குடும்பங்களில் விவாகரத்து தொடர்பாக பொதுச்சமூகத்தில் எப்படியான கருத்து நிலவுகிறது என்றால்? உடல் ரீதியான கொடுமைப்படுத்தலுக்கு மட்டும் தான் விவாகரத்து பெற முடியும் நினைக்கின்றனர். அப்படி இல்லை. பல காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதற்கு உதாரணமாக இந்த வழக்கைப் பார்க்கலாம்.
அந்த பெண்ணின் பெயர் ராம லட்சுமி. முதல் முறையாக என்னை சந்திக்க வந்தபோதே அந்தப் பெண் பரபரப்பாக இருந்தார்.
‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க மேடம். மகனை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல வந்திருக்கிறேன். அதற்கு இடையில் தான் உங்களை பார்க்க வந்துள்ளேன். இங்க வந்திருப்பது தெரிந்தால் பிரச்னையாகிடும். உடனே போகவேண்டும்' என்றார் பதட்டத்துடன்.
அவர் தொடர்ந்து தன் கணவனைப் பற்றி சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பது போல் திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்துள்ளனர். சில மாதங்கள் கழித்துத்தான் பிரச்னை தொடங்கியுள்ளது. இருவரும் வெளியே செல்லும் போதெல்லாம் ‘எப்படிடா இவனுக்கு இவ்வளோ அழகா பொண்ணு கிடைத்தது'என நண்பர்களும் அக்கம் பக்கத்தினரும் கிண்டல் செய்துள்ளனர். இது போன்ற பேச்சுகளும், மனைவியின் முக லட்சணமும், கணவருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சுமியை கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார் அவரின் கணவர். நல்ல உடை அணிய, வீட்டு வாசல் படியைத் தாண்டி வெளியே வர, வாசல் கதவை திறக்க லட்சுமிக்கு தடைவிதித்துள்ளார்.
குழந்தைக்கு உணவு ஊட்ட ஜன்னல் அருகே சென்றால் கூட ‘பக்கத்து வீட்டுக்காரனை பாக்கவா அங்கு போற' என்று சந்தேகப்படுவதோடு, வீட்டை சுத்தி யாராவது இருக்கிறார்களா? என்றும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து ஒவ்வொரு ஜன்னலாக அடைத்திருக்கிறார். இரவு நேரத்தில், மனைவி பக்கத்தில் இருக்கிறாரா என படுக்கையைத் தடவிப்பார்ப்பது, லைட் போட்டு பார்ப்பது என அவரிடன் நடத்தை முழுவதுமாக மாறியுள்ளது.
‘ஏங்க இப்படி பண்றீங்க. டாக்டரிடமாவது போலாமா'என லட்சுமி கேட்டதற்கு, ‘டாக்டரிடம் கூட்டிப் போய், எனக்கு பைத்திய பட்டம் கட்டிட்டு, நீ எவன் கூடனா வெளியே சுத்தலாம்னு பாக்குறீயா'என்றாராம்.
நாளுக்கு நாள் அவரின் சந்தேகம் அதிகரிக்க, மனநோயாளியாக உள்ளவருடன் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார் லட்சுமி. இதில் லட்சுமிக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், ‘என்னுடைய கணவர் என்னை அடிக்கவோ, காயப்படுத்தவோ இல்லை. என்னால் விவாகரத்து வாங்க முடியுமா?' என்று கேட்டார். அந்த காலகட்டத்தில், உடல் ரீதியான வன்முறைகளை மட்டுமே நீதிமன்றம் குற்றமாகக் கருதியது. இந்த விஷயத்தை அவரிடம் சொல்லி ‘உன்னுடைய கணவரை ஏதாவது மருத்துவரிடம் அழைத்து சென்று மருத்துவம் பாரும்மா' என்று அனுப்பி வைத்தேன்.
