“லிங்காயத்துகளைவிட எங்களுக்கு அதிக தகுதிகள் இருக்கிறது”

“லிங்காயத்துகளைவிட எங்களுக்கு அதிக தகுதிகள் இருக்கிறது”
Published on

கர்நாடகத்தில் லிங்காயத்து என்ற சமூகப்பிரிவை இந்து மதத்தின் ஒரு பிரிவாக இல்லாமல் புதிய மதமாக அம்மாநிலத்தின் காங்கிரஸ் அரசு அங்கீகாரம் தந்தது. மத்திய அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலி தமிழ்நாட்டிலும் கேட்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வலிமையாக இருக்கும் அய்யாவழிப் பிரிவினரும் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

பொன்னுசாமி நாடார், வெயிலாள் தம்பதிக்கு மகனாக அய்யா வைகுண்டசாமி 1809 ஜனவரி பிறந்தார். அவருக்கு முடிசூடும்பெருமாள் என்று பெயர் வைத்தார்கள். அந்தகாலத்தில் இருந்த  திருவிதாங்கூர் அரசு சாதியை முழத்துக்கு முழம் பிரித்து வைத்திருந்தது. நாடார் இன மக்களை தாழ்ந்த சாதியாக வைத்திருந்த காரணத்தினால் சாத்தன், சடையன், பித்தன் என்றுதான் பெயர் வைக்க தகுதியே ஒழிய அவர்கள் வேறு எந்த பெயரும் வைக்கக்கூடாது என்ற ஒரு நடைமுறை  இருந்தது. எனவே அவருக்கு முத்துக்குட்டி என்று பெயர் மாற்றினார்கள். பனையேறி தொழில் செய்த அவர் ஒடுக்கப்பட்ட  சாதியினரை ஒன்றிணைத்தார். விதவை மறுமணத்தை ஆதரித்த அவர் விதவையை மறுமணம் செய்தார். அங்கிருந்த சமுதாய வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார். அகிலத்திரட்டு அம்மானை என்கிற அய்யாவழியினரின் அடிப்படை நூலைப் பதிப்பித்திருக்கும் ஆய்வாளார் அ.கா.பெருமாள் அய்யா வைகுண்டரை கிளர்ச்சியாளர் என்று குறிக்கிறார். முத்துக்குட்டி தன் இருபதாம் வயதில் 1833&ல் திருச்செந்தூரில் ஞானம் பெறுகிறார். ஞானம் பெற்ற பின் இவர் வைகுண்டர் எனப் பெயர் பெற்றதுடன் திருமாலின் அவதாரமாக ஆனார் என்கிறது அகிலம் திரட்டு. சொந்த கிராமத்தில் தங்கி வாழ்ந்த இக்காலகட்டத்தில் அவர் அற்புதங்கள் நிகழ்த்தியதாகவும் அதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்து இவரைத் தேடி மக்கள் கூட்டம் வந்ததாகவும் பதிவாகி இருக்கிறது. இவரது செல்வாக்கு திருவிதாங்கூர் பிராமண அரசுஅதிகாரிகளுக்கு உறுத்துகிறது. இவரது சாதி அடையாளத்தின் காரணமாக இவர் பேசும் ஆன்மிகம் எதிர்க்கப்படுகிறது. இவருக்கு அந்த ஆன்மிக உரிமை மறுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்.

‘‘வைகுண்டர் நாராயணரின் அவதாரமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டதும் ஒடுக்கப்பட்டவர்களை மேல்நிலையாக்கத்துக்கு உபதேசித்ததும் அவர்களை ஒன்றாகச் சேர்த்து புதிய வாழ்க்கையை உருவாக்க உபதேசம் செய்ததும்தான் இவர்மேல் குற்றச்சாட்டுகளாக வைக்கப்பட்டன'' எனக் குறிப்பிடுகிறார் அ.கா.பெருமாள். வைகுண்டரைப் பார்க்க சிறைக்குச் செல்லும் கூட்டம் குறையாத நிலையில் அவர் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒன்று சேர்க்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.

நாட்டுப்புற தெய்வ வழிபாட்டுக்கு அய்யா எதிராக இருந்திருக்கிறார். இதிலிருந்து மாறுபட்டு புதிய வழிபாட்டு முறையை மேல்நிலையாக்கல் கருத்தியல் முறையில் உருவாக்குகிறார். தொடர்ந்து உபதேசங்கள் செய்துவந்த அவர் 1851&ல் மரணம் அடைகிறார். அவர் காலத்திலேயே ஏராளமான ஒடுக்கப்பட்ட மக்கள் அய்யாவழியை ஏற்றுக்கொள்கிறனர்.

