வறண்ட பூமியில் வருமானம்!

விவசாயத்தில் வெற்றி : முத்துலட்சுமி
முத்துலட்சுமி
முத்துலட்சுமி
Published on

முத்துலட்சுமியின் குடும்பம் விவசாயக் குடும்பமாக இருந்தாலும் அவருக்கு விவசாயத்துடன் நேரடியாகப் பரிச்சயம் இல்லை. 

அவரது தந்தை, பால் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திருப்பூரில் குடியேறி அங்கு கூலியாகப் பணிபுரிந்தவர். குடும்பச்சூழல் காரணமாக ஒன்பதாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் முத்துலட்சுமிக்கு தாய்மாமனுடன் திருமணம் நடந்தது, இதற்குப்பின் திருப்பூரிலிருந்து மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் உள்ள பழையாறில் குடியேறினார்.

இங்கு நீர்ஆதாரங்கள் இல்லாதநிலையில் மானாவாரி விவசாயம் முதன்மையானதாக உள்ளது.  முத்து லட்சுமியின் கணவருக்கு அவரது குடும்பத்தின் சொத்து பங்காக 4 ஏக்கர்நிலம் இருந்தது. அதில்  கணவரும் இணைந்து விவசாயம் செய்து வந்தார், முத்துலட்சுமி. ஆனால் மழை பொய்த்ததால் இருவரும் சேர்ந்து விவசாயம் பார்ப்பது என்பது லாபகரமானதாக இல்லை.

அதனால், அவரது கணவர் டிராக்டர் ஓட்டுவது, லோடு வண்டி ஓட்டுவது போன்ற வேலைகளை செய்து குடும்பத்தை நடத்துவதற்கு பொருளாதாரம் ஈட்டினார். இதிலும், மழையின்மை காரணமாக 20 - 25 நாட்களாக இருந்த விவசாய வேலைகள் குறைந்து பத்துநாள் வேலைகிடைப்பதே குதிரைக்கொம்பாக இருந்தது. அதனால் குடும்பத்தில் ஆதாரமான விவ சாயத்தை பார்ப்பது முத்துலட்சுமியின் பொறுப்பானது. அங்குள்ள உழவர் குழுவில் செயல்படுத்தப்பட்ட பன்முகத்தன்மையுடன் கூடிய விவசாய செயல்பாடுகள் முத்துலட்சுமியை ஈர்த்தன.

2012ஆம் ஆண்டு போதுமானமழை இல்லை என்றாலும் 4 ஏக்கர் என்பதற்கு பதிலாக இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து இருந்த நீரை, முறையாகப் பயன்படுத்தியதால் நெல் சிறப்பாக விளைந்து லாபகரமாக இருந்தது. 2013ம் ஆண்டு பயிருக்கான காப்பீடு செய்திருந்ததால் விவசாயம் பொய்த்த பின்னும் காப்பீட்டின் மூலமாக ரூபாய் 12 ஆயிரம் இழப்பீடாகப் பெற்றார். அடுத்த டுத்த வருடங்களிலும் போதுமானமழை இல்லாத காரணத்தால் நெல்லுக்கு மாற்றாக கொடுக்கப்பட்ட சிறுதானியப் பயிர்களை பயிரிட்டதன் மூலம் குறைவான நிலத்தில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பயிர்களை அறுவடை செய்தார். குழுவின் முதல் வங்கிக்கடன்மூலமாக 9 ஆயிரம் ரூபாயைப் பெற்று இரண்டு ஆடுகளை வாங்கி வளர்க்கத் துவங்கினார்.முதல்கடனைச் செலுத்தியவர் இரண்டாவது கடனாக ரூபாய் 20000 பெற்று ஐந்து ஆடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். மூன்றாவது கடனாக ரூபாய் 34 ஆயிரம் பெற்று பசுமாடு ஒன்றையும் வாங்கி வளர்த்தார். இப்பொழுது அவர்கள் வருடம் ஒரு ஏக்கர்வரை சோளப்பயிறும் 80 சென்ட்வரை பசுபுல் தீவனப்பயிர்களையும் வளர்த்துவருகின்றனர்.

பசு மாட்டின் மூலமாக மாதம் 6000 ரூபாய்க்குக் குறைவில்லாமலும்,  ஆடுகள் மூலமாக மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 15, 000 முதல் 20,000 ரூபாய் வரையும்வருமானமாக கிடைத்து வருகிறது. தானம் அறக்கட்டளையின் மானாவாரி திட்டத்தின் கீழ் தேக்கு, மா, இலவம்பஞ்சு போன்ற மரக்கன்றுகளை முத்துலட்சுமியும் பெற்று தனது ஒன்றரை ஏக்கர்நிலத்தில் 400 தேக்குகள் 200 மா மற்றும் 100 இலவம்பஞ்சு மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவை நன்றாகவே பிழைத்துகொண்டன. வரும்காலத்தில் இந்த மரங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘நிலத்தை நம்பினோர் கெடுவதில்லை!' என நம்பிக்கையுடன்  சொல்கிறார் முத்துலட்சுமி.

மார்ச், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com