அமர்த்தியா சென்னுக்குப் பிறகு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்று இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அபிஜித் பானர்ஜி. மும்பையில் பிறந்து அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அபிஜித் பானர்ஜி தன் மனைவி எஸ்தர் டப்ளோ, மற்றும் மைக்கேல் க்ரெமர் ஆகியோருடன் இணைந்து பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார். உலக வறுமையை ஒழிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் முயற்சிக்காக இந்த பரிசு.
அபிஜித் பானர்ஜி இந்தியாவின் ஜிடிபி மேலும் விழுந்துவிடும் என்று கருத்து சொன்னதற்காகவும் கடந்த தேர்தலில் காங்கிரஸின் ராகுல் காந்தி
அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை வடிவமைக்க ஆலோசனை கூறியதற்காகவும் அறியப்படுகிறார். நாட்டில் பல மாநில அரசுகளும் இவரது ஆலோசனைகளை வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் கேட்டுச் செயல்பட்டு வருகின்றன. ஏழ்மை பற்றிய இவரது ஆய்வும் அணுகுமுறையும் முக்கியமான அம்சங்கள்.
Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty (2011) என்பது இவர் தன் மனைவி எஸ்தர் டப்ளோவுடன் இணைந்து எழுதிய நூல். உலகில் வறுமை ஒழிப்புக்கான
பரிசோதனைகளைப் பற்றியும் அவற்றின் பலன்களைப் பற்றியும் பேசியது இது.
இந்தோனேசிய விவசாயி ஒருவரின் வாழ்க்கைக் கதையின் மூலம் வறுமை எப்படி ஒரு குடும்பத்தைப் பீடிக்கிறது என்று இவர் அந்நூலில் சொல்லியிருப்பார். ஜகார்த்தாவில் இருந்து தொலைவில் இருக்கும் கிராமத்தில் ஓர் கூலித்தொழிலாளியை இவர்கள் சந்திக்கிறார்கள். அவர் பெயர் பாக் சோல்ஹின். இவரது தந்தைக்கு நிலம் இருந்தது. விவசாயம் செய்தனர். இவருடன் பதின்மூன்று பேர் உடன் பிறந்தவர்கள். அனைவருக்கும் வீடு கட்டியதில் விவசாயம் செய்ய நிலம் இல்லாமல் போய்விட்டது. எனவே பக்கத்து வயல்களில் கூலிக்கு வேலை செய்தார் பாக் சோல்ஹின். அங்கும் இடுபொருள் விலை உயர்வால் கூலி வேலை கூட கிடைக்காமல் போகிறது. எனவே இவரது மனைவி மூன்று குழந்தைகளுடன் ஜகார்த்தாவுக்குப் புலம் பெயர்ந்து வீட்டு வேலை செய்கிறார். மூத்தப் பையன் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்குப் போகிறான். மீதி இரண்டு பிள்ளைகளும் நகரத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ள முடியாமல் தாத்தா பாட்டிவசம் வளர்கின்றனர். சோல்ஹின் இப்போது கட்டட வேலைக்குப் போகிறார். ஆனால் அவர் இவர்கள் சந்தித்தபோது கடந்த ஒருவாரத்தில் நான்கு நாட்கள் இரண்டு வேளை மட்டும்
சாப்பிட்டிருந்தார். மூன்று நாட்கள் ஒரு வேளை தான் உணவு கிடைத்திருந்தது. அரசு வழங்கும் மானிய அரிசியை வைத்துத் தான் உயிர்வாழ்கிறார். அவருக்கு போதுமான உணவு இல்லாதபோது அவரால் வேலையும் செய்யமுடிவதில்லை! உடலுக்குத் தேவையான சக்தி தரும் உணவு ஓரளவுக்குக் கிடைத் தால் அவர் வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ள முடியும்!
கிழக்காசிய நாடுகளின் வறுமை நிலைக்குக் காரணமானவற்றை தெளிவாக விளக்கும் இதுபோன்ற பல நேரடி அனுபவங்களும் இவற்றில் எந்த இடத்தில் அரசுகள் தலையிட்டால் இதைச் சரி செய்யமுடியும் என்ற ஆலோசனைகளுமே அபிஜித்தின் பணி.