   ‘‘அய்யாவுடைய கொள்கைகள் அடங்கிய அகிலத்திரட்டு அம்மானைதான் எங்களுக்கான புனிதநூல். 200 ஆண்டுகளாக நாங்கள் அதனைப் பின்பற்றி வருகிறோம். அய்யாவின் கொள்கைகளைப் பரப்ப மக்கள் அய்யாவின் அடக்கதலமான  இந்த தலைமைபதியைத் தொட்டு இதில் இருந்து பிடிமண்ணை  எங்களிடம் வாங்கிக்கொண்டு போய் ஆயிரக்கணக்கான பதிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருக்கிறார்கள். அய்யா காட்டிய வழியில் இந்த உலகத்தைக் கொண்டு செல்லுவதற்கு இல்லறமே சிறந்தது. இல்லறம் இல்லையென்றால் சொர்க்கம் இல்லை.  இல்லறத்தை விட்டு தவம் இல்லை. நீ இல்லறத்தை இயல்பாக சரியாக நடத்தினால் அதுதான்  உன்னை மேல்நிலையை அடையச்செய்யும் என்பது அய்யாவுடைய கொள்கை.  

 அய்யாவின் வழி கண்ணாடியில் வழிபடுவதுதான்.  உன்னில் இல்லாத கடவுள் கல்லிலோ, மண்ணிலோ எங்கும் இல்லை! உருவவழிபாட்டை அடியோடு வெறுக்கிறார். மதத்தின் பெயரால் மக்கள் மண்டியிடுவதற்கு தயார் என்றவுடனே மதத்தை கையில் எடுத்து மதத்தின் மூலமாக சாதியைக் கொண்டுவந்து இதைச் செயல்படுத்தினார்கள்.  இதற்கு எதிரானதுதான் அய்யாவழி. 

  அய்யாவழி முழுக்க முழுக்க சாதியத்திற்கு எதிராக, வர்ணாசிரம வன்கொடுமைக்கு எதிராக, உருவாக்கப்பட்டது. அதேபோல் ‘‘அவனவன் தாய்மொழியில் தெய்வத்தை தேடலாம் தெய்வத்திற்கு அனைத்து மொழியும் தெரியும் என்பதுதான் அய்யாவின் அடிப்படை சித்தாந்தம்'' என்று நம்மிடம் சொல்கிறார் அய்யாவழிச் சமூகத்தின் தற்போதைய தலைமைப் பதி பாலப்ரஜாபதி அடிகள். 

 ‘‘எங்களுக்கு 5000க்கும் மேற்பட்ட பதிகள் தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மும்பை போன்ற மாநிலங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கு மேல் அய்யாவழி நிழல்தாங்கல்களை உருவாக்கியிருக்கிறேன். இதுபோக கேரளா மும்பை போன்ற மாநிலங்களில் இங்கிருந்து சென்றவர்கள் தலைமைபதியில் பிடிமண் எடுத்து பதிகளை உருவாக்க உதவி செய்திருக்கிறேன்.  பதிகளில் எல்லா சாதியை சேர்ந்தவர்களும் பணிவிடை செய்கிறார்கள். எங்களுக்குள் பேதமில்லை‘‘ என்றவரிடம் இந்து அமைப்புகளோடும் மடாதிபதிகளோடும் உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? என்றோம்.

 எங்கள் மண்ணில் நடந்த மண்டைக்காட்டு கலவரத்தில் சாதியும், மதமும் இருந்தது. இந்த கலவரத்திற்கு குன்றக்குடி அடிகளாரோடு இணைந்து சமாதானம் பேசச் சென்றேன். அன்றுதொட்டு அந்த மடத்தோடு இன்றுவரை தொடர்பில் இருக்கிறேன்.. அதுபோல் அந்தப் பணிக்கு பேரூர் ஆதினம் கோவை சாந்தலிங்கம் ராமசாமி அடிகளார் அவர்களும் எங்களோடு கலவரத்தில் பணி செய்ய வந்தனர். அவர்களோடும் எங்களுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. மதுரை ஆதீனத்தோடும் நட்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் அனைத்தும் எங்களோடு ஏதோ ஒருவகையில் தொடர்பில்தான் இருக்கிறார்கள். கேளரத்தில் உள்ள எல்லா மடங்களும் எங்களோடு உறவாக இருக்கிறார்கள். இந்தியளவில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மடங்களை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.அதற்கு நான்தான் ஆலோசகர். இதில் லிங்காயத்தும் உண்டு. வருடத்திற்கு ஒருமுறை அனைவரும் இந்த சாமிதோப்பு அன்புவனத்தில் கூடுவோம்'' என்கிறார்.

