ருத்திரசன்மனைத் தெரியுமா?

கேள்வி – பதில்
ருத்திரசன்மனைத் தெரியுமா?
Published on

சாரு, நான் 21-ஆம்  நூற்றாண்டில்,  பல  குழப்பங்களுடன்  வாழும்  இளைஞன்.  இந்த நவீன உலகில் செயல் படுவதால் என் சிந்தனையும், எண்ணமும் நவீனமாகவே  இருக்கிறது. உங்கள் எழுத்து கூட என்னை நவீனத்தை நோக்கித் தான்அழைத்துச் செல்கிறது. இதனால், எனக்கு பழைய  இலக்கியம், இசை, சினிமா, சித்தாந்தம் (பழைய விஞ்ஞானத்தைத்  தவிர) எதிலும் ஈடுபட மனம் விரும்புவதில்லை. ஏனென்றால் பழமையான விஷயங்கள் எனக்குக் காலம் கடந்தவையாகத் (Outdated) தெரிகிறது. இன்றைய நிலைக்கு அது பொருந்தாதோ எனவும் தோன்றுகிறது. என்போன்ற நிலையில்இருக்கும் இளைஞர்களுக்குப்  பழமை தேவைதானா? அல்லது பழமை எந்த அளவுக்கு என்னை மேம்படுத்த உதவும்? - பிரவீன் வெங்கடேஷ், ஓசூர்.

பிரவீன், நாம் நவீன காலத்தில் வாழ்கிறோமே தவிர நம்  சிந்தனைகளில் நவீனமாக இருக்கிறோமா என்று எனக்குச்  சந்தேகமாக உள்ளது.  முதலில் நீங்கள் சங்க இலக்கியத்தைப் படித்துப் பாருங்கள்.  அதில் எங்கே பழமை உள்ளது?  ஆண் பரத்தை வீட்டுக்குப் போய் வருவது, அதைத் தலைவி சகித்துக் கொள்வது போன்ற ஒருசில விஷயங்களைத் தவிர சங்க இலக்கியத்தில் எதுவுமே எனக்குப் பழசாகத் தெரியவில்லை.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று ஒரு சங்கக் கவிஞன் பாடினான்.   நமக்கு அந்தத் தெளிவு இருக்கிறதா?  தமிழ் மொழியைப் போல் இனிமையான மொழி உலகிலேயே இல்லை என்கிறோம்.  இது எவ்வளவு பெரிய பொய்?  இதையே நீங்கள் கொஞ்சம் விரித்துச்  செல்லுங்கள்.  என் தேசத்தைப் போன்ற நல்ல தேசம் வேறு  எதுவும் கிடையாது.  என் கடவுளைப் போல் சிறந்த கடவுள் வேறு எதுவும் கிடையாது. மற்ற மனிதனையும் அவனுடைய கடவுளையும்   மொழியையும் கலாச்சாரத்தையும் கணக்கிலேயே எடுத்துக்   கொள்ளாத ஃபாசிசச் சிந்தனையை நமக்குள் வைத்துக் கொண்டு  நாம் நவீன காலத்தில் வாழ்வதாகப் பீற்றிக் கொண்டிருக்கிறோம்.    உண்மையில் நம் மனதில் இயங்குவது காட்டுமிராண்டிச்  சமூகத்தின் மனநிலை.  வேற்று மனிதனைக் கண்டாலே கொன்று விடுவான் அந்தக் காட்டுவாசி.  நாமும் அந்த மனநிலையில்தான் வாழ்கிறோம். ஏன், ஃப்ரெஞ்ச், அரபி, ஸ்பானிஷ், உருது போன்ற மொழிகளெல்லாம் இனிமையான மொழிகள் இல்லையா? 

உண்மையில் இந்த மொழிகள் தமிழை விட இனிமையானவை. தமிழின் சிறப்பு அதன் ஞான மரபிலும் இலக்கிய மரபிலும்தான் இருக்கிறது.  அந்த வகையில் தமிழுக்குக் கிட்டத்தில் வரும் மொழிகள் உலக அளவில் கம்மி.   மற்றபடி இனிமை என்பதெல்லாம் கப்ஸா.  தகர டப்பாவில் கூழாங்கல்லைப் போட்டு உருட்டுவது போல் இருக்கிறது என்று வட இந்தியாவில் சொல்கிறார்கள்.  அரே உல்லூ, சென்னையின் வைஷ்ணவா கல்லூரியில் வந்து அங்கே புழங்கும் தமிழைக் கேட்டுப் பார், தேனாய்த் தித்திக்கும் என்று சொல்லுவேன்.