ஆப்பிரிக்க நாடுகளில் கொசுக்கடியால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாது. பள்ளிகளில் படிப்பு பாதிக்கப்படுகிறது. கொசுக்கடியைத் தவிர்க்க நல்ல கொசுவலையும் கொசு மருந்தும் அளிப்பது இதை ஆரம்பத்திலேயே தடுத்துவிடும். ஒரு குழந்தைக்கு கொசுவால் பரவும் நோய் வராதபோது பள்ளியில அருகில் இருக்கும் இன்னொரு குழந்தைக்கும் அது பரவப்போவது இல்லை! இது ஒரு முக்கியமான தலையீடு அல்லவா?
இவரது ஆய்வுகளில் முக்கியமானது உலகில் எங்கோ ஒரு நாட்டில் ஏழ்மையில் வாடுகிறார்கள் என்று யாரும் சும்மா இருக்கக்கூடாது. அதன் விளைவுகள் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கும் பரவும் என்பதாகும். ஆப்பிரிக்கக் குடும்பம் ஒன்று உணவின்றி வாடும்கையில் அதிலிருக்கும் பெண் காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அவள் பாலியல் தொழிலில் இறங்கநேரிடும். அதன் மூலம் நோய்கள் பாதிப்புகள் தொலைதூரம் வரை பரவக்கூடும்.
நூறுகோடிப்பேர் வசிக்கும் இந்தியா கடந்த 22 ஒலிம்பிக்குகளில் சராசரியாக 0.92 மெடல்களை இது வரை வென்றுள்ளது. இது ட்ரினிடாட், டொபாகோ நாட்டை விட மிகக்குறைவு. இவற்றின் சராசரி 0.93. இந்தியாவை விட 79 நாடுகள் அதிகமான பதக்கங்களை வெல்கின்றன. சீனா கடந்த எட்டு ஒலிம்பிக்குகளில் 48.3 பதக்கங்களை சராசரியாக வென்றுள்ளது.
நம் பரப்பளவில் பத்தில் ஒரு பகுதி கொண்ட எந்த நாடும் நம்மை விட இதில் குறையவில்லை! பாகிஸ்தானும் பங்களாதேஷும்தான் நம்மை விடகுறைவு. இதில் பங்களாதேஷ் ஒலிம்பிக்கில் மெடல் வென்றதே இல்லை. இந்த வரிசையில் மெடல் வெல்லாத இன்னொரு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு நேபாளம்! வறுமைக்கும் பதக்கங்களுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதுபோல் தோன்றினாலும் வேறு சில அம்சங்களும் உள்ளன. மகளிருக்கு சிறந்த உணவூட்டம் கருவுற்றிருக்கும்போது கிடைக்காவிட்டால் குழந்தைகள் பலவீனமாக பிறப்பர். அக்குழந்தைகளுக்கு சரியான உணவு இல்லையெனில் அவர்களின் திறன்கள் பாதிக்கப்படும். இதுவே ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையிலும் எதிரொலிக்கிறது!
உலகில் தினமும் 100 கோடிப்பேர் இன்னும் பசியுடன் தான் உறங்கச் செல்கிறார்கள். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்... என்று பாரதி பாடிய நிலை இன்னும் மாறவில்லைதான்! இவர்களின் வறுமையை அரசு நிர்வாகங்களின் ஆக்கபூர்வமான இடையீடு மூலமாக ஒழிப்பதற்கான முயற்சிகளை சிறிய அளவில் ஒரிடத்தில் ஆய்வகம் போல் செய்துபார்த்து பிறகு பெரிய அளவில் முயற்சிக்க வேண்டும் என்பதே அபிஜித் பானர்ஜியின் பங்களிப்பு. மானுடத்தின் ஆகப்பெரிய கனவே பசியற்ற உலகுதான். மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமே. என்ன சொல்கிறீர்கள்?