கணவரை மாற்ற எவ்வளவோ முயன்றிருக்கிறார் லட்சுமி. இரண்டாவது முறையாக என்னிடமே வந்தார், அவரின் தந்தையை அழைத்து கொண்டு. ‘தனது மகளுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கையே வேண்டாம்' என்றார் லட்சுமியின் அப்பா. பிறகு தான், அதை வழக்காகப் பதிவு செய்தேன். இந்த சம்பவம் நடந்தது ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு.
லட்சுமியின் கணவர் வழக்கை எதிர்கொண்டார். ‘என்னுடைய மனைவி பொய் சொல்லிவிட்டு யாருடனோ போவதற்கு இதையெல்லாம் செய்கிறார்' என அவர் தரப்பு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
கூடுதலாக நாங்கள் ஒரு மனுவை தாக்கல் செய்தோம். அதில், லட்சுமியின் கணவரை மனரீதியான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றோம். அந்த மனுவின் அடிப்படையில், குடும்ப நலநீதிமன்றத்தில் உள்ள மனநல மருத்துவரிடம் அவரை அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையின் அறிக்கைப்படி, ‘அவர் சந்தேகப் புத்தியுள்ள மனநோயாளி. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முழுமனதுடன் சம்மதித்தால் தான் எந்த மருத்துவமும் பலன் தரும். அவருக்கு மருத்துவம் பார்க்க வேண்டும்'என குறிப்பிட்டிருந்தனர். பிறகு, வழக்கு விசாரணை முழுமையாக நடந்தது. லட்சுமிக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த சமயத்தில் இந்த வழக்கானது பல பெண்களுக்கு வழிகாட்டுவதாக இருந்தது.
பின்னாளில் குடும்ப வன்முறை சட்டம் வந்த பிறகு தான், பல விதமான குடும்ப வன்முறைகள் வரையறை செய்யப்பட்டன. உடல் ரீதியான வன்முறை, மன ரீதியான வன்முறை, உணர்வு ரீதியான வன்முறை, வார்த்தை ரீதியிலான வன்முறை, பொருளாதார ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை என பிரிக்கப்பட்டுள்ளது.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ வரன் பார்க்கிற போது ஜாதகம், சுயகுறிப்பு (Bio data) போன்றவற்றை பார்த்துத் தான் திருமண ஏற்பாடுகளை செய்கிறோம். இப்படி கொடுக் கப்படும் சுயகுறிப்புகளில் ஆண் ஏற்கெனவே திருமணம் ஆனாவரா? ஆகாதவரா? விவாகரத்து பெற்றவரா? போன்ற விவரங்கள் சுயகுறிப்புகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல், பையன் நோய் இல்லாமல் நன்றாக இருக்கிறானா? மன நலத்துடன் உள்ளானா? எவ்வளவு சம்பாதிக்கிறான்? பைனின் குடும்பம் எப்படி? இந்த விஷயங்களை எல்லாம் திருமணத்துக்கு முன்பே தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்தியா போன்ற நாட்டில் இது முடியாத காரியாக உள்ளது.
நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்பவர்கள் ‘நான் இந்தப் பெண்ணை / ஆணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று நாளிதழ்களில் விளம்பரம்
கொடுக்க வேண்டும். அப்படி விளம்பரம் கொடுக்கும் போது, ஒரே நபர் இரண்டு, மூன்று திருமணம் செய்து கொள்வதைத் தடுக்க முடியும். இது என்னுடைய சொந்தக்கருத்து.