 தீவிரமாக யோசித்தால், பிரவீன், நீங்கள் பழமை என்று சொல்வதை நிலப்பிரபுத்துவ காலம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டிக் கொஞ்சம் பின்னோக்கிச் செல்லுங்கள்.  மிக அற்புதமான ஒரு உலகம் தெரியும்.  அங்கேயும் கவிஞர்கள் பிச்சைதான் எடுத்தார்கள்.  ஆனால் அதோடு கூட தமிழன் இயற்கையோடு எந்த அளவுக்கு உறவாடி வாழ்ந்திருக்கிறான் என்பது புரியும்.  விருட்சங்களையும் வனத்தையும் வாழ்த்தியவன் பூமியைப் பூஜித்தவன், காற்றின் மொழி புரிந்தவன்  அந்த மனிதன். ஆனால் நவீன மனிதன் எந்திரங்களிடம் அடிமை ஆகி விட்டவன்.

இந்த மனிதனின் பேராசையில் விருட்சங்கள் வீழ்ந்து விட்டன. காற்று நச்சாகி, பூமியும் கசந்து விட்டது.  நதிகளின் மரணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆனால் ஒரு மலையே செத்து விட்டதை அறிவீர்களா?  சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போயிருந்தேன்.  அதற்கு அருகில் உள்ள செண்பகத் தோப்பைத் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவில் உள்ள ஒரு மலையில் காட்டழகர் கோவில் உள்ளது.  அந்த மலைகளும் வனங்களும் செத்து விட்டன.  மலை என்றால் வெறும் பாறைகள் மட்டும்தானா?  அங்கே வெறும் பாறைகள் தான் இருந்தன. மலை பூராவும் இருந்த நீரோடைகள் எதுவுமே இப்போது இல்லை. 

மணிக்கணக்கில் நடந்தாலும் நீரோடையின் ஜல சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டேதான் நடந்தார்கள்.  ஆனால் இப்போது குடிப்பதற்குத் தண்ணீரே இல்லாமல் யானைகள் திக்கற்றுத் தெறித்து ஓடுகின்றன.  அந்த யானைகளின் வேதனைக்கு நவீன மனிதர்களான நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?  நம்முடைய பேராசையே அந்த வனத்தையும் மலையையும் அழித்து விட்டது. காட்டழகர் கோவில் வாசலில் கருப்பண்ண சாமி இருந்தது.  பூஜை போட்டதும் பூசாரியின் மீது வந்து அமர்ந்து கொண்டது.  எல்லோரும் மழை வேண்டினர்.  மழை பெய்யாது என்று உறுதியாக மறுத்து விட்டது கருப்பண்ண சாமி.  பக்தர்கள் கெஞ்சக் கெஞ்ச சாமி அசரவில்லை.  அநியாயம் பண்றீங்க, மழையே பெய்யாது  என்று திரும்பத் திரும்பச் சொன்னது சாமி. ஆக, சிந்தனையில்தான் நவீனம் இருக்கிறது.  காலத்தில் இல்லை.

கேள்வி:

தமிழின் எல்லா முக்கிய எழுத்தாளர்களும் தங்கள் உரைகளில் குறிப்பிடுவது / பரிந்துரைப்பது பிற மொழி எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . உதா: போர்ஹேஸ், காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ஜான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, மிரோஜெக், ரேமண்ட் கார்வர், செல்மா லாகர்லெவ்... இன்னும் பலர்!  ஒரு தமிழ் வாசகன் ஒரு தமிழ் எழுத்தாளரைப் படிக்கும் போது ஆயிரமாயிரம் ஆண்டுகள் வழமை வாய்ந்த தமிழ் இலக்கியப் பரிந்துரைகள் இருப்பதில்லை என்பது போக... குறிப்பிட்ட அயல் மொழி இலக்கியங்களைப் படிக்க முடியும் ஒரு தமிழ் வாசகன் மீண்டும் ஏன் தமிழ் எழுத்துக் களைப் படிக்க வெண்டும்?

க. வித்யாசாகர்.

பதில்: அயல்மொழி இலக்கியத்தைப் படிப்பது தமிழ் இலக்கியத்தை மறப்பதற்கோ அதிலிருந்து விலகி ஓடுவதற்கோ அல்ல.  இன்று நமக்குக் கிடைக்கும் அயல் மொழி எழுத்தாளர்கள் யாவரும் ஒரே மொழியைச் சேர்ந்தவர்கள் அல்லர்.   பரந்து பட்ட இந்த உலகின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களைப் படித்தால் நம் இலக்கிய அனுபவம் இன்னும் விசாலமடையும்.  பாரிஸ் நகரின் பஸ்களில் அந்த நாட்டின் இலக்கியக்கர்த்தாக்களின் மேற்கோள்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.  அதில் நான் திருக்குறளையும் பார்த்தேன்.  எனவே நீங்கள் தமிழ் மொழி என்று தனியாகப் பார்க்க வேண்டாம்.  எல்லா மொழி இலக்கியத்தையும் படிப்பது போல் தமிழ் இலக்கியத்தையும் ஒருவர் வாசிக்க வேண்டும்.  ஆனால் என்னைக் கவலை கொள்ள வைக்கும் விஷயம் என்னவென்றால், மார்க்கேஸையும் காஃப்காவையும் தெரிந்த தமிழர்களுக்கு ருத்திரசன்மனைத் தெரியவில்லை.  (அகநானூறைத் தொகுத்தவர்.)  அப்பரையும் ஆண்டாளையும் தெரியவில்லை.  கொஞ்ச காலத்துக்கு இந்த மொழிபெயர்ப்பு எல்லாவற்றையும் நிறுத்தி வைத்து விட்டுத் தமிழ் இலக்கியத்தை வாசித்து விட்டு வரலாம் என்று தோன்றுகிறது.

