ரமேஷ் விநாயகம்: எல்லோருக்கும் ஹீரோ ரஜினி, எனக்கு மட்டும் கஜினி

ரமேஷ் விநாயகம்: எல்லோருக்கும் ஹீரோ ரஜினி, எனக்கு மட்டும் கஜினி
Published on

அலுப்பில்லாத பயணமும், நீண்ட பொறுமையும் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகத்திற்கு வெற்றியை சாத்தியப்படுத்தித் தந்திருக்கிறது. ‘ராமானுஜன்’ படத்தின் இசையை விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள், மக்கள் ரசிக்கிறார்கள். ஒரு பின் மாலை வேளையில் சந்தித்தபோது அவரைப் பேசவிடாமல் தொடர்ந்து தொலைபேசி அழைத்தபடி இருந்தது. அநேகமும் ‘ராமானுஜன்’ இசையைக் கேட்ட விஐபிக்கள் தொடங்கி, முகம் தெரியாத ரசிகர்கள் வரை வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். வெற்றியை அடைய இவர் கடந்து வந்த பாதை மிக நீண்டதாய் அமைந்துவிட்டது. இதற்கு யார் மீதும் புகார் இல்லை என்கிறார். இசை குறித்து மிக ஆழமாய் பேசுகிற ரமேஷ்வினாயகம் பாடலாசிரியரும், கவிஞரும் கூட.

“எல்லோருக்கும் ஹீரோ ரஜினினா, எனக்கு கஜினி. அந்தளவுக்கு இத்தனை வருசமா முயற்சி பண்ணியிருக்கேன். நிறைய பேர்கிட்ட வாய்ப்பு கேட்டிருக்கேன். இருபது வருஷமா தொடர்ந்து நான் வாய்ப்பு கேட்ட இயக்குநர்கள்லாம் கூட இருக்காங்க. ஒவ்வொருவருவருடைய சோற்றுப் பருக்கையிலும் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கும்னு சொல்லுவாங்களே. அது ரொம்ப உண்மை. ஆனா அதுக்காக நாம முயற்சியைக் கைவிட்டுரக்கூடாது.

86 ஆம் வருஷம் ஒரு இசை ஆல்பம் பண்ணினேன். அதுல எனக்கு நல்ல பேர். ஆனா என்னவோ சினிமா இசையமைப்பாளரா முயற்சி செய்த போதும் தள்ளி தள்ளிப் போனது. முதல் வாய்ப்பு ‘அழகிய தீயே’ படத்துல கிடைச்சது. பாட்டெல்லாம் ஹிட். உடனே சில படங்கள் அடுத்தடுத்து கமிட் ஆனேன். ஒவ்வொரு படங்கள்லயும் விதவிதமான இசை வடிவங்களைத் தந்திருக்கேன். ஆனா தொடர்ந்து ஓர் இடைவெளி. ஆனாலும் ‘கஜினித்’தன்மைய விடவே இல்ல.

நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். என்னுடைய அப்பா விநாயகமும், அம்மா வள்ளியும் தான் இசையில் என்னுடைய குருநாதர்கள். என்னோட பத்தொன்பதாவது வயசுல ஒருநாள் ஆல்பம் போடறதுக்காக ஒரு பக்திப்பாடல் எழுதி அப்பா கிட்டக் காட்டினேன். அது ஒரு முருகர் பாட்டு. அனுபல்லவியில, ‘சீலன் உமை மகிழும் பாலன் வள்ளி மணவாளன் அழகில் உயர்’ அப்படினு எழுதியிருந்தேன். அதைப் படிச்சுப் பார்த்துட்டு அப்பா சொன்னார், “ஒரு தப்பு பண்ணிருக்கியே”. அனுபல்லவியைத் திரும்ப திரும்ப வாசித்துப் பார்த்தும் என்ன தப்புன்னு தெரியலை. உடனே அப்பாவே சொன்னார், ‘அழகில்’ னு போட்டுருக்கியே, அதைப் பதம் பிரிச்சா ‘அழகு இல்’ னு வருமே, அழகில்லாதவன்னு சொன்ன மாதிரி ஆகாதா? என்று கேட்டார். எனக்கும் அப்பாவுக்கும் உடனே வாக்குவாதம் வந்தது. ‘உங்களுக்குத்தான்ப்பா இப்படியெல்லாம் குதர்க்கமாத் தோணும்’ என்று நான் சொல்ல, அப்பா நிதானமா அவரோட வாதத்தை இன்னும் விளக்கமா சொன்னார். பிரச்னைக்கு அவரே தீர்வும் சொன்னார். ‘அழகில் அப்படீங்கறதை அழகின் அப்படின்னு மாத்திப்பாரு. ரொம்ப உயர்ந்த பொருள் தரும். பாடும்போதும் கேட்கும்போதும் சுகமா இருக்கும்.’ உடனே நான் மாத்திட்டேன். ஒரு இசைக்கும், வார்த்தைக்கும், அர்த்தத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்று நான் தெரிந்து கொண்ட சம்பவம் இது.

