வரைந்து கொண்டே இருப்பேன்!

வரைந்து கொண்டே இருப்பேன்!
Published on

கும்பகோணத்தில் ஒரு டியூஷன் சென்டர். ஆசிரியர் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். பையனோ தன் குறிப்பேட்டில் தீவிரமாக வரைந்துகொண்டிருக்கிறான். அதைக் கவனித்த ஆசிரியர் வாங்கிப் பார்க்கிறார்.  கடிந்துகொள்ளப்போகிறாரோ என்று மாணவன் அஞ்ச, ஆசிரியரின் விழிகள் ஆச்சரியத்தால் மலர்கின்றன. “தம்பி நீங்க நல்லா வரையறீங்க. நீங்க இதில் தொடர்ந்து முயற்சி செய்தால் நல்லா முன்னுக்கு வரலாம். நான் பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு, சில ஆயிரங்களுக்காக இங்கே  வேலை செய்றேன். என் தம்பி ஒருத்தன் எதுவும் பெரிசா படிக்கல. ஆனால் நல்லா ஓவியம் வரைவான். இன்னிக்கு மிகவும் நல்ல நிலையில இருக்கான்.  இங்கேயே ஓவியக்கல்லூரி இருக்கு அதில் நீங்க படிங்க” என்கிறார்.

“அன்னிக்குத்தான் ஓவியர் ஆகலாம். அதை ஒரு வாழ்க்கை முறையாகக் கொள்ளலாம் என்று எனக்குள் ஒரு விதை விழுந்தது” என்கிறார் மனோகர். கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றிருக்கும் இவரது ஓவியங்களை எல்லா பத்திரிகைகளிலும் வாசகர்கள் தொடர்ந்து பார்த்திருக்கிறார்கள். நீர்வண்ண ஓவியங்களில் மனோகர் தனித்துவம் நிறைந்த படைப்பாளி.  இவரது ஏராளமான  மாணவர்கள்  பெரும் புகழ் அடைந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பதில் ஓர் ஆசிரியராக அடக்கத்துடன் பெருமை கொள்கிறார்.

“கும்பகோணம்தான் சொந்த ஊர். விவசாயப் பின்னணி. பள்ளிக்காலத்தில் ஓவியங்கள் மீது இருந்த ஆர்வத்தில் அலைந்தபோது என் அப்பாவின் மிதிவண்டி ரிப்பேர் பண்ணக் கொடுத்த இடத்தில் இருந்து வாங்கபோன இடத்தில் ஒரு ஓவியக்கல்லூரி மாணவரைச் சந்தித்தேன்.  அவரிடம் இருந்து ஓவியங்கள் பற்றிக் கற்றுக்கொண்டேன். அவர் பெயர் ஜெயராமன். பின்னாளில் சிற்பி ஜெயராமனாக மாறி தற்போது பாண்டிச்சேரி ஓவியக்கல்லூரி முதல்வராக இருக்கிறார்!

பின்னர் கும்பகோணம் கல்லூரியில் படிக்க சேர்ந்தபோது எல்.முனுசாமி முதல்வராக இருந்தார். அதன்பின்னர் அடையாறு சீனிவாசலு, சுரேந்திரநாத் ஆகியோர் பணிபுரிந்தார்கள். இவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. குறிப்பாக சுரேந்திர நாத். இவர் நீர்வண்ண ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற பால்ராஜ், அருள்ராஜ் சகோதரர்களின் சீடர். இவர் மூலமாகத்தான் நீர்வண்ண ஓவியங்களில் எனக்குக் கவனம் குவிந்தது. நீர்வண்ணங்களைப் பயன்படுத்த என்னை ஊக்குவித்தவர் இவரே!

அப்புறம் ஓவியர் ஏ.பி.சந்தானராஜ் முதல்வராக வந்தார். கல்லூரி நேரம் கடந்தபின்னும் இவர் கூடவே நாங்கள் இருப்போம். அவர் சிறந்த ஆசிரியர். எங்கள் ஓவியங்களைத் திருத்துவார். நவீனத்துவம் பற்றிச்சொல்லித்தருவார். அப்புறம் சென்னைக் கல்லூரிக்கு முதுகலை படிக்க வந்தேன். அங்கே இருந்த ஆர்பி பாஸ்கரன், அல்போன்ஸா போன்ற ஓவியர்கள் எனக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்தனர். நவீன தற்கால ஓவிய உலகம் பற்றிய திறப்பை இவர்களே அளித்தனர்.

படிப்பு முடித்ததும் மனோகர் பெஸ்டிவல் ஆப் இந்தியா என்கிற இந்திரா காந்தியின் திட்டத்தில் ஆடைடிசைன் ஓவியராக தேர்வாகி ஓராண்டு பணியாற்றினார். அதன் பின்னர் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். இப்போது முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன.