அய்யாவழி சமூகம், இப்போது கர்நாடகத்தில் லிங்காயத்திற்கு தனிமதமாக அறிவித்தது போல் அய்யாவழி சமூகத்தையும் தனிமதமாக அறிவிக்கக் கோருகிறது. அதேபோல் இதற்கு எதிர்ப்புக் குரல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு சாரார் அய்யாவழிப் பதியை இந்து அறநிலையத் துறை எடுத்து நடத்தவேண்டும் என்று குரலெழுப்புகிறார்கள்.  இதற்கு விளக்கமளிக்கும் பாலபிரஜாபதி அடிகளார் ‘‘ தனிமதமாக அறிவிப்பதற்குத் தேவையான அனைத்து சமூக மதிப்பீடுகளும் எங்களுக்கு இருக்கிறது. லிங்காயத்துகளைவிட எங்களுக்கு அதிக தகுதிகள் உண்டு..  கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து செயலாளர் பிரசன்னா கடந்த மாதம் வந்தார்.. இங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அவர்களிடம் பேசியிருக்கிறோம். நாங்கள் தனிமதம் என்கிற அந்தஸ்து வாங்கிவிட்டோம் நீங்கள் எப்போது வாங்கப்போகிறீர்கள் எனறு கேட்டார்.. கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் அங்கு சென்று லிங்காயத்துகாரர்களை சந்திந்து அதன் நடைமுறைகளை தெரிந்துகொண்டு நாங்கள் தமிழ்நாட்டில் தனிமதமாக அறிவிக்க சட்டப்படி போராடுவோம்'' என்கிறார். ‘‘ நாங்கள் அய்யா வழிக்கு அங்கீகாரம்தான் கேட்கிறோம். நான் இந்துவுக்கு எதிரி அல்ல எனது தாய் கூட இந்துமதத்தில் இருந்து வந்தவர்தான். அவர் இந்துவாக பிறந்து அய்யாவழியாக மரணம் அடைந்தார்.'' 

இந்து அறநிலையத் துறை எடுத்து நடத்துவது குறித்த கேள்விக்கு இவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். ‘‘ நாங்கள் ஆறு தலைமுறைகளாக நிர்வாகம் செய்கிறோம். முத்துக்குட்டி அய்யா மகன் பொதுக்குட்டி, பொதுகுட்டி மகன் கிருஷ்ணன்நாராயணன், கிருஷ்ணன்நாராயணன் மகன் செல்லக்குட்டி செல்லகுட்டி மகன் பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் மகன் நான் பாலபிரஜாதிபதி. இது போக சித்தப்பா மக்களும் பெண்களும் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் கோர்ட் உத்தரவுபடி எங்களுக்குள் இந்த தலைமைபதியை நிர்வாகம் செய்து வருகிறோம். சிலர் சொல்லுவது போல் நாங்கள் வந்தேறிகள் அல்ல, எங்களுக்கு வரலாறு இருக்கிறது. ஏதோ நாங்கள் பிழைப்புக்கு வந்தததுபோல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள்...'' என்று சீறுகிறார் அவர்.

 கடந்த மே மாதம் கன்னியாகுமரி மாவட்டம்  சாமிதோப்பு அய்யாவழி கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று அகில உலக அய்யாவழி சேவை அமைப்பினர் வலியுறுத்தினர். இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் சிவப்பிரகாஷிடம் பேசினோம். இவர் அய்யாவழி என்பது இந்து சமயம்தான் என்கிறார்.

   ‘‘அய்யாவழி அகிலத்திரட்டு அம்மானையை மக்கள் மத்தியில் பரப்புவதுதான் எங்களது நோக்கமே தவிர, சாமித்தோப்புக்கு எதிராக எங்களது அமைப்பு துவக்கப்படவில்லை. எங்களுக்கும் தலைமை பதி சாமித்தோப்புதான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நாராயணனே வைகுண்டரின் அவதாரமாக வருகிறார். அவர்தான் கடவுள். ஆதிபரம்பொருள். அதைதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். அகிலத்திரட்டு அம்மானையில் அப்படிதான் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்று சாமித்தோப்பு பதியை நிர்வகிப்பவர்கள் அது தங்களுடைய முன்னோருடைய சமாதி எனக் கூறுகிறார்கள். அவருடைய ஆறாவது தலைமுறை எனவும் கூறுகிறார்கள். மற்றொருவருடைய தாத்தா சமாதியை வழிபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அய்யா வைகுண்டர் நாராயணரின் அவதாரம் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே நீதிமன்ற உத்தரவுபடி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோயிலை அரசு கையகப்படுத்தவேண்டும்,'' என்கிறார் அவர்.

இந்த சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அரசியல், ஆன்மீக ரீதியில் முக்கியமான சக்தியாகவே அய்யாவழிச் சமூகம் விளங்குகிறது.

ஜூன், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com