ராஜா 1000

ராஜா 1000
Published on

சிறுவயதில் இருந்தே அவருக்கு இசை ஆர்வம் இருந்தது. அன்று எங்கள் கிராமம் மிகவும் செழிப்பாக இருந்தது. அதிகாலை ஆறு மணியானால் குயில் ஓசையும், தென்றல் காற்றில் குளுமையும் நிறைந்திருக்கும். அந்த வேளையில் நான், இளையராஜா, அமரன் எல்லோரும் உறங்கியும் உறங்காமலும் படுத்திருப்போம்.

அந்த நேரத்தில் எங்கள் அண்ணன் பாவலர் அவர்களுக்கு சங்கீதப் பயிற்சி நடக்கும்.  அப்போது கேட்கும் சா ரி க ம பா த நி சா என்ற ஓசையில்தான் நாங்கள் கண் விழிப்போம்.  இதுவே தொடர்ந்து வந்ததால் எங்களையே அறியாமல் சங்கீதம் மீது ஈடுபாடு கொண்டோம்.

பிறகு இளையராஜா ‘ஆர்மோனியமும்’ நான் ‘தபேலாவும்’ அமரன் கிட்டாரும் கற்றுக்கொண்டோம். பிறகு எங்கள் அண்ணன் கச்சேரி செய்யத்துவங்கியதும் நாங்கள் மேடையில் இசைக்கருவிகளை வாசிக்கத் துவங்கினோம்.  இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் இசை ஆர்வத்தால் அரங்கேறினோம்.

சிறுவயதில் நம் குரல் மென்மையாக இருக்கும் அல்லவா.. அப்போது பெண் குரலில் பாடுவார்.  கேட்க நன்றாக இருக்கும்.  நாட்கள் போகப்போக அவர் குரல் மாறியது. இதைக்கண்டு இளையராஜா பயந்துவிட்டார் ‘இனி நம்மைப் பாட அண்ணன் அழைக்கமாட்டாரே’ என்று. 

நாங்கள் மேடையில் கட்சிக்காகப் பாடிக்கொண்டிருந்தோம். ‘எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்கின்ற கொள்கையை முன்வைத்துப் பாடி வந்தோம்.  ஆனால் அரசியல்வாதிகள் பலர் இதை சுயநலத்துக்காகப் பயன்படுத்தத் துவங்கினர்.  இது பிடிக்காமல் பிழைப்பைத் தேடி சென்னை வந்தோம்.

சென்னையில்  அப்போதைய இசை யூனியன் தலைவர் எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிமுகம் கிடைத் தது.  அவரிடம் சினிமாவில் வாசிக்க வாய்ப்பு கேட்டோம்.  அதற்கு அவர் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார்.  எனக்கு தபேலா வாசிக் கவும், இளையராஜாவுக்கு ஆர்மோனியம் வாசிக்கவும், அமரனுக்கு கிட்டார் வாசிக்கவும் தெரியும் என்றோம்.

அதற்கு அவர் எப்படி வாசிப்பீர்கள் என்றார்.  வாசித் ததைக் கேட்டால் அப்படியே வாசிப்போம் என்றோம்.  உடனே அவர் சிரித்துக்கொண்டே சினிமாவில் வாசிக்க வேண்டுமென்றால் நோட்ஸ் தெரிந்திருக்கவேண்டும்.  அப்போதுதான் சினிமாவில் வாசிக்கமுடியும்.  மேலும் உங்களுக்கு வாசிக்கத் தெரிந்த கருவிகள் எல்லாம் இங்கு பலபேர் வாசிக்கிறார்கள்.  அதனால் புதிய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  அப்போது எங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபையரை அடமானம் வைத்து இளையராஜாவைச் சேர்த்துவிட்டோம்.  அங்கு இளையராஜா வெஸ்டர்ன் க்ளாசிக்கல் போன்ற இசைகளைப் பயின்றார்.

நாங்கள் சம்பாதிக்கத் துவங்கியதும் முன்பு அடமானம் வைத்த ஆம்ப்ளிஃபையரை மீட்க அடகு கடைக்குப் போனோம்.  அங்கு அடகு கடையே காணோம்.  தேடித்தேடிப் பார்த்தோம். கண்டுபிடிக்க முடியவில்லை.  இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

இளையராஜா மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் இசை பயின்று கொண்டிருக்கும்போது இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் அவர்கள் மாஸ்டர் தன்ராஜிடம் தனக்கு ஒரு நல்ல உதவியாளன் ஒருவன் வேண்டும் என்று கேட்க மாஸ்டர் இளையராஜாவைச் சேர்த்துவிட்டார். 