“ சென்னையில் ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன் எனக்கு நவீன சமகால ஓவியங்கள் பற்றிய நல்ல அறிமுகத்தை அளித்தார். லலித்கலா அகாதமியின்  அகில இந்திய தலைவர் பதவி என்பது ஒரு காலத்தில் நேரு வகித்த பதவி. அந்த பதவியில் இருந்தவர் பாஸ்கரன். அவரது வழிகாட்டுதல் இன்றும் எனக்கு இருக்கிறது என்பது பெருமையே.  பெஸ்டிவல் ஆப் இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் பல அரச குடும்பங்களைச்

சேர்ந்தவர்களை,  அகில இந்திய ஓவியர்களைச் சந்திக்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஓர் இளம் ஓவியனாக அது எனக்கு நல்ல வாய்ப்பு. அப்போது நான் தஞ்சாவூர் பகுதி கிராமங்களில் பார்த்த சுடுமண் சிற்பங்கள், தேர்கள் ஆகியவற்றை வரையும்போது எல்லோரும் வந்து பாராட்டுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  நம்ம பாரம்பரியத்தை, பண்பாட்டை, பின்புலத்தை ஓவியங்களில் பதிவு செய்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தேன். நியூயார்க் நகரில் சில நண்பர்களுடன் ஓவியக்கண்காட்சியில்  கலந்துகொண்டபோதும் இதே அனுபவமே. என்னுடைய ஓவியங்களில் ஒரு கலாச்சார பின்னணியும் சுயமும் இருப்பதாகப் பாராட்டினார்கள். எனக்குப் பொதுவாக ஒரு தயக்கம் அப்போது இருக்கும். எல்லோரும் இருண்மையான நவீன ஓவியங்களை வரையும்போது நாம் யதார்த்தவாதம் சார்ந்த ஓவியங்களை வரைகிறோமே என்று யோசித்துக் கொண்டிருப்பேன். அதன்பின்னர் அந்த யோசனையே அகன்று விட்டது. நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்”

மனோகருக்குப் பிடித்தமான மேற்கத்திய ஓவியர் ரெம்பிராண்ட். வின்ஸோ ஹோமர், டர்னர், சார்ஜெண்ட் போன்றவர்களின் நீர்வண்ண ஓவியங்களும் பிடிக்கும். மனோகருக்கென்று நீர்வண்ணங்களில் ஒரு தனித்துவ ஆளுமை உள்ளது. அது வண்ணங்களை கலப்பதிலும் அவற்றைப் பூசி பதமாக காய்வதற்குள் தாளின் மீது செய்யும் சித்துவேலைகளாலும் உருவானது. இது அனுபவத்தால் மட்டுமே ஒவ்வொரு கலைஞருக்கும் வாய்ப்பதாகும்.

சென்னையில் இருக்கும் மனோகரின் இல்லத்துக்குச் சென்றால் எப்போதும் மாணவர்கள் இருப்பதையும் எதையாவது வரைந்துகொண்டிருப்பதையும்  பார்க்கமுடியும். கல்லூரியில் ஆசிரியராக இருப்பவர்களுக்கு மனதளவில் இளைஞர்களாகவே இருக்கும் ஒரு வாய்ப்பு. ஏனெனில் அவர்கள் இளைஞர்களுடன் பழகுகிறார்கள். மனோகரும்  உற்சாகம் ததும்புகிறவராகவே இருக்கிறார். தன்னுடைய பணிக்காலத்தில் இளம் ஓவியர்களுடன் உறவாடியதையே பெரிதாகக் கருதுகிறார்.

“ஓவியக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு எழுதித்தான் சேரணும். அதுக்கு தயார் ஆகிறதுக்காக நண்பர்கள், ஒவியர்கள் எல்லாரும் தங்கள் பையன்களை என்னுடைய வீட்டுக்கு கோடை விடுமுறையில் அனுப்புவாங்க. வீடே ஜேஜேன்னு இருக்கும். ஓவியம் வரைய சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருப்பேன். கூடவே இதில் எனக்கு உதவ சீனியர் மாணவர்களும் இருப்பாங்க. அவங்களுக்கும் இது நல்ல அனுபவம். கல்லூரியில் படிக்கும்போது ஒரு ஆண்டுக்கு அம்பது போர்ட்ராய்ட் வரைஞ்சா பெரிய விசயம். அவ்வளவுதான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இங்கே

பசங்களுக்கு சொல்லிக்கொடுக்க தினமும்  ஐந்து போர்ட்ராய்டாவது வரையணும்.  இன்னிக்கு பெரிய அளவில் புகழ்பெற்றிருக்கும் என் மாணவர்கள் எல்லாம் இப்படி வரைஞ்சி பயிற்சி எடுத்தவங்கதான். அப்படி வந்து நுழைவுத்தேர்வுக்காக ஓவியப் பயிற்சி எடுக்கிறவங்களில் பெரும்பாலும் வெற்றி பெற்று கல்லூரியில் சேர்ந்துவிடுவார்கள்.  எப்படியும் ஆண்டுக்கு சராசரியா ஐம்பது பேராவது எங்கிட்ட கத்துகிட்ட பசங்க ஓவியக் கல்லூரியில் சேர்வாங்க. அதில் எனக்கு ஒரு சந்தோஷம்தான்”