நான்கு சுவருக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் விவாதம் பண்ணலாம், ஆனால் அந்த படைப்பு வெளி வரும்போது ரொம்ப சுத்தமானதாக, பரிபூர்ணமானதா இருக்க வேண்டும். இசை ரொம்ப அற்புதமான கலை. அதை பிரயோகப்படுத்துவதற்கு சோம்பேறித்தனம் இருக்கவே கூடாது. இந்த மாதிரியான பாடங்களை எல்லாம் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டதால் தான் இத்தனை வருடமும் ஈடுபாடு குறையாமல் பயணப்பட முடிந்தது”.

இவ்வளவு நுணுக்கமாக இசைக் கற்றுக் கொண்டிருக்கும் இவருக்கு சினிமா இசையில் சுதந்திரம் இருந்ததா?

 “சினிமா இசை தானே என்று சாதாரணமாக நினைத்ததில்லை. இந்தியாவில் எல்லாப் பாகங்களிலும் மக்களை அதிகமாகப் போய்ச்சேருவது சினிமா பாடல்கள் தான். அதனால் எங்களுக்கு பொறுப்பு அதிகம். எனக்கு முன்னோடியாக பெரிய ஆளுமைகள் உட்கார்ந்து ஆட்சி நடத்தியிருக்கிற இடம் இது. இறைவன் என்னையும் அவனது இசைக்கருவியாக பயன்படுத்துகிறான். ஒரு பாடல் உருவாகும்போது இயக்குநருக்குப் பிடிக்க வேண்டும். அவருடைய ரசனையும் அதில் இருக்கும். அதை சேர்த்து மக்களுக்குப் பிடித்தது போல ஜனரஞ்சகமாகத் தர வேண்டும். இது பெரிய சவால்”.

வெவ்வேறு விதமான கதைகளுக்கு இசை அமைக்கவேண்டியிருக்கிறது. பலதரப்பட்ட வாழ்க்கை அனுபவம் என்பது இசையமைப்பாளருக்குள் எப்படி வந்து சேருகிறது?

 “காதல், வீரம், கோமாளித்தனம் என எல்லாமே கலந்தது தான் கலை. இதை இசையில் மொழிபெயர்க்கும்போது நாம் அதற்குள் செல்ல வேண்டும். அறிவின் வெளிப்பாடுதான் உணர்ச்சிகள். நகைச்சுவைக் காட்சிக்கு சிரித்து உருண்டுகொண்டே இசையமைக்க வேண்டுமென்றோ, கொலை வெறியை இசையாக வெளிப்படுத்த கொலை செய்ய வேண்டுமென்றோ சொல்லவில்லை. அந்த அனுபவத்தை ஜீவன் வரை உள்வாங்க வேண்டும். அதுவே போதுமானது.

எனது இசை, அது உருவாகும் நேரத்திற்கு முந்தைய நொடி வரை என்னிடம் இல்லை. உருவான பின், ‘எதற்காக அந்த இடத்தில் சந்தூரை பயன்படுத்தினீர்கள்? ஏன் ஐரிஷ் வயலினை வாசித்தீர்கள் ?’ என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. எனக்கு மட்டுமல்ல எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இது தான் நிகழ்கிறது. நம்மைமீறிய சக்தி ஒன்று நம்மை செலுத்துகிறது என்பதால்  தான் இசைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கியதொடர்பு இருக்கிறது.”

‘ராமானுஜன்’ மாதிரியான சவாலான படத்துக்கு இசை அமைக்கிறபோது என்ன மாதிரியான திட்டங்களை மனதில் கொண்டிருந்தார்?

