழர் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரிக்கையில் அவர் அடிதாங்காமல் அப்ரூவர் ஆகி தோழர்கள் இருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து 1950 மார்ச் 17ஆம் தேதி அன்று மதியம் 1 மணி இருக்கும். பிள்ளைகள் வீட்டிற்கு சாப்பிடச் சென்று விட்டார்கள். நானும் மூக்காண்டியும் இருந்தோம். அப்போது திடீரென்று போலீஸ் ஜீப்களும் லாரியும் பள்ளியை சூழ்ந்தன. வேகமாக பள்ளிக்குள் வந்த போலீஸார் கதவைப்பூட்டி என்னோடு இருந்த இருவரையும் சேர்த்து தாக்கத்தொடங்கினர். மேலும் எனது கையை துண்டைவைத்து முதுகுப்புறமாகக் கட்டி நாற்காலியில் உட்காரவைத்துக்கொண்டு கேள்விகள் கேட்டனர்.
உங்க தோழர் பாலதண்டாயுதத்தை எங்க ஒளிச்சி வச்சிருக்க?
நாட்டு வெடிகுண்டு செய்ற இடம் எது? என்று கேட்டுக்கொண்டே சுற்றும்முற்றும் கண்களால் நோட்டம் விட்டார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
அப்போது தற்செயலாக என்னுடைய ,டயரியை எடுத்துப் பார்த்தார். அதில் “நேற்று பள்ளியில் ரகசியமாக கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது” என்று எழுதியிருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் “வாத்தி வசமாக மாட்டிகொண்டான். தனக்குத்தானே தூக்குகயிறு போட்டுகிட்டான்” என்று சந்தோஷமாக துள்ளிக் குதித்து ஆடிக்கொண்டே கூறினார்.
புத்தகங்கள் அனைத்தையும் அள்ளி எடுக்கும் போது ஏட்டு ஒருவர் “ஐயா இங்க பாருங்க மார்க்ஸ் புத்தகம்” என்று ஒரு புத்தகத்தை எடுத்து இன்ஸ்பெக்டரிடம் காண்பித்தார். அவரும் உடனே “அதுதாண்டா அவங்க தலைவரு” என்று கூறினார். நான் வலிதாங்காமல் தலையை லேசா கத் தூக்கிப் பார்த்தேன். எனக்கு சிரிப்புதான் வந்தது. அது சுவிஷேச புத்தகம். மாற்கு என்பவர் 12 சீடர்களில் ஒருவர். அவருடைய புத்தகத்தை எடுத்துகொண்டு மார்க்ஸ் புத்தகம் என்று நினைத்து கூறினார்கள். என்னுடைய புத்தகங்கள் மற்றும் டயரிகள் அனைத்தையும் ஜீப்பினுள் போட்டு, என்னை லாரியினுள் தள்ளினர். உடனே ஊர் மக்கள் போலீஸாரை தடுத்ததால் லத்திசார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைத்தனர். என்னை லாரியில் ஏற்றி கொண்டு நேராக பண்ணையார் வீட்டிற்குச் சென்றவர்கள் முதலாளியிடம் ஆசியும்,கையூட்டும் பெற்று, வடி சாராயத்தையும் குடித்துவிட்டு தூத்துக்குடி குற்றவியல் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். அங்கே என்னை கைது செய்ததை காண்பிக்காமல் 3 நாள் வைத்திருந்தனர். அந்த ஜெயிலில் என்னை சுற்றி ஒரே மலம்தான். மிகவும் கொடுமையாக இருந்தது.
