வறட்சியிலும் வருமானம்!

விவசாயத்தில் வெற்றி : கண்ணன்
கண்ணன்
கண்ணன்
Published on

உடுமலைப் பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். புத்தம்புதிதாக கடந்த ஆண்டு கார் வாங்கிய விவசாயி. இத்தனைக்கும் அந்த ஆண்டு வறட்சி. கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக விவசாயம் மூலம் வருவாய் ஈட்டுகிறார். அவரிடம் பேசியதில் மாறுபட்ட பயிர்களைப் பயிரிடுவதன் மூலமும் சரியான சந்தைப் படுத்துதலின் மூலமுமே அவர் வெற்றிகரமான விவசாயியாக இருப்பது தெரிய வந்தது.  

‘நான் ஐந்து ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளேன். அதில் ஆண்டுக்கு 50,000 முதல் 60000 காய்கள் வரை கிடைக்கும். சுமார் 15 ரூபாய் விலைக்குப் போகும்போது ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் வரை செலவுபோகக் கிடைக்கும். அது என் குடும்பச் செலவுகளை சந்திக்க நிரந்தரமான வருமானமாக இருக்கிறது'' என்கிற கண்ணன் மேலும் சுமார் ஏழு ஏக்கரில் காய்கறிகள் பயிரிடுகிறார். மிளகாய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள்.

‘எங்க அப்பா காலத்தில்கூட அவரே சந்தைக்குப் போய் காய்கறிகளை விற்றுவருவார். எனக்கும் சின்ன வயதில் இருந்தே விவசாயத்தில்தான் ஆர்வம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் டிஎம்இ படித்தாலும் விவசாயத்தில்தான் இறங்கினேன். சென்ற ஆண்டு வறட்சிதான். தண்ணீர் இல்லை. இருந்தாலும் நல்ல விலை இருந்தது. சுமார் பத்துலட்சரூபாய் செலவுபோக ஆண்டுவருமானம் கிடைத்தது,'' என்று மகிழ்வுடன் சொல்கிறார்.

உடுமலைப்பேட்டை, கோவை, ஒட்டன்சத்திரம் போன்ற சந்தைகளுக்கு விலையைப் பொறுத்து காய்கறிகளை சொந்த வண்டியில் ஏற்றி அனுப்பு விற்பது அவரது வழக்கம். ''நாமே நேரடியாகக் கொண்டுபோனால்தான் மற்றவர்களின் பொருட்களுக்கும் நம் பொருட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொல்லமுடியும்.'' என்று கூறுகிறார் கண்ணன்.

வேலைக்கு ஆட்கள் கிடைப்பதுதான்  விவசாயிகள் இன்று எதிர்நோக்கும் ஒரே சிக்கல் என்பது கண்ணனின் கருத்து. இவரது தோட்டத்தில்  சராசரியாக 30 பேர் வரைக்கும் வேலை பார்க்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் நூறுநாள் வேலைக்குச் சென்றுவிடும்போது கண்ணன்  சிரமத்தை எதிர்கொள்கிறார். இப்போது நான்கு ஏக்கரில் வெங்காயம் போடுவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்துவைத்திருக்கிறேன் என்று  சொல்லும் இவர் எதிர்கொள்ளும் இன்னொரு சவால் சந்தையில் இருக்கும் காய்கறி விலை ஏற்றத்தாழ்வு. எல்லா தொழிலுமே இது இருக்கும்தானே சார்?'' என்றபடி காரில் ஏறிக் கிளம்பினார் கண்ணன்.

மார்ச், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com