“சில நுணுக்கமான விஷயங்களை இந்தப் படத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இயக்குநர் ஞானராஜசேகரன் எனக்கு அதற்கான முழு சுதந்திரத்தையும் தந்திருந்தார். ராமானுஜன் எப்படிப்பட்டவர் என்பதை நான் முதலில் உள்வாங்கினேன். அவர் மனம் எப்போதுமே ‘கால்குலேஷனால்’ நிரம்பியது. அது ஒரு புதிரான மனம். அதை இசைப்படுத்த விரும்பினேன். அதற்கு ‘ட்தூண்tடிஞி ட்டிணஞீ’ என்று பெயர் வைத்தோம். அதே போல் ஒரு கோட்பாடை அவர் கண்டுபிடிக்கிறார். அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். மனமும், மூளையும் எண்களால் நிரம்பி இருக்கின்றன. 1-9 வரையிலான எண்களைக் குறிக்க ஸ்வரங்களையே பயன்படுத்தியிருக்கிறேன். பிறகு ஒரு மணித்துளி நிசப்தம். இந்த நிசப்தம்  பூஜ்யத்தைக் குறிக்கிறது. தேடலுக்கும், மௌனத்திற்குமான இசை அது. அதே போல் ஹார்டி இல்லை என்றால் ராமானுஜனை உலகத்திற்குத் தெரிந்திருக்காது.  இருவருடைய சந்திப்பும்  மிக முக்கியமானது. அதனால் இங்கிலீஷ் நோட்சும், கர்நாடக இசையும் சேர்த்து அவர்கள் சந்திக்கிற பின்னணியில் பயன்படுத்தியிருக்கிறோம். இந்த இசைக்கோர்வையை நான் ஹார்டி , ராமானுஜன் நட்பிற்கும் உழைப்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்.”

இசையில் ஆராய்ச்சி செய்வதும் ரமேஷ்வினாயகத்தின் ஆர்வமாக இருக்கிறது. “நம்முடைய கர்நாடக ஸ்வரங்களுக்கு தனிதனி நோட்ஸ் இருக்கிறது. ஆனால் நமது பாரம்பரிய இசையின் அழகே அதன் கமகங்களில் தான் இருக்கிறது. ஸ்வரங்களை வளைத்து, அசைத்து பாடப்படும் முறைக்கு கமகம் என்று சொல்வோம். வேறெந்த இசைப் பாரம்பரியத்திலும் இல்லாத ஒரு அழகு இது.  ஆனால் இந்த ‘கமகங்களுக்கு’ என்று நம்மிடம் நோட்ஸ் இல்லை. செவி வழியாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால் கமகங்களுக்கென ‘நோட்ஸை’ நான் உருவாக்கியிருக்கிறேன். அதற்கு ‘கமகா பாக்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். இது போல் நிறைய விருப்பங்கள் இருக்கின்றன” என்கிறார்.

ரமேஷ் வினாயகம் ஆங்கிலப்படம் ஒன்றிற்கு இசையமைத்திருக்கிறார். பென் கிங்க்ஸ்லி நடித்த ‘காமன் மேன்’ படம் சர்வதேச அளவில் இவருக்கு பாராட்டைப் பெற்றுத்தந்திருக்கிறது. “இன்று நிறைய இளைஞர்கள் இசையமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

இசைக்கு நிறைய உழைப்புத் தேவை. உழைப்பு என்பது அதிலேயே கரைவது. பொறுமையாக இருப்பது. முதல் படம் அல்லது, ஆல்பம் வெற்றியடைந்துவிட்டால் உங்களுக்கு இன்னும் பொறுப்பு அதிகமாகிறது என்று அர்த்தம். உலகம் முழுவதுமுள்ள இசையைத் தேடித் தேடி உள்வாங்குங்கள். ஆனால் ‘காப்பி’ அடித்துவிடவேண்டாம். நமக்கென்று இருக்கிற முகம் தான் நம்முடைய அடையாளம். நல்லப் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை உங்கள் தேடல் தான் பெற்றுத் தரும். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியது மட்டும்தான் உங்கள் பொறுப்பு” முடிக்கிறார் ரமேஷ் விநாயகம்.

ஜூலை, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com