மூன்றுநாள் கழித்து, தூத்துக்குடி சப்ஜெயில். பிறகு அங்கிருந்து கொக்கிரகுளம் சப்ஜெயில்; என்று ஒவ்வொரு ஜெயிலாக என்னை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். எந்த ஒரு இடத்திலும் எனது குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கவில்லை. கடைசியில் என்னை மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவந்தபோது போலீஸ் வாரண்டில் “பயங்கரமான கம்யூனிஸ்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அடித்துதான் உள்ளே அனுப்பினார்கள், அங்கே என்னைப்போல் பல மாவட்டங்களில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் கொண்டு வந்திருந்தனர். அப்படி ஒருநாள் காவல்துறையினர் தோழர் நல்லகண்ணுவையும் அடித்து துவைத்து அழைத்து வருவதைப் பார்த்தேன்.
என்னோடு சிறையில் இருந்த கடம்பூர் வேலய்யா அடி தாங்கமுடியாமல் “என் பேர் வேலய்யா, வேலுச்சாமி தேவரைக் கண்டுபிடிப்பது உன் வேலையா,? வேறு ஒண்ணும் என்னட்ட கேளாதைய்யா” என்றார். இப்படி சொன்னதுதான் தாமதம், அவரது காதோடு சேத்து ஓங்கி ஒரு அறை விட்டார்கள். காதில் இருந்து ரத்தம் வந்து காதே செவிடாகிவிட்டது.
மாயாண்டி பாரதி வேதனையின் உச்சகட்டத்தில் “பாலனை என் மடியிலயா வச்சிருக்கேன் அவுத்துத் தர...போயா...” என்றார். அவரை மிதித்த மிதியில் அவரது உயிர்த்தலம் வீங்கியது.
நல்லகண்ணுவின் மீசை மயிரை ஒவ்வொன்றாய்ப் பிடுங்கினார்கள்.
என் விரல்களை வளைத்தார்கள். கரண்டை கால்களை உடைத்தார்கள். படுக்க வைத்து இரு கால்களின் மீதும் உருட்டுக்கட்டையைப் போட்டு உருட்டினார்கள். புளிய மிளாரினால் என்னை அடித்தபோது இரத்தம் சுவரில் கொட்டியது. இது என்ன?... என்று ஏட்டு சுப்பையா கேட்டார். நான் சொன்னேன்,‘இது என் இரத்தம். இதைத் தான் உன்னால் வாங்க முடியுமே தவிர வாயிலிருந்து வார்த்தையை வாங்க முடியாது’ என்று. சந்தேகத்தின் பேரிலும் தவறான தகவல்களின் பேரிலும் 200-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு வந்து விசாரணைசெய்து வடிகட்டி 9 பேர் மீது நெல்லை சதிவழக்கு போட்டார்கள் இதில் ஐரிஸ் கோர்ட் (கீழ்கோர்ட்) தீர்ப்பில் எனக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பிறகு கீழ்கோர்ட்டில் இருந்து மேல்கோர்ட்டான மதுரை செஷன்ஸ் கோர்ட்க்கு கேஸ் வந்தது.
இந்த செஷன்ஸ் கோர்ட்டுக்கு வரும்போது 65 பேர் மீது மட்டும் வழக்கு நடந்தது. மீதிப்பேரை கழித்துவிட்டார்கள். மூன்று வருடமாக விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் பாளைசண்முகம் மற்றும் என்.டி.வானமாமலை ஆகிய இருவரும் சேர்ந்தே இந்த நெல்லை சதிவழக்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் எந்தவிதமான பணமும் வாங்காமல் நடத்தினார்கள். இதில் 5பேருக்கு ஆயுள்தண்டனையும், ஒரு சிலருக்கு 10வருட தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் எனது விசாரணை வரும்போது நீதிபதி சுப்பிரமணியன் அவர்கள் எல்லாவற்றையும் விசாரணை செய்து கொண்டு இருந்தார். இடையில் கோர்ட் 4 நாள் விடுமுறை என்று அறிவித்தார். உடனே பாளைசண்முகம் எழுந்து
“ விசாரணை முழுவதும் முடியாமல் கோர்ட் விடுமுறை என்றால் எப்படி?
விசாரணையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே” என்று துணிச்சலாகக் கேட்டார். அதற்கு நீதிபதி நான் ஜேக்கப்பின் டயரியை முழுவதும் படிக்கவேண்டும் எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. அதனால் நான் கொடைக்கானலுக்கு டயரியை எடுத்து செல்கிறேன் என்றார். உடனே பாளைசண்முகம் என்னிடம் வந்து ‘யோவ் வாத்தியார், உன் டயரி கொடைக்கானல் போவுது’ என்று பதட்டமடைந்தார். எனக்கு அன்னைக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லை. என்னுடைய டயரியை இன்னொருவன் பார்ப்பான் என்று நினையாத காலத்தில நான் எல்லா ரகசியங்களையும எழுதியிருப்பேன். அதில் என் தங்கச்சியை திட்டி ‘இவள் என் பேச்சை கேட்கமாட்டுக்கா, இவளுக்கு நல்ல புருஷன் எப்படி கிடைப்பான்’? அப்படீன்னு எழுதிஇருந்தேன். அதேபோல் ஊரில் நான் மீனாட்சி என்ற பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டிருந்ததையும், அவளும் என்னைப் பார்த்து சிரித்ததையும் குறிப்பிட்டு இருந்தேன். இதுமட்டுமின்றி நாம் சமூகத்திற்காக உழைக்க வந்துவிட்டு இப்படி காதலில் சிக்கலாமா? என்று மனதில் பட்டதையெல்லாம் எழுதி இருந்தேன். அதேபோல் ‘பாலதண்டாயுதம் பற்றியும் வர்ணிச்சி எழுதியிருப்பேன். அவர் உயரமான தோற்றம் மற்றும் என்னிடம் முழங்கால் போட்டுகொண்டு பேசிய மார்க்ஸிசம், இப்படி எல்லாவற்றையும் எழுதி இருப்பேன். இதில் நீதிபதி எதை முதலில் படிப்பார் என யோசனையில் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒரே பதட்டமாக இருந்தது.. என்னை போலீஸார் கைது செய்யும் போதுகூட இப்படி நான் பதறியதில்லை’. ‘யாருக்கு விடுதலை கிடைத்தாலும் உனக்கு விடுதலை கிடைக்காது’ என்று இரண்டு வக்கீல்களுமே என்னிடம் கூறினார்கள். ஏனென்றால் எனது டயரியில் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் அனைத்துமே எழுதி வைத்திருந்தேன். அதுவே என்னை தூக்கில் போடுவதற்கு போலீஸாருக்கு போதுமான ஆவணமாக இருந்ததாக நினைத்தார்கள்.
கொடைக்கானலில் வைத்து டயரி முழுவதையும் படித்த நீதிபதி சுப்பிரமணியன் தனது தீர்ப்பில், ‘வாத்தியார் ஜேக்கப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பள்ளியில் படிக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். எல்லாவற்றையும் ஒளிவுமறைவு இல்லாமல் டயரியில் எழுதியிருக்கிறார். மேலும் அவர் கிறிஸ்தவர் என்பதால் எல்லோருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். நான் அவரை விடுதலை செய்கிறேன்’ என்று கீழ்க்கோர்ட் கூறிய மரணதண்டனை தீர்ப்பை ரத்து செய்தார்” என்று புன்னகைத்தார் ஜேக்கப். இந்த அனுபவங்களை வைத்து வாத்தியார் என்ற புதினத்தை எழுதி அதுவே அவருக்கு அடையாளமாக மாறி ‘வாத்தியார் ஜேக்கப்’ ஆனார்.
அவர் வாத்தியார், மரணவாயிலில், பனையண்ணன் போன்ற நாவல்களோடு ‘ஊரும்பேரும்’ என்று நெல்லை மாவட்டத்தின் வரலாறு சொல்லும் ஐந்து தொகுதி களையும் எழுதி இருக்கிறார்.
அக்டோபர், 2016.