அதேபோல், ஆண் / பெண் இருவரும் தாம்பத்திய உறவு கொள்வதற்குத் தகுதியானவர்களா என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் பெற்ற அறிக்கையை சுயகுறிப்புடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி, ஆண்களில் இருபது சதவீதம் பேர் பாலியல் குறைபாடு உள்ளவர்கள் என்கிறது. ஒரு ஆண் தாம்பத்திய உறவு கொள்ள தகுதி அற்றவனாக இருக்கும் பட்சத்தில், அதை மறைத்து செய்யப்படும் திருமணம் செல்லாது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
திருமணம் ஆனவர்கள் தாங்கள் வேலைப் பார்க்கும் இடத்தில், சர்வீஸ் ரெக்கார்டில் தங்களது இணையரது பெயரை குறிப்பிட வேண்டும். இது நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும், சிலர் தங்களது மனைவி பெயரைக் குறிப்பிடாமல் வேறு யாருடைய பெயரையாவது குறிப்பிடுகின்றனர். பெண்கள் திருமணம் ஆன உடனேயே, தன்னுடைய கணவர் வேலைப் பார்க்கும் நிறுவனத்திடம் ‘நான் தான் அவருடைய முறைப்படியான மனைவி, அவருடைய சர்வீஸ் ரெக்கார்டில் என் பெயரை குறிப்பிடுங்கள்' என்று கேட்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. கணவர் தன் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளாரா என்பதை அறிய அப்பெண் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியை நாடலாம்.
கணவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து, அவர் உயிரிழந்து விட்டால், அவரின் பணிப் பயன்கள் அனைத்தும் மனைவிக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம். நாமினியாக (Nominee) ஒருவரைக் குறிப்பிட்டாலே அவருக்குத்தான் சொத்து, பணமெல்லாம் போகும் என்று கிடையாது. நாமினி என்பவர் ஒரு பாதுகாப்பாளர் மட்டும் தான். இதை உச்சநீதிமன்றமே குறிப்பிட்டிருக்கிறது. தன்னுடைய பெயரை கணவர் நாமினியாக போடவில்லை, மாமியார் பெயரையோ வேறு யார் பெயரையோ குறிப்பிட்டுள்ளார். அதனால் அவரின் சொத்து மீது நமக்கு உரிமை இல்லை என பெண்கள் நினைத்துவிடக் கூடாது. வழக்குப் போட்டு பெறமுடியும்.
ஆண்கள் மனைவிக்கு சொத்தில் பங்கு இருக்க கூடாது என நினைக்கின்றனர். ஆண்கள் ஒரு வீடு வாங்கினால் கூட, மனைவியின் நகைகளை அடகு வைத்துத்தான் முன்பணம் கொடுக்கிறார்கள். ஆனால் சொத்தை தங்களின் பெயரில் மட்டுமே பதிவு செய்து கொள்கின்றனர் ஆண்கள். இது பெண்களை ஏமாற்றும் விஷயம்.
பல மேற்கத்திய நாடுகளில், திருமணம் செய்து கொண்ட பிறகு வாங்கும் எந்த சொத்தாக இருந்தாலும், அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்ற சட்டம் உள்ளது. அதே மாதிரியான சட்ட முன்வரவை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். ஆனால், அதை சட்டமாக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறோம். அந்த மசோதாவின் பெயர் Matrimonial Property Rights bill..
இன்றைய சூழலில் கணவனோ, மனைவியோ யார் சம்பாதித்து சொத்தோ அல்லது வேறு ஏதோ முதலீடு செய்கிறார்கள் என்றால், அது அவருக்கு மட்டுமே சொந்தமானது. பெண்களுக்கு நான் சொல்லக் கூடியது என்னவென்றால், உங்களின் நகையை வைத்து சொத்து வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான அடமான ரசீதை உங்களின் பெயரிலேயே வாங்குங்கள். வரும் பணத்தை வங்கியின் மூலம் உங்கள் கணவருக்கு அனுப்புங்கள். இது சேர்ந்து வீடு வாங்குவதில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும். இன்று பெண்கள் ஏமாற்றப்படும் இடமாக இருப்பது சொத்தில் தான். ஐநா அறிக்கையின் படி உலகில் ஒரு சதவீத பெண்களுக்குத் தான் சொத்து இருக்கிறதாம். அப்படியென்றால் இங்குள்ள பெண்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்! (சந்திப்பு: தா.பிரகாஷ்)
ஏப்ரல், 2023