நான்தான் காலையில் எழுந்ததும் வாய்ப்பு கேட்க பல கம்பெனிகளுக்குப் போவேன்.  அப்போது ராஜா  சொல்வார்.. “வாய்ப்பு கேட்டு நீ போகாதே.. சந்தர்ப்பம் நம்மைத் தேடி வந்தால் நாம் இசையமைப்போம்” என்று.  ஆனால் நான் கேட்காமல் பல கம்பெனிகள் படி ஏறுவேன்.  எங்குமே ஏமாற்றம்தான்.

அப்போது நான் இளையராஜா, அமரன், செல்வராஜ் (கதை வசனகர்த்தா) பாரதிராஜா, அனைவரும் ஒன்றாக மைலாப்பூரில் தங்கியிருந்தோம்.  ஒருநாள் இளையராஜா கம்போசிங் சென்றுவிட நானும் அமரும் ரூமில் இருந்தோம்.  செல்வராஜும், பாரதிராஜாவும் கூட வெளியே போயிருந்தார்கள். திடீரென்று வெளியே போயிருந்த செல்வராஜ் வந்து எங்களைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அழைத்துவரச் சொன்னார் என்று கூறினார்.

உடனே செல்வராஜுடன் நானும் அமரும் கிளம்பினோம். மூவரின் பாக்கெட்டும் காலி.  வேறு வழியில்லாமல் நடக்கத் துவங்கினோம்.  மைலாப்பூரிலிருந்து பாம்குரோவ் ஓட்டலுக்கு நடந்தே வந்து பஞ்சு அருணாசலத்தைப் பார்த்தோம்.  அவர் எங்களைப் பார்த்ததும் ராஜாவை கேட்டு, வரவில்லை என்றதும் போய் அழைத்து வரச்சொன்னார்.  வாகினி ஸ்டூடியோவில் கம்போசிங் நடந்துகொண்டு இருந்ததால் இளையராஜா அங்கு இருந்தார்.  மீண்டும் நாங்கள் நடந்தே வாகினி ஸ்டுடியோ சென்றோம்.  அங்கிருந்த இளையராஜாவைப் பார்த்து செய்தியைச் சொன்னோம்.  இளையராஜா நம்பிக்கை இல்லாமல் எங்களுடன் புறப்பட்டார்.  அப்போது வாகினி ஸ்டுடியோவில் இருந்து பாம்குரோவ் வர டாக்ஸி வாடகை எழுபது பைசாதான். இளையராஜாவிடம் பணம் இருந்ததால் டாக்ஸியிலேயே பாம்குரோவ் போய்ச் சேர்ந்தோம்.” -இது இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கரின் வார்த்தைகள்.

இனி இளையராஜா: “அறையில் லுங்கியும் பனியனும் மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தார் பஞ்சு சார். ரொம்பவும் சின்ன அறையில் ஒரே ஒரு டேபிள் மட்டும் இருந்தது. லேசான மது வாடையும் சிகரெட் வாடையும் அறையில் மிதந்தன. ‘அண்ணே நான் உங்களைப் பாத்திருக்கேன். சபதம் படத்துக்குப் பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தபோது நீங்களும் வந்தீங்க” என்று நான் சொல்லவும் ‘ஆமாம் நானும் உன்னைப் பாத்திருக்கேன். ஆமா. நீ தனியா ம்யூசிக் பண்றியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘எங்கே வாசிச்சுக் காட்டு’ என்றார். அங்கிருந்த டேபிளில் நான் கம்போஸ் பண்ணிய பாடல்களை அவருக்கு தாளம் போட்டு வாசித்துக்காட்டினேன். அவர் நான் காமெடி படங்களுக்குத்தான் எழுதிகிட்டிருக்கேன். நீ பாடிய பாடல்களுக்கென்று படம் எடுத்தால்தான் பாட்டெல்லாம் நல்லாயிருக்கும்” என்றார். 

செல்வராஜ் மருத்துவச்சி என்ற கதையை எழுதினான். அந்த கதையே அன்னக்கிளி என்ற பெயர்வைத்துத் தயாரித்தார். பின்னணிப்பாடகர்களைப் பாடவைத்து ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துப் பாடிக்காட்டியும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத இயக்குநர்கள் மத்தியில் வெறும் டேபிளில் தாளம்போட்டுக் காட்டிய உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம்.