மனோகரைப் பொருத்தவரை இன்று கும்பகோணம் ஓவியக்கல்லூரியில்  பயின்ற பெரிய  இளம் ஓவியப்பட்டாளமே நீர்வண்ண ஓவியங்களில் புகழ்பெற்று விளங்குகிறது. நீர்வண்ண ஓவிய இயக்கமே இவர் நடத்தினார் எனலாம். கதவு சந்தானம், இளையராஜா, ராஜ்குமார் ஸ்தபதி, சிவபாலன் என சுமார் 30 -40 பேர் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

“வெளிப்புறங்களுக்குப் போய் பசங்க நிலப்பரப்பு  வரைஞ்சிட்டு வருவாங்க. நான்  எந்த கிராமத்தில் இருக்கும் ஆலமரம் இது,  காவிரி ஆத்தில் எங்கே இருக்கிற படித்துறை இதுன்னு சரியா சொல்லிவிடுவேன். ஏனெனில் ஊர் ஊரா அலைஞ்சி நடந்தே போய் ஓவியம் தீட்டியிருக்கோமே... ”என்கிற மனோகரின் ஓவியங்களில் அவர் கையெழுத்தைப் பார்க்கிறவர்கள் அதில் ஒரு ஆட்டின் உருவம் தவறாமல் இருப்பதைக் காணலாம்.

“கிராமிய, விவசாயப் பின்புலம் இருப்பதால் ஆடுகளை தொடராக வரைந்திருக்கிறேன். ஓர் அடையாளத்துக்காக  ஆடு வடிவத்தைக் கையெழுத்தில் சேர்த்துக்கொண்டேன்.  தொடர் ஓவியங்கள் வரைவது என்பது ஓவியர்களுக்கு ஒரு வழிமுறை. கல்லூரியில் படிக்கும்போது தினமும் மாலையில் ஒரு கடையில் தேனீர் அருந்துவேன். அதற்கு எதிரே  ஒரு பெரிய பழமையான மாளிகை இருந்தது. அதை  சென்னையில் நடந்த ஒரு ஓவியப் போட்டிக்காக பேனா மையில் வரைந்து அனுப்பினேன். அதற்குப் பரிசும் கிடைத்தது. ஆனால் அது தி.ஜா.  கதைகளில் வருகிற ராயர் பங்களா என்று பின்னால் தான் தெரியவந்தது. தொடர்ந்து பழங்கால  மண்டபங்கள், வீடுகள், அவற்றின் கதவுகள், கோவில் கதவுகள் என்று வரைய ஆரம்பித்தேன். இந்த தொடர் முடிஞ்சதும் தேர்கள், கோவில்கள், சந்தைகள், குளங்கள் போன்றவற்றை வரைஞ்சிகிட்டிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில்  ஒரு நோயாளியை பார்த்துக்கொள்வதற்காக தங்கினேன். அப்போ அங்கிருந்த நோயாளிகளை வரைந்தேன். முகம் இல்லாமல் ஆடைகள் மற்றும் எண்கள் மட்டும் கொண்ட ஓவியங்கள் அவை. இதுபோல நிறைய தொடர்கள். சமீபத்தில் விநாயகர் ஓவியங்கள் செய்தேன். இவை நீர்வண்ணங்களில் உப்பு, மெழுகு கலந்து செய்த ஒவியங்கள். இதில் ஆயிரம், ஐநூறு வரைந்தால்தான் நமக்கே ஒருமாதிரி பிடிபடும். எங்கே என்ன வண்ணம் எப்படி வருமென்று..”

எந்த ஓவியத்தொடராக இருந்தாலும் சுமார் ஐம்பது அறுபதுக்குமேல் அவர் வரைவதில்லை. ஒரே விஷயத்தை வரைவது அவரது படைப்பு மனோபாவத்துக்கு சரிப்பட்டுவருவதில்லை.  “நல்லாத்தான் வரையறாரு. ஆனால் மாத்தி மாத்தி வரைகிறார் என்று என்னைப் பத்தி சொல்வாங்க.  ஒரே கதையை ஒரு எழுத்தாளர் எழுதினால் ஏத்துக்கறதில்லை  ஒரே மாதிரி நடிகர் நடித்தால் ஏத்துக்கறதில்லை. ஆனால் ஓவியன் மட்டும் ஒரே விஷயத்தை வரையணுமா என்ன? எதை வரைஞ்சாலும் அந்த ஓவியனுக்கான கோடுகளும் பாணியும் தனித்துவமும் இருக்கான்னு பாத்தால் போதும்”

மனோகரின் மனைவி தேன்மொழி கணவரிடம் ஓவியம் கற்க வரும் மாணவர்களுக்கு எந்த  தயக்கமும்  இல்லாமல் சமைத்துப் பரிமாறுகிறவர்.  மகன் விஷால் 14 வயதுக்குட்பட்ட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.கல்லூரிப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் என்ன செய்யபோகிறாராம்?

‘’வரைஞ்சுகிட்டே இருக்கணும். என்னைத் தேடிவர்றவங்களுக்கு சொல்லிக் கொடுத்துகிட்டே இருக்கணும்”

பிப்ரவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com