ராஜீவின் கண்ணீர்

Published on

அதிகார வர்க்கம்  நம்மால் அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்மைத் தோற்கடிக்கும்போதும், சிறிய வேலைகளுக்குக் கூட  நம்மை அலைய விடும் போதும், அவமரியாதை செய்யும் போதும் நமக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் என்கிற கோபமும், ஆற்றாமையும் இயல்பாக எழத்தான் செய்கிறது.

‘ நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று நமக்குள்ளும் ஒரு சவுக்கு சுழலத்தான் செய்கிறது!  என்ன செய்வது  இதெல்லாம் சினிமாவைப் போல அவ்வளவு எளிதாக நிஜத்தில் நடக்கிற காரியம் இல்லையே!

 இந்திய சனநாயகத்தில் நமக்கு இருக்கிற ஒரே அதிகாரம் ஓட்டுப்போடுவதுதான். அதுவும் கூட இப்போது அரசியல் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது! நமது வாக்கை வாங்கி வெற்றி பெறுகிறவர்கள் சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர் ஆகிறார்கள். அமைச்சர், சபாநாயகர் ,முதலமைச்சர், பிரதமர் ஆகிறார்கள். ஆனால் நாம் என்ன ஆகிறோம்? எவ்வித அதிகாரமும் அற்றவர்கள் ஆகிறோம்! இப்படித்தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஆனால் இது உண்மை யில்லை. சட்டமன்ற உறுப்பினர் எப்படி சட்ட சபையில் ஒரு உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினர் எப்படி மக்களவையில் ஒரு உறுப்பினரோ அதுபோல பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணும், ஆணும், திருநங்கையும் ஊராட்சி அமைப்பின் கிராமசபையில் ஒரு உறுப்பினராவார். தற்போதைய இந்திய அரசியல் அமைப்பு,  சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ற இரண்டு அடுக்கோடு மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் எனும் முதல்  அடுக்கையும் சேர்த்து மூன்று அடுக்குகளாக இயங்குகிறது.

1989 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தியால் கொண்டுவரப்பட்டு 1992ல் நிறைவேற்றப்பட்ட 73 மற்றும் 74 சட்டத்திருத்தத்தின் மூலம் உருவான பஞ்சாயத்து ராஜ் சட்டம் இதைச் சாத்தியமாக்கி யிருக்கிறது.

சட்டசபை, மக்களவை போல உள்ளாட்சி அமைப்புக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் உண்டு. அதிலும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளின்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையில் அளிக்காமல், கிராமசபை மூலம் அதிகாரத்தை நேரடியாக மக்கள் கையில் அளிக்க பஞ்சாயத்து ராஜ்  சட்டம் வழிவகை செய்கிறது.

 உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்தில் சட்டசபையோ, பாராளுமன்றமோ குறுக்கிட முடியாது.  இந்த உரிமை நமக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. பஞ்சா யத்து ராஜ் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் சில ஆயிரம் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அரசிடம் குவிந்துகிடந்தது.

இந்த நிலைமையை மாற்றி அதிகாரத்தைப் பரவலாக்கி மக்கள் கையில் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ராஜீவ்காந்தி விரும்பினார். பஞ்சாயத்ராஜ் தொடர்பாக இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரிடம்  நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கூட்டங்களில் நேரடியாக ராஜீவ்காந்தி பங்கேற்றார்.  இந்திய சுதந்திர வரலாற்றில் யாருக்கும் கிடைத்திராத அசுரபலம் பெற்ற ஒரு அரசின் தலைவர்  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  சட்டத்தை நிறைவேற்ற கருத்தொற்றுமை ஏற்படுத்த விரும்பியதே அதற்குக் காரணம்.

மிகுந்த கனவுகளோடும், அற்புதமான கருத்தாக்கத்தோடும், அதீத நம்பிக்கையோடும் ராஜீவ்காந்தி தாக்கல் செய்த மக்களுக்கு அதிகாரமளிக்கும் பஞ்சாயத்துராஜ்  சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது.  மக்கள் தோற்கடிக்கப்பட்ட அந்த நள்ளிரவில் இந்தியாவின் இளம் பிரதமர் மாநிலங்களவையில் இருந்து கண்ணீரோடு வெளியேறினார்.

அவரது மரணத்திற்குப் பிறகு சில திருத்தங்களோடு நரசிம்மராவ் அரசு ராஜீவ்காந்தியின் கனவை நினைவாக்கியது. அதிகாரம் மக்கள் கைக்கு வந்து  இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே நாம் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் வேதனை.

ஜனவரி26, மே1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நமது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமசபை கட்டாயம் நடைபெறும். அதில் கலந்துகொண்டு நமது உரிமையை, அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும். மக்களாட்சியை மக்கள் தான் நடைமுறைப் படுத்தவேண்டும். பிறகு அரசியலும், அதிகார சமநிலையும்  தானாகவே மாறிவிடும்.

( ஜோதிமணி தமிழகக் காங்கிரஸின் ஊடகப்பேச்சாளர்)

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com