  ‘அன்னக்கிளி உன்னத்தேடுதே” என்ற பாடலைத்தான் முதன் முதலில் ரிக்கார்ட் செய்தோம்.  இப்பாடலை லதா மங்கேஷ்கரைப் பாடச் செய்வதாகத் திட்டமிட்டிருந்தனர்.  சில காரணங்களால் முடியாது போகவே ஜானகி அவர்கள் பாடினார்கள்.  ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்கெனவே இப்பாடலுக்கான ஒத்திகையை முடித்து விட்டேன். ஏ.வி.எம்.மில்தான் இப்பாடல் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. முதல் நாள் ரிக்கார்டிங் பூஜை முடிந்தது.  திடீரென்று எல்லா விளக்குகளும் அணைந்துவிட்டன. ‘நல்ல சகுனம்’ என்று ஒருவர் கிண்டலாகக் கூறியது என் காதில் விழுந்தது.  முதல் நாளும் அதுவுமாக இப்படி விளக்குகள் அணைந்து விட்டதே என்ற வேதனையில் ரிக்கார்டிங் தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன். டைரக்டர் மாதவன் அவர்கள் வேறு ஒரு பூஜைக்குச் சென்றுவிட்டு அங்கு வந்தார்.

சோர்ந்து போயிருந்த எனக்கு அன்போடு பிரசாதத்தைக் கொடுத்தார்.

சிறிது நேரம் சென்றிருக்கும்.  கரண்ட் வந்துவிட்டது. அணைந்திருந்த விளக்குகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின.  முதல் டேக், ரிக்கார்ட் ஆகவில்லை.  மீண்டும் சோதனை.  பிறகுதான் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல் பதிவு செய்யப்பட்டது. இன்று அந்தப் பாடலைக் கேட்டுப் பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு அன்று நடந்த சோதனைகள்தான் நினைவிற்கு வருகின்றன!”

வெற்றிக்கு பின் நடந்த மாற்றத்தை பாஸ்கர், “முதல் படம் வெளிவந்து வெற்றி பெற்று ‘அன்னக்கிளி’ பாடல்கள் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கத் துவங்கிய நேரம். ஒருநாள் மதியம் தி.நகரில் உள்ள ஒரு தயாரிப்பாளரின் அலுவலகம் சென்றேன். தண்ணீர் தாகம் உயிர் போனது.  அங்கிருந்த ஆபீஸ்பாயிடம் தண்ணீர் கேட்டேன்.  அதற்கு அவன் தெருவில் போகும் எல்லோருக்கும் தரமுடியுமா என்று கேட்டுவிட்டு தண்ணீர் தராமலேயே போய்விட்டான்.  மனதைத் தேற்றிக்கொண்டு தயாரிப்பாளரைப் போய் பார்த்தேன்.  அவர் இப்பொழுது இசையமைக்க வாய்ப்பு  ஒன்றும் கிடையாது. ஏற்கெனவே நாங்கள் ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜாவைப் போடுவதாக முடிவு செய்துவிட்டோம்’ என்றார்.  உடனே நான் மெல்ல இளையராஜாவின் அண்ணன்தான் நான் என்று கூறியதும் அவரால் நம்பமுடியவில்லை.  பிறகென்ன, ராஜ உபசாரம்தான்.  எனக்குத் தண்ணீர் தரமறுத்தவனே எனக்கு டீ வாங்கிவர ஓடினான்” என்று கூறுகிறார்.

அதன் பிறகு தமிழ் கூறும் நல்லுலகில் நடந்தது இசை ஞானியின் ஆட்சி.

நூறாவது படம் பாலுமகேந்திராவின்  ‘மூடுபனி’. ஐந்நூறாவது படம், மணிரத்னத்தின் ‘அஞ்சலி’. ஆயிரமாவது படம்,பாலாவின் ’தாரை தப்பட்டை’. ஆயிரம் காரணங்களையும் சிக்கல்களையும் சிலாகித்து பேசிக் கொண்டிருப்பவர்களின் தூக்கத்தை  இசை ஞானியின் வாழ்க்கை துரத்திவிடும்.

ஒரு முறை இசை ஞானி,‘நான் பிறந்த கிராமத்தில் இசையைக் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை.  அதனால்தான் ‘தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே’ என்று நான் சொல்வதுண்டு.  ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம். இது நன்றாய் இருக்கிறதே, அது நன்றாய் இருக்கிறதே... என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது’ என்றார். இவை சத்தியமான வார்த்தைகள், முன்னேறத் துடிப்பவர்களுக்கு..

(நந்து,பேசும் படம் - ஜூலை 1992  -  தேனி கண்ணன் அந்திமழை ஜனவரி-2014 -  மதுரை தங்கம்,பேசும் படம் நவம்பர் 1976  -  பால்நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் ஏற்புரை --ஆகியவற்றிலிருந்து)      

ஜனவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com