கேள்வி:

 வாழ்க்கையை அறிவு சார்ந்து வாழ்வதா அல்லது அனுபவம் சார்ந்து வாழ்வதா?

இரா. முரளி

 பதில்: அறிவின் மூலமாக அனுபவத்தையும், அனுபவத்தின் மூலமாக அறிவையும் உணர்ந்து ஞானம் என்ற இடத்தை அடைவதே வாழ்க்கை.

மனிதர்கள் : சூப்பர்மேன் தொழிலதிபர்!

ஹாங்காங்கில் போய் சூப்பர்மேன் யார் என்று கேட்டால் கா ஷிங் லீ என்கிற மிகப்பெரிய பணக்காரரைச் சுட்டிக் காட்டுவார்கள். ஆசியாவிலேயே பெரிய பணக்காரர் இவர்.  இவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சத்து முப்பத்தி நாலாயிரம் கோடி. ஹட்சிசன் வாம்போவா, சியூங் காங் ஹோல்டிங்ஸ் போன்றவை இவரது நிறுவனங்கள். அதாவது ஹட்ச் என்ற பெயரில் ஒரு செல்போன் சேவை நிறுவனம் இருந்தது இல்லையா அதன் தலைவர் என்றால் நாம் கொஞ்சம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய கண்டெயினர் தொழிலதிபராகவும் உடல்நலம், அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளராகவும் இருக்கிறார்.

 ஹாங்காங்கில் உள்ள பங்குச்சந்தையில் 15 சதவீத மதிப்பு இவரது நிறுவனங்களுக்கே உரியது என்பது மிகப்பெரிய சாதனை. இவ்வளவு பணக்காரராக இருப்பினும் ஆள் மிகமிக எளிமையானவர். ஆடை முதல் கட்டும் கடிகாரம் வரை எல்லாம் மிக எளிமையானவை. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீக்கோ கடிகாரம்தான் கட்டுவார். இரண்டு அடுக்கு வீட்டில் மகனுடன் வசிக்கும் இவரது இளமைக்காலம் மிக வறுமையானது.

1928-ல் சீனாவில் உள்ள சாவோஷூ  நகரில் பிறந்தவர். தந்தையின் மரணத்தை அடுத்து 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தினார். ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் 16 மணி நேரம் வேலை. 1950-ல் அவரே சொந்தமாக ஒரு பிளாஸ்டிக் வர்த்தக நிறுவனம் தொடங்கினார். அப்படியே ரியல் எஸ்டேட் துறையிலும் கவனம் செலுத்தினார். ஹாங்காங்கில் முதன்மையான ரியல் எஸ்டேட் நிறுவனமாக வளர்ந்தார்.

 1979-ல் ஹெச்எஸ்பிசி வங்கி ஹாங்காங்கில் இயங்கிய ஹட்சிசன் வாம்போவா நிறுவனத்தில் தனக்கு இருந்த 22 சதவீத பங்குகளை விற்க விரும்பியது. அதை வாங்க ஒருவர் முன்வந்தார். அவர் லீ!

ஆங்கில நிறுவனமான ஹட்சிசன் வாம்போவாவை வாங்கியது ஹாங்காங்கில் இருந்த சீனர்களின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி. ஆங்கில நிறுவனம் ஒன்றை வாங்கிய முதல் சீனர் லீ. அதன்பின்னர் இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் கால்பதித்து வளர்ச்சி பெற்றது.

“கடுமையாக உழையுங்கள்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்; அடுத்தவர்களிடம் நல்லமாதிரி நடந்துகொள்ளுங்கள்;  உங்கள் தொழில் விருத்தியாகும்” என்பதுதான் லீயின் தாரக மந்திரம். இது வெறும் வாய்ப்பேச்சு அல்ல. கடுமையான உழைப்பாளி லீ என்பது  ஹாங்காங் வாசிகள் அனைவரும் அறிந்த ஒன்று. “கடுமையாக உழைப்பதும் அதிகமாக லாபம் சம்பாதிப்பதும்தான் எனது பொழுதுபோக்கு” என்கிறார் லீ.

கடையில் ஹாங்காங் மக்கள் என்ன வாங்கினாலும் அதில் ஒரு சின்ன சதவீதமாவது லீயின் பாக்கெட்டுக்குப் போகும் அளவுக்கு அவர் வர்த்தக சாம்ராஜ்யம் விரிந்துள்ளது.

அக